ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #29

06:20 PM Oct 11, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இப்படிதான் நடக்கும்... இப்போதுதான் நடக்கும் என்று மனிதனால் கணிக்கமுடியாத செயல்கள் நிறைய இருக்கின்றன.

குழந்தை பிறப்பதையும், மழை பொழிவதையும் நம்மால் முன்கூட்டியே அறியமுடியாது. அதுபோலத்தான் மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிய முடியாது.

இப்போதெல்லாம் காலத்துக்கு கவியை ரொம்பவும் பிடிக்கிறது போலிருக்கிறது. தினம் ஒரு பிரச்சனையை டிசைன் டிசைனாகக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

கவி அலைந்து திரிந்து "அக்கடான்னு" உட்காரும் நேரத்தில் ஏதோ ஒரு ஆண்குரல் அவளை மிரட்டுகிறது.

"யார் நீங்க..?” என்று பதட்டப்படாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டே, செட்டிங்ஸ் போய் ரெக்கார்டு ஆப்ஷனில், எதிர்முனை பேசுவதை ரெகார்டு செய்யத் தொடங்கினாள்.

"நான் யாராக இருந்தால் என்ன.? நீங்களும் அந்த பர்தாப் பெண்ணும் சேர்ந்து போடற திட்டம் எனக்குத் தெரியும். உங்க ரெண்டு பேரின் ஒவ்வோர் அசைவையும் நான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்."- என்று மிரட்டும் தொனியில் அந்தக் குரல் பேசியது.

"எந்த பர்தா பெண்... எனக்கு யாரையும் தெரியாது., இது ராங் நம்பர்" என்று கவி சொல்லிவிட்டு ஃபோனைக் கட் பண்ணி நம்பரை உடனடியாக பிளாக் செய்தாள்.

கவி அந்த நம்பரை பிளாக் செய்தவுடன், மறுபடியும் ஒரு கால் வந்தது. கடுப்பாகிப் போய் எரிச்சலுடன் ஃபோனைப் பார்த்தாள். இந்தமுறை ராமின் கால்.

"ஹலோ என்னடா.?" என்றாள் எரிச்சலாக.

"கவி எங்க இருக்க டி.” என்றவனிடம்,

“ம் ...நியூ ஜெர்சியில் காபி குடிச்சிட்டு இருக்கேன்" என்று கிண்டலாகச் சொன்னாள்.

"அப்படியா? அப்ப கோல்ப் பார்க் வழியா ஸ்கூட்டியில போனது யாராக இருக்கும்? உன்னை மாதிரியே இருந்தது. நீ இல்லைன்னா... அது... எனக்கு சித்தப்பா மேல டவுட்டாகவே இருக்கு கவி" என்று கிண்டலுடன் சொன்னான். அவன் குரலில் வில்லங்கம் எட்டிப்பார்த்தது.

கவிக்கு உண்மையிலேயே பயம் வந்தது.

தியாவுக்கு நியாயம் கிடைக்காமலேயே நாம மாட்டிக்குவோமோ? என்று யோசித்துக் கலங்கினாள்.

"என்ன கவி... பதிலே காணோம்" என்ற ராமின் குரல் கவியின் சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டது.

"சொன்னா புரிஞ்சுக்கோ ராம். நான் எங்கேயும் வெளியே போகலை டா" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"சரி இதற்கு மேல் ஆதாரமில்லாமல் பேசக்கூடக்கூடாது" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் ராம்.

" சரிடி....டேக் கேர் ”என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.

”தியா விவகாரத்தில் ராமுக்கு என்ன ரோல்? அவன் வில்லன்களில் ஒருவனா? இல்லை அவர்களது ஒற்றனா?’ - அவள் மூளையில் வலி ஏற்படும் அளவுக்குச் சிந்தித்தாள்.

கவியின் மனம் முழுவதிலும், தியாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் வெறித்தனமாக, மிருகத்தனமாக மனதில் அழுந்தியிருந்தது. கிட்டத் தட்ட இப்போது கவியின் நிலைமை, செஸ் ஆட்டம் மாதிரி ஆகிவிட்டது.

தன்னையும் காப்பாற்றிக்கொண்டு ராஜாவையும் வெட்டவேண்டும். இப்போது சந்தேகக் கால்களால் துரத்தும் ராமை, ஏதாவது பொய் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்துக்கொண்டாள்.

இப்போதைக்கு கவிக்கு தேவை அமைதியான மனம். அதில்தான் சிந்தனை தெளிவாக இருக்கும். அதனால் இரவு முழுவதும் எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக உறங்கினாள்.

ஆயினும் உறக்கத்திற்கு நடு நடுவே, சிந்தனை தன் ஜன்னலைத் திறந்து தலை நீட்டத்தான் செய்தது.

ஃபோனில் தன்னை மிரட்டியது ராமாகத்தான் இருக்கும். வேற நம்பரில் இருந்து என்னை மிரட்டிப் பார்த்திருக்கிறான். அவனுக்கு எப்படித் தெரியும் தியா மரணத்தைப் பற்றி..? என்று சிலந்தி வலையின் முதல் இழையைக் கண்டுபிடிப்பதைப் போன்ற குழப்பம், அவள் உறக்கத்தின் மீது படர்ந்தது.

சூரியன் ஏனோ கவிக்கு ஓரவஞ்சனை செய்துவருகிறான். வழக்கமான, குழப்பமில்லாத, இதமான விடியலைப் பார்த்து அவளுக்கு நீண்ட நாள் ஆகிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு விடியலும் தினம் ஒரு பிரச்சனையுடனேயே விடிகிறது. இன்றும்.. சோம்பலான விடியலாகத்தான் அவளது காலை 11 மணிக்கு விடிந்தது. சிந்தனைச் சுமையுடனேயே எழுந்தாள்.

எழுந்ததில் இருந்து ஒரு ஃபோன் காலுக்காக வெயிட் பண்ணத் தொடங்கினாள். அவள் கண்கள் ஃபோனையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. காதுகள் ரிங் டோனுக்காக ஏங்கிக் காத்திருந்தன. ஃபோன் அடித்ததும் தாவிச் சென்று எடுத்தாள்.

"கவி காரியம் சக்சஸ்" என்று ஒரு பெண்குரல் சொல்லிவிட்டு, இணைப்பிலிருந்து நகர்ந்தது. கவி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தியா உனக்கான நியாயம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணினாள். தியாவிற்காக முதல் உயிர், பலி கொடுக்கப்பட்டு விட்டது. அது...?

(திக் திக் தொடரும்)

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #28

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT