Advertisment

மலைத்தொடர்களின் மீதொரு விடியல்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 12

ரஷ்யாவில், அக்டோபர் புரட்சி நடந்தபோது எனக்கு 13வயதே ஆகியிருந்தது, நான் எனது குழந்தைப் பருவத்தைக் கழித்த டெமுகோ நகரில் வயது வந்த இளைஞர்கள் அந்த நாட்களில் உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள கஷ்டமாக இருப்பதை உணர்ந்தனர்.

Advertisment

pablo neruda

காலம் செல்லச்செல்ல நான் வளர்ந்தேன். உடல்ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் விவரங்கள் புரிந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எனது புதிய அறிவை உணரமுடிந்தது. நடப்பு நிகழவுகள் குறித்த செய்திகள் எங்களுக்கு தெரியவர ஆரம்பித்தது. புரட்சி துவங்கிய காலத்தில் எனது உள்ளம் தெளிவான பார்வையை பெறத்துவங்கியது. அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டம் பட்டினியாலும் பல்வேறு தடைகளாலும் நசுக்கப்பட்டது. எனினும் அந்தப்போராட்டம் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது போல மீண்டும் எழுந்தது. அனைத்து நாடுகளையும் அவற்றின் இருளிலிருந்து விடுவிக்கும் ஒளியாகத் தெரிந்தது.

1921 ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். வழக்கமான மாணவப் பருவத்து வாழ்க்கைக்குள் விழுந்தேன். அங்கே உள்ளுர் கிரியோல் பூர்ஷ்வாக்களின் சொந்த மகிழச்சிக்காக உருவாக்கப்பட்ட அரங்கில் ரெக்காபேரன் தலைமையிலான தொழிலாளிவர்க்க இயக்கம் தன் முனைப்பாகவே வந்தது. ஆனால் பூர்ஷ்வாக்கள் இதை விரும்பவில்லை. மாணவர்களாகிய நாங்கள் வீதிகளுக்குச் சென்றோம். முதன்முறையாக தொழிலாளிகளின் போராட்டத்தில் பங்கேற்றோம்.

Advertisment

அந்தச்சமயத்தில்தான் எங்களது மனதில் உற்சாக வெள்ளம் பொங்கியது. நம்பிக்கை நிறைந்திருந்தது. பல்கலைக்கழகம் எங்களைப்பற்றி கவலைப்பட்டது. ஆனால், புத்தகங்கள் எங்களை வலுப்படுத்தின. கதையாகச் சொல்லப்போனால் இயந்திரகதியான வாழ்க்கையின் பிரதிநிதிகளுக்கும் மாற்றத்திற்கான அடையாளம் கொண்டவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் கடைசி கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது, இயந்திரகதியான வாழ்க்கையின் பிரதிநிதிகள் பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியவில்லை.

மாணவர் சங்கத்தின் புத்தகங்களும் சோவியத் நூல்களும் ஸ்பானிய மொழியில் கிடைக்கத் தொடங்கின. அங்கேதான் நாங்கள் அரசியல், இலக்கிய நூல்களை வாங்கினோம். இவற்றில் சில தடைசெய்யப்பட்டவை. நான் நினைத்துப் பார்க்கிறேன்... நாங்கள் படித்த முதல் புத்தகம். ஆயுத ரயில் எண் 14-69, இதை விசெஓலட் இவானெவ் எழுதியிருந்தார். லியோனிட் லியானோவ் எழுதிய பட்கர்ஸ் என்ற நூலும் லிடியா செய்புலினாவின் கதைகளும் நாங்கள் படித்தவை, ஏற்கனவே நாங்கள் கார்கியின் நூல்களை படித்துள்ளோம்.

புரட்சி சாத்தியம் என்பது நிருபிக்கப்பட்டது.

மனிதநேயம் என்ற மாபெரும் சிந்தனையை விளைவித்த ஒரு மாபெரும் தலைவரின் பெயர் எங்களை ஆட்கொண்டது. எங்கள் வாழ்வை ஆக்கிரமித்தது. அவரது பெயர் லெனின். இந்தப் பெயர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புமிக்க அர்த்தத்தை கொடுத்தது. இந்தப்பெயர் எல்லோரையும் ஈர்த்தது; ஆகர்சித்தது. எங்களது பூங்காக்களிலும் சதுக்கங்களிலும் பழைய காலத்தின் கதாநாயகர்களது சிலைகள் இருக்கின்றன. அந்தச் சிலைகள் குதிரைகள் மீது, கைகளில் வாள் ஏந்தி மிகவும் ஆக்ரோஷமாகவும் அழகாகவும் இருக்கும்.

