ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்.. மரணமுகூர்த்தம் #2

05:21 PM Aug 04, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அத்தியாயம்- 2

தியாவா இவள்? எப்போதும் துள்ளிக் குதிக்கும் உற்சாகப் புயல் தியாவா இது? ஆளைப் பார்த்ததும் ”வாடி ராசாத்தி..” என்று பாட்டுப்பாடிக் கலாய்த்து அழைக்கும் புன்னகை அழகி தியாவா இப்படி பேயறைந்த மாதிரி இறுக்குப் போய் உட்கார்ந்திருக்கிறாள்?

-கவி நிலாவும் ஷாலுவும் திகைத்தார்கள்.

கட்டிலில் ஒரு மூலையில் இரண்டு முழங்கால் முட்டிகளுக்கும் இடையில் முகம் புதைத்திருந்தாள். அப்போது அவள் கேசத்தை ஃபேன் காற்று வாடகைக்கு எடுத்து விளையாடியதில், தலைக்கேசம் கலைந்து அவளுக்கு அது திகில் எஃபெக்ட்டை கொடுத்திருந்தது.

கவியும், ஷாலுவும் அருகே சென்று அவளைத் தொட்டனர். மின்சாரக் கம்பியில் அடிபட்ட பறவை போல டக்கென்று நிமிர்ந்தாள். இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாள் என்று நினைத்தார்கள். தெருவோரம் கிழிந்த சட்டையுடன் அழுக்கேறிப் படுத்திருப்பவர்களைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கவிக்கும், ஷாலுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. நம்ம தியாவா இது என்று குழம்பினர்.

கவி , தியாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே , "தியா, என்னடீ ஆச்சு? ஏன் எங்கக்கிட்ட பேசமாட்டேங்கற?"என்றாள் பரிதவிப்புடன். கவியையே வெறித்துப் பார்த்த தியா அப்படியே மயங்கிச் சரிந்தாள். இதைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். என்னவோ ஏதோ என்ற பயம் அனைவரின் வயிற்றிலும் சுருண்டது.

கவியும், ஷாலுவும், "ஏய் ...தியா... தியா என்னாச்சுடி உனக்கு .." என்று அவளைக் கன்னத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தனர். அதற்குள் தியாவின் அம்மா, ஓடிப்போய் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தார். , கவிதான் தியா முகத்தில் சிலீர் எனத் தண்ணீரைத் தெளித்தாள். லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்த தியா, திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாள்.

கவி, தியாவின் தலையை மடிமீது வைத்து வாஞ்சையுடன் கோதிவிட்டாள். ஷாலு தியாவின் கால்களையும், கைகளையும் சூடு பறக்கத் தேய்த்தாள். அதற்குள், தியாவிற்கு வீட்டிலிருந்த ஆக்ஸி மீட்டரில் பல்ஸ், ஆக்ஸிஜன் அளவை எல்லாம் செக் பண்ண... எல்லாமே நார்மலாக இருந்தது. தியாவின் அம்மா செய்வதறியாது பதட்டத்துடன் தவித்தார்.

தியாவின் வாய் ஏதோ முனகியது.

செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பிவிட்டு, கவுண்ட்டவுன் நொடிகளில் சிலிர்ப்புடன் காத்திருக்கும் விஞ்ஞானிகள் போல, அனைவரும் தியா என்ன முனகுகிறாள் என்று கூர்ந்து கவனித்தனர்.

"என்னை விடுங்கடா, நான் படிக்கனும், டாக்டர் ஆகனும், என்னை வாழ விடுங்கடா... கொன்னுடாதீங்கடா.." என்று ஏதேதோ முனகினாள் தியா.

அந்தச் சொற்கள் அனைவரின் இதயத்திலும் கொள்ளிவைப்பது போல் இருந்தது.

"இப்படித்தாம்ம்மா... வெறிச்சி வெறிச்சிப் பாக்குறா... அப்படியே மயக்கம் வந்து விழறா... அப்பறம் இப்படி ஏடா கூடமா என்னவோ முனகறா.... ரொம்ப பயமா இருக்கு" என்று தியாவின் அம்மா அழுதார். அந்த வீடு நிறைய இனம்புரியாத துயரம் முகாமிட்டிருந்தது.

"அம்மா.. என்னதாம்மா நடந்தது? ஏன் இப்படி இருக்கா?, எனக்கு ஷாலு போன் பண்ணிச் சொன்ன பிறகு தான் தெரியும். அவசரம், அவசரமாகக் கிளம்பி வந்தேன்” என்று பதற்றத்துடன் சொன்னாள் கவிநிலா .

"நீங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தப்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தாம்மா , அவளோட அப்பா பிஸ்னஸுக்காக இங்க வேளச்சேரிக்கு வந்ததும், இவளையும் இங்கேயே இருக்கும் அவள் ஸ்கூல் பிரான்ச்சுக்கு மாத்தினோம். இந்த பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே ஒரு மாதிரி மூடியாக இருந்தாள். போன வாரத்தில் இருந்து பள்ளிக்கு போகமாட்டேன்னு அடம் புடிச்சா... நாங்களும் எவ்வளவோ புத்திமதி சொல்லிப் பார்த்துட்டோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை. ஸ்கூல்னாலே மிரள்றா... அதான் பயமா இருக்கு " என்று லேசான விசும்பலுடன் கம்மிய குரலில் சொன்னார் தியாவின் அம்மா சுந்தரி.

கவி, ஷாலு, தியா மூவரும் முன்பு பள்ளியில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர். சந்தானம் ஸ்டைலில் சொல்லனும்னா பிரட்டும், ஜாமும்.

பள்ளியில், வெளியில் அனைவரும் இவர்களை திரி ரோஸஸ் என்று தான் அழைப்பார்கள். கவியின் அப்பா தான் பள்ளி நிர்வாகி. ஷாலுவின் அப்பா டாக்டர், தியாவின் அப்பா பெரிய சிவில் இன்ஜீனியர். இப்போது தோழிகள் மூவரும் வேறு வேறு திசைகளில் ஒன்றாகப் பயணம் செய்பவர்கள். பாதை வேறாக இருந்தாலும் கனவில் போய் சேரும் இடம், நீட் எக்ஸாம்தான்.

கவி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். இந்த ஒரு வாரத்தில் என்ன நடந்திருக்கும்? தோழிகளிடம் மறைக்கும் அளவுக்கு பள்ளியில், அது நமது பள்ளியில் என்ன நடந்திருக்கும்? என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தாள். அப்பாவிடம் சொல்லி, தியாவின் மிரட்சியின் பின்னால் இருக்கும் உண்மை என்னன்னு கண்டுபிடிக்கச் சொல்லனும்’ என்று நினைத்துக்கொண்டாள் கவி.

திடீரென தியாவிடமிருந்து... "அம்மா..நான் தப்பு பண்ணலைமா, தப்பு பண்ணமாட்டேன் மா.." என்று முனகல் வந்தது.

"தியாவை யாராவது சைக்கியாரிஸ்ட் கிட்ட அழைச்சிட்டுப் போனீங்களா? " என்று கவலையுடன் கேட்டாள் கவி.

"மனநல மருத்துவரிடம் அழைச்சிக்கிட்டுப் போனோம். அவரும் தனியா ரொம்ப நேரம் தியாவிடம் பேச முயற்சி செஞ்சார். இவ அதிகம் பேசலையாம். தியா என்ன பேசினான்னு கேட்டதுக்கு, மாத்திரைகளை மட்டும் எழுதிக்கொடுத்து, தியா ரொம்பவும் பயத்திலும் டிப்ரஷன்லயும் இருப்பதாவும், ரெண்டு நாள் கழிச்சி அழைச்சிக்கிட்டு வாங்கன்னும் சொன்னார்” என்று குழப்பம் விலகாமல் சொன்னார் சுந்தரி.

கொஞ்ச நேரத்தில் தியாவிடமிருந்து மெல்லிய குறட்டை வந்தது. அதற்குள் கவியை, அவள் அம்மா போனில் அழைக்கவே, ஷாலுவுடன் விடைபெற்றுக் கிளம்பினாள் கவி. போகும் போது....

“தியாவை ரொம்ப கவனமா பார்த்துக்கங்க. அவளுக்கும் ஒன்னும் இருக்காது. எதையாவது பார்த்து பயந்திருப்பா... டோண்ட் ஒர்ரி ஆண்டீ” என்று சுந்தரியிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

வண்டியில் போகும் போது, "ஷாலு, தியா உங்கிட்ட பேசினாளா? ஏதாவது சொன்னாளா?” என்றாள் கவி.

"எங்கடி, நீ ஜாலியா டெல்லி போய்ட்ட , நாங்க இங்க டியூஷனுக்கு ஜகன்மோகினி மாதிரி ராத்திரி பகல்னு அலையறோம், நாம மூனு பேரும் எப்பவாச்சும் இரவு கான்ஃபிரன்ஸ் காலில் பேசறோமே .. அதோட சரி” என்று வெறுப்புடன் சொன்னாள் ஷாலு.

"ஷாலு என் வீட்டிற்கு வாடி, லஞ்ச் முடிச்சிட்டு தியா ஸ்கூலுக்கு போய்ட்டு வருவோம்" என்று அழைத்தாள் கவி.

"லூசாடி நீ, ஞாயிற்றுக்கிழமைல எவண்டி ஸ்கூலை திறந்து வச்சிருக்கான்?” என்றாள் ஷாலு.

" நீ தான் டி லூசு, எங்க ஸ்கூல்தானே அது. என்னால ஸ்கூல் உள்ள போக முடியாதா..?” என்று கவி கேட்டதும்தான், தியா படிக்கறது கவி அப்பா நடத்தும் ’கவிநிலா சி.பி.எஸ். சி’ பள்ளி என்று நினைவு எட்டிப் பார்த்தது ஷாலுவுக்கு..

கவி வீட்டிற்குப் போய் மதிய உணவு முடித்துவிட்டு, அம்மாவிடம் சிறிது நேரம் அன்பைப் பொழிந்துவிட்டு இருவரும் பள்ளிக்கு கிளம்பினார்கள்.

காபி பார்கள், வடை வாசனையைக் காற்றில் பரவ விடும் மாலை நேரம். டியோ மட்டும் என்பீல்டாக இருந்திருந்தால், வழியிலேயே எங்கேனும் வண்டியை நிறுத்தி, சுடச்சுட வடையை வயிற்றுக்குள் அனுப்பியிருப்பார்கள்.

டியோ சாலையுடன் காதல் கொண்ட கொஞ்ச நேரத்தில், கவியின் செல்போன் சிணுங்கியது.

எதிர்முனையில் தியாவின் அம்மா சுந்தரி. "கவி,.. தியாவை, பக்கத்துல இருக்கும் காமாட்சி ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம். கொஞ்சம் வர்றியாமா? ” எதிர்முனையில் சுந்தரியின் குரல் பதட்டத்துடன் தேம்பியது. தியாவை, திடீர்ன்னு எதுக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கனும்?’ கவிநிலாவின் நெஞ்சுக்குள் குழப்பம் தபேலா வாசித்தது.

- திக்திக் தொடரும்

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்... மரண முகூர்த்தம் #1

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT