ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #37

05:12 PM Nov 10, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கவியின் மனதிற்குள் ’ராம்.... .நாயகனா?வில்லனா?’ என விடையறிய முடியாமல் குழம்பினாள். ஒரே வீட்டில் தான் வளர்ந்தார்கள் ராமும், கவியும். அப்போதெல்லாம் விட்டுக்கொடுத்தல் என்பது அண்ணன்தான் என்று எழுதப்படாத சாசனமாக இருந்தது. ராமின் அடுத்த மூவ் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப முன்னேறி நகர்வது அவளது இயல்பாக இருந்தது.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு யாரும் யாரையும் கணிக்க முடிவதில்லை. அனுபவம் அவர்களைக் கணித்துவிடுகிறது. குழந்தையில் அறிவாளியாக இருந்தவன் பருவத்தில் அறிவை அனுபவத்திடம் அடகு வைக்கிறான். அதை மீட்டு வாழ்க்கையை ஏணியாக மாற்றுபவர்களும் உண்டு. வாழ்க்கையை வட்டமாக்குபவர்களும் உண்டு. ராம். இப்போது ஏணியாக இருக்கிறான். அந்த ஏணி யாருக்கு என்பதில் தான் கவி குழப்பமாக இருக்கிறாள்.

"ராம்...யார் ஃபோனில்?"-கவி கேட்டவுடன், ராம், கவியைப் பார்க்கிறான். அந்தப் பார்வை ’இப்படி கேட்பது அநாகரீகம் இல்லையா?’என்பது போல் இருந்தது.

அதைப் புரிந்து கொண்டு வெட்கி மெளனமானாள். கவியைப் பார்க்கப் பாவமாக இருந்ததால் ராமே பேசினான்...

"கவி, என் அப்பா தான் கால் பண்ணார். சித்தப்பா சொல்லியிருப்பார் போல. அவர் இந்தியாவில் இல்லைன்னு ரொம்ப ஃபீல் பண்ணார். அட்லாண்டாவில் இருந்து விரைவில் வந்து விடுகிறாராம். அதுவரை சித்தப்பாவிற்கு சப்போர்ட்டாக இருந்து நிலைமையைச் சமாளிக்கச் சொன்னார்"என்றான் ஒரே மூச்சில்.

"ம்" என்ற ஒற்றை எழுத்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளியானது. இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அதிகம் செயல்படுகிறார்கள்.

வேகமாக ஓட்டிவந்த காரை வீட்டின் போர்ட்டிகோவில் திருப்பி நிறுத்தினான். அதுவும் கோபித்துக்கொண்ட புதுமாப்பிள்ளை போல முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றது. உள்ளே நுழையும் போதே

"சித்தி.. சூடாக ’கிர்நார் டிடெக்ஸ்’ கிரீன் டீ வேணும்" என்று சொல்லிக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தான். ராமின் குரல் கேட்டதும்,எஸ்.கே.எஸ் மாடியிலிருந்து கீழிறங்கி ஹாலுக்கு வந்தார்.

சித்தி, சில நிமிடங்களில் சில கோப்பைகளில் டீ யுடன் வந்தார்.

"என்னாச்சு...டா" என்று கரகர குரலில் கேட்டார் எஸ்.கே.எஸ்.

"புனித நேசன் கேஸ் போடுவதில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்” என்று தெளிவான குரலில் சொன்னான். எந்தவித பதற்றமும் இல்லாமல் ஒரு கையால் கார் கீ யை சுழற்றிக் கொண்டே பேசினான் ராம்.

"ஓகே ராம். லில்லி அப்பா ரிட்டையர்டு தாசில்தார் இல்லையா? அதனால் அவருக்கு சந்தேகம். ஓகே. நம்மமேல எந்தத் தப்பும் இல்லை. அவங்க கேஸ் போடட்டும். அப்பதான் நாம நிரபராதிங்கிறது ப்ரூஃப் ஆகும். நம்ம சைடுல என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்கலாம். எனக்கும் தியா மரணம் மட்டுமல்ல, நிறைய மாணவிகள் நடுவில் பள்ளியை விட்டு காணாமல்போகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் என்னங்கிறதைத் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு. பிரச்சனை என்னங்கிறதைக் கண்டு பிடிச்சி, அதை வேரோடு நீக்கணும்" என்றார் எஸ்.கே.எஸ்.

இதைக் கேட்டதும் கவி மனதிற்குள் "பண்ற அட்டூழியம் எல்லாம் பண்ணிட்டு எப்படி இவரால் நல்லவராக நடிக்கமுடிகிறது, தியா தான் சேர்மன், சேர்மன் என்று பலமுறை சொன்னாளே" என்று நினைத்தாள்.

அவள் மனம் உரித்துத் தொங்கவிட்ட பிராய்லர் சிக்கன் மாதிரி வெறுமையாக இருந்தது. வலியில்லை. வேதனை இல்லை. உணர்ச்சி பாவங்கள் எதுவும் இல்லை. ராம் எழுந்தான்.

"சரிங்க சித்தப்பா நான் காலையில் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

எஸ்.கே.எஸ் ஸும் எழுந்தார். திலகாவிடம் ”சாப்பாட்டை மேலே அனுப்பு” என்று சொல்லிவிட்டு மாடிப்படி நோக்கி நடந்தார்.

திலகாவோ, அவர் மன அமைதிக்காக சோமபானம் அருந்தப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்.

எழுந்துசென்ற கவியை திலகா இடைமறித்து... "கவி ..என்னாச்சு டி, ராமும் நீயும் அவசரமாகக் கிளம்பிப் போனீங்க?” என்று ஆர்வமுடன் கேட்டார்.

"அம்மா... டயர்டா இருக்கு. காலையில் சொல்றேன்.. என்றபடி அவள் அறைக்குள் சென்றாள். எதுவும் புரியாவிட்டாலும் "காலையில் இருந்து என்ன நடந்ததுன்னு தெரியாமல் தவிச்சிகிட்டு இருக்கேன் யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க" என்று புலம்பினார். இந்த புலம்பல் தான் அம்மாக்கள் வாங்கி வந்த வரம்.

கவியின் மறுநாள் பொழுது, "இன்று என்ன நடக்கும்?" என்ற கேள்வியுடன் விடிந்தது.

அதே நேரம் நம்பர் 3 யார் என்ற கேள்வியுடன் விடிந்தது. செல்போன் வழியாக சனி பகவான் காலிங்பெல் அழுத்தினார்.

"ஹலோ" சொன்ன கவிக்கு, பதற்றமான குரலில் முகத்தில் "வெந்நீர்" தெளித்தாள் ஷாலு.

"கவி.. என்னாச்சுடி. லில்லி டீச்சர் எப்படி இறந்தாங்க? டி.வி.யை பார்க்கலையா நீ?" என்று வார்த்தைகளுக்கு ரன்னிங் ரேஸ் வைத்தாள் ஷாலு.

"ஷாலு... ஒரு நிமிடம் டி.வி.யைப் பார்த்துட்டு உன் காலுக்கு வரேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராம் வந்துவிட்டான்.

எஸ்.கே.எஸ்.ஸும் குளித்து முடித்துக் கிளம்பி ஹாலுக்கு வந்தார்.

"போலாமா.. சித்தப்பா" என்று கேட்டான்.

கவி அவசரமாக ஹாலுக்கு ஓடிவந்து, "டேய்.. ராம் பிளீஸ்..டா... கொஞ்சம் வெயிட் பண்ணு. ரெண்டு நிமிஷத்தில் பிரஷ்அப் ஆகிவிட்டு வரேன்"என்று சொல்லிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

ராம்... டிவியை ஆன் பண்ணினான். பிரேக்கிங் நியூஸில் "சென்னை வேளச்சேரியில் உள்ள கவிநிலா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியை லில்லி, ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தால் மரணமடைந்தார். அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை”என்ற நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நியூஸை பார்த்ததும் எஸ்.கே.எஸ். முகம் வாடினார்.

"சித்தப்பா... இதெல்லாம் நாம எதிர்பார்த்ததுதானே... எதுக்கும் கவலைப்படாதீங்க. நம்ம மடியில் கனமில்லை. டோன்ட் ஒரி... நாங்க உங்களோட இருக்கோம். தர்மம் என்னைக்கும் தலை குனியாது" என்று தைரியம் சொன்னான்.

நியூஸை பார்த்துவிட்டு "இப்ப என்னங்க பண்றதுன்னு" கவலையோடு கேட்டாள் திலகா.

"பயப்படாம இருங்க சித்தி. .நான் சித்தப்பா கூடத்தான் போறேன். நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் பார்த்துகறேன்"- அதே பாட்டைப் பாடினான்.

"சரி..கிளம்பலாம்” என்று எஸ்.கே.எஸ் சொல்லவும் இருவரும் கிளம்பினார்கள். கவிக்காக காத்திருக்கவில்லை.

காரை ஓட்டிய ராமுக்கு முதல்நாள் மருத்துவமனையில் இருந்த போது.... ”தப்பு செஞ்சவங்க நம்ம நெருங்கிய ரத்தபந்தமா இருந்தாலும் விட்றக்கூடாது ராம்” என்று கவி சொன்னபோது அவள் முகத்தில் தெரிந்த இறுக்கம், இப்போது நினைவுக்கு வந்து அவனை யோசிக்க வைத்தது.

அதனால் காரில் போகும் போதே "சித்தப்பா.. கவியை டெல்லி அனுப்ப வேண்டியது தானே?" என்று சாம்பிராணி போட்டான் ராம்.

"இந்த சூழ்நிலையில் என்னால் டெல்லி போயிட்டு நிம்மதியாக படிக்க முடியாது. பிரச்சனை முடிந்ததும் போறேன்னு கெஞ்சறா..டா. அவ பச்ச மண்ணுடா" என்று தன் இயலாமையைச் சொன்னார் அவர்.

"பிரச்சனை முடிந்ததுமா? இல்லை... காரியம் முடிந்ததுமா?"என்று பூடகமாக கேட்டான் ராம்.

"என்னடா.....சொல்ற புரியலையே?" என்ற சித்தப்பாவுக்கு "சில விசயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது" என்று தத்துவம் பேசினான்.

கார் பள்ளி வளாகத்தில் நுழைந்தது. மாணவர்கள் வகுப்பறைகளில் கர்மமே கண்ணாக விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தார்கள்.

ஆளுயர மாலை வரவழைக்கப்பட்டு இருந்தது.

+1,+2 வகுப்பிற்குச் செல்லும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கென்று இருக்கும் பிரத்யேக பஸ்சில் லில்லி டீச்சருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றனர். பிரின்சிபல், எஸ்.கே.எஸ், ராம் மூவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் எஸ்.கே.எஸ். இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். எஸ்.கே.எஸ்.ஸை பார்த்ததும் மீடியா எல்லாரும் வந்து முற்றுகையிட்டனர்.

"சார்.. .விபத்து எப்படி நடந்தது? நிர்வாகம்தானே இதற்கு பொறுப்பேற்கணும்?"என்று கேள்விகளைத் தோட்டாக்கள் ஆக்கினார்கள்.

பத்திரிகையாளர்களிடம் ராம் பேசினான். ”இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து. போலீஸ் விசாரணை பண்ணுது. விசாரணையின் முடிவில் எல்லா உண்மையும் தெரியும்"என்று தெளிவாக பதிலளித்தான்.

எஸ்.கே.எஸ்.ஸும் ராமும் அங்கிருந்து கிளம்பி பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி வளாகத்திற்குள் எஸ்.கே.எஸ்.ஸின் கார் நுழையும் போதே, ரெட் கலர் எட்டியாஸ் காரில் போலீஸ்காரர்களும், ஸ்கூட்டரில் கவியும் நுழைந்தனர்.

எஸ்.கே.எஸ் கேட்டுக் கொண்டதற்காக பள்ளி என்பதால் போலீஸ்காரர்கள் மஃப்டியில் வந்திருந்திருந்தார்கள்.

பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டார்கள்.போலீஸ்காரர்கள் விபத்து நடந்த ஆய்வகத்தை நோக்கிச் சென்றார்கள். விசாரணைக்காக அன்று உடனிருந்த பி.டி டீச்சர் சாதனா, பிரின்சிபல், அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.

வகுப்பறை ஜன்னல்கள் எல்லாம் கண்கள் ஆனது. அவற்றில் ஒரு சோடி கண்கள் மட்டும் மிரட்சியுடன் படபடத்துக் கொண்டு இருந்தன. அது கவியையும் இடையிடையே கூர்மையாய் கவனித்தது.

( திக் திக் தொடரும் )


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT