Skip to main content

"இருள் மூடிய அந்த இடத்தில் அவள் வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தாள்.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #8

பர

 

இளமஞ்சள் நிற மாலை நேரத்தின் தீற்றல்களில் சாயம் வெளுத்து கருமை பூசிக்கொண்டு இருந்ததுஅந்த ஏரி. ஏற்காடு மலையில் நிலப்பரப்பை ஏரியோடு சேர்த்து படகுகளும்,அதற்கான டிக்கெட் கவுண்டர்களும் என ஆக்கிரமித்து இருக்க, இரவின் ஒளியை முழுமையாக விரட்டாத நியான் விளக்குகள் ஆங்காங்கே இருளை முறைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தன் அழுக்கு உடலில் ஆகாயத்தாமரைகளையும், சேற்றுக்குழம்பையும் சுமந்திருந்த அந்த ஏரிக்குள் கைகால்களை அகன்று விரித்து படுத்திருந்தாள் அவள். முகம் முழுவதும் சேற்றுக்கு கொடுத்திருந்தாள், ஆகாயத்தாமரைகள் அணிகலன்கலாய் அவளின் உடலைச் சுற்றியிருந்தது.

 

எப்போது இறந்து போனாள் என்ற கேள்விக்கு அமானுஷ்ய நிசப்தங்கள் பதில்சொல்லாமல் கண்ணாமூச்சு காட்டின நான்கைந்து நாட்களுக்கு முன்பு அவள் இறந்திருக்கலாம் என சேகரிக்கப்பட்ட பழுப்பு காகிதங்களில் கறுப்பு மசியால் நிறைத்திருந்தது. ஆள் அரவமில்லாத ஏரியில் பெண்ணின் பிணம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்த முகம் சேற்றில் ஊறியிருக்கிறது போலீஸ் தீவிர விசாரணை என்று கொட்டை எழுத்தில் பத்திரிக்கையில் மூன்றாம் பக்கச் செய்தியில் அவள் இடம் பிடித்திருந்தாள். வாசித்த பத்திரிகையை மூடிவிட்டு மொபைலில் வந்த மெசேஜைப் பார்த்தேன். லாஸ்ட்வீக் அப்லோட் பண்ண உங்க கேம் செம்ம வைரல் தேங்க்யூ மெயில் செக் பண்ணுங்க என்று வார்த்தைகள் திரையை நிறைத்திருந்தது.

 

அப்லோட் செய்யப்பட்ட மூன்று மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான டவுன்லோட்ஸ், இப்போது ஒருவாரம் முடியப்போகிறது இன்னும் பீக்காக போய் கொண்டிருக்கிறது. ஒரு புரோகிராம் செய்து முடித்தவுடன் கொஞ்சமே கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளுவது என் வழக்கம். ஆனால் அப்போதெல்லாம் தீபா என்னுடன் நேரத்தை செலவழிப்பாள். இப்போது ஆளில்லாத் தனிமையில் நான். இந்த வெற்றியை அவளுடன் கொண்டாடியிருக்க வேண்டும் கொஞ்சம் கர்வமாய் நிமிர்ந்தேன். பிடறியோரம் ஒருவித குளிர் ஊடுருவியது. நான் சொன்னேனே பி பிராக்டிக்கல் அதுக்குத்தான் மவுசு அதிகம் என்று காதோரம் தீபாவின் குரல்.

 

என் கிரியேட்டிவிட்டிக்கு சொந்தக்காரியவள். காதோரம் வியர்த்து வழிந்த வியர்வையைத் துடைத்து இளஞ்சூட்டில் இஞ்சித் தேனீரை சுவைக்க வைத்து ப்ரேம்... என்று ஆரம்பித்து என் பிரச்சனைக்கு அவள் சொன்ன தீர்விற்காக நாங்கள் சென்ற இடம்தான் அந்த லேக் துண்டு துண்டாக காகிதங்களில் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் எப்படி கவிதையாக இருக்க முடியும். அதைப்போலத்தான், ஏரி முழுக்க தனிமையின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது. ப்ரேம் நான் சொன்ன இடம் இதுதான் உட்கார்ந்து பொறுமையா யோசிங்க இப்போ என்ன பிரச்சனை சொல்லுங்க என்றாள் தீபா.

வலஸ

 

இருள் மூடிய அந்த இடத்தில் அவள் வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தாள் வெள்ளை நிற குர்தாவும் கருப்பு பேண்ட்டும் அணிந்து கூந்தலை இறுகக் கட்டியிருந்தாள் கண்களில் பயம் அப்பிக்கொண்டு இருந்தது. அவன் பின்னால் வருகிறானா என்று பயந்து பயந்து யாரையோத் தேடினாள். வரவில்லையென்று தெரிந்த பின்னர், சற்றே ஆசுவாசமாய் மூச்செடுத்துக் கொண்டாள். ஆனால், நான்கு நாட்களாக நாய்குட்டியைப் போல கழுத்தில் இரும்புச் சங்கிலியினை ஒரு பட்டையோடு இணைத்து கட்டியிருந்தானே, டார்லிங் என்று மீண்டும் அவனின் குரல் காதோரம் அழைத்ததைப் போலிருக்க, மீண்டும் ஓட்டம் பிடித்தாள்.

 

கணுக்கால்கள் அனைத்திலும் ஒரே வலி, இருந்தாலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் உத்வேகத்தில் அவள் ஓடிக்கொண்டு இருந்தாள். வெட்டப்பட்ட இரண்டு விரல்கள் இருந்த இடம் தலையில்லாத முண்டம் போலிருக்க, கண்கள் தீப்பற்றியதைப் போல எரிந்தது. ஏரிக்கு அருகில் இருந்த விளக்குகள் சற்றே பயத்தை விரட்ட வேகமாய் நின்றவள் ஆசுவாசப்படடாள். மீண்டும் அவனைக் கண்டதும் தெரித்து ஓடினாள். சறுக்கல் பாதையில் இருந்து விலகிட இரத்த வெறி பிடித்த ஓநாய் போல அவன் அவளை விரட்டினான் ஓடினாள், எதிர்ப்பட்ட எதையும் கண்களில் வாங்கிக்கொள்ளாமல் ஓடி கடைசியில் அகப்பட்ட இரையானாள். ஓநாயின் விரல்கள் தடவப்பட்ட இடங்களில் எல்லாம் ரத்தம் தெரித்து விழுந்தது.

 

அடுத்த நாள் காலையில் சூரியன் துப்பிய வெளிச்சத்திற்கு மத்தியில் மஞ்சள் நிற கிரேனின் வாயில் அவள் ஆகாயத்தாமரைகளோடும் வெள்ளை குர்தா முழுக்க சேறோடும் உயிரற்று தெரிந்தாள். ப்ரேம் கதறிய போனை உயிர்பித்தான். ப்ரேம் ரொம்ப அருமை உங்க வீடியோ கேம் நீங்க அற்புதமாக வடிவமைச்சு இருக்கீங்க ?! இன்னைக்குப் பேப்பர் பார்த்தீங்களா ஒரு மர்டர்கேஸ் பற்றி போட்டிருக்கான். அதில் நீங்க வடிவமைச்ச கேம்களின் லெவல் போலவே அந்த பொண்ணு செத்துப்போயிருக்கா ? போலிஸ் அசெம்ஷன் எல்லாமே உங்களோட கேம் கிரியேஷனில் ஒத்துப்போகுது. இது ரொம்பவும் வைரலாகும் அப்லோட் செய்த ஒருவாரத்தில் மத்த எல்லா கேம்களையும் தூரவிரட்டியடிச்சிட்டது. அதிலும் அந்த எண்ட் போர்ஷன் அந்த பொண்ணை காப்பாத்த எல்லார் கேம் லவ்வர்ஸ்ம் போராடுவாங்க,

 

ஆனா எத்தனை லெவல் போனாலும் முடிக்கமுடியலையே, அதுதான் சார் டிவிஸ்ட் கொஞ்சநாளுக்கு பிறகு லெவல் அப் பண்ணிக்கலாம். ஓ....குட்.... நம்ம கேட்டபடி நம்ம வீவர்ஸ் எல்லாம் உங்க கேமுக்கு செலக்ட் பண்ணியிருக்க பேரு சைக்கோ...! டீம் மொத்தமும் ஹேப்பி நாமதான் இப்போ பர்ஸ்ட். நாமதான் பீல்ட்டுலே பீக்... டீம் ஹெட் ஐந்துநிமிட அடைமழையென பாராட்டி விட்டு போனை வைத்த போது நான் கொஞ்சம் கர்வமாய் நிமிர்ந்தேன். நான்தான் அப்பவே சொன்னேன் இல்லை ப்ரேம் பிராக்டிக்கலா யோசிங்க அப்பத்தான் வின் பண்ண முடியும் என்ற தீபாதான் இந்த கேமை முடிக்க பிராக்டிக்கலா உதவினாள் என்றும், இந்த பத்திரிக்கைச் செய்தியின் உண்மை வடிவம், அந்த ஆகாயத்தாமரையின் ஆதரவில் அவளை அந்த சேற்றில் முக்கி கொலை செய்த அந்த ஓநாய் மனிதன் நான்தான் என்று யாரும் உணர்ந்திருக்கப் போவதில்லை, ஏன் சேற்றை முதலில் ருசித்த தீபா கூட...?!


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்