Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #26

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

maayapura part 26

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

மருத்துவமனையில் மல்லிகாவுக்கு தனியறை என்பதால் அதில் ஒரு கட்டில் மட்டும் போடப்பட்டு இருந்தது. அந்த வார்டில்  இருக்கும் எல்லா அறைகளுக்கும் சேர்ந்தது போன்று கழிவறைகள் இருந்தன. பக்கத்து அறைகளில் இருப்பவர்கள் பேசுவது இந்த அறையில் கேட்கும். பயமில்லாமல் இருக்கலாம். மல்லிகாவின் கட்டிலுக்கு அருகிலேயே  கொஞ்சமாக ஒரு ஆள் படுத்துக் கொள்வதற்கு இடம் இருந்தது. சங்கவி அங்கு படுத்துக்கொண்டாள். அந்த மருத்துவமனையை சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தன. 

 

இரவு சங்கவிக்கு தூக்கமே வரவில்லை. இன்று முழுவதும் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாக அலைந்தது உடல் வலி அதிகமாக இருந்தது.

 

நம் மனது ஒரு இலக்கை நோக்கி போகும் போது உடலைப் பற்றிய சிந்தனை வராது. பசி எடுக்காது. தூக்கம் வராது. மனசு ஜெட் வேகத்தில் உடலை சுமந்து செல்லும். மனமானது தன் இலக்கும் எண்ணமும் முடிந்ததும் தொப்பென்று உடலை போட்டு விடும். மனசு ரிலாக்ஸ் ஆன பிறகுதான் உடல் வலி தெரியும். அது மாதிரி மல்லிகாவையும் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கில் இருந்த மனதிற்கு உடல் வலி தெரியவில்லை. கருவை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்ததும் மனசு லேசானது. உடல் பாரமானது. உடல் வலியுடன் புரண்டு புரண்டு படுத்தாள். மல்லிகாவிற்கு ஓய்வுக்காக ஊசி போட்டு இருந்தார்கள்.

 

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இவர்கள் தங்கியிருக்கும் அறையானது அந்த வார்டில் கடைசியாக இருந்தது. அதனால் ஜன்னல் ஒன்று இருந்தது. ஜன்னலுக்கு வெளியே பாதாம் மரம் நன்றாக பசுமையாக பெரிய மரமாக நிறைய கிளைகளுடன் இருந்தது. ஜன்னலுக்கு வெளியே அந்த மரம் அசைவது  ஜன்னலில் உடைந்த கண்ணாடி வழியே பார்க்கும் போது ஏதோ விசித்திர உருவம் நிற்பது போல இருந்தது. சங்கவிக்கு பயம் லேசாக  உச்சி முடியில் அமர்ந்தது. வேறு பக்கம் திரும்பி  கண்களை மூடிக்கொண்டாள்.

 

புது இடம் என்பதால் தூக்கம் அவளிடம் சண்டையிட்டது. தலையணை கேட்டு வம்பு செய்தது. எப்படியோ சமாதானப்படுத்தி லேசாக கண்கள் நித்திரையை அணைக்கும்போது தடதடவென கதவு தட்டப்பட்டது.  அந்த கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை. அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள் சங்கவி. நர்ஸ் வேகமாக உள்ளே வந்து அரை மயக்கத்தில் இருந்த மல்லிகா வாயில் ஏதோ மாத்திரையை போட்டு விட்டு சென்றாள். அதற்குள்  தூக்கம் சென்னையை தாண்டி திண்டிவனம் சென்றுவிட்டது. தூக்கம் சங்கவியை  விட்டு போகும் போது பிளைட் பிடித்து சென்றது. சங்கவியிடம் வரும்போது மட்டும் கட்டை வண்டியில் வருகிறது. வேறு வழியில்லாமல் கண்களை இறுக மூடினாள். ஏனோ கண்களுக்குள்  பாதாம் மரம் தெரிந்தது. சங்கவி மீண்டும் திரும்பி அந்த மரத்தையே பார்த்தாள். அந்த பாதாம் மரம்  இன்னும் வித்தியாசமான உருவங்களுடன் காட்சியளித்தது. அந்த காட்சிக்கு ரீரெக்கார்டிங் வாசிப்பது போல எங்கிருந்தோ ஆந்தை அலறியது. உடம்பினுள் உள்ள நரம்புகள் எல்லாம் நடனமாடியது.

 

நம் மனதிற்கு ஏதோ சில உணர்வுகள் வரும்போதுதான் அந்த உணர்விற்கு பாதுகாப்பான உறவுகளைத் தேடுகிறது. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்போது நட்பை தேடுகிறது. நட்பிடம் மனமானது தன் எண்ணங்களை கொட்டிய பிறகு இங்கு லேசாகிவிடும். கேட்ட நட்புக்கு மனம் கனமாகிவிடும்.அன்பாக  இருக்கும்போது அம்மாவை தேடும் மனமானது, பயமாக இருக்கும்போது அப்பாவைத் தேடும். திருமணத்திற்கு பிறகு அப்பாவிற்கு இணையான பாதுகாப்பை தரக்கூடிய கணவனின் அன்புக்கு ஏங்குகிறது.

 

சங்கவி அசோக்  பேசுவது போல அவன் நினைவுடன் பேசினாள்." நான் பயமாக இருக்கு என்று சொன்னால் அசோக் நல்லா கண்ணைத் திறந்து பாரு. அது மரம் கிளை காற்றில் அசைவது உனக்கு பயமாக இருக்கு" ன்னு சொல்வான்.  "எந்த விஷயத்தையும் தூர  இருந்து பார்க்கும்போது பயமாகவும், பிரமிப்பாகவும் இருக்கும். அதன் அருகில் சென்றவுடன் தான் இவ்வளவு தானா என்று தோன்றும்". அசோக் சொல்வது போல நினைத்துக்கொண்டு அந்த பாதாம் மரத்தையே பார்த்தாள். சங்கவியின் பயம் மெல்ல மெல்ல விலகியது. சங்கவியின் காதருகே "ஏய்..பொம்மி தூங்கலையா"? என்று  அசோக் கேட்பதுபோல இருந்தது. தனியா இருக்கும்போது அசோக் சங்கவியை பொம்மி  என்று தான் அழைப்பான். சங்கவி பார்ப்பதற்கு பொம்மை மாதிரி இருப்பதால் அப்படி அழைப்பான். சங்கவியியும் அசோக்கின் நினைவு தரும் தாலாட்டில் மெல்ல கண் மூடினாள்.

 

வழக்கம்போல வீட்டில் எழுந்திருக்கும் நேரமான மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்தது. சங்கவி எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு குளிக்கப் போகும்போது தான் நேற்று கிளம்பிய அவசரத்தில் வேறு புடவை எடுத்து வரவில்லை, கட்டிய  புடவையோடு வந்துவிட்டோமே என்பது நினைவுக்கு வந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சங்கவி, அனைவரும் விழித்துவிட்டால் குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது என்று உணர்ந்து உடனே குளித்து முடித்து, ஈர புடவையை கிராமத்தில் கம்மாயில் குளிக்கும் போது எப்படி கட்டிய புடவையை துவைத்து உலர்த்துவாளோ அது மாதிரி ஒரு முனையை பாத்ரூம் ஜன்னல் கம்பியில் கட்டி விட்டு மறு முனையை இடுப்பில் சுற்றிக்கொண்டு புடவையைக்  காய  வைத்துக் கட்டிகொண்டாள் அதற்குள் விடிய ஆரம்பித்தது.

 

மல்லிகாவும் நன்றாக உறங்கி எழுந்தாள்.  சங்கவி  வாளியில் தண்ணீர் வைத்து அவளுடைய உடம்பை துடைத்து எடுத்தாள். "சங்கவி .. டீ  குடிக்கணும்  போல  இருக்கு" என்று மல்லிகா சொன்னாள். "நான் போய் வாங்கி வரேன்"என்று எவர்சில்வர் சொம்பை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள் சங்கவி. அந்த தெரு முனையில் ஒரு டீக்கடை இருந்தது. நிறைய ஆண்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். எப்படி அவர்கள் எதிரில் நின்று கேட்பது என்று தயங்கி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதை பார்த்த டீக்கடைக்காரர்  "த..பாருமா   யாருமா  நீ  ஏன் இங்க  நிற்கற"  என்று குரல் கொடுத்தார்.

" அண்ணா ஒரு டீ வேணும்"என்று தயங்கியபடியே சொன்னாள்.

"எங்க இந்த தெரு முக்குல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கியா "என்று கேட்டுக்கொண்டே டீயை    கொடுத்தார். 1.50 ரூபாய்கொடுத்து டீயை வாங்கி வந்து சங்கவியும், மல்லிகாவும் குடித்தனர்.

 

காலையில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் மல்லிகாவை சோதித்துவிட்டு "பரவாயில்லை முன்னேற்றம் இருக்கு இப்படியே அசையாமல் இருங்க. அதுதான் முக்கியம். அதே நேரம் சத்தான சாப்பாடு சாப்பிடணும்னு" அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். காலை டிபனுக்கு என்ன செய்வது, எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் ஆஸ்பிட்டல் விட்டு வெளியே வந்து நடந்துகொண்டிருந்தாள் சங்கவி.  டீக்கடைக்கு பக்கத்தில் அந்த தெருவிலேயே ஓட்டல்கள் இருந்தன. ஒரு இட்லி 2 ரூபாய் என்று போர்டு வைத்திருந்தார்கள். அந்த ஓட்டலில் ஒரு நாள் சாப்பிட்டாலே கையில் இருக்கும் பணம் எல்லாம் கரைந்து விடும். குறைந்த செலவில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று யார், யாரையோ கேட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். 

 

சில ஆண்கள் சங்கவியை மென்று தின்று விடுவது போல பார்த்தார்கள். அவர்கள் பார்வையே சங்கவிக்கு பயமாக இருந்தது. அவர்கள் பக்கமே திரும்பாமல் வேறு திசையில் நடந்தாள். "எங்காவது வீடுகளில் இட்லி சுட்டு விற்பார்களா? "என்று அங்கு இருப்பவர்களை விசாரித்துக் கொண்டே நடந்து சென்றாள். சங்கவியின் பாட்டி அடிக்கடி சொல்வார், "வழி தெரியாத ஊருக்கு போகும்போது பயப்படாதே வழி வாயில் இருக்கிறது" என்று. கருத்து தெரியாத வயதில் சங்கவி "வாயில் பல் தானே இருக்கும் "என்று கிண்டல் பண்ணுவாள். சங்கவிக்கு  இப்போதுதான் புரிகிறது வாயால் நாம் வழி கேட்டுக்கொண்டே சீமைக்கும் போய் வரலாம்  என்று நினைத்தாள். 

 

சங்கவி இப்படியே கேட்டுக்கொண்டே ஆஸ்பிட்டல் பக்கத்திலுள்ள முடிச்சூர் என்ற ஊருக்கே வந்துவிட்டாள். அங்க முனையில் ரிக்ஷா வண்டியில் சிலர் அமர்ந்திருந்தார்கள். சங்கவி அவர்களிடம் கேட்கலாம்னு அருகில் சென்றாள்.

" வா...மே  எங்க  போவணும், நீ ரிக்ஷாவுல குந்து நான் வளிச்சிகினு போறேன்"னு ரிக்ஷாகாரன் சொன்னான். ஏதோ புரியாத பாஷையில் பேசுறாங்கன்னு சங்கவிக்குப்  பயம் வந்துவிட்டது. என்ன செய்வது?  எங்கே செல்வது?  எப்படி இங்கிருந்து போவது? என்று தவித்தாள். மல்லிகாவிற்கு காலையில் சரியான நேரத்தில் உணவு கொடுத்தாக வேண்டும் என்று  நினைக்கையிலேயே சங்கவிக்கு  கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதைக்  கட்டுப்படுத்திக் கொண்டு "அண்ணா இங்கே எங்கேயாவது வீட்டில் இட்லி கடை இருக்குமான்னு" அப்பாவியாக கேட்டாள். இவள் அண்ணா என்று கேட்டாளே  தவிர , அந்த ரிக்ஷாகாரன் இவளை தங்கை மாதிரி பார்க்கவில்லை. பார்வையில்  வக்கிரம் இருந்தது. அதை புரிந்துகொள்ளும் அனுபவம் சங்கவிக்கு இல்லை. கிராமத்தில் வளர்ந்த பெண். "தங்கச்சி... ரிக்ஷாவுல  குந்து  நான் கூட்டிட்டு போறேன்" என்று  அந்த ரிக்ஷாகாரன் சொன்னான்.  "வேண்டாம்.. அண்ணா நீங்க வழியைச்  சொல்லுங்க நான் போய்க்கிறேன்" என்று சங்கவி மறுத்தாள்.

 

ரிக்ஷாக்காரன் சங்கவியை ரிக்ஷாவில் ஏற்றி செல்வதிலேயே குறியாக இருந்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு கை சங்கவியின் தோளின் மீது விழுந்தது.

 

(சிறகுகள்  படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)