Advertisment

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில் இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisment

n

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார்.அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

Advertisment

jhk

ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.

mao
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe