Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #6

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

marana muhurtham part 6

 

அத்தியாயம் -6

 

மனித வாழ்வின் சுவாரஸ்யமே ஒரு முடிச்சை அவிழ்ப்பதற்குள் வேறொரு முடிச்சுக்குள் மாட்டிக்கொள்வதுதான்.

 

தியா எப்படி இறந்தாள்? என்று அறிவதற்காக வந்தவள், ரோலர் கோஸ்டரில் ஏறுவது போல வாட்ச்மேன்  தொடர்பான  மர்ம நடவடிக்கைகள் பற்றி யோசித்தாள்.

 

யார் அந்த இளைஞர்கள். எதற்காகப்  பள்ளிக்கு வந்தார்கள்? வாட்ச் மேனுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? என்ன அவரிடம் ரகசியமாகக் கொடுத்தார்கள்? அவளிடம் கேள்விகள் தாறுமாறாய் முளைத்தபடியே இருந்தன. 

 

இந்தப் பள்ளிக்குள் எப்படிச் செல்வது..? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கவி ஒரு கேள்விக்குறியாகி நின்றாள்.

 

அந்த நேரம் பார்த்து, அலைபேசியில் அழைத்த அம்மா, அன்பு ததும்பும் குரலில் "கவி, எங்க இருக்க? மதியம் லஞ்ச் என்ன பண்ணட்டும்?" என்றார். அம்மாவின் ஐஸ்கிரீம் குரலில் உருகி, “உன் இஷ்டம்மா” என்றபடி கவி, வீட்டிற்குக் கிளம்பினாள்.

 

சாதாரணமாகப் புள்ளி வைத்துப் போடும் கோலம் சரியாக வரவில்லையென்றாலே, பத்து முறை கலைத்துப் போடுவது பெண்களின் இயல்பு. அப்படிப்பட்ட  மனவோட்டத்தைக் கொண்ட  கவி, பள்ளியில் சென்று விசாரிக்க வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? எப்படி அப்பாவின் செல்வாக்கு இல்லாமல் சராசரி ஒரு பெண்ணாக அங்கே சென்று விசாரணையை மேற்கொள்வது? என்ற தவிப்பிலேயே இருந்தாள்.

 

மதியம் சாப்பிட்டுவிட்டு இருப்புக் கொள்ளாமல் மீண்டும் தியாவின் வீட்டிற்குச் சென்றாள் கவி.

 

தியாவின் அம்மாவிற்கு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிவிட்டு , தியாவின் அறைக்குச் சென்று ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று தியாவின்  புத்தக அலமாரிகளை ஆராய்ந்தாள். அலமாரியில் இருந்த  கவி, தியா, ஷாலு மூவரின் படங்களைப் பார்த்ததும் அவளை அறியாமலே அவள் கண்கள் கங்கையானது. அந்த கங்கை, தியாவின் இறப்பிற்குக் காரணமானவர்களை அழிக்க வேண்டும் என்ற திராவகம் நிரோட்டம் கொண்டதாக மாறியது.

 

‘அவசரப்பட்டுட்டுயே தியா. நாங்கள்லாம் இருந்தும் எங்கக்கிட்ட கூட சொல்லாம எப்படிடீ.. இப்படி ஒரு முடிவை எடுத்தே? எங்களை எல்லாம் விட்டுவிட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு?’-அவள் மனம் தியாவைக் கோபித்தது.

 

தியாவின் புத்தகங்களை, நோட்டுகளை ஆராய்ந்தாள். சில நோட்டுகள் கவிக்கு அடுக்கப்பட்ட விதத்தில் வித்தியாசமாக தெரிய, அவற்றை அப்படியே அள்ளி, தன் ஹேண்ட் பேக்கிற்குள் பதுக்கிக்கொண்டாள்.  பின்னர் தியாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தாள்.

 

மாலைச் சூரியனும்  நாள்முழுக்க வானத்தில் அலைந்த   களைப்பால், சற்று எங்கோ ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தது போல், வெயில் குறைந்திருந்தது. கைக்கடிகாரமோ மாலை 3;00 மணி என்றது. கவி மீண்டும் பள்ளிக்குச் சென்றாள். பள்ளி விடும் நேரம். ’ஊமை விழிகள்’ படத்தில்  வருவது போல கார்கள் அணிவகுத்து நின்றன.

 

ஆண்கள், பெண்கள் எனப்  பட்டாம் பூச்சிகள் வெளியே பறந்து வந்துகொண்டிருந்தன. அப்போது ஒரு மாணவியின் முகத்தில் பதட்டம் தெரிந்தது. வயது 16 இருக்கலாம். ப்ளஸ் ஒன் படிப்பவள் போலத் தெரிந்தாள். அவளுக்காக அவள் அம்மா காத்திருந்தார். அம்மாவை நோக்கி வேகமாக நடந்த அந்த மாணவி...”மம்மி சீக்கிரம் வீட்டிற்குப் போலாம்.  ரெஸ்ட் ரூம் போகனும்" என்று அவசரப்படுத்தினாள். 

 

அந்த மாணவியின் அம்மா,  ஏண்டி அவசரம்ன்னா, ஸ்கூல்லயே போக வேண்டியது தானே?" எனக் கேட்க..

 

"மம்மி, ரெஸ்ட்  ரூம் ரொம்ப டர்ட்டியா இருக்கு. நீட்னஸ் இல்லை மம்மி. அதனால மார்னிங்ல இருந்தே அங்க போகலை மம்மி" என மழலையில்  மகுடி வாசித்தாள். 

 

இதைக் கேட்டதும் கவிக்கு ஷாக். அவள் அப்பா இத்தனைக் கோடிகளை வாரி இறைத்து அந்தப் பள்ளிக்கூடத்தைக்  கட்டியிருக்கார். இந்த மாணவி என்னன்னா இப்படிச் சொல்றாளே...என யோசித்தாள்.

 

பெரும்பாலான மாணவ மாணவிகள் காம்பவுண்டை விட்டு வெளியேறிய நிலையில்,  கொஞ்ச தூரத்தில் ஆங்காங்கே  மரத்தடிகளில் சிறுசிறு கும்பலாக டீன் ஏஜ் மாணவர்களும், மாணவிகளும் அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டு இருந்தனர். 

 

வாட்ச்மேன் இருந்த இடத்தில் இருந்தபடியே ”எல்லாரும் போங்க... இங்க யாரும் நிக்கக்  கூடாது" என்று விரட்டினார்.

 

அப்போது  உள்ளே இருந்து இரண்டு மாணவர்கள் வெளியே வந்தனர். வாட்ச்மேன் தோளில் கையைப் போட்டு ஏதோ பேசினர். ஒரு மாணவன் 5000 ரூபாயை எடுத்து வாட்ச்மேன் கைகளில் திணித்தான்.  இன்னொரு மாணவன் கையில், வாட்ச்மேன் எதையோ திணித்தார்.

 

இந்த காட்சிகளை எல்லாம் கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரீ பிளே போட்டுப் பார்த்தால் தான் தெளிவாகத் தெரியும். அந்த அளவு மின்னலை விட வேகமாக நடந்து முடிந்தது.

 

அந்த மாணவர்களில் ஒருவன், சாக்லேட் பாய் மாதவன் மாதிரி தோற்றம் காட்டினான். அவர்கள் தங்களுக்காகக் காத்திருந்த பி.எம்.டபிள்யூ காரில் ஏறிப் பறந்தனர். பல லட்சங்கள் மதிப்புள்ள வண்டியில் வருகிறவர்களுக்கு வாட்ச்மேனிடம் "என்ன பேச்சு.?”  என்று யோசித்தாள்.

 

இவ்வளவு நேரமும் கவியையே ஒரு சோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர்... மரண முகூர்த்தம் #5