Skip to main content

அமெரிக்காவின் வேட்டைக் காடாகிய பாகிஸ்தான்! ஆதனூர் சோழன் எழுதும் வீர மங்கை மலாலா #5


“ஆண்களுடன் அருகருகே கைகோர்த்து நின்று பெண்கள் பங்கேற்காத போராட்டம் எதுவும் வெற்றிபெறாது. உலகில் இரண்டு சக்திகள் இருக்கின்றன. முதலாவது கத்தி, இரண்டாவது பேனா. இந்த இரண்டையும் காட்டிலும் வலுவான மூன்றாவது சக்தி இருக்கிறது. அதுதான் பெண்கள்” என்று பாகிஸ்தானின் தேசத்தந்தை முகமது அலி ஜின்னா சொல்வார்.

ஆனால், சர்வாதிகாரி ஜியா பெண்களின் உரிமைகளையும் தகுதியையும் ஆண்களைக் காட்டிலும் பாதியாக குறைத்துவிட்டார். நீதிமன்றத்தில் ஒரு ஆணின் சாட்சிக்கு எதிராக இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினார். இதையடுத்து, பாகிஸ்தான் சிறைகள் பெண்களால் நிறையத் தொடங்கின. பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமியும் அவர்களில் ஒருவர். கர்ப்பமான நிலையில் அவள் சிறையில் அடைக்கப்பட்டாள். தனக்கு இழைக்கப்பட்டது குற்றம்தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக 4 ஆண் சாட்சிகளை நிறுத்த முடியாததால் அவளுக்கு இந்த நிலை. ஜியாவின் ஆட்சியில் ஒரு ஆணின் அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணால் வங்கிக் கணக்குகூட தொடங்க முடியாது. ஹாக்கி விளையாட்டில் பாகிஸ்தான் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. ஆனால், பெண்கள் ஹாக்கியில் இடம்பிடித்த பெண்கள் அரை ட்ரவுசர் போட ஜியா தடை விதித்தார். அதற்கு பதிலாக தொளாதொளா முழுக்கால் ட்ரவுசர் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி சில விளையாட்டுகளை பெண்கள் விளையாடவே தடை விதித்தார்.

 

fcgஜியாவின் காலத்தில்தான் ஏராளமான மதக் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. பள்ளிகளிலும்கூட இஸ்லாமியக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதுதான் இப்போதும் பாகிஸ்தானில் தொடர்கிறது. 1947ல்தான் பாகிஸ்தான் என்ற நாடே உருவானது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமின் கோட்டை என்று வர்ணித்து வரலாற்றுப் புத்தகம் திருத்தப்பட்டது. அதாவது 1947க்கு முன்னரே பாகிஸ்தான் இருந்ததுபோன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். பாகிஸ்தானில் ஹிந்துக்களையும் யூதர்களையும் புறந்தள்ளினார்கள். அந்த வரலாற்றைப் படிக்கிறவர்கள், இந்தியாவுடன் போரிட்ட மூன்று யுத்தங்களிலுமே பாகிஸ்தான் ஜெயித்ததைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.

மலாலாவின் அப்பா ஜியாவுதீனுக்கு 10 வயதான சமயத்தில்தான் எல்லாமே தலைகீழாக மாறத்தொடங்கியது. 1979 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ரஷ்யா படையெடுத்தது. இதையடுத்து பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குள் அகதிகளாக வந்தார்கள். அவர்களுக்கு சர்வாதிகாரி ஜியா அடைக்கலம் கொடுத்தார். வெள்ளை துணிபோர்த்திய மிகப்பிரமாண்டமான அகதிகள் முகாம்கள் பெஷாவர் நகரைச் சுற்றிலும் உருவாகின. பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ ஆப்கான் அகதிகளில் இளைஞர்களைத் தேர்வு செய்து முஜாகிதீன் என்ற எதிர்ப்புப் படையை கட்டியது.
 

 

hjசர்வதேச அளவில் புறக்கணிக்கப்பட்டிருந்த ஜியாவை, விடுதலைப் போராட்ட ஆதரவாளராக மாற்ற ரஷ்யப் படையெடுப்பு உதவியது. பூட்டோ கொலைக்குப் பிறகு ஜியாவை அமெரிக்கா புறக்கணித்திருந்தது. இப்போது, ரஷ்யாவை எதிர்க்க ஜியாவுக்கு உதவ அமெரிக்கா நட்பாகியது. சோவியத் ரஷ்யா அமெரிக்காவின் முக்கிய எதிரி என்பதால், ரஷ்யாவின் படையெடுப்பைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்தான் அமெரிக்காவின் நட்பு நாடான ஈரானில் அமெரிக்காவின் நண்பரான ஷா, அங்கு ஏற்பட்ட புரட்சியில் தூக்கியெறியப்பட்டார். எனவே, ஈரானுக்கு பதிலாக பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தத் தொடங்கியது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் கோடிக்கணக்கான டாலர்களையும் ஆயுதங்களையும் உதவியாக வாரிக் கொடுக்கத் தொடங்கின. அவற்றைக் கொண்டு ஆப்கன் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐ பயிற்சியளித்தது. அவர்களை சோவியத்தின் செஞ்சேனைக்கு எதிராக போரிட அனுப்பியது. ஜியாவை அமெரிக்க அதிபர் ரீகனும், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரும் அவரவர் நாட்டுக்கு அழைத்து பெருமைப்படுத்தினார்கள்.

 

hjபாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ, தனது ராணுவ தளபதியாக ஜியாவை நியமித்தபோது, அவரை பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை. தன்னை ஜியாவால் ஆபத்து ஏற்படாது என்றே நம்பினார். ஜியாவை குரங்கு என்றே பூட்டோ அழைப்பார். ஆனால் அதே ஜியா பூட்டோவை கவிழ்த்து சிறையில் அடைத்து தூக்கிலும் போட்டார். அதைத்தொடர்ந்து உலக அளவில் வில்லனாக பார்க்கப்பட்ட ஜியா, ஆப்கனை மையப்படுத்தி மேற்கத்திய நாடுகளை மட்டுமல்ல, இஸ்லாமிய நாடுகளையும் தனக்கு ஆதரவாக திருப்பிவிட்டார்.

கம்யூனிஸம் பரவக்கூடாது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் விரும்பி நிதியுதவி அளித்தன. தங்களுடைய சக இஸ்லாமிய நாடு சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்டால் தங்களுக்கு இதே கதி ஏற்படலாம் என்று சவூதி, சூடான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் நினைத்தன. அமெரிக்க எந்த அளவு உதவி செய்ததோ, அதற்கு சற்றும் குறையாமல் ஆட்களையும் நிதியையும் வாரிக்கொடுத்தது சவூதி அரேபியா. அப்படி வந்த உதவியில் முக்கியமானவர்தான் சவூதி கோடீஸ்வரர் பின் லேடன்.
 

vbnபாகிஸ்தானிலும் ஆப்கானிலும் வாழும் பாஷ்தூன்கள் பிரிட்டிஷார் போட்ட எல்லைகளை ஏற்கவில்லை. அவர்கள் தங்களை பிரிட்டிஷார் பிரித்துவிட்டதாகவே கருதினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டிஷார் பாஷ்துன்களை பிரித்து ஆண்டார்கள். எனவேதான், இரு நாடுகளிலும் வாழும் பாஷ்துன்கள் சோவியத் படையெடுப்புக்கு எதிராக மத அடிப்படையிலும், தேசியம் என்ற அடிப்படையிலும் கொதித்து எழுந்தார்கள். சோவியத் ரஷ்யர்கள் நாத்திகர்கள் என்றும் உண்மையான முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்து புனிதப்போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் தொழுகைகளிலேயே பிரசாரம் செய்தார்கள். இஸ்லாம், ஒரே கடவுள், 5 வேளை தொழுகை, ரம்ஜான் மாதத்தில் நோன்பு, ஹஜ் யாத்திரை உள்ளிட்ட 5 கடமைகளை இஸ்லாமியர்களுக்கு போதிக்கிறது. ஜிகாத் அல்லது புனிதப் போர் என்பதை ஆறாவது கடமையாக அல்லது தூணாக ஜியா மாற்றினார்.

ஜிகாத் என்பதை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ மிகத் தீவிரமாக பரப்பியது. அகதிகள் முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் கணக்குப்பாடம் கூட ரஷ்ய நாத்திகர்களை வைத்தே எழுதப்பட்டிருந்தது. மலாலாவின் தந்தை இதை நேரிலேயே அனுபவித்தார். “10 ரஷ்ய நாத்திகர்களில் ஒரு முஸ்லிம் 5 நாத்திகர்களை கொன்றுவிட்டால் மீதம் இருப்பது 5 நாத்திகர்கள்” என்றும், “15 குண்டுகளில் 10 குண்டுகளை சுட்டுவிட்டால் மீதம் 5 குண்டுகள்” என்று கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த அளவுக்கு குழந்தை பருவத்திலேயே ஜிகாத் அல்லது புனிதப் போர் என்பதை ஆழமாக விதைத்தார்கள்.
 

 

hjஜியாவுதீனின் ஊர்ப் பக்கத்திலிருந்து பல இளைஞர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்க சென்றார்கள். மவுலானாக்கள் கிராமங்களுக்கு வந்து போர் வெறியை ஏற்றி பேசுவார்கள். இஸ்லாமை காக்க போரிட வரும்படி அழைப்பார்கள். அவர்களும் பேச்சில் ஈர்க்கப்பட்டு ஆவேசமாக புறப்படுவார்கள். தொடக்கத்தில் பழைய ஆயுதங்களைக் கொண்டு போவார்கள். ஆனால், பின்னாளில் இத்தகைய குழுக்கள் ஸ்வாத் சமவெளியின் தலிபான்கள் என்று அழைக்கப்பட்டன. ஆப்கன் மீது சோவியத் படையெடுத்து 10 ஆண்டுகள் ஆகியும் நாட்டை வசப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கவுரவப் போராக இருந்து, இஸ்லாமிய நாடுகளின் கவுரவப் போராக மாறிக் கொண்டிருந்தது.

ஜியாவுதீனும் தனது சிறு வயதில் ஒரு ஜிகாதியா மாற விரும்புகிற அளவுக்கு மதக்கல்விக் கூடங்களில் பிரச்சாரம் சூடுபிடித்தது. ஆனால், அவருக்கு அப்போது 12 வயதுதான் ஆகியிருந்தது. இருந்தாலும் குரானின் 30 அத்தியாயங்களையும் அர்த்தத்துடன் ஒப்பிக்கும் அளவுக்கு ஜியாவுதீன் கற்றிருந்தார். குரான் கற்கும் மாணவர்களில் பலர் ஜிகாத் பற்றி பேசுகிற பேச்சைக் கேட்டு தானும் ஒரு ஜிகாதி ஆகிவிட வேண்டும் என்று விரும்பத் தொடங்கினார். “இந்த பூமியில் வாழும் நாட்கள் மிகவும் குறைவு” என்று போதிப்பார்கள். ஜியாவுதீனின் கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு சில வாய்ப்புகள்தான் இருந்தன. தெற்கே சென்று சுரங்கங்களில் வேலை செய்யலாம். ஜியாவுதீனின் வகுப்புத் தோழர்கள் பலர் அந்த வேலைக்குத்தான் சென்றார்கள். ஆனால், ஜியாவுதீனுக்கு அதில் விருப்பமில்லை. அது ஆபத்தான வேலை. 

சுரங்க விபத்துகளில் இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் வைத்து கிராமத்துக்கு கொண்டுவரப்படுவதை ஜியாவுதீன் பலமுறை பார்த்திருக்கிறார். கிராமத்தில் பெரும்பாலான இளைஞர்கள் துபாய்க்கோ, சவூதிக்கோ கட்டுமான வேலைகளுக்கு செல்லவே விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஜியாவுதீன் ஜிகாதியாக விரும்பினார். “அல்லா, இஸ்லாமியர்களுக்கும் நாத்திகர்களுக்கும் சண்டையை உருவாக்கு. அப்போதுதான் நான் உனது சேவையின் போது தியாகியாக முடியும்” என்று கடவுளை வேண்டிக்கொள்ள தொடங்கினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...