Advertisment

'ஹார்மோன் ஊசி போட்டாத்தான் உன் பையன் வளருவான்' விதி கொடுத்த சவால்... வென்று வந்த மெஸ்ஸி - வென்றோர் சொல் #26

Lionel Messi

Advertisment

களத்தில் 22 வீரர்கள் இருந்தாலும் அந்த ஒரு வீரர் அடிக்கின்ற 'கோல்'-ஐ காண்பதற்கு மட்டும் அனைவரும் கூடுதல் ஆவலுடன் காத்திருப்பார்கள். தட்டுவதற்கு ரசிகர்களின் கைகள் தயாராக இருக்கும். மைதானம் அதிரக் கூச்சல் போடுமளவுக்குத் திரண்டு வந்த ஓசை, தொண்டைக் குழியிலிருந்து பாய்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு இருக்கும். அதைவிடுத்து, பல கோடிக்கணக்கான ரசிகர்கள் தனது உடலில் இருந்து அரை இன்ச் தலை முன் நகர்ந்து இருப்பதை அறியாமல் தொலைக்காட்சி முன் அமர்ந்து, கொண்டாடத் தயாராக இருப்பார்கள். அவ்வீரரின் கால் கட்டுப்பாட்டில் இருந்த பந்து, கோல் கம்பிக்குள் நுழைந்ததும் மேலே குறிப்பிட்ட அனைத்தும் நடக்கும். இது எதையும் பொருட்படுத்தாத அவ்வீரர், தனது இரு கைகளை உயர்த்தி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். இறந்து போன தனது பாட்டி, தான் அடித்த 'கோல்'-ஐ கண்டு மகிழ்ச்சியடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்தபின்னரே மைதானத்தில் தனது கொண்டாட்டத்தை ஆரம்பிப்பார். ஆம், கால்பந்து உலகு கண்ட மகத்தான ஆளுமைகளில் முதன்மையானவரான மெஸ்ஸியேஅவ்வீரர் ஆவார்.

அர்ஜெண்டினா நாட்டில் கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் லியோனல் மெஸ்ஸி. அவரது தந்தைக்கு கால்பந்தாட்டத்தின் மீது இருந்த அதீத காதலால், அவர்கள் வீட்டருகே இருந்த ஒரு கிளப் அணியில் பகுதிநேரப்பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். அவரது தந்தைக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த குடும்பமுமே கால்பந்தாட்டத்தின் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்டிருந்ததால், மெஸ்ஸிக்கு கால்பந்து உலகு எளிதாக அறிமுகமானது. 4 வயதாக இருக்கும் போதே தனது தந்தை பயிற்சியளிக்கும் 'கிராண்டோலி' கிளப்பில் இணைந்து விளையாட ஆரம்பிக்கிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு, 8 வயதில் 'நியூவெல் ஓல்ட் பாய்ஸ்' கிளப் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. தான் வசித்து வந்த பகுதிகளில் பிரபலமான வீரராக வலம் வந்து கொண்டிருந்த மெஸ்ஸிக்கு, 11 வயதாக இருக்கும் போது வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு உடல் வளர்ச்சி நின்று போகிறது.

இதனையடுத்து, மாதம் ஒன்றுக்கு ஆயிரம் டாலர் வரை செலவாகும் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். இல்லையென்றால், உடல் உயரம் இத்தோடு நின்று விடும் என மருத்துவர்கள் கூற, மெஸ்ஸியின் தந்தையோ அதிர்ந்து போகிறார். தன் மகனுக்குள் இருக்கும் அதீத திறமை மற்றும் ஆர்வம் காரணமாக மருத்துவ உதவி தேட முடிவுசெய்கிறார். அர்ஜெண்டினா நாட்டில் இருந்த அனைத்து கால்பந்தாட்ட கிளப் வாசல்களிலும் ஏறி இறங்குகிறார். மெஸ்ஸி மாதிரியான ஒரு வீரரரை தங்கள் கிளப்பிற்காக எடுத்துக்கொள்ள அனைவரும் விரும்பினாலும், மலைக்கவைக்கும் அளவிலான சிகிச்சைக்கான தொகை அவர்களை யோசிக்க வைத்தது. விஷயம் அறிந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட கிளப்பான பார்சிலோனா கிளப், 'அர்ஜெண்டினா நாட்டை விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு வரவேண்டும்' என்ற நிபந்தனையுடன் மெஸ்ஸிக்கான சிகிச்சை செலவை ஏற்க சம்மதம் தெரிவித்தது. தனது கனவிற்காகத் தாய்நாட்டை விட்டு 13 வயதில் முதல்முறையாக ஸ்பெயின் நாட்டிற்கு விரைகிறார் மெஸ்ஸி. அதன்பின், கால்பந்து வரலாறு மெஸ்ஸியின் காலடியில் பணிந்தது உலகம் அறிந்ததே.

Advertisment

Lionel Messi

"நான் முதலில்'கிராண்டோலி' கிளப்பிற்காக விளையாடினேன். பின்னர் 'நியூவெல் ஓல்ட் பாய்ஸ்' கிளப்பிற்காக விளையாடி வந்தேன். பின்னர் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டது. நான் விளையாடி வந்த அணியில் இருந்து போதிய அளவிலான உதவி கிடைக்கவில்லை. என் தந்தை தனக்குத் தெரிந்தவர் மூலமாக ஸ்பெயின் நாட்டில் முயற்சித்தார். பின் அவர்கள் என்னைச் சோதனை செய்தார்கள். மொத்தம் 15 நாட்கள் அச்சோதனை நடைபெற்றது. அதன்பிறகு, அவர்கள் கிளப்பில் சேர்த்துக் கொண்டதோடு, எனக்கான சிகிச்சை செலவையும் ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் அணியிலேயே நான்தான் மிகவும் குள்ளமாக இருப்பேன். எனது குறையை மறைக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன். மற்றவர்களை விட அதிகப்படியான நேரம் பயிற்சியில் ஈடுபட்டேன். காலை முழுவதும் கையில் கால்பந்துடன் இருக்கும் நான், இரவானால் ஹார்மோன் ஊசிகளுடன்தான் இருப்பேன். என்னுடைய ஹார்மோன்கள் தூண்டப்பட்டு சரியான வளர்ச்சியை எட்டுவது வரை இது தொடர்ந்தது. பின்னர் இளைய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பிரதான அணியில் இடம் கிடைத்தது"

இதுவரை மெஸ்ஸி அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 600-க்கும் மேலாகும். கால்பந்தாட்ட உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் தங்கப்பந்து விருதை 6 முறையும், தங்கக் காலணி விருதை 6 முறையும் வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மெஸ்ஸி மேடைகளிலோ அல்லது ஊடகங்களிலோ பேசுவது என்பது மிக அரிதானது. அவரது வெற்றியின் ரகசியம் குறித்துக் கேட்டபோது, என்னுடைய 'தனித்தன்மைதான்' என்ற பெரிய உண்மையை எளிமையாகக் கூறினார். மேலும், ஆரம்பக்காலங்களில் பார்சிலோனா அணியின் மேனேஜரோடு தனக்கு நடந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். அதில், "நான் விளையாடும் முறையில் அவர் என்னிடம் மாற்றுக்கருத்து கூறிக்கொண்டே இருப்பார். பந்தை வேகமாகக் கடத்த வேண்டும், இந்த முறை கூடாது என்பார். அந்த நேரத்தில் நான் சரியென்று கேட்டுக்கொள்வேன். ஆனால், மைதானத்தில் எனது பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதனால், அவர் அணியில் இருந்த காலம் வரை எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதும் எனது பாணியை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை". ஒருவேளை மெஸ்ஸி தனது பாணியை அன்று மாற்றியிருந்தால்?

ad

பொதுவாக வெற்றிகள் வந்து உயரத்துக்குச் செல்லும் போது, பழையவற்றை மறக்கக் கூடாது என்பது பலராலும் முன்வைக்கப்படும் அறிவுரை. இதை இன்றளவும் மெஸ்ஸி தனது வாழ்வில் கடைப்பிடிப்பது மேன்மைக்குரியதே. ஆரம்பக் காலங்களில் தெருவில் விளையாடும்போது, தன்னை ஊக்கப்படுத்திய மற்றும் தனக்கான முழு ஆதரவாக இருந்த தனது பாட்டிக்காக, இன்று தான் அடிக்கும் ஒவ்வொரு 'கோல்'-ஐயும் அர்ப்பணிக்கிறார் என்றால் இது மேன்மையான குணம்தானே?

மெஸ்ஸியிடம் நாம் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய இருந்தாலும், இந்த மேன்மைக் குணம் அதில் முதன்மையானது. கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

vendror sol motivational story
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe