/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/308_11.jpg)
ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர் கிருத்திகா தரன், மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ‘உணவும் உணர்வும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மன அழுத்தம் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படுமா? என்பதைப் பற்றி தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
உணவு மற்றும் பரம்பரை ரீதியாக சர்க்கரை நோய் வரும் என்று சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால், இதனால் மட்டும்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். சில நேரங்களில் மன ரீதியான பிரச்சனைகள் வந்தாலும் சர்க்கரை நோய் வரும். மனப் பிரச்சனைகள் வருவது குடலையும் ஹார்மோன்களையும் பாதிப்படையச் செய்யும். இன்சுலின் சுரப்பு மற்றும் நிறுத்தம், கல்லீரல் சர்க்கரை உற்பத்தி அதிகமாவதற்கும் மனதிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவுக்கட்டுப்பாடு பின்பற்றுவதன் மூலம் ஓரளவுதான் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் உணவு பழக்கத்திலும் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் பெறுவதன் மூலமும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்து, தான் 20 வருஷமாக 100 யூனிட் இன்சுலின் போட்டும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததைக் கூறினார். அதோடு சரிவரத் தூக்கமின்மையால் இருந்துள்ளார். பற்றாக்குறைக்குத் தனது மகளின் திருமணத்தில் அவருக்கு மனக் கசப்பு இருந்துள்ளது. இப்படி கடுமையான உளவியல் சாவலை யாருக்குமே சொல்லாமல் தானே சமாளித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த பிரச்சனை அவருக்கு இருப்பதை அறியாமல் பிடித்த மாதியான உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு, ஒரு பக்கம் இன்சுலினையும் போட்டு வந்துள்ளார்.
அவருடைய இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தபோது சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தது. பின்பு நான் அவரிடம் உணவு பழக்கவழக்கத்தை மாற்றி கையோடு மன ரீதியான அமைதிக்கு கவுன்சிலிங் செல்லுங்கள் என்றேன். முதலில் அவர் கவுன்சிலிங் என்றதும் தனக்கு எந்த மன அழுத்தமும் இல்லை நான் ஏன் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் உண்மையிலேயே அவருடைய மகள் ஒரு பையனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது அவருக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடன் வெளிநாட்டில் இருக்கும் அக்கம் பக்கத்தினர், நீ இந்தியாவில் இருந்திருந்தால் மகளை ஒழுக்கமாக வளர்த்திருப்பாய். உன்னுடைய மகள் சரியானவள் இல்லை என்று சொல்லி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்த சூழலில் அவர் உட்கார்ந்து வேலை செய்தும் தனக்குத்தானே நன்றாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு சில நொறுக்கி தீனிகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு உடலில் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது. பின்பு நான் அவருக்கு ப்ரி பயோடிக் உணவுகளைப் பரிந்துரை செய்தேன். அப்போது அவரின் உடலில் சர்க்கரை அளவு நார்மலானது. ஆனால், திடீரென சில நாட்கள் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்று செக் பண்ணி சொல்லுவார். அது என்னவென்று தொடர்ந்து அவரை சோதித்துப் பார்த்ததில் மன உளைச்சலில் சரிவரத் தூங்காமல் இருந்தது தெரிந்தது. ஏன் தூங்கவில்லை என்று கேட்டபோது நடந்த அத்தனையும் சொன்னார். மகளை மாற்றும் அளவிற்கு எந்தவித தவறும் செய்யவில்லை என கவுன்சிலிங் சென்றபிறகுதான் அவர் மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வந்து தற்போது உணவு கட்டுப்பாடுடன் ஆரோக்கியமாக வாழ ஆரம்பித்தார் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)