ADVERTISEMENT

"தம்பி உனக்கு உயரம் பத்தல" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா? மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23 

06:06 PM Oct 17, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கையில் பொம்மையை வைத்துக்கொண்டு அதைக் கொடுப்பது போலக் கொடுத்து, கை மாற்றி மாற்றி குழந்தையிடம் விளையாடுவதும், அதில் குழந்தை ஏமாந்து போவதும் பார்ப்பதற்கு எப்படிப் பரவசம் தருமோ, அது போலவொரு பரவசம் மைக்கேல் ஜோர்டன் களமிறங்கும் போட்டிகளில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். மின்னல் வேகத்தில் கால் நகர்வுகள் மற்றும் பம்பரம் போல சுழலும் உடலுடன் மைக்கேல் ஜோர்டன் பந்தை கைமாற்றி எதிராளியை ஏமாற்றுவதையும், அந்தரத்தில் எகிறிக்குதித்து பாயின்ட் எடுப்பதையும் காண கூடைப்பந்து ரசிகர்கள் தவமாய் காத்துக் கிடப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை எந்தவொரு போட்டியிலும் நிவர்த்தி செய்ய மைக்கேல் ஜோர்டன் தவறியதுமில்லை. பொதுவாக இந்தியர்களுக்கு கூடைப்பந்து பெரிய அளவில் பரிட்சயமானது அல்ல. ஆனால், மைக்கேல் ஜோர்டனுக்கு இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. மைக்கேல் ஜோர்டன் விளையாட்டிற்கு இணையான ரசிகர் கூட்டம், பிறருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய கடந்த காலம் குறித்து அவர் பேசும் பேச்சிற்கும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மைக்கேல் ஜோர்டன். தந்தை மின்சார ஆலையில் மேற்பார்வையாளர். தாயார் வங்கி நிர்வாகி. குடும்பத்தில் மொத்தமுள்ள ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜோர்டன். ஆரம்பக் கட்டங்களில் பேஸ் பால் விளையாடி வந்த மைக்கேல் ஜோர்டனுக்கு பின்னாட்களில் பேஸ்கெட் பால் விளையாட்டு மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பள்ளி அணிகளில் இணைய முயற்சிக்கும் போது, உயரத்தை காரணம் காட்டி நிராகரிக்க, அது தந்த ஏமாற்றமும், வேதனையும் மைக்கேல் ஜோர்டனுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தனக்கான ஒரு அடையாளத்தை பதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் அளிக்கிறது. பள்ளியின் ஜூனியர் அணியில் இணைந்து விளையாட ஆரம்பிக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து படிப்படியாக முன்னேறி, இன்று உலகின் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் என வரலாறு பேசக் கூடிய உயரத்தைத் தொட்டுள்ளார். கூடைப்பந்தாட்ட உலகின் உயரிய சாதனையாகக் கருதப்படும் எம்.வி.பி.(MVP) விருதினை இதுவரை 5 முறை வென்றுள்ளார்.

"என் வாழ்க்கையில் 9000 முறை ஷூட் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறேன். நான் ஷூட் போட்டு அணியை வெற்றி பெற வைத்துவிடுவேன் என்று மைதானத்தில் உள்ளவர்கள் நம்பிய வேளையில், 26 முறை அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறேன். நான் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் வெற்றியாளனாக என்னால் வலம் வர முடிகிறது. பள்ளிக்காலங்களில், பள்ளியின் கூடைப்பந்தாட்ட அணியில் இடம் பிடித்தவர்கள் பட்டியலைப் பார்க்கும்போது நொறுங்கிப்போனேன். உயரத்தைக் காரணமாய் காட்டி என்னை நிராகரித்தார்கள். என் வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு அழுதேன். என் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானித்து பள்ளியின் ஜுனியர் அணியில் இணைந்து விளையாட ஆரம்பித்தேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், சில தடைகள் வரும், நானும் அவைகளை சந்தித்தேன். அவைகளைக் கடந்துதான் வரவேண்டும். என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோல்வியடைவோம். முயற்சியின்மை என்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முறை முயற்சியை கைவிட நினைத்தீர்கள் என்றால் அதுவே வாடிக்கையாகிவிடும்".

சிகாகோ புல்ஸ் அணிக்காக மைக்கேல் ஜோர்டன் விளையாடும் போட்டிகளில், அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழியும். அதில் பாதி ரசிகர்கள் மைக்கேல் ஜோர்டன் தரிசனத்தை மட்டுமே காண வந்தவர்கள். அணி வெற்றி, தோல்வி குறித்து அவர்களுக்கு கவலையேயில்லை. தனிநபராக மைக்கேல் ஜோர்டன் படைத்த சாதனைகளை, வரலாறு இந்நூற்றாண்டு இறுதிவரை தன்னுள் தக்கவைத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

'தம்பி உனக்கு உயரம் பத்தல' என்று கூறி நிராகரித்தார்கள்... ஆனால் இன்று இவர் தொட்டுள்ள உயரம்? கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT