Advertisment

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #28

marana muhurtham part 28

Advertisment

நம் கண்ணெதிரில் குற்றம் நடக்கும்போது அதைக் கண்டிக்கும் துணிவோ, உரிமையோ நமக்கில்லாதபோது, நம் மனம் கோபம் கொள்ளும். அந்த நேரத்தில் யார் நம்மிடம் சிக்குகிறார்களோ அவர்களிடம் கோபம் திரும்பும். அதேபோல கட்டுப்படுத்த முடியாத கோபம், இயலாமை, விரக்தி எனக் கடவுள் பாதி, மிருகம் பாதியாக மாறிக்கொண்டிருக்கும் கவியிடம், "இப்ப எங்கே போற, அப்பா வந்து நீ எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்றது ?" என்று அப்பாவியாகக் கேட்டாள் திலகா.

"நான் சாகப் போறேன்னு சொல்லு, இல்லைன்னா அவரை கொலை பண்ணப் போறேன்னு சொல்லு" என்று கோபமாகச் சொன்னாள். அதுதான் அம்மா திலகாவை ரொம்பவே அதிர வைத்தது. கவியோ, கடுமையான சொற்களைச் சொல்லிவிட்டு மொத்த கோபத்தையும் பைக் மீது கொட்டினாள். வண்டியும் கோபப்பட்டு ‘ங்கொய்’ன்னு சத்தம் போட்டுச் சீறிப் பறந்தது.

வண்டியை விட வேகமாக கவியின் மனம் பறந்தது. அவளுக்கு தியா சொன்னதைப் படித்ததிலிருந்து அவள் அவற்றை தன்னிடம் சொன்னது போலவே காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது; கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த மேகம் மாதிரி இருந்த தியாவின் நினைவு, கவியின் மனதில் கிளறிவிட்ட நெருப்பு மாதிரி கனன்றுகொண்டிருக்க... அந்த அனலின் வேகம் வண்டியில் சீறியது. வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனி வழியாக வந்துகொண்டிருந்த கவியின் பைக்கை ஒரு கார் ஒன்று பின்தொடர்ந்தது. அதை அறியாத கவி கோல்ப் பார்க் வழியாக வேளச்சேரி ஏரிக்கரைக்கு வந்தாள். அங்கு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஏரி நீரில் அமானுஷ்ய அமைதி தெரிந்தது. அந்த அமைதியே ஒரு பெரும் மரண பீதியை மனதில் ஏற்படுத்தியது. எனினும் கவி அந்த ஏரியைக் காதலுடன் பார்த்தாள்.

Advertisment

விரக்தியின் விளிம்பில் இருந்த கவி, அந்த ஏரியில் குதித்துவிடலாமா என்று கூட யோசித்தாள். கவியின் பலதரப்பட்ட எண்ணப் புயல் கரையைக் கடக்க ஆரம்பித்தது. அந்த இடத்திற்கு வேறொரு ஸ்கூட்டி வந்து நின்றது. அதிலிருந்து பர்தா பெண் வேகமாக வந்து இறங்கியபடியே, "கவி காதலிக்கறவங்க கூட இந்த மாதிரி இடத்துல சந்திக்க மாட்டாங்க, நீ ஏன் இங்க வரச்சொன்ன?" என்று சற்று எரிச்சலுடன் கேட்டாள்.

பர்தாப் பெண்ணைப் பார்த்ததும் , ஓடிவந்து அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள். காரணம் புரியாமல் குழம்பிப் போய் நின்றாள் பர்தா.

"என்னாச்சு கவி ஏன் இப்படி அழறன்னு" அவளைச் சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தினாள்.

அந்த இடத்தை அமைதி குத்தகை எடுத்திருந்தது. கவியோ, மெல்ல மெல்ல தியா சொன்ன விசயங்களை அப்படியே பர்தா பெண்ணிடம் வார்த்தைகளாய் ஜெராக்ஸ் எடுத்தாள்.

கவி சொன்னதைக் கேட்டதும், பர்தா பெண்ணும் வலையில் சிக்கிய மீனெனத் துடித்தாள்.

"இவனுங்களை சும்மா விடக்கூடாது. சுண்ணாம்புக் காளவாயில் போட்டு உயிரோடு எரிக்க வேண்டும். முச்சந்தியில் நிற்க வைத்து இரண்டு கூறாய்ப் பிளக்க வேண்டும்." என்று கறுவினாள்.

"அந்த கெமிஸ்ட்ரி வாத்தியாரை இராணுவ பாணியில் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும்." என்று கண்கள் சிவப்பேறச் சொன்னாள்.

இருவரும் அங்கிருக்கும் மரத்திற்குக் கூட கேட்காமல் என்னவோ ரகசியம் பேசினார்கள்.

அரை மணி நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

மீண்டும் வீட்டிற்கு அவள் வரும் வழியில், அந்தக் கார் இவர்களைப் பின்தொடர்வதைக் கவனிக்காமல் கவி இயல்பாய் சென்றாள்.

கவி வீட்டிற்கு வந்ததும் செல் அலறியது. அதில் ஒரு ஆணின் குரல்,

"என்ன கவி, பேஷ் பேஷ், தியா மரணத்திற்கு காரணமானவங்களுக்கு மரண முகூர்த்தம் குறிச்சிட்டு வர்ரீங்க போலிருக்கு" என்று கடுமையாகக் கரகரத்தது.

(திக்திக் தொடரும்...)

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #27

Marana Muhurtam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe