ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #31

05:49 PM Oct 23, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"விதியை மதியால் வெல்லலாம், அப்படி வென்றால் விதியை மதியால் வெல்வாய் என்பதே உன்னுடைய விதியாகும்." என்ற கண்ணதாசனின் வரிகளை எங்கேயோ, எப்போதோ படித்தது இப்போது கவிக்கு நினைவுக்கு வந்தது.

இந்த விபத்தைப் பற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கமாட்டார்கள் என்று நினைத்த கவிக்கு ஏமாற்றமே பம்பர் பரிசானது.

லில்லி மிஸ்ஸின் கணவர் பாலு தான் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். புகாராக எழுதித் தரவில்லை என்பதை போலீஸாரின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டாள் கவி.

எஸ்.கே.எஸ் ஐ பார்த்து, "பள்ளியின் நிர்வாகி யார்?" என்று விசாரித்த அதிகாரியின் காதில் உடனிருந்த போலீஸ், " சார், இவர் தான் தொழிலதிபர் எஸ்.கே.எஸ். இந்த பள்ளியின் நிர்வாகி" என்று மந்திரம் ஓதினார்.

இது வரை விரைப்பாக இருந்த யூனிஃபார்மின் மிடுக்கு உடனே வழவழக்க ஆரம்பித்தது. "வணக்கம் சார்" என்று சொல்லிக்கொண்டே எஸ்.கே.எஸ் உடன் கை குலுக்கினார்.

அதிகாரியின் காதில் மந்திரம் ஓதிய காவலர் கவியின் பக்கம் திரும்பி "மேடம், என்னை தெரியுதுங்களா?" என்றார்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த கவி பொத்தாம் பொதுவாகத் தலையை ஆட்டி வைத்தாள்.

"என்ன நடந்தது"? என்று பொதுவாகக் கேட்டார் காவல்துறை அதிகாரி. எஸ்.கே.எஸ்.பிரின்சிபலை பார்த்தார், பிரின்சிபல் பேச ஆரம்பித்தார்.

"காலையில் 11..மணியிருக்கும். என் அறைக்கு வந்த பி.இ.டி.ஆசிரியை, கெமிஸ்ட்ரி மிஸ் ஸ்போட்ஸ் டே பிராக்டிஸுக்கு மாணவிகளை அனுப்புவது இல்லை, என்னால் மாணவிகளுக்கு பிராக்டீஸ் கொடுக்க முடியலைன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணாங்க, அதனால லில்லி மிஸ்ஸை வரவழைத்து இருவரையும் ஒன்றாக வைத்து எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் லேபிலிருந்து வெடிச்சத்தம் கேட்டது. ஓடிப்போய் பார்த்தால். இவர்கள் முகமெல்லாம் ஆசிட் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கே சேர்த்திருக்கிறோம்." என்று களப்பணி செய்தியாளர் போல பிரின்சிபல் வேகவேகமாகச் சொன்னார்.

"சத்தம் கேட்டதும் யார் முதலில் வந்தது" என்று சந்தேகத்தின் முதல் கொக்கியைப் போட்டார் அதிகாரி. "பக்கத்து வகுப்பு +2 " A" செக்ஷன் மாணவர்கள் தான் முதலில் ஓடி வந்தனர்" என்றார் பிரின்சிபல். "அப்புறம் நான் ஓடினேன். பள்ளியின் சேர்மனுக்கு தகவல் சொல்லிவிட்டு உடனே ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம்." என்று பதற்றம் நீங்காமல் சொன்னார்.

" எப்படி வெடிச்சதுன்னு உங்க யாருக்கும் தெரியலையா? " என்று சற்று குரல் உயர்த்தி கேட்டார் காவல் அதிகாரி.

"தெரிஞ்சாலும் சொல்ல மாட்டாங்க சார் இவங்க பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றத் தான் பார்ப்பாங்க" என்று கத்தினார் லில்லியின் கணவர் பாலு.

"சும்மாயிருங்க.. தேவையில்லாமல் பேசாதீங்க" என்று அதட்டினார் அதிகாரி.

"எப்படி வெடிச்சதுன்னு எனக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்."என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள் கவி.

திலகா, ஐயோ பாவமே என்று எல்லார் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கவலை எல்லாம் அந்த குழந்தையைப் பற்றி இருந்தது.

"பாவம் கவி அந்த குழந்தை, அம்மா இல்லைன்னா எப்படி கஷ்டப்படும்" என்று வருந்தினார்.

" எல்லா அம்மாக்களும் தன் குழந்தையை ஆசிரியைகளை அம்மான்னு நினைச்சு தானே மா .. ஸ்கூலுக்கு அனுப்பறாங்க ஒரு சில ஆசிரியர்கள் அப்படி நினைக்கிறாங்களா?" என்ற கவியிடம், " நான் என்ன சொல்றேன், நீ என்ன குழப்பற, ஒன்னும் புரியலை கவி" என்று விழித்தாள் திலகா.

" ஒன்றும் இல்லை" என்று ஒற்றைச் சொல்லில் முற்றுப் புள்ளி வைத்தாள்.

" சரி...நான் பள்ளியில் வந்து விசாரிக்கிறேன். இப்போ கிளம்பறேன்” என்ற அதிகாரியுடன் எஸ்.கே.எஸ் ஸும் கிளம்பினார். இருவரும் வெளியில் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வாகனங்களில் பயணித்தார்கள்.

லேபிள் எப்படி விபத்து ஏற்பட்டது என்று லில்லி மிஸ்சுக்கு மட்டும் தான் தெரியும். அப்புறம் அந்த விபத்த ஏற்படுத்துன X க்கு மட்டும் தான் தெரியும்.

திலகாவும் கவியும் கிளம்பினார்கள்.

வழியெல்லாம் லில்லி மிஸ். பிழைப்பாங்களா என்ற எண்ணமே பனிப்படலமாக கவியின் மனதை மூடியிருந்தது.

கவி வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரத்தில் ராம் வீட்டிற்கு வந்தான்.

உள்ளே நுழையும் போதே கவியைப் பார்த்து, " என்ன கவி ஆஸ்பிட்டல் போய்வந்திருக்கப் போல,லில்லி மிஸ் சாப்டர் குளோசா?" என்று கிண்டலாகக் கேட்டான்.

"அடப்பாவி.. எமகாதகா எப்படி இவனுக்கு இதெல்லாம் தெரியுது" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் ஒரு அதிரடிக் கேள்வியைச் கேட்டான். அதைக் கேட்டதும், கவிக்கு வானமும், பூமியும் தலைக்குள் சுழன்றது. செவ்வாய், ஜூபிடர் உள்ளிட்ட சகல கோள்களும் பூமியில் வந்து ஒரே நேரத்தில் மோதுவது போல இருந்தது.

கவி... மனதிற்குள் சுக்கு நூறாய்த் தெறித்துச் சிதறினாள்.

(திக் திக் தொடரும்.....)

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #30

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT