ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #38

11:40 AM Nov 13, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்தப் பள்ளியே போலீஸ் வரவால் பதட்டப் பரபரப்பில் மூழ்கியது. மாணவர்கள், வகுப்பறைக்கு வெளியே... தங்களுக்குள் கிசுகிசுத்தபடி... தலைகளை நீட்டினர். ஆய்வகப் பகுதியே அடர்ந்த நிசப்தத்திலும் - திகிலிலும் ஸ்தம்பித்து இருந்தது

ஆய்வகத்திற்கு அருகில் உள்ள வகுப்பின் ஜன்னல் வழியே, இரட்டை ஜடைபோட்டு மடித்துக் கட்டிய நீண்ட கூந்தலையுடைய ஒரு மாணவி மட்டும் இவர்களையே மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். கவியின் கண்களும் அந்த பெண்ணின் கண்களிடம் ஏதோ ஒரு செய்தியைச் சொன்னது. இதைக் கவனித்த ராம், மெதுவாகத் தொண்டையை செருமிக்கொண்டே அடித் தொண்டையில்,

"கவி அந்த நீளமா முடியிருக்கிற பொண்ணு நயன்தாரா மாதிரி இருக்கா பாரேன்" என்று சொல்ல....

"இந்த நேரத்தில் இது தேவையா ராம்" என்றாள் எரிச்சலாக, பின்னர்....

"ஆமா... நீ சொல்றதும் உண்மைதான்" என்றாள்.

ராம் சகுனி மாதிரி தாயத்தை உருட்டுகிறான். கவி தர்மர் மாதிரி தன் கவனத்தை இழந்து கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டர் ஆய்வகத்தின் உள்ளே நுழைந்தார். அந்த அறை மிகப் பெரிதாகத்தான் இருந்தது. தனியார் பள்ளி அல்லவா? வசதி, வசதியாக இருந்தது. அறையின் குறுக்கே நான்கைந்து சிமெண்ட் மேடைகள்... மாணவர்கள் நின்று சோதனை செய்வதற்கு வசதியாக இருந்தன. வெப்பப்படுத்தும் ஸ்பிரிட் அடுப்புகளும் காணப்பட்டன. இதில் ஒரு அடுப்பால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அங்குச் சிதறி இருந்த வேதிப்பொருள்களின் தடயம் உணர்த்தியது. அதையெல்லாம் சுரண்டி சேம்பிளாக டெஸ்ட்டுக்கு எடுத்தனர் காக்கிகள். மேலும், அந்த அடுப்பு உள்ளிட்ட சில பொருட்களைக் காரில் வைப்பதற்காகக் காவலர் செல்லும் போது, ஸ்கூட்டியை ஃபாலோ பண்ணும் புல்லட் மாதிரி வேகமாகப் போய் அந்த காவலரின் கையில் 5000 ரூபாயை ராம் திணித்தான். அவர் ஏதோ லாட்டரி அடித்தது மாதிரி ஆச்சரியமாகப் பார்த்தார்.

"டெஸ்ட் ரிசல்ட் எப்ப வரும்?"என்று நேரடியாக விசயத்திற்கு வந்தான் ராம்.

" சரியாகச் சொல்ல முடியாதுங்க, கேஸைப் பொறுத்து இருக்கு" என்று பதிலளித்தார் காவலர்.

"சரி....எனக்கு நாளைக்கு வந்தாகணும்னு சொன்ன ராமிடம், "சரிங்க சார்", என்று கூறிவிட்டு இருவரும் ஃபோன் நம்பர்களை சேவ் பண்ணிக்கொண்டே ஆய்வகத்திற்கு வந்தனர்.

இன்ஸ்பெக்டரோ "விபத்து நடந்தபோது என்ன நடந்தது என்பதை ரீபிளே பண்ணி சீன் டூ சீன் சென்சார் இல்லாம சொல்லுங்க" என்று பிரின்சிபல், சாதனா இருவரிடமும் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.

"நடந்ததை அப்படியே சொல்றோம், எங்களுக்கென்ன பயம்?"என்று பிரின்சிபல் சொல்லிவிட்டு, "சார் உள்ளே அறையில் அமர்ந்து பேசலாம் நிர்வாகியும் ரொம்ப நேரமாக இங்கேயே நிற்கறாங்க" என்று எஜமான விஸ்வாசத்துடன் சொன்னார்.

அனைவரும் பிரின்சிபல் அறையில் அமர்ந்தனர். இன்ஸ்பெக்டர் பிரின்சிபலை பார்க்கவும், பிரின்சிபல் எஸ்.கே.எஸ் யை பார்த்தார்.

"இங்கே என்ன பார்வை ரிலேவா நடக்குது ஒருத்தரும் பேசமாட்டேங்கறாங்க" என்று, ராம் மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவனே ஓப்பனிங் பேட்ஸ் மேன் ஆனான்.

"மேடம் என்ன நடந்ததுன்னு பயம் இல்லாமல் சொல்லுங்க"என்று அமைதியைக் கலைத்தான் ராம்.

பிரின்சிபல் தொண்டையைச் செருமிக்கொண்டே, "பி.டி.டீச்சர் எங்கிட்ட வந்து கெமிஸ்ட்ரி டீச்சரை பற்றி குறை சொன்னாங்க," என்று நேரடியாக பி.டி.யைக் களத்தில் இறக்கிப் பந்தாடினார்.
இன்ஸ்பெக்டரின் பார்வை பி.டி.யிடம் சென்றது,

"சார்..கெமிஸ்ட்ரி மிஸ் எனக்கு கொடுத்திருக்கும் பாடவேளையும் அவங்களே எடுத்துகறாங்க, +2 மாணவர்களை பிளே கிரவுண்டுக்கே அனுப்பறதில்லைன்னு பிரின்சிபாலிடம் சொன்னேன்" என்று அல்வாத் துண்டை விழுங்கியது போல நாக்கு ஒட்டிக் கொண்டு பேசினாள் சாதனா.

"ஏம்மா அவனவன் ரிசல்ட்டுக்கு உயிரை கொடுத்துகிட்டிருக்காங்க நீ என்னடான்னா, விளையாடறதைப் பத்தி பெருசா பேசற" என்று எஸ்.கே.எஸ் சற்று கோபமாகப் பேசினார்.

"சார்..கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க சொல்ல வந்த விசயத்தைச் சொல்லட்டும்"என்று சமாதானப்படுத்தினார் இன்ஸ்பெக்டர். அடிச்சவன் முந்திக்கொண்டு அடிவாங்கினேன்னு சொல்வான் பாருங்க அது மாதிரி பிரின்சிபல் முந்திக்கொண்டு "சார்...இதே தான் நானும் சொல்லித் திட்டினேன்" என்று எஸ்.கே.எஸ் ஸிடம் சொன்னார்.

"சரி நீங்க பேசிக்கறீங்க நடுவுல எதுக்கு லில்லி வந்தாங்க "என்று தூண்டிலில் திமிங்கிலத்தைப் பிடிக்கப்பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

" சாதனா ரிக்வஸ்ட் பண்ணி ஒரு விசயம் கேட்டாங்க அதைச் சொல்லத்தான் லில்லி மேடத்தை வரச்சொன்னேன்" என்றார் பிரின்சிபல்.

"சார் +2 A குரூப்பில் ஹரினின்னு ஒரு பொண்ணு இருக்கா சார், அவள் அத்லடிக் பிளேயர், மாவட்ட அளவில் நிறைய மெடல் வாங்கியிருக்கா, அவள் ஸ்டேட் லெவலில் போறதுக்காக பிராக்டீஸ் பண்றா... அவள் ஸ்டேட் லெவல் போனால் மேல்படிப்பு இலவசம். அவ ஏழ்மையான பொண்ணுங்க சார், அவளை மட்டும் பிராக்டீசுக்கு அனுப்பச் சொல்லி எவ்வளவோ முறை லில்லி மேடம் கிட்ட கெஞ்சிப் பாத்துட்டேன், கடைசியா தான் பிரின்சிபலிடம் சொன்னேன்" என்று சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினார் சாதனா.

" சரி அந்த ஸ்டூடன்ட்ட வரச்சொல்லுங்க இவங்க சொல்றது உண்மையான்னு கேட்கலாம்" ரயில் பெட்டி மாதிரி விசாரணை நீண்டுகிட்டே போனது.

"சார் கேஸ் எந்த நிலையில இருக்குன்னு எஸ்.கே.எஸ் கேட்கவும், "வாங்க அந்த பொண்ணு வர்றதுகுள்ள பள்ளியைச் சுத்திப் பார்க்கலாம் என்று இன்ஸ்பெக்டர் அறையைவிட்டு வெளியே வந்தார். அவருடன் எஸ்.கே.எஸ், ராம், கவி மூவரும் நடந்தனர்.

"சார்..போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், அமிலம் ஏற்படுத்திய காயத்தாலும் இன்பெக்சனாலும் வந்ததுன்னு வந்திடுச்சி. புனித நேசன் தன் மகள் சாவில் சந்தேகம்னு தான் கொடுத்திருக்கார், குறிப்பிட்டு யாரையும் காட்டலை, அதனால உங்களுக்கும் பள்ளிக்கும் எந்த பிரச்சனையும் இப்போதைக்கு இல்லை" என்று தெளிவாகச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

பின் அவரே "எஸ்.கே.எஸ். சார் உங்க கூடவே இரண்டு ஆடுகள் இருக்கு இதுல எது கருப்பு ஆடு?ன்னு கண்டுபிடிங்க" என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்தனர்.

(திக்திக் தொடரும்)

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #37

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT