Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #27

 

maayapura part 27

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

சங்கவி ரிக்ஷாகாரனிடம் வார்த்தைகளால் போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு கை சங்கவியின் தோளின் மீது விழுந்தது. சங்கவி மேலும் அரண்டாள். ஏனோ உச்சந்தலையில் உருவான வியர்வையின்  கிளை ஆறுகள் உடலெங்கும் பாய்ந்தது. மிகவும் பயந்து கொண்டே தோளின் மீது கைவைத்தது யார் என்று பார்த்தாள். பயத்தில் உடல் நடுங்கி  கதகளி ஆடியது. சங்கவியின் அம்மா வயதை ஒத்த ஒரு பெண்மணி நெற்றியில் 50 காசு அளவிற்கு குங்கும பொட்டு வைத்திருந்தார். வாயெல்லாம் வெற்றிலை பாக்குடன் உறவு கொண்டு சிவப்பு வண்ணம் பூசி இருந்தது. தலையை சீவி கொண்டை போட்டு அதில் மல்லிகைச் சரத்தை மதில் எழுப்பி வைத்திருந்தார். கையில் பிரம்பால் பெரிய கூடையில் பூ வைத்திருந்தார். பூ வியாபாரம் செய்பவர் என்பது தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் இவர் சென்னை என்பதை புரிந்து கொள்ளும் சக்தி சங்கவிக்கு இல்லை காரணம் அவள் கிராமத்தை விட்டு எல்லை தாண்டியது இல்லை.

"த இன்னா இந்த பொண்ணுகிட்ட டகுளு வுட்டுகினு கீற.  வேணாம், புள்ள பயந்துகினு கீது   பாரு"என்று அகராதியில் இல்லாத வார்த்தை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

"த.. முனியம்மா கம்முனு கட. சும்மா பேச்சுக்  கொடுத்தேன் புள்ள  டபாய்க்குது" என்று அவனும் பதிலுக்கு அதே மொழியில் பேசினான்.

 

இவர்கள் இருவர் பேசுவது சங்கவிக்கு புரியவில்லை என்றாலும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது.  நாம ஏதோ தப்பான இடத்தில் மாட்டிக்கொண்டோம் என்று புரிய ஆரம்பித்தது. மெல்ல அந்த இடத்தில் இருந்து நழுவ ஆரம்பித்தாள் சங்கவி.

"த பொண்ணு உனக்கு என்ன வேணும் என்கிட்ட விலாவாரியா சொல்லு" ன்னு முனியம்மா சங்கவி பக்கம் திரும்பினாள். "அம்மா இங்கே எங்கேயாவது  வீட்டில் இட்லி சுட்டு விக்கறாங்களான்னு  கேட்டேன். என்று தயங்கிக்கொண்டே சொன்னாள்.

"பயப்படாதே கண்ணு நான் இந்த ஏரியா தான். பூ வியாபாரம் செய்கிறேன். என் கூட வா உன்னை நான் நாஷ்டா கடைக்கு கூட்டிட்டு போறேன்" என்று சொன்னாள் முனியம்மா. சங்கவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவளுடைய தேவையெல்லாம் மல்லிகாவிற்கு எப்படியாவது இட்லி வாங்கிட்டுப் போகனும். அதற்காக என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று முனியம்மாள் பின்னால் செல்ல ஆரம்பித்தாள்.

 

காலம் மாதிரி மனிதனை வளப்படுத்துவதும் பலப்படுத்துவதும் எதுவுமில்லை. மனிதனை சித்தனாக்குவதும், சித்தனை பித்தனாக்குவதும் காலம்தான். நடிப்பவர்கள் நாடாளுவதும், நாடாள்பவர்கள் பதவிக்காக நடிப்பதும் மக்கள் பார்க்கும் காலத்தின் கோலங்கள். நாடுகளின் எல்லைகள் விரிந்து சுருங்குவது காலத்தின் மறுமலர்ச்சி. மாதம் மும்மாரி பெய்வதும், மழையே இல்லாமல் பொய்ப்பதும் காலத்தின் மறுசுழற்சி. மனிதன் கொடுப்பதெல்லாம் பல மடங்காகத் திருப்பிக் கொடுக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் வட்டியுடன் திருப்பிக் கொடுத்து துல்லியமாகக் கணக்கிடுவது காலத்தின் கை தேர்ந்த கலை. எங்கோ பிறந்து வளர்ந்து சென்னையை  மேப்பில் மட்டுமே பார்த்த சங்கவி இன்று காலால் நடந்து சுற்றி வருகிறார் என்றால் அது காலத்தின் கட்டாயம் அல்லவா? வேண்டாம் என்று ஒதுக்கிய சங்கவி இன்று மல்லிகாவின் உயிர் காக்கும் தெய்வமாக விளங்குகிறாள் என்றால் அது காலத்தின் திருவிளையாடல்.

 

சந்து பொந்து என்று சுற்றி சுற்றி நடந்த முனியம்மா கடைசியில் ஒரு குடிசை வீட்டின் முன்னாடி நின்றாள். அந்த வீட்டின் வாசலில் அடுப்பை மூட்டி இட்லி அவிக்கற பாத்திரம் வைத்து இட்லி சுட்டுக் கொண்டிருந்தாள் முனியம்மா வயதுடைய பெண். ரிக்ஷா காரன் மாதிரி இருந்த சில ஆண்கள் பாதாம் இலையில் இட்லி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். டேபிள் சேர் எல்லாம் இல்லை. வாசலில் அங்கே அங்கே பெரிய பெரிய கல்லு  திண்டை மாதிரி இருக்கு. அதில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"த.. கன்னிமா இந்த பொண்ணு ஊருக்கு புதுசு. இவளுக்கு இட்லி கட்டி கொடு" என்று கன்னிமாவை அதிகாரம் பண்ணினாள்.

" ஆமாம் கண்ணு நீ யாரு? ஏன் இந்த ஊருக்கு வந்த?" என்று அப்போதுதான் சங்கவியைப் பார்ப்பது போல கேள்வி கேட்டாள் முனியம்மா.

" அக்கா நான் மதுராந்தகம் தாண்டி மாம்பாக்கம் கிராமம். என் அக்காவை உடம்பு சரியில்லைன்னு இங்க பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம் ஹோட்டல் இட்லி எல்லாம் உடம்பு சரியில்லாதவங்களுக்கு சரிவராது. அதான் வீட்டு இட்லியை  தேடி வந்தேன்" என்று தன் ஏழ்மையை மறைத்தாள் சங்கவி.

" ஏ ..பொண்ணு நீ சாம்பலை சாப்டு  வெளியில வெண்ணையை பூசிக்கர ரகமா? ஏழ்மையை மறைக்க என்ன தளுக்கா பேசுறே. உன் தன்மானம் புடிச்சிருக்கும்மா" என்று வெளிப்படையாக பேசினாள் முனியம்மா.

 

அதற்குள் சங்கவி கேட்ட 8 இட்லியை இலையில் கட்டி அதில் கெட்டி சட்னியும் வைத்து கட்டினாள் கன்னிம்மா. ஒரு இட்லி  25 பைசா என்று இரண்டு ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொண்டு, "அக்கா எனக்கு சரியா வழி தெரியலை கொஞ்சம் மெயின்ரோடில் விடுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் "என்று சொல்லி சங்கவி முனியம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றாள். வேகவேகமாக ஆஸ்பிட்டல் வந்தாள் சங்கவி.

"பசி அதிகமாக இருக்கிறது இவ்வளவு நேரம் என்ன  செய்த  மாவை அரைத்து இட்லி சுட்டு எடுத்துட்டு வர்றியா" என்று சத்தம் போட்டாள் மல்லிகா. "என்னதான் நாம அன்பா இருந்தாலும் நாம அன்பு காட்டறவங்க மனசு குரங்கு மாதிரி சில நேரங்களில் மரத்திலிருந்து தொப் தொப்பென்று குதிக்க தான் செய்கிறது" என்று மனதில் நினைத்து கொண்டாள் சங்கவி. பாவம் மல்லிகாவிற்கு அதிக பசி போல ஆறு இட்லியை எடுத்து கொண்டு இரண்டு இட்லி தான் மீதம் வைத்தாள். அதை சங்கவி சாப்பிடும்போது பார்த்த மல்லிகா "சங்கவி நீ சாப்பிடலையா நீ சாப்பிட்டு எனக்கு வாங்கிட்டு வந்திருக்கன்னு நினைச்சு சாப்பிட்டேன் தப்பா நினைச்சுக்காதே" என்று கனிவாக சொன்னாள். ஒருவேளை உணவுக்கே இப்படி போராட்டம் என்று நினைத்த சங்கவிக்கு மதிய உணவினை நினைத்தால் மலைப்பாக இருந்தது. மல்லிகா மாத்திரை எல்லாம் போட்டுக்கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் நோயாளியாக இருப்பவர்களைவிட  அவர்களுக்கு உதவிக்கு இருப்பவர்கள் தான் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த வேலையும் இல்லாமல் இருப்பது ஒரு மணி நேரம் வேண்டுமானால் மகிழ்வாக இருக்கும் அதற்கு பிறகு கடிகாரம் முள்ளை ஸ்லோ சைக்கிள் பந்தயம் மாதிரி மெதுவாக நகர்த்தும். சங்கவி மெதுவாக அந்த மருத்துவமனையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு அறையில் இருந்த கட்டிலிலிருந்து எழுந்திருக்க முயற்சி செய்து முடியாமல் தடுமாறி திணறிக்கொண்டிருந்தார் வயதான அம்மா. அவர்களுக்கு 70 வயதிருக்கும்.

 

இதை அந்த அறையின் வெளியில் இருந்து பார்த்த சங்கவிக்கு மனசு பதைத்தது. அந்த அறையின் உள்ளே செல்லலாமா? என்று தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். அந்த அம்மா மிகவும் சிரமப்படுவதை பார்த்ததும் சங்கவிக்கு பொறுக்கமுடியவில்லை. வேகமாக ஓடிப்போய் அவர்களை கட்டிலில் இருந்து கீழே இறக்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தாள்.அந்த அம்மாவிற்கு சங்கவியை மிகவும் பிடித்துவிட்டது. சங்கவியைப் பற்றி விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டார். சங்கவி அவர்களிடம் பேசிக் கொண்டே அந்த அறையை கண்களால் அளவெடுத்தாள். நோயாளிகளின் பொருள்கள் வைக்கும் டேபிளில் பெரியாரும் பெண் விடுதலையும், இங்கர்சாலின் பொருளாதாரக் கொள்கை,மார்க்சின் தத்துவங்கள், இத்தனை புத்தகங்களுடன் பகவத்கீதையும் இருந்தது. இதையெல்லாம் பார்த்ததும் சங்கவிக்கு பிரமிப்பாக இருந்தது.

"அம்மா இந்தப் புத்தகங்கள் எல்லாம் நீங்கள் படிக்கிற புத்தகமா? என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

"ஆமாம் மா இந்த புத்தகங்கள் இந்த ரமாவின் ரணங்களுக்கு மருந்தாகின்றன" என்று புன்னகையுடன் சொன்னாள். 

"என்னம்மா உடம்புக்கு" என்று அக்கறையுடன் விசாரித்தாள் சங்கவி. 

"கேன்சர் ன்னு  சொல்றாங்க" என்று  தலைவலி வந்தது போல சொன்னார். இதை கேட்டதும் சங்கவி அதிர்ச்சியானாள். என்னம்மா இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க என்று பதறினாள்.

"சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்"என்று பெரியார் சொல்லியிருக்கார் என்று அமைதியாக சொன்னார் ரமா.

 

இதை கேட்டதும் சங்கவியின் கண்களில் நீர் திரையிட்டது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சங்கவி மல்லிகாவை சென்று பார்த்து வந்தாள் மல்லிகா நன்றாக தூங்கிகொண்டிருந்தாள். மதிய உணவு நேரம் நெருங்கியதும், அம்மா நான் மல்லிகாவிற்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு கிளம்ப கிளம்பினாள்

" எங்கே கிளம்பி போற  சாப்பாடு வீட்டிலிருந்து வரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்று  அழைத்தார் ரமா. காலை உணவை தேடி,தேடி அலைந்து நொந்து  நூலானாள். மதிய உணவு தேடாமல் இருக்கும் இடத்தை தேடி வருகிறது. எத்தனையோ பேர் அந்த அறையை கடந்து சென்றனர். பத்தோடு பதினொன்றாக  சங்கவியும் அப்படி இருந்திருக்கலாம். சங்கவியின் இரக்க குணம் ரமாவின் அன்பிற்கு பாத்திரமானது. அந்த அட்சய பாத்திரத்தின்   மூலமாக சங்கவியின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படப் போகிறது என்பது சங்கவிக்கு தெரியாது.

 

(சிறகுகள் படபடக்கும்)