Skip to main content

அப்பா கடந்த பாகிஸ்தான்! ஆதனூர் சோழன் எழுதும் வீரமங்கை மலாலா #4

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 
மலாலா என்று மகளுக்கு ஜியாவுதீன் பெயர் வைத்துவிட்டாரே தவிர, அவர் என்னவோ தனது மகளை ஜேனி என்றே அழைத்தார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? பிறவியிலேயே அவர் ஒரு திக்குவாயர். அவருக்கு ஆங்கில எழுத்தான எம், ப்பி, கே, ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகள் எளிதில் வராது. ஒரு வார்த்தையை தேய்ந்துபோன ரெகார்டு போல திரும்பத்திரும்ப பேசுவார். வார்த்தைகளையும், கவிதையையும் நேசித்த மலாலாவின் தந்தைக்கு தொடர்ச்சியாக பேசுவதே பிரச்சனையாக இருந்தது. ஜியாவுதீனின் தந்தை வழியிலும், தாய் வழியிலும் யாருக்கேனும் ஒருவருக்கு இந்தப் பிரச்சனை இருந்தது. ஜியாவுதீனுக்கு இந்தப் பிரச்சனை என்றால், அவருடைய அப்பா ரோஹுல் அமின், அதாவது மலாலாவின் தாத்தாவின் குரலோ இடி முழக்கம்போல இருக்கும். அவருடைய நாக்கில் வார்த்தைகள் இடிபோல முழங்கும். நடனமும் ஆடும்.

தனது மகன் ஜியாவுதீன் பேசும்போது திக்குவதை கவலையுடன் பார்ப்பார். “அந்த வார்த்தையை துப்பு மகனே” என்று சத்தம்போடுவார். மலாலாவின் தாத்தாவின் பெயர் ரோஹுல் அமின். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ‘நேர்மையான ஆன்மா’. புனித தேவதை எனக் கருதப்படும் கேப்ரியலின் புனிதமான பெயர். தனது பெயர் குறித்து மலாலாவின் தாத்தாவுக்கு மிகவும் பெருமை. தனது பெயரைக் கூறும்போது, புகழ்பெற்ற வேத வரிகளை கூறுவார். ஆனால், அவர் பொறுமையற்றவர். சின்ன விஷயங்களுக்கெல்லாம் சத்தம் போடுவார். தாம் தூமென்று குதிப்பார். முகம் கோபத்தில் சிவந்துவிடும். கையில் கிடைத்ததை தூக்கிவீசுவார். அவருடைய மனைவி பொறுமையானவர். சிரித்தே சமாளிப்பார்.

 

fg



“நான் இறந்தபிறகு என்னைப் போல சிரிக்கும் மனைவியை கடவுள் உமக்கு கொடுக்கக்கூடாது” என்று மலாலாவின் பாட்டி சொல்வாராம். அதுபோலவே தாத்தாவை விட்டு அவர் முன்கூட்டியே இறந்துவிட்டார். தனது பாட்டியை மலாலா பார்த்ததே இல்லை. ஆனால், மலாலாவின் அப்பா தனது தாயைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். “ஜியாவுதீனின் திக்குவாயை குணப்படுத்த மலைமீது ஒரு சாமியார் இருக்கிறார். அவரிடம் போய் காட்டினால் அவனுடைய திக்குவாய் குணமாகும்” என்று பாட்டியின் உறவினர் ஒருவர் கூறினார்.

இதை நம்பிய பாட்டி, தனது மகனை தூக்கிக்கொண்டு நீண்ட பயணம் செய்தார். மலை மீது ஒரு மணிநேரம் தனது உறவினரின் உதவியோடு மகனைத் தூக்கிச் சுமந்தார். லெவானோ சாமியார் என்று அழைக்கப்பட்ட அந்த சாமியார், பைத்தியங்களின் சாமியார் என்றே அழைக்கப்பட்டார். அவர் ஜியாவுதீனின் நாக்கை நீட்டச் சொல்லி அதை பலவாறு திருகினார். பிறகு வெல்லப் பாகு கொஞ்சத்தை எடுத்து நாக்கைச் சுற்றிலும் தடவினார். எச்சிலோடு குழைத்து அந்த வெல்லப் பாகை ஜியாவுதீனின் தாயிடம் கொடுத்தார். தினமும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கும்படி சொல்லி அனுப்பினார். ஆனால், அந்த மருந்து ஜியாவுதீனின் திக்குவாயை குணப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக திக்குவது அதிகரிப்பதாக சுற்றியிருந்தவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

 

hgj



ஜியாவுதீனுக்கு 13 வயதானபோது அவர் தனது தந்தை ரோஹுல் ஆமினிடம் வந்தார். “நான் பேச்சுப் போட்டியில் கலந்துக்கப் போறேன்” என்றார். இதைக்கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார். மகனைப் பார்த்தார். “அதெப்படி உன்னால் முடியும்” என்றவர் சிரித்தார். பிறகு “ஒரு வாக்கியத்தை முடிக்கவே உனக்கு சில நிமிடங்கள் ஆகுமே” என்றார். “அதைப்பத்தி கவலைப்படாதீங்க. நான் பேசவேண்டியதை எழுதித் தாங்க. நான் பாத்துக்கிறேன்” என்றார் ஜியாவுதீன். ஷாபூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் இறையியல் பாடம் நடத்தும் ஆசிரியராக ரோஹுல் ஆமின் இருந்தார். உள்ளூர் மசூதி ஒன்றில் இமாம் ஆகவும் செயல்பட்டார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளர். அவர் பேசுவதைக் கேட்டால் மயங்கிவிடுவார்கள். வெள்ளிக்கிழமை மசூதிகளில் அவர் நடத்தும் தொழுகை மிகவும் பாப்புலர். அவருடைய தொழுகையை கேட்க மலை மீது வசிக்கும் மக்கள்கூட கழுதைகளிலும் நடந்தும் வந்து குவிவார்கள்.

ஜியாவுதீனின் குடும்பம் ரொம்பப் பெரிசு. அவருக்கு சயீது ரம்ஜான் என்ற அண்ணனும், ஐந்து சகோதரிகளும் இருந்தார்கள். அவர்களுடைய கிராமத்தின் பெயர் பர்கானா. அது ரொம்பப் பழமையான கிராமம். அங்கு ஜியாவுதீனின் குடும்பம் மண் கூரையுடன் கூடிய ஒரு வீட்டில் வசித்தது. மழைக் காலத்திலும் பனிக் காலத்திலும் வீடு ஒழுகும். பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் வீடுகளில்தான் இருப்பார்கள். பையன்கள் பள்ளிக்கு போவார்கள். பெண்கள் தங்களுடைய திருமணத்திற்காக காத்திருப்பார்கள்.

 

hj



அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பெண்கள் கல்வியை மட்டும் இழக்கவில்லை. காலையில் பையன்களுக்கு டீயுடன் சாப்பிட ஏதாச்சும் கொடுப்பார்கள். பெண்களுக்கு வெறும் டீ மட்டுமே கிடைக்கும். உணவுடன் முட்டை கொடுத்தால்கூட பையன்களுக்கு மட்டுமே கிடைக்கும். பெண்களுக்கு கிடைக்காது. சாப்பாட்டுக்கு கோழி இருந்தால், பையன்களுக்கு நெஞ்சுக் கறியும், பெண்களுக்கு இறக்கை மற்றும் கழுத்துக் கறியும் மட்டுமே கிடைக்கும். இப்படிப்பட்ட கவனிப்புகளால் தான் வேறுபட்ட ஆள் என்ற நினைப்பு ஜியாவுதீனிக்குள் வளர்ந்திருந்தது.

பர்கானா கிராமம் ரொம்ப குறுகலானது. அங்கு ஒரே ஒரு வீட்டில்தான் டெலிவிஷன் பெட்டி இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் ஜியாவுதீனும் அவருடைய அண்ணனும் மசூதிக்கு போவார்கள். அவருடைய தாத்தா நடத்தும் தொழுகையை கேட்பார்கள். ஒரு மணிநேரம் கொஞ்சம்கூட கூட்டம் கலையாமல் ஆர்வமாக கேட்கும். ஜியாவுதீனின் அப்பா இந்தியாவில் படித்தவர். அவர் அங்கு புகழ்பெற்ற தலைவர்களான காந்தி, நேரு, ஜின்னா, கான் அப்துல் கபார் கான் போன்ற தலைவர்களின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவர். 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் விடுதலையைக் கொண்டாடியவர் அவர். தொழுகையில் மிக ஈடுபாடுடன் இருப்பார். அதேசமயம் அரசியலும் பேசுவார்.

 

hj



ஜியாவுதீன் பிறந்த 1969 ஆம் ஆண்டில்தான் ஸ்வாத் சமவெளி பாகிஸ்தானுடன் அதிகாரபூர்வமாக இணைந்தது. இந்த இணைப்பில் பல ஸ்வாத் குடிமக்கள் அதிருப்தி அடைந்தார்கள். பாகிஸ்தானின் நீதி அமைப்பை அவர்கள் குறைகூறினார்கள். தங்களுடைய பழங்குடியின் நீதி அமைப்பில் எளிதில் நீதி கிடைக்கும் என்றார்கள். ஜியாவுதீனின் அப்பாவுக்கும் குறைகள் இருந்தன. பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே நிலவிய பாரபட்சத்தை அவர் வெறுத்தார்.

பாகி்ஸ்தான் புதிதாக பிறந்த நாடாக இருந்தாலும் அங்கு ராணுவ ஆட்சிகள் புதிதல்ல. ஜியாவுதீனுக்கு 8 வயதான சமயத்தில் பூட்டோ தலைமையிலான அரசாங்கத்தை ஜியாவுல் ஹக் என்ற ராணுவ தளபதி கவிழ்த்தார். சர்வாதிகார ஆட்சியை அறிமுகப்படுத்தினார். சாதாரண மக்களுக்கான பிரதமராக கருதப்பட்ட பூட்டோவை ஜியாவுல் ஹக் தூக்கில் போட்டார். பூட்டோ பெரிய பணக்காரர்தான். ஆனால், அவருடைய மரணம் பாகிஸ்தானில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் பாகிஸ்தானின் இமேஜ் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா தனது உதவியை நிறுத்தியது.
 

hjk



ஜியாவுல் ஹக் பாகிஸ்தானை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றினார். ராணுவத்தை பயன்படுத்தி இஸ்லாமிய நடைமுறைகளை எல்லா வீடுகளுக்குள்ளும் திணித்தார். இஸ்லாமிய கோட்பாடுகளை தனது அரசு நடைமுறைப்படுத்துவதால், மக்கள் அரசின் உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டும் என்றார். மக்கள் எப்படி தொழுகை நடத்த வேண்டும், மாவட்டங்களில் எப்படி தொழுகை கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்றெல்லாம் ஆணையிடத் தொடங்கினார். நாட்டின் உள்ளடங்கிய கிராமங்களில் கூட தொழுகையை கவனிக்கும் 1 லட்சம் இன்ஸ்பெக்டர்களை நியமித்தார். ஜியாவுக்கு முன் திருமணங்களை நடத்தும் முல்லாக்களை கிண்டல் செய்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால், அவர்களை செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றினார் ஜியா. ஜியாவுதீனின் அப்பாவுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

 


 

Next Story

'பெண்கள் புர்கா அணியாவிட்டால் ஆண்களின்...'-எச்சரிக்கும் தலிபான்கள்! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

Taliban warns womens... if not to wear burqas

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக் குறியானது. பெண்கள் உடலையும், முகத்தையும் மறைக்கும் அளவிற்கு 'புர்கா' அணிய வேண்டும், பாடசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரைச்சீலை அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டனர்.

 

பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களை தலிபான்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பெண்ணிய ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது முழுஉடலை மறைக்கும் வகையில் 'புர்கா' அணியவேண்டும், பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ள தலிபான்கள், இந்த உத்தரவை மீறும் பெண்களுடைய ஆண் உறவினர்களின் அரசு வேலைகள் பறிக்கப்படும் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.

 

 

Next Story

''பெண் குழந்தைகள் படிக்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்''-மலாலா கருத்து

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

"The Taliban should allow girls to study," she said-malala speech

 

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மலாலா ''பெண் குழந்தைகள் கல்வி அறிவை பெறுவதற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்'' என்றார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மலாலா மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமுற்ற மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். அதனையடுத்து மலாலாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.