lenin

புதிய கதாநாயகனோ, சாதாரண தோற்றம் கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் அறிவு நிறைந்த தலை இருக்கிறது. அந்தத் தலை ஒரு சிறிய புவிக்கோளத்தைப் போன்று ஜொலிக்கிறது. மிகவும் பழமைவாதம் பேசும் பத்திரிகைகள் கூட லெனினுக்கு தங்களது மரியாதையை செலுத்தின. அவர் மறைந்தபோது தங்களது இரங்கலை வெளிப்படுத்தின. அந்தக் காலத்தின் மிகப் பிரபலமான பத்திரிகைகளில் லெனினைப்பற்றி ஒரு முழுப்பக்கம் செய்தி வெளியிட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்னும்கூட சிலி நாட்டின் பூர்ஷ்வாக்கள் இந்த புதிய சீத்திருத்தவாதியின் செயல்பாடுகளின் தாக்கத்தை உணரவில்லை. சிலி காத்திருக்கிறது. லெனினின் அனைத்து கண்டுபிடிப்புகளும் அவரது மறைவிற்கு பின்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து நாளேடுகளும் லெனினது வாழ்க்கை குறித்த ஏராளமான விவரங்களோடு விரிவான செய்தி வெளியிட்டன.

எனது நாடு மாறிக்கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவின் இதர பகுதிகளும் மாறத்துவங்கியுள்ளன. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் செல்வாக்கு பெற துவங்கியுள்ளது. இந்த கண்டத்தின் அனைத்து தலைநகரங்களிலும் துப்பாக்கிச் சத்தம் கேட்கத் துவங்கிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இவை அமைதியாகவே இருந்தன. இத்தகைய எழுச்சிகளும் அடக்குமுறைகளும் இதற்கு முன்பு நாங்கள் அறிந்திராதவை.

தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஒருவரிடமிருந்து ஒருவர் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மக்கள் கற்றுக்கொண்டு விட்டனர். பல்வேறு ஒடுக்குமுறைகளால் ஆளப்பட்டுவந்த ஒரு தேசம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு மனிதனை மனிதன் சுரண்டுகிற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதை அவர்கள் அறிந்து கொண்டனர். இது புதிய போராட்டங்களை புதிய மனிதவள கோரிக்கைகளை உருவாக்கியது. மனித உறவுகளிலும். மனங்களிலும், உணர்வுகளிலும் ஏராளமான மாற்றத்தைக் கொண்டுவந்தது. அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது.

சிலி தேசத்து மக்கள் பிற நாடுகளின் மக்களது வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மிக விரைவிலேயே சிலியின் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் சோவியத் கொடிகள் ஆங்காங்கே தென்படத் துவங்கின. நான் எனது கண்களால் தொழிலாளர்களின் வீட்டுச் சுவர்களில், சுரங்கத் தொழிலாளர்களின் குடிசைப் பகுதிகளில், தொழிற்சங்க அலுவலகங்களில், பொது நூலகங்களில் லெனின் படங்களை பார்த்தேன். மனிதநேயத்தின் இந்த மகத்தான வெளிச்சம் எங்களுக்கு வழிகாட்டியது.

புரட்சி மக்களின் உடல்களிலும் ஆன்மாவிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எங்களது லத்தீன் அமெரிக்க மனிதநேயவாதிகள் இத்தகைய மாற்றங்களை உடனடியாக புரிந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள். அர்ஜென்டினாவைச் சேர்ந்த அன்னி பெல்போன்ஸ், பெருவைச் சேர்ந்த ஜோஸ் கர்லோஸ் மரியாடேகு மற்றும் சீசர் வலேஜா, கியூபாவைச் சேர்ந்த ஜான்மரிநெல்லோ போன்றவர்களைச் சொல்லலாம்.

1920க்கு சற்று முன்னர் இவர்கள் லத்தீன் அமெரிக்காவின் தத்துவகர்த்தர்களாக, மனித வாழ்வின் புதிய மாண்புகளை உருவாக்குபவர்களாக, இளைய தலைமுறையினரை விழிப்புணர்வு கொள்ளச் செய்தவர்களாக விளங்கினர். அக்டோபர் புரட்சியை முழுமையாக புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட இவர்கள் வரலாற்றில் முதல்முறையாக எங்களது கண்டத்தின் கலாச்சார வளர்ச்சியை மகத்தான தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடனும் வெகுமக்களின் விழிப்புணர்வுடனும் இணைத்தனர். எமது நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாரம்பரியமாகவே தனிமைப் படுத்தப்பட்டவர்கள். காயப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் சக்திமிக்க நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும், நிலமற்ற, பசிமிகுந்த, எழுத்தறிவற்ற, ஏழை விவசாயிகளின் பெருந்திரளுக்கும் இடையே நடந்த மோதல்களை அறிந்தனர். இந்த இரண்டு எதிர் துருவங்களுக்கு இடையே இடைவெளியை நிரப்புவது கடினம் என்பதை உணர்ந்தார்கள்.

கவிஞர்களால் இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அடக்குமுறைகள், உடல்நலக்குறைவுகள் போன்ற காரணங்களால் இவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். மக்களால் மறக்கப்பட்ட இவர்கள் தங்களது கடைசி நேரத்தை மருத்துவமனைகளில் செலவழித்தார்கள். அங்கேயே நோய் முற்றி இறந்து போனார்கள் இவர்கள் எல்லோருமே தங்களது கலை குறித்து பெருமிதம் கொண்டவர்கள். நிலப்பிரபுக்களின் வன்முறைக்கு ஆட்பட்டும் நலமாக வாழ்ந்ததுபோல நடித்தவர்கள். இவர்கள் அநீதிக்கு எதிராக சிந்தித்திருக்க வேண்டும். அவர்களது கலை யதார்த்தவாதத்திலிருந்து தனிமைப்பட்டு நின்றது. இவர்களது படைப்புத்திறனை மலடு தட்டச் செய்த, அவர்களது வறுமையின் முலம் பெரும் அழுத்தத்தை ஏற்படச்செய்த பூர்ஷ்வா அமைப்பு, சுத்தமான கலையை அதாவது, மனிதனின் வாழ்வுக்கும் போராட்டங்களுக்கும் எவ்வித தொடர்புமின்றி ஒன்றை உருவாக்குமாறு நிர்பந்தித்தது.

அக்டோபர் புரட்சி மனிதநேயத்தை மட்டும் விழிப்படையச்செய்யவில்லை, ஒரு புதிய அரசை உருவாக்கியது. ஊழலும் சுரண்டலும்மிக்க ஒரு சமுக அமைப்பிற்கு முடிவுகட்டியது, கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு தீர்மானகரமான உதவிக்கரமாக செயல்பட்டது. லத்தீன் அமெரிக்காவின் கலைஞர்கள் புரட்சியின் மனிதநேயத்தை உணர்ந்தார்கள். அனைத்து விதமான இருள் சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி வளர்ந்தோங்குகிற புரட்சி நீடித்து நிலைப்பதற்கான உரிமையை பெற்றிருக்கிறது, ஏனென்றால் அது நிலைத்திருப்பதற்கான நியாயத்தை தன் உள்ளே வைத்திருக்கிறது என்பதை அறிந்தார்கள். எப்போதும், சோவியத்யூனியன் அனைத்து தரப்பு மக்களின் நேசத்திற்குரிய நாடாக இருக்கிறது.

அதன் கஷ்டங்கள், தோல்விகள் நம்மை கடுமையாக பாதிக்கின்றன. அதன் வெற்றிகளும் சாதனைகளும் நம்மை ஆகர்சிக்கின்றன. பெரும்பாலான மனிதர்களின் நம்பிக்கைகள், முற்றிலும் சோவியத்தின் இறுத்தலையே சார்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்தோம். அதன் எந்த ஒரு தோல்வியும் வரலாற்று சுழற்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.

துரதிருஷ்டவசமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஹிட்லரின் நாசகர கொள்கைகளை பெரும் நிறுவன ஏகாதிபத்தியம் தனது கையில் எடுத்துக் கொண்டது. இதுதான் பனிப்போரின் துவக்கம்.

ஏகாதிபத்தியவாதிகள் துப்பாக்கிகளை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவர்கள் உலக நிலைமையை மாற்ற டாலர்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏகாதிபத்தியத்தை புகழ்ந்துரைப்பவர்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனால் அதன் வேலையாட்களை மட்டுமே அவர்களால் பார்க்கமுடிகிறது. ஊழல் மிகுந்த அரசுகளின் ஆதரவில் அவர்கள் பெரும்பொருட்செலவு செய்து பத்திரிகைகளை நிறுவியுள்ளார்கள். ரியோ கிராண்டே நகருக்கு தெற்கே வசிக்கும் அனைத்து மக்களிடையேயும் பத்திரிகைகளை விநியோகிக்கிறார்கள். முதலாளித்துவ தத்துவத்தின் தீவிர ஆதரவாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பெரும் நிறுவனங்களையும், சூதாட்ட வர்த்தகத்தையும் போற்றிப்புகழும் கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களை விரும்புகிறார்கள். எனினும் அப்படிப்பட்டவர்கள் குறைவே.

19ம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவின் மரியாதையை அமெரிக்கா அனுபவித்தது. வால்ட் விட்மனின் கவிதைகளிலும், ரால்ப் டபிள்யூ எமர்சனின் சிறந்த பேச்சுக்களிலும் இது கிடைத்தது, ஆனால் அமெரிக்கா அப்போதிருந்து மாறத்துவங்கிவிட்டது.

மத்திய அமெரிக்காவின் கொடுரமான சர்வாதிகாரிகளை அது ஆதரித்தது. நாடுகளின் எல்லைகளை மீறி தேசிய கொடிகளை அவமதித்தது. எங்களது சிறிய நாடுகளின் நிலங்களை பறித்தது. இந்த இரண்டு அமெரிக்காக்களும் ஒன்றுபடுவது எப்படி முடியும்? சில பிரபலமான வட அமெரிக்க தத்துவகர்த்தாக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்களுக்கு பல்கலைக்கழகங்களிலிருந்து லட்சக்கணக்கில் மானியம் கிடைத்தபோதிலும் கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது பெரும் நிறுவனங்களுக்கு உதவியாக இல்லை. இந்த ஒடுக்கப்பட்ட கண்டத்தின் மக்களது அன்பை அவர்களால் சம்பாதிக்கமுடியவில்லை. ஒரு கையில் உணவுப்பொருளும் மற்றொரு கையில் அடிப்பதற்கு குச்சியும் வைத்திருப்பவர்களின் வருகையை ஏற்கமுடியவில்லை. அக்டோபர் புரட்சி வார்த்தைகளால் வடிக்கமுடியாத பல்வேறு ரசாயண மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் சக்தியையும் ஈர்ப்பையும் அளவிடுவது இயலாதது. அக்டோபர் புரட்சி தத்துவார்த்த ரீதியாக மட்டும் வெளிச்சத்தை பாய்ச்சவில்லை, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக மனிதனின் கணவுகளை உண்மையாக்கிக் காட்டியது. எங்களது நாடுகள் அதை உணர்கின்றன. சோவியத் யூனியனிலிருந்து மிகப்பெரும் தூரத்தில் பிரித்துவைக்கப் பட்டிருந்தாலும் கூட அது உணரப்படுகிறது.

லத்தீன் அமெரிக்கா எப்போதும் பெரும் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த பூமி. இந்த கண்டத்தின் இதயத்தில்தான் அளவிடமுடியாத கற்பனைகள் பிறந்தன. இதன் பெரும் நதிகளுக்கு அருகிலும், பிரம்மாண்டமான சமவெளியிலும் புதுமைகள் பிறந்தன. லத்தீன் அமெரிக்காவிடமிருந்து கவிதையும் இசையும் பிரிக்கமுடியாதவை. எங்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்கிற குதிரைகள் அவை.

அக்டோபர் புரட்சி வெற்றிபெற்ற நிலையில் அது வளர்ந்துவரும் நிலையில் எங்களது கண்டத்தின் மக்களும் கவிஞர்களும் தங்களது புதிய கனவை பாடுகிறார்கள். நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது அறிவு போன்ற எங்கள் கனவு உண்மையாகிவருகிறது. சமத்துவம் என்கிற பழம்பெரும் கனவு உண்மையாகிறது. எங்களது நாடுகளும் கவிஞர்களும் அதை உணர்கிறார்கள். அவர்கள் தங்களது இதயங்களை இந்தப் பாடல்களோடு, அக்டோபர் புரட்சியின் உண்மையை உரத்துக்கூறும் தங்களது போராட்டங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள்.

எனது கண்டத்தின் இதயத்திலிருந்து பொங்கி பிரவாகம் எடுக்கும் இந்தப்பாடலை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

இழ்வெஸ்தியா, நவ,5,1962.

முந்தைய பகுதி:

சிலி தேசம் வாழ்க! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 11

அடுத்த பகுதி:

கியூபாவின் வெளிச்சம்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13

journalist pablo neruda. pablo neruda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe