Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #33

 

marana muhurtham part 33

 

’ நினைவு திரும்பிய லில்லி டீச்சர் பேசத்தொடங்கி இருப்பாரா?

 

போலீஸிடம் எக்குத் தப்பாய் வாக்குமூலம் கொடுத்திருப்பாரோ?’ என்ற சிந்தனை துரத்த, அவள் பரபரப்பாகப் பயணித்தாள்.  காரை ராம், மருத்துவமனை நோக்கிச் செலுத்தினாலும், அவனும் பல்வேறு சிந்தனைச் சாலைகளில் விரைந்துகொண்டிருந்தான்.

 

கவியைப் பொறுத்தவரை,  என்னவோ அவள் டைம் மிஷினில் பயணம் செய்வது போலவே உணர்ந்தாள். 40, 50 வயதில் ஏற்பட வேண்டிய அனுபவங்கள், அவற்றைத் தாண்டிச் செல்லும் திறன் எல்லாம் 17 வயதிலேயே தனக்குக் கிடைத்ததை எண்ணி வருத்தப்படுவதா? பெருமைப்படுவதா? என்று எண்ணினாள். 

 

இந்த நிமிடத்தில் அவளால் எந்தவிதமான உணர்வையும் வெளிப்படுத்த முடியவில்லை. யூ−டியூப் சேனல் ஆரம்பிச்சமா? ட்ரோல் வீடியோ அப்லோட் பண்ணமா? ஃபாலோயர்ஸையும், லைக்கையும் அள்ளுனமான்னு  இருக்க வேண்டிய டீன்−ஏஜ் ,  சமூக அவலங்களுக்கு எதிரான ஆயுதமாகத் தன்னையே மாற வைத்துவிட்டதே என்று தனக்காகக் கொஞ்சம் கவலைப்பட்டாள். நாட்டுக்குள்ளேயே  மூர்க்கம் மிகுந்த சிங்கம், வன்முறை மிகுந்த புலிகள், தந்திர நரிகள், வஞ்சக ஓநாய்கள் இவற்றுக்கு மத்தியில் வாழ நேர்கிறதே என்று மனசுக்குள் நொந்து கொண்டாள்.

 

இப்பக் கூட ஆஸ்பிட்டலில் லில்லி எந்த நிலையில் இருக்கிறார்? பிரச்சனைக்குரிய அவரால் மீண்டும் பிரச்சனையா? அப்படி பிரச்சனை வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது? என்கிற எண்ணத்திலேயே இருந்தாள். 

 

அதற்குள் மருத்துவமனை வளாகம் எதிரே வர, காரை விட்டு இறங்கினாள் கவி.

 

எஸ்.கே. எஸ்.சின் உருவம், அத்தனை பேர் மத்தியிலும் பளிச்சென்று தெரிந்தது. அவர் முகத்தில் பதட்டம் இருந்தது.

 

ராமையும், கவியையும் திடீரென அங்கே மீண்டும் பார்த்ததும் சர்வைவர் காட்டில் விட்டது போல விழித்தார் எஸ்.கே.எஸ். இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? என்ற எண்ணமே  எஸ்.கே.எஸ் மனதில் எழுந்தது. தலைக்கு மேல் அவர் வாங்கிப் போட்டிருந்த காலி பிளாட்டில், வியர்வை அருவி மாதிரி வழிந்தது. குரலை உயர்த்தி "ஏன் இங்கே வந்தீங்க?” என்று கேட்டார்.

 

கவியும் அப்பா, மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருப்பார் என்று  எதிர்பார்க்கவில்லை.

"அப்பா ராம் தான் ஆஸ்பிட்டல் போய் பார்த்துட்டு வரலாம் வான்னு அழைத்து வந்தான்” என்று தயங்காமல் பழியைத் தூக்கி ராம் மீது போட்டாள்.

 

எஸ்.கே.எஸ் சின் பார்வை ராம் மீது சென்றது. பார்வையே கேள்வியானதால் ராம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

" ஒன்னுமில்லை சித்தப்பா, இந்த கேஸ் எனக்கு அனுபவமாக இருக்குமேன்னு, கேசைப் பற்றிய டீடெய்ல்ஸை  டாக்டர்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்" என்று நம்பும் படியான பொய்யைச் சொன்னான்.

 

சரி என்பது போல் தலையாட்டி விட்டு, லில்லி மிஸ்ஸின் கணவருடன் எஸ்.கே.எஸ் உரையாட ஆரம்பித்தார்.

"மிஸ்டர் பாலு ... உங்க மனைவி லில்லிக்கு நினைவு வந்து வந்து போகுது. ஏதேதோ முனங்குறாங்களே தவிர எதுவும் சொல்லலை. இது ஒன்னும் திட்டமிட்ட சதி இல்லை. லேப்ல எதிர்பாரா விதமா விபத்து நடந்திருக்கு. ஆய்வகத்தில் சட்ட விரோதமான பொருள்கள் எதுவும் இல்லை. இந்த விபத்து முழுக்க முழுக்க உங்க மனைவியின் கவனக்குறைவால் ஏற்பட்டதுதான். இதற்கு நிர்வாகம் பொறுப்பாக முடியாது” என்று கண்டிப்பாகவும், திடமாகவும் பேசினார்.

 

அப்பா பேசியதைக் கேட்டதும் கவியின் வாயில் " ஈ வாக்கிங்" போய்ட்டு வந்தது. அந்த அளவு தன்னை மறந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

"சார் அவளையே நம்பியிருக்கிற என் குடும்பத்தின் நிலையை நினைச்சிப்பாருங்க. லில்லி பொழைக்கிறது கஷ்டம்ன்னு டாக்டர் சொல்றார். அம்மாவை இல்லைன்னா என் பொண்ணோட நிலை என்ன ஆகுறது?” என்று கேட்டார் பாலு.

"கவலைப்படாதீங்க. லில்லி மேடத்துக்கு ஒன்னும் ஆகாது. லில்லி மேடம் பிழைக்க 50 சதம் வாய்ப்பு இருக்குன்னும் நர்ஸ் சொல்றாங்க. பாலு கவலைப்படாதீங்க. உங்களுக்கு நான் இருக்கேன். முடிஞ்சவரை காப்பாத்தப் போராடுவோம். உங்க குழந்தைக்காக ஒரு  குறிப்பிட்ட தொகையைத் தர்றேன். என் பள்ளியிலேயே படிக்க வைக்கிறேன். அந்த குழந்தையின் மேற்படிப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்கு மேல் கேஸ்  கொடுப்பேன் என்றால், கொடுத்துக்கங்க. எனக்கு எந்த பாதகமும் இல்லை" என்று இயல்பான குரலில் சொன்னார் எஸ்.கே.எஸ்.

"யோவ்,, ஐயா சொல்றதைக் கேட்டு நடந்துக்க, இல்லைன்னா உனக்குத் தான் நஷ்டம். என்னடா போலீஸ்காரன் இப்படி சொல்றானேன்னு  நினைக்காத . என் அனுபவத்தை வைத்து சொல்றேன். நீ வேற, பொம்பள புள்ளைய வச்சிருக்க , கோர்ட் கேஸ் எல்லாம் வேணாம். அப்பட்டமா இது விபத்துன்னு தெரியுது. கோர்ட்டுக்குப் போனாலும் உனக்குச் சாதகமா தீர்ப்பு வராது. அதனால புத்திசாலித்தனமா பார்த்து நடந்துக்க ” என்றார் எஸ்.ஐ.  அவர் அறிவுரை சொல்கிறாரா? , மிரட்டு்கிறாரா? என்று  குழம்பினார் பாலு.

 

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த பாலு, "நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் சொல்வதால், நான் புகார் தரலை. என் மகளுக்கு நல்ல வழி காட்னீங்கன்னா அது போதும்” என்று இரு கைகளையும் கூப்பி அழுதார்.

 

இப்போது, அடுத்து என்ன செய்வது? என்று கவி குழம்பிக்கொண்டிருக்க, அந்த நேரம் நர்ஸ் வெளியே வந்து... 

“இங்கே ... தியா  யாருங்க . .பேஷன்ட் தியா..தியான்னு முனங்குறாங்க” என்றார்.

 

இதைக்  கேட்டதும்  எஸ்.கே.எஸ். முகம்  இருண்டது. சற்றும் எதிர்பார்க்காமல் கவி லில்லியைப் பார்ப்பதற்கு  உள்ளே ஒரே ஓட்டமாக  ஓடினாள்.

 

அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில்... "உடல் முழுவதும் பி.பி.மானிட்டர், பல்ஸ் மிஷன், செயற்கை சுவாசம் என்று உடல்முழுதும் வயர்களால்  சுற்றப்பட்டு,  முகம் முழுவதும் ஆசிட்  காயங்களுடன் லில்லி... அவரைப் பார்க்கும் எப்படிப்பட்ட கொடுமைக்காரனுக்கும் கண்ணீர் வரும். 

 

கவியோ, அதிர்ச்சி விலகாமல் கலங்கிய கண்களுடன் லில்லி அருகே வந்தாள்.  அடக்க மாட்டாமல்  "ஐய்யோ லில்லி மேடம்" என்று பதறினாள். 

 

இவள் சத்தம் கேட்டு லேசாக கண்விழித்த லில்லி, கண் அசைவுகளால் அவளை அருகே அழைத்தாள்.

"நா...ன்... நான்  தப்பு பண்ணிட்டேன்.... தியா கிட்ட போய் மன்னிப்பு கேக்கறேன்"  என்று ஈனஸ்வரத்தில் சொன்னார்   லில்லி.

“டீச்சர் பயப்படாதீங்க.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது... சின்ன விபத்துதான்....” என்றாள் கவி. லில்லியின் தோல் உரிந்த முகம்... மெளனமாக இருந்தது.

" நான்... நான்... போலீசிடம் .. பேசணும் " என்று அவர் சொல்ல, அதைக் கவனித்த  நர்ஸ், போலீசை அழைக்க வெளியே ஓடினார்.

 

கவிக்கும் லேசாக வியர்த்தது.

’போலீசிடம் விபத்தைப் பற்றிய உண்மையை லில்லி டீச்சர் சொல்லப் போறாங்க, நம்ம பழிவாங்கும் படலத்துக்கு எண்ட்  கார்டு போடும் நேரம் வந்துடுச்சு’ என்று நினைக்கும் போதே, அவள் இதயமெல்லாம் படபடவென அடித்துக்கொண்டது. நாக்கு வறண்டு உலர்ந்த கருவாடு போல் ஆனது. 

 

நர்ஸ் போலீசை அழைத்து வந்ததும்.. கவியை வெளியே அனுப்பிவிட்டார்கள். அங்கே பதட்டமாக வந்த எஸ்.கே.எஸ்.சும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  

 

( திக் திக்  தொடரும்) 
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #32