ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #25

05:48 PM May 12, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சொல்லச்சொல்ல அனைவரின் உறைந்த ரத்த நாளங்களும், உலர்ந்த நாக்குகளும் மருத்துவரிடம் விளக்கம் கேட்கத் திராணியற்று நின்றன. செவிகள் மட்டும் தன் வேலையைச் செவ்வனே செய்தது. மருத்துவர் சொன்னதின் சாராம்சம் என்னவெனில் மல்லிகாவின் கர்ப்பப்பை பலவீனமாக உள்ளதால் கருவைச் சுமக்கும் சக்தி அந்த கருப்பைக்குக் குறைவாக உள்ளது. கீழே விழுந்ததில் கருக் கலைந்து போகும் நிலையில் உள்ளது. அதனால் கருவுக்கு அதிக அதிர்ச்சி தராமல் கவனித்துக் கொள்ள வேண்டும். மல்லிகா படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது இயற்கை கழிவுகளைக் கூட படுக்கையிலிருந்தபடியே தான் நீக்கவேண்டும். கட்டிலிலிருந்து கால் தரையில் படக் கூடாது. பிறந்த குழந்தை போல மல்லிகா படுத்துக் கொண்டே இருந்தால் அவளுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று சொன்ன புண்ணியவதி கூடவே ஒரு வெடியையும் கொளுத்திப் போட்டார். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் கூறுகிறேனே தவிர அப்படி தான் பிறக்கும் என்று உறுதியாகக் கூறவில்லை என்று மருத்துவர்களின் பழியைக்கழித்துக் கொண்டார்கள். மருத்துவர் சொன்னதும் வெடித்துச் சிதறிய பாறைத் துண்டுகளாக அனைவரின் மனமும் எண்ணங்களால் சிதறியது.

"பத்து நாளாவது மல்லிகா இங்கு தங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் கருக் கலையாமல் நிலைக்குமா என்று உறுதியாகக் கூற முடியும். அதற்கான செலவு, தங்குவதற்கான இடவசதி அனைத்தையும் யோசித்து உங்க முடிவை சொல்லுங்க. சீக்கிரம் முடிவு சொல்லுங்க அப்பதான் உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்." என்று சர்வசாதாரணமாகச் சொன்னார் மருத்துவர். அவர்களைப் பொறுத்தவரை மல்லிகா ஒரு நோயாளி. இது மாதிரி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கேஸ் வந்து போகிறது. யோசித்துப் பார்த்தால் மருத்துவர்கள் வாழ்க்கை ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாகத் தான் இருக்கிறது. ரத்தமும் சதையும் உள்ள ஒரு உயிருள்ள பொம்மையாகத் தான் நோயாளியை மருத்துவர்கள் நினைக்க முடிகிறது. பொம்மையைப் பிரித்துப் போட்டு இணைப்பது போல நோயாளியைச் சோதிக்கிறார்கள்.

இங்கே உணர்வுகள் மரணித்து விடுகின்றன. அவர்களுக்கு ஆண் பெண் பேதம் தெரிவதில்லை, வயது வித்தியாசம் தெரிவதில்லை, ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் என்ற பேதமும் இல்லாத தன்னலமற்ற ஒரு சேவை. ஒரு நொடி பிறப்பையும் மறு நொடி இறப்பையும் பார்க்கும்போது பிறப்பதற்கும் இறப்பதற்கும் வருந்துவார்களா? அவர்களின் உணர்வு நரம்புகள் மூளைக்குச் செல்லாமல் துண்டிக்கப்பட்டு விடுமோ? என்று நினைக்கக் கூடும். ஆனால் பிறப்பையும் இறப்பையும் பார்த்துப் பார்த்து மரத்துப்போன உணர்வுகளால், பிறப்பின் சிரிப்பொலியும் இறப்பின் அழுகை ஒலியும் மருத்துவரின் காதுகளில் விழுவதில்லை. மருத்துவர்களுக்கு ஒரே உணர்வு மட்டும் தான். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களின் உயிர்மூச்சு. அந்த உயிரானது யாருமற்ற அனாதையோ, அம்பானியோ அவர்களைப் பொறுத்தவரை உன்னதமானது. உயிர், அதைத் துடிக்க வைப்பது அவர்களின் சேவை.

மக்களின் கண்களுக்கு மருத்துவர்களின் வசதியான வாழ்க்கை மட்டும் தான் தெரிகிறது. அவர்களின் இழப்புகள் தெரிவதில்லை. குடும்பத்துடன் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு மகிழ்வையும், துக்கத்தையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மருத்துவர்களால் சாதாரணவர்கள் போல நிம்மதியாக உறங்க முடியுமா? உயிரைக் காப்பாற்றும் போது "சந்ததிகள் செழிக்கச் சந்தோசமாக வாழ்க "என்று ஆசீர்வாதம் செய்கிறார்கள். அடுத்த நொடியே உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனும் போது அவர்களின் சாபத்தைப் பெறுகிறார்கள். மருத்துவர்களுக்கு உணர்வுகள் இருந்தால் இரண்டிற்கும் மகிழ்வும் வருத்தமும் வந்திருக்கும். அதனால் தான் உணர்வுகள் மரணித்துப் பயணிக்கிறார்கள்.

ஆண் பெண் பேதம் சொல்லும் உணர்வுகள் அவர்களுக்கு இருப்பதில்லை. உணர்ச்சிகளற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். மருத்துவர்களின் மெழுகுவர்த்தி வாழ்க்கையில் அவர்களை உருக்கிக் கொண்டு உயிர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களின் வார்த்தையை மீற முடியாமல் தங்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவும் இயலாமல் தயங்கிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தனர்.

"என்னமா செய்வது" என்று ஓட்டிற்குள் மறைந்த நத்தை போல சகலமும் ஒடுங்கி கேட்டான் மணி.

மணியின் கண்கள் அசோக்கையும் சங்கவியையும் பார்த்தது .அந்த பார்வை எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்று என்று கெஞ்சுவது போல இருந்தது.

" மனசை கல்லு மாதிரி வச்சுகிட்டு கருவைக் கலைத்து விட வேண்டியது தான்" என்று தங்கம் தயங்கிக் கொண்டே சொன்னாள்.

"அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம்" என்று சீறினான் அசோக்.

"மல்லிகாவை இங்கேயே வைத்து வைத்தியம் பார்க்கலாம்னு சொல்றியா" என்று குரல் உயர்த்தி கேட்டாள் தங்கம்.

" வேற வழி இல்லை மா, மணியும், மல்லிகாவும் பாவம் மா, உங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தா கருவைக் காப்பாற்ற போராடிதானே இருப்பீங்க" என்று அம்மாவிடம் மன்றாடினான் அசோக். "பணத்துக்கு என்ன பண்ணுவ "என்று தங்கம் அக்கறையுடன் கேட்டாள்.

" சங்கவியின் நகை வித்த பணம் இப்ப கொஞ்சம் கையில் இருக்கு. அதை வைத்து சமாளிச்சுக்கலாம். ஊருக்குப் போனதும் நெல்லை வித்து ஏதாவது ரெடி பண்ணலாம்" என்று தைரியம் சொன்னான் அசோக்.

"மல்லிகா கூட யார் இருக்கிறது "என்று அடுத்த பிரச்சனையைக் கிளப்பினாள் தங்கம். "நீங்கதான் பெரியவங்க நீங்க தான் கிட்ட இருந்து பார்த்துக்கணும்" என்று அசோக் சொன்னான்.

" அங்கே அப்பா தனியாகத் தவித்துக் கொண்டிருப்பார். வயல் வேலையெல்லாம் அப்படியே கிடக்குது, அதெல்லாம் பார்க்கணும் ஆம்பள பசங்க நீங்க மட்டும் என்ன பண்ணுவீங்க. நான் அப்பாவை பார்த்துக்கிறேன்" என்று தங்கம் சொன்னாள்.

"அம்மா சங்கவி சின்ன பொண்ணு அவளுக்கு என்னமா தெரியும்?" என்று தயங்கினான் அசோக்.

"சங்கவி படிச்சவ. டாக்டர் கிட்ட நல்லா பேசுவா நான் படிக்காதவ " என்று தன் நிலையைச் சொன்னாள் தங்கம். அம்மா சொல்றதில் நியாயம் இருப்பதை உணர்ந்தான் அசோக். ஆனால் மனைவி என்று வரும்போது தனியாக விடுவதற்கு பயந்தான் அசோக்.

"சங்கவி என் கூடவே இருக்கட்டுமே" என்று மல்லிகாவும் சொன்னாள். வேறு வழியில்லாமல் சங்கவி அங்கே இருப்பதற்கு ஒத்துக்கொண்டான் அசோக்.

மருத்துவரைப் பார்த்து மீண்டும் தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி மல்லிகாவை மருத்துவர் லீலாவிடம் ஒப்படைத்தனர். மல்லிகாவிற்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் சங்கவியும் தங்கிக் கொள்ளலாம். சங்கவி மல்லிகாவின் இயற்கை கழிவுகளை பெட்பேன் வைத்து எடுத்து அவளைச் சுத்தப்படுத்தினாள். அந்த மருத்துவமனையில் தங்குவதற்கும் மருத்துவச் செலவிற்கும் ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவாகும் என்று டாக்டர் எல்லா விவரங்களையும் சொன்னார். கையிலிருந்த பணத்தை சங்கவியிடம் கொடுத்து பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அசோக் ,மணி, தங்கம் மூவரும் கிராமத்திற்குச் சென்றார்கள். சென்னையில் சங்கவி மட்டும் மல்லிகாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னை சங்கவி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையுமா? இல்லை பிரச்சனையாக அமையுமா? காலத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறாள் சங்கவி.

(சிறகுகள் படபடக்கும்)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT