ADVERTISEMENT

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

02:44 PM Sep 04, 2018 | tarivazhagan

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.



கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.


கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.


கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும் ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது. உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில் டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.


கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT