Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #47

 

marana muhurtham part 47

 

அடுத்த குண்டாக அவள், எதை வீசப்போகிறாளோ? என்று ராம் யோசிக்கத் தொடங்கினான். அப்போது அவன் சிந்தனை தவத்தைக் கலைத்தபடியே ஒரு ஞானியைப் போல் பேச ஆரம்பித்தாள் கவி...

 

"அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்பவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன் என்று கண்ணதாசன் சொன்னார். ராம், இங்கே யாரும் திருந்தி வாழத் தயாராக இல்லை. அதோடு சிலரை எவராலும் திருத்தவும் முடியாது”

 

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவள் கண்களையே பார்த்தான் ராம். கவி தொடர்ந்தாள்...

”அப்படிபட்ட மிருகங்கள், இந்த பூமியை சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.  அவர்கள் எல்லாம் பூமியின் நிம்மதியைக் குலைப்பவர்கள். சமூகத்தை மிரட்டும் நச்சுப்பிராணிகள். சட்டத்தின் இருட்டுப்பொந்துகளின் வழியாகத் தப்பிக்கும் உத்தியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள, வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அப்படித்தள்ளப்பட்ட மாணவர்கள்தான், வேறு வழியின்றி இந்த ரகசியக் குற்றவாளிகளை ரகசியமாகவே களையெடுக்கும் முடிவுக்கு வந்தார்கள்” என்று அவள் தீர்க்கமாகப் பேசுதை வியந்து பார்த்தான் ராம்.

 

கவியே தொடர்ந்தாள்... "ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், விதை நெல்லைப்  போன்றது. விதை நெல்லுக்கு கணக்குப் பார்த்தால் விளைச்சல் அதிகமாக இருக்காது என்று பெருந்தலைவர் காமராசர் சொன்னார். அந்த விதை நெல் பதர் ஆகும் போது, தூக்கிப் போடுவதுதானே முறை. ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். தன்னுடைய இரண்டாவது உலகமாக நினைக்கக்கூடிய பள்ளி காரணமாக இருக்கக்கூடாது”  -நயாகரா அருவி ஆர்பரித்து விழுவதை போன்று தன் உணர்வுகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் கவி.

 

வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த திலகா இதற்கு மேல் தாங்க முடியாமல்,  கரையைத் தேடும் அலை போல வேகமாக உள்ளே வந்தாள். திலகாவின் கையில் இருந்த காபி ஸ்டார் ஹோட்டல் கூல் காபி போல ஆகியிருந்தது.

 

அம்மாவைப் பார்த்ததும் கவியின் முகம், சூரியனை மேகப் புதருக்குள் நழுவவிட்ட வானம் போல் இருண்டது. "அம்மா .?.. என்று அழைத்த குரல், வழிப்பறி போல் காணமல் போய்விட்டது. அவளது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட ராம்..

“கவி ஏன் பயப்படுற? என்றாவது ஒரு நாள் அம்மாவுக்குத் தெரியத்தான் போகுது” என்று தைரியமூட்டினான்.  

"கவி பள்ளியில் இத்தனை நடந்திருக்கா?. சிறகு விரித்து பறக்கும் பறவையைப் போல மகிழ்வாக பறந்து திரிந்த, உன் சிறகுகளில் இத்தனை சுமைகளா? இந்தச் சிலுவைகளை நீ மட்டும் சுமந்து கண்ணீர் வடிக்கிறியே... கவலைப்படாத கவி. நானும் ஒரு பொண்ணுதான். பொண்ணுங்களின் போராட்டமும் வேதனையும் எனக்கும் தெரியும்.” என்று அவளை அம்மா வாஞ்சையுடன் வந்து அணைத்துக்கொண்டார். 

 

அம்மாவின் அணைப்பில் உள்ளத்தில் தேங்கி, மீதமிருந்த கண்ணீர்த் துளிகளும் கரைந்து வெந்நீர் அருவியாக வெளியேறத் தொடங்கியது. கவியின் கண்ணீர் வலியைத் தாங்க முடியாமல் அம்மா துடைத்துவிட்டார்.

 

மிகப்பெரிய யுத்த களத்தையும் அமைதியாக்கும் சக்தி மௌனத்திற்கு உண்டு. அந்த மௌனம் தான் மூவரின் மனங்களுக்கிடையே சமாதான வெண்புறாவாய் சிறகடித்தது. ஆண்களின் அளப்பரிய திறனே சூழ்நிலையை மாற்றுவது அல்லது மாறுவது. ராம் மெல்ல பேசினான்.

"கவி, .இது வரைக்கும் நடந்த யுத்தத்திற்கு நீ தளபதியாக இருக்கலாம். இனி விதி என்னைத் தளபதியாக்குகிறது. நடந்ததை என்னிடம் மறைக்காமல் சொல்லு. நிச்சயம் உன் மன அமைதிக்கு வழி செய்கிறேன்" என்றான் உறுதியான குரலில்..

 

’இப்பக் கூட ராம்  நீதி கிடைக்க வழி செய்கிறேன் என்று சொல்லவில்லை. வெறுமனே, என் மன அமைதிக்கு வழி செய்கிறேன் என்று சொல்கிறானே. தியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் எனக்கு எப்படி மன அமைதிவரும்?. ஏதோ அப்பாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை அவன் வைத்திருக்கிறான். அவர் தவறு செய்திருக்க மாட்டார் என்று நம்பிக்கையாக, சித்தப்பா என்ற பாசம் கண்ணை மறைக்க, எதேதோ ஆறுதல் டயலால் அடிக்கிறான். சரி இந்த அளவிற்காவது நிலவரத்தின் தகிப்பைப் புரிந்துகொண்டானே என்று சந்தோசப் பட வேண்டியதுதான்’ என்று தனக்குள் பேசினாள்.

 

சில நேரங்களில் நிராயுத பாணியாக இருக்கும் போது, அந்த நேரத்தில் அந்தக் கடைசி நம்பிக்கையும் முடிவும் நம் வாழ்க்கையை மாற்றவல்லது என்று நினைத்து, அனைத்து உண்மைகளையும் ராமிடம் சொல்லத் துடித்தாள்.

 

கவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட ராம்,  மெல்லப் பேசி, கொசு வலையில் திமிங்கலத்தை பிடிக்க நினைத்தான்.

”கவி, வாட்ச்மேனை எப்படி தண்டிச்சீங்க? எப்படி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாமே ஹார்ட் அட்டாக்குன்னு தானே வந்தது?”- என்று ராம் ஆர்வமானான்.

 

கவியும் இனி மறைத்து என்ன பயன் என்றபடி விவரிக்க ஆரம்பித்தாள்.... 

” அன்று  பள்ளி மைதானத்தில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த வாட்ச்மேன் வழக்கம் போல் அவன் புத்தியைக் காட்டினான். மாணவர்களிடம் தாத்தா பேசறேன் என்று பேச்சு கொடுத்துக்கொண்டே அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதையும் கீழே குனிந்து பந்து எடுப்பதையும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தான். பி.டி டீச்சர் சாதனா குடோனுக்குச் சென்று  பந்துக்கு காற்று அடித்து கொண்டு திரும்பி வந்தபோது அவர் கண்களில், வாட்ச்மேனின் சின்னத்தனம் பட்டுவிட்டது. இவனெல்லாம் திருந்தவே மாட்டானா..? என்று மனதிற்குள் நினைத்தவுடன், சாதனாவிற்கு கோபம் உச்சத்தில் கொதித்தது.உடனே சாதனாவின் கையில் இருந்த பந்து 360 டிகிரி கோணத்தில் 120 கி.மீ வேகத்தில் பறந்து வந்து வாட்ச்மேன் மார்பில் டமால் என மோதியது. பந்து விழுந்ததும் வாட்ச்மேன், அம்மான்னு அலறிக்கொண்டு, மார்பைப் பிடித்துக்கொண்டு பொத்தென்று விழுந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த  மாணவிகளின் கவனம் முழுதும், விளையாடிலேயே மூழ்கியிருந்ததால், பந்தின் தாக்குதலை அவர்கள் கவனிக்கவிலை. அவன் கீழே விழுந்த போதுதான், அவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. உடனே வாட்ச்மேன் அருகே எல்லோரும் ஓடிவந்தனர். சாதனா டீச்சரும் ஒன்றும் தெரியாதது போல் பதற்றத்துடன் வாட்ச்மேன் அருகே ஓடினார். அதற்குள் மாணவிகள் சூழ்ந்து கொண்டனர்.

 

என்னாச்சு.. என்னாச்சு ..? என்று மாணவிகளை  விலக்கி விட்டு வாட்ச்மேன் அருகில் அவர் வந்தார். என்னன்னு தெரியலை மிஸ், நாங்க பந்து விளையாடிட்டு இருந்தோம். பந்தை காலால் உதைத்துக்கொண்டும், தூக்கி போட்டு விளையாடிக்கொண்டும் இருந்தோம் மிஸ். நெஞ்சுவலி போலிருக்கு என்று மாணவிகளே கோரஸாக சொன்னார்கள். 

 

பந்துத் தாக்குதலை நடத்திய சாதனாவோ ஒன்றும் தெரியாத மாதிரி மாணவிகளை  விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு எத்தனை சீரியல் பார்க்கிறார். அவருக்கா நடிக்கத் தெரியாது? மாணவிகளை விலக்கி விட்டு, யாராவது போய் தண்ணீர் எடுத்துட்டு வாங்கன்னு அவர் குரல் கொடுத்தார். ஒரு மாணவி போய் தண்ணீர் எடுத்து வந்தாள். சாதனா வாட்ச்மேன் முகத்தில் தண்ணீர் அடித்தார். எந்த அசைவும் இல்லை. உடனே, நீங்க யாரோ பந்தால் அடித்து தான் அவருக்கு இந்த நிலைமை, யாருன்னு உண்மையை சொல்லுங்கன்னு அவர்களை டெஸ்ட் செய்தார். மிஸ், நாங்க யாரும் பந்தை போடலைங்க, வாட்ச்மேன் எப்படி கீழே விழுந்தார்னு கூட எங்களுக்குத் தெரியாதுங்க மிஸ்சுன்னு அவங்க சொன்னாங்க. இப்படித்தன் வாட்ச்மேனின் ஹார்ட் அட்டாக் படலம் அரங்கேறுச்சு.” என்று விரிவாகச் சொன்னபோது, கவியின் அம்மாவும் ராமும் வாயைப் பிளந்தனர்.

“படுபாவிப் பயலுக்கு இது வேண்டியதுதான்” என்றார் கவியின் அம்மா. அவர் முகத்தில் நிம்மதி நிலவியது. ராம், ஆச்சரியத்தை முகத்தில் தேக்கியிருந்தான்.  

 

அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தபோதும், கவி விடாமல் அனைத்தையும்  ஒப்புவிக்கும் ஆர்வத்தில் தொடர்ந்தாள்.

"தான் பந்தால் அடித்ததை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட சாதனா மேடம், கலங்கி நின்ற மாணவிகளிடம், விடுங்க பிள்ளைகளா, நீங்க என் தங்கச்சிகள் மாதிரி. உங்களைக் காட்டிக் கொடுப்பேனா, நீங்கள் விளையாடும் போது உங்களுக்கே தெரியாமல் பந்து அவர் மீது பட்டிருக்கலாம். வேணும்ன்னு  திட்டமிட்டு செஞ்சிருக்க முடியாது. அதனால் யார் எப்படி மிரட்டிக் கேட்டாலும் எங்களுக்குத் தெரியாதுன்னே சொல்லுங்கள்ன்னு சொல்லிவிட்டு மருத்துவரை அழைத்தார் சாதனா. பள்ளியின் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அட்டாக் மாதிரி தெரியுது. உயிர் இல்லைன்னு  கூறிவிட்டார்.” என்று அவள் சொல்லி முடித்தவுடன், மூவரும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து உண்மையை ஜீரணித்தனர்.  ராம் புன்னகைத்தான்.

”சரியான தண்டனை” என்ற வார்த்தை அவன் உதட்டில் இருந்து வெளிவந்தது.

 

ராம் அழுத்தமான குரலில் ”சூரனை வதம் பண்ணியதை விழாவாகக் கொண்டாடும்  நாம், இதையும்  அப்படிதான் பார்க்கணும்” என்றான்.

 

கவி மலர்ந்தாள். தனது குற்ற உணர்வுகள் எல்லாம் முழுதாக மனதில் இருந்து நீங்கிய  நிலைக்கு வந்தாள்.

 

ராம் புன்னகையோடு கேட்டான்..

"கவி., அந்த பர்தாப் பெண் யார்..?” 

"நடிக்காத ராம். நீ கண்டுபிடித்துவிட்டாய்ன்னு  எனக்குத் தெரியும்” என்று கவி சொன்னதும், 

"அதான்.சொன்னேனே, இனி இந்த யுத்தத்தின் தளபதி  நான் தான். அடுத்த வதத்தை அரங்கேற்றப்போவதும் நான்தான்”. என்றான் அழுத்தமான குரலில் ராம்.

“என்னடா? யாரைடா வதம் பண்னப்போற? எனக்கு பயமா இருக்கு.” என்றார் கவியின் அம்மா. அவர் முகத்தில் பீதி, மாநாடு கூட்டியிருந்தது.

 

(திக் திக்  தொடரும்..)

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #46