Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #30

 

marana muhurtham part 30

 

எந்த ஒரு உணர்வும் உச்சம் அடையும்போது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். தன்னிரக்கமும் இயலாமையும் உச்சம் பெறும்போது கோபமாக மாறுகிறது. கோபம் உச்சம் பெறும்போது வன்முறையாக உருவெடுக்கிறது. தியாவின் மரணத்தால் கவிக்கு ஏற்பட்ட கோபம், இப்போது பழிவாங்கும் உச்சத்தில்.  

 

கவிக்கு வந்த ஃபோன் காலில் அந்தப் பெண் குரல் சொன்ன ’சக்சஸ்’  என்ற வார்த்தைக்குள் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த முடிவு இருந்தது. ஆனால் எப்படி? என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள துடித்தாள்.

"பள்ளியில் என்ன நடந்தது என்று அப்பாவிடம் ஃபோன் பண்ணி கேட்கலாம் என்றால், அப்பாவிடம் பேசவே பிடிக்கவில்லை. அவரும் முன்பு போல் இல்லை. என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார். மகள் என்ற பாசம் கூட அவரிடம் குறைந்துவிட்டது. என்ன பண்ணலாம்? பள்ளியில் என்ன நடந்தது என்று எப்படி  தெரிந்துகொள்வது?” தவித்தாள் கவி. 

 

தகவல் சொன்னவள், ஒரு சொல்லோடு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டதால்தான் இப்படியொரு பரிதவிப்பு. 

 

மெதுவாக  அம்மா  திலகாவிடம் வந்தாள்.

"அம்மா, போரடிக்குது. மூவிக்குப் போலாமா..? நான் டிக்கெட் புக் பண்றேன்” என்று கெஞ்சலுடன் கேட்டாள்.

"எனக்கு இப்ப படம் பார்க்கற மூடெல்லாம் இல்லை. வீட்டு வேலைகள் நிறைய இருக்கு" என்று திலகா மறுத்தார்.

"பிளீஸ்..மா " கவி கெஞ்சினாள்.

 

திலகாவிற்கு கவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதனால்... சரியென ஒத்துக்கொண்டார்.

"அப்பாவிடம் பர்மிஷன் வாங்கறேன்" என்று கூறிவிட்டு திலகா எஸ்.கே.எஸ்.க்கு ஃபோன் பண்ணினார். இந்த தருணத்தை எதிர்பார்த்துத்தான் கவியும், திலகாவிடம் சினிமா நாடகம் ஆடினாள். கவி இப்போது சினிமா பார்க்கிற மூடிலா இருக்கிறாள்?

 

ஃபோனை எடுத்த எஸ்.கே.எஸ்., வழக்கத்துக்கு மாறாக... சம்பிரதாய ஹலோவையும் மறந்து "என்ன?" என்று எரிச்சலாகக்  கேட்டார்.

 

‘அவருக்கு மூடு சரியில்லை...’ திலகா உஷார் ஆனார். எஸ்.கே.எஸ். குரலில் இருந்தே என்னவோ பிரச்சனை என்பதை அவர் தெரிந்துகொண்டு,

"என்னாச்சுங்க, ஏதாவது பிரச்சனையா? குரல் ஒரு மாதிரி இருக்கே" என்று விசயத்திற்கு வலைவிரித்தார்.

"ஸ்கூலில் கெமிஸ்ட்ரி லேப்ல ஒரு ஆக்ஸிடெண்ட்” என்றார். அவர் குரலில் கோபமா? துக்கமா? என்று கண்டுபிடிக்க முடியாத உணர்வு. 

 

இதைக் கேட்டு அதிர்ந்த திலகா, "என்னது கெமிஸ்ட்ரி லேப்ல ஆக்ஸிடெண்டா?" என்றார் தன்னை மறந்து உரத்த குரலில்..

 

கேட்ச்சிற்காக காத்திருந்த பந்து வந்தவுடன், தாவிச்சென்று பிடிப்பது போல, கவி தாவிவந்து அம்மாவின் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள்.

"ஆமாம், அந்த டீச்சரை இப்போ தாம்பரத்திற்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ‘சுகன்’ ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்காங்க. அவங்க பிழைக்க சான்ஸ் இல்லைன்னு சொல்றாங்க. நீயும் அந்த ஆஸ்பத்திரிக்கு வா” என்றவர், பதிலுக்குக்கூடக் காத்திராமல் இணைப்பிலிருந்து பறந்தார்.

"அம்மா, நானும் வர்றேன்" என்று கூறிவிட்டு, கவியும் ஆஸ்பிட்டல் கிளம்பினாள். 

 

அந்த ஆஸ்பிட்டலில் எமர்ஜென்ஸி வார்டுக்கு வெளியில் வராண்டாவில் உள்ள சேரில் எஸ்.கே.எஸ். அமர்ந்திருந்தார். எமர்ஜென்ஸி வாசலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 5 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் நின்றுகொண்டிருந்தனர். திடீரென்று எழுந்த அந்த ஆண், பள்ளியின் பிரின்சிபாலிடம், "ஆய்வகத்தில் எப்படி விபத்து நடந்தது? என்ன நிர்வாகம் பண்றீங்க? என் மனைவியின் உயிர் போனால் திரும்ப வருமா?” என்று ஆத்திரத்துடன் சத்தம் போட்டார். அந்தக்  குழந்தை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அங்கும் இங்கும் கண்களைச் சுழற்றிக்கொண்டிருந்தது.

 

அந்தக் குழந்தையைப் பார்த்ததும்  கவிக்கு இதயம் வெடித்து சில்லு சில்லாய்ச் சிதறியது போல் ஆனது.

"இந்தக் குழந்தை அம்மாவை இழந்து நிற்குமே? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?” என்று அவள் மனம் கேட்டது.

 

அடுத்த வினாடியே தியாவின் குரல், கவியின் காதுகளில் ஒலித்தது. ”கெமிஸ்ட்ரி மிஸ் லில்லி, நல்லா படிக்கும் மாணவிகளுக்கு அதிக கவனம் செலுத்தறேன்னு சொல்லி, தனியாக உட்காரவைத்துப் படிக்க வைப்பாங்க. அதுவும் பள்ளி நிர்வாகியின் அறை வாசலிலேயே அவர் கண்களில் படும்படி.

 

நிர்வாகியோ பார்வையாலேயே மென்று விழுங்கி எலும்பைத் துப்புவார். உடலெல்லாம் கூசும். மேலே பூரான் ஓடுவது போலத் துடிப்பேன். சில நேரங்களில் அவர் என்னருகே எழுந்து வருவார். என்ன படிக்கிற? என்று கேட்டுக்கொண்டு புத்தகத்தை வாங்கும் சாக்கில் கைபடக்கூடாத இடங்களில் எல்லாம், விரலால் கோலம் போடுவார்.  நல்லா படின்னு தோளைத்தட்டுவார். முதுகை வருடுவார். அவமானமாக இருக்கும். அதிலும் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுவார். விகாரமாகச் சிரிப்பார். அவரைக் கண்டாலே பயம் பற்றிக்கொள்ளும்.

 

இதுபற்றி அந்த லில்லி மிஸ்கிட்ட சொன்னால், “அவர் பெரியவரும்மா... உன்மேல் அன்பைத்தானே செலுத்துறார். அவர் நினைச்சா நீ பரிட்சை எழுதாமலே பாஸ் ஆக முடியும். அதிலும், பெரிய இடம்னா, முன்ன பின்ன அப்படித்தான் இருக்கும். அவரை எதிர்த்துக்கிட்டா இங்கே எதுவும் நடக்காது. உனக்கு இதனால எந்த நஷ்டமும் இல்லை. சந்தோசம்தான். அதுக்கெல்லாம் நீ ஒத்துப்போகாட்டி, உன் பிராக்டிகல் மார்க் உனக்குக் கிடைக்காது”ன்னு மிரட்டுவாங்க. ஒரு பெண் ஆசிரியரே, பெண் குழந்தைகளைப் பலிகொடுக்க நினைக்கிறார். இதையெல்லாம் இவ்வளவு விவரமா வீட்டில் சொல்ல முடியலை, நாசுக்காக அந்த மிஸ் நடந்துக்கறது பிடிக்கவில்லையென்று சொன்னதும், "வேணும்னா டியூஷன் வைத்துவிடுகிறேன்"ன்னு சொல்றாங்களே தவிர, என் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கலை" என்று தியா பேசிய வார்த்தைகள் லில்லி மிஸ் மீதான அனுதாபத்தைத் துடைத்துவிட்டு, அவர் மீது மீண்டும் கோப நெருப்பை ஊதிப்பெரிதாக்கியது.

 

அதேநேரம் அங்கே போலீஸ் டீம் வந்தது. எஸ்.கே.எஸ். அருகே காக்கி அதிகாரிகள் இறுக்கமான முகத்துடன் வந்தனர். பள்ளியின் நிர்வாகி யார்? என்று விசாரித்தனர். எஸ்.கே.எஸ்.சின் முகத்தில் வியர்வை அரும்பியிருந்தது.

"போலீஸா..? போலீஸுக்கு யார் தகவல் சொல்லியிருப்பா? அவங்க இந்த ஆக்சிடெண்ட் பத்தியும் துருவுவாங்களோ?”

 

அப்போது அங்கிருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் பார்வை கவியின் பக்கம் திரும்பியது...

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #29