Skip to main content

"என் தனிமைக்குத் துணையாய் அந்த 5 அங்குலக் கத்தியுடன் வாசல் தாண்டுகிறேன்.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #6

ப

 

கதவுக்குப் பின்னால் கீரிச் சப்தம்... சிகப்பான அந்த திரவத்தை ருசித்துக் கொண்டு இருந்தது அந்த மீசை வைத்தப் பூனை. யாருமில்லாத் தனிமை முகத்தில் அறைந்தது. அந்த அறையில் நான் மட்டும் இல்லை அவனும் இருந்தான் அப்பறம் எப்படி அது தனிமையாகும் என்று நீங்கள் கேட்கலாம். வழிந்தோடிக் கொண்டிருந்த வியர்வை மின்விசிறி சுழலவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாய், வெளிச்சத்திற்கு மணவிலக்கு கொடுத்த அந்த நொடிகள் உணர செய்தது அந்த அறைக்குள் நான் மட்டும் இல்லை அவனும்... இல்லையில்லை இப்போது அவன் அவனாகயில்லை அதுவாக இருந்தான்...!

 

இருபது முழு நிமிடங்களின் இடைவிடாத போராட்டத்தின் முடிவில் அவன் அதுவாக மாறினான். ஏன்? காரணங்களைப் பட்டியலிட்டு பக்கம்பக்கமாக அடுக்கலாமா? அல்லது இயல்பாய் அதைக் கடக்கலாமா? வெகு எளிதில் தீர்க்கக்கூடிய ஆனால் தீர்க்க முடியாத, தெரியாத ஒரு சிக்கலாகிப் போயிருக்கிறான் கிழிக்கப்பட்டு இருக்கும் நாட்காட்டியின் தாள்களில். முதல்நாள் பட்டுப்புடவைக்குள் ஒளிந்திருந்த அழகை அவன் ரசிக்க, அதற்காய் இறந்து போன பட்டுப்பூச்சிகளின் மரணவாசனையை நான் நுகர, உடலெங்கும் ரத்தப்பிசுபிசுப்பு. முகச்சுழிப்பில் கணம் அதிகமா என்றான் ஆம் உடலில் இல்லை மனதில். அப்போது ஏறிய கனம்தான் வண்ணங்களை வெறுத்து வெள்ளைச் சேலைக்கு மாறிவிடு என பட்சி பறபறத்த அந்நாளின், 86400 மைக்ரோ நொடிகளின் உச்சம்.

 

அப்பட்சியின் சிறகுகள் விட்டுச்சென்ற காயங்களின் ரணம்தான் அதுவாக மாறிப்போன அவனின் அடிவயிற்று ரத்தக்கோலங்கள். நானா... நான்தான் என்று என் கரங்களில் முளைத்திருந்த கத்தியின் கூர்முனை ரத்தம் ருசுவாய். அழுக்கான டீக்கடையின் வாசலில் அரசியல் தலைவரைப் பற்றி பேசியதற்காக அவன் அதுவாகவில்லை, ஜென்மப் பகையின் காரணமாக அவனின் அடிவயிற்றில் 5 அங்குலக்கத்தி உறவாடிடவில்லை. இது ... இது... ரசிப்பின் உச்சம். ஒற்றை கீறலில் எப்படி ரத்தம் தெரிக்கும் என்ற ஆராய்ச்சி. ஆராய்ச்சியின் முடிவு அவன் அதுவாகிக்கிடக்கும் நற்பகலில் இருந்து நடுநிசிவரையில் 26 மாதங்கள் தொலைத்த நொடிகளுக்கு எல்லாம் இருபது முழு நிமிடங்களில் விடை கிடைத்துவிட்டது.

 

ுர

 

நேற்றைய கனவின் எச்சம் இன்னமும் உறைந்திருக்கிறதா என்று என்னையே நான் கிள்ளிப்பார்த்தேன் உரைத்தது. அதே போல் ஜீவனாம்சம் பெறும் இணையைப் போல கண்சிமிட்டிய விளக்கின் ஒளியில் அவன் வாயைப் பிளந்து கொண்டு மல்லாந்து இருந்தான். சுதந்திரமாக இதுதான் சமயம் என்று வயிற்றில் ரத்தச்சேற்றில் மூழ்கியிருந்த ஈ ஒன்று அவன் வாயில் நுழைந்து வெளிவந்து கண்ணாமூச்சு ஆடியது. அதிகாலைக்கு இன்னமும் அரைமணியே இருக்க, நான் அலங்கரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தேன். அவனுக்கு எப்போதும் நசநசத்த வியர்வையோடு முக்காட்டைப் போல ஒரு ஆறுமீட்டர் துணியோடு நகைப்பெட்டகமாய் வளைய வர வேண்டும். அரைகிலோ பூவைச் சுமக்கவேண்டும் வட்டவட்டமாய் பொட்டிட்டுக் கொள்ளவேண்டும்.

 

பார்த்துக்கொள் நான் என் வெற்று நெற்றியையும், வெறுமையான கழுத்தையும், கூடவே வர்ணங்களின் வாசம் இல்லை வெள்ளைச்சேலையும், என் அலங்காரத்தைக் கண்டபோதும், தேதி காலாவதியான காசோலையாய் அவன். தொண்டைகிழிய கத்தும் அவனின் குரல்வளையை நான்தான் நெறித்து விட்டேனே, மட்டன் குழம்பு கேட்ட கணவனை கொலை செய்த மனைவி என்று பத்திரிகையில் நான்கு நாட்கள் முந்தைய செய்தி அதேபோல் இது கூட நாலாந்திர பத்திரிகையொன்றில் எதையோ கேட்ட கணவனை குத்திக்கொன்ற மனைவி என்று பிரசுரமாகலாம். யார் கண்டது கள்ளகாதலுக்காக கணவனைக் கொன்றாள் என்றுகூட வரலாம். ஆனால் அச்செய்தியைச் சேர்க்கும் அச்சு இயந்திரம் அறியுமா? ஆண் என்னும் வர்க்கத்தினின் ஆக்ரோஷமான ஆண்மைப் பசிக்கு எத்தனை முறை என் பெண்மை வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது என்று!

 

வெறுத்துப்போய் கட்டையாய் மறிக்கப்பட்ட இரவுகளில் எல்லாம் என் உடல் தாங்கிய சிகரெட் சூடுகளை?! அவன் அதுவாகிப் போக வேண்டும் என்ற வெறி எனக்குள் நெஞ்சுக்குழிக்கு நடுவில் ஆடத்தொடங்கிய தாலிக்கயிற்றைச் சுமந்த அன்றே வந்துவிட்டதே, அதற்கு இத்தனை நாள் கொம்பு சீவி விட்டு அலங்கரித்துப் பார்த்ததே அவன்தானே. பிஞ்சுப் பாதங்களுக்கு நடுவில் கட்டெறும்பை ருசிபார்க்க வைத்த அந்த கிழடுகளின் சுவடுகள்தான் இவனிடமும், தனிமை தாயில்லா தனிமை, துரதிஷ்டம் துரத்திய தனிமை, மாற்றாந்தாயின் பிள்ளைக்கு கிடைத்த அன்பை ஆதரிக்க மனமின்றி அதன் குரல்வளையை நெரிக்கக் கிடைத்த தனிமை, அள்ள அள்ள குறையாத அவளின் அன்பு எனக்கு மட்டும் மறுக்கப்பட்ட தனிமையின் வெறுமை, திருமணச் சந்தையில் நிறம் பார்த்து ஒதுக்கப்பட்ட தனிமை, நான் உனக்கு வாழ்வு தந்துள்ளேன் நீயென் அடிமை என்று நசுக்கப்பட்ட இரவுகளிலும் தனித்து விடப்பட்ட மனத்தின் தனிமை, இத்தனை தனிமைகளையும் ரசிக்கத்துவங்கிவிட்ட மனபட்சி இவன் அருகாமையைத் தொலைத்த தனிமையை ஏக்கத்துடன் கேட்கத் தொடங்க, அவன் அதுவாகிப் போனான்.

 

http://onelink.to/nknapp

 

சட்டென்று உறைந்து போகாத அந்த திரவத்தை விரல்களில் அப்பிக்கொண்டு தனிமை தொடரும் என்ற குறிப்புடன் என் தனிமைக்குத் துணையாய் அந்த 5 அங்குலக் கத்தியுடன் வாசல் தாண்டுகிறேன். இதோ வெளிச்சப்பூக்கள் இன்னும் சற்றுநேரத்தில் வானைக் கிழித்துக்கொண்டு சூரிய அர்ச்சகர் பூமியை பூஜிக்கப்போகிறார். அத்தோடு வெள்ளைப் பூவாய் மாறியிருக்கும் என்னோடு சேர்த்து என் தனிமையையும்.
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்