Advertisment

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

auto sankar 21

"இப்ப ரவி எங்கே?''

"எனக்கு கடுப்பாப் பூடுச்சு! கத்தியாலே சதக் சதக்னு ரெண்டு குத்து! ஆள் அவுட்''

குடல் உடம்புக்கு வெளியே சரிந்துகிடக்க பரிதாபமாய் செத்துப் போயிருந்தான் ரவி. பிணத்தை எரிக்கலாம் என்றால் மறுநாள் பாரத் பந்த் (இலங்கைத் தமிழருக்காக). வழி எங்கும் போலீஸ் மயம்! காரை மடக்கி செக் செய்வார்களே என்று பயம். விபச்சாரப் பெண்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புற பாத்ரூம் ஓரத்தில் ஆழக் குழிதோண்டி அம்மணமாக புதைத்தார்கள். நடமாட முடியாத நிலைமையில் இருந்ததால் சங்கர் மேற்பார்வை மட்டும்!

பின்னால் போலீஸ் புகாரில் ரவியின் கழுத்தை மோகன் இறுக்கினதாகவும், பாபு ரவி நெஞ்சில் ஏறி அமர, ரவியின் வயிற்றில் எனது வலது காலால் எட்டி உதைத்தேன் என்றும் ஜோடிக்கப்பட்டது.

வலதுகால் உடைந்து பேண்டேஜ் சுற்றிக் கொண்டிருந்தவர் நடமாடுவதே ஏதோ, அடுத்தவர் ஒத்தாசையில்! எட்டி உதைப்பது எங்ஙனம் சாத்தியம்? துடித்துப்போன நான் அந்த சமயத்தில் சிகிச்சை பெற்றதை கோர்ட்டில் சொல்ல வரும்படி டாக்டரிடம் கெஞ்சினேன். ஆனால் டாக்டர் சந்திரன் வரமறுத்தார். பயப்படாதே! பயப்படாதே! என்று திரும்பத் திரும்ப தன் பேஷண்டுக்கு சொல்லிவிட்டு அவர் பயந்து நடுங்கினார்.

நான் பங்கு பெறாத அந்தக் கொலையும் என்னை கொல்வதில் பங்குபெறப் போகிறது!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்போது எனக்கு சகட யோகம்! பின்னால் சங்கடம் மட்டுமே யோகமாக வரப்போகிறது என்று கண்டேனா? ஆடித்தீர்த்தேன்! பக்கபலமாகப் பெண் எம்.எல்.ஏ. ரத்தத்தின் ரத்தமாக இருந்தது பேரதிர்ஷ்டமாகப் போயிற்று. சாராயம், தோராயமாக திருவான்மியூரை நாறடித்தது என்றால், மிச்சம் மீதி இருந்த பரிசுத்தத்தை விபச்சாரம் வேரோடு களைந்து எடுத்தது. இந்த ரெண்டு வழிகளில் ஏரியா எக்கச்சக்கமாகக் கெட்டது போதாதென்று மேலும் கொஞ்சம் கெடுப்பதற்காகவே முளைத்ததோ அந்த வீடியோ'கேம்ஸ்' கடை!?

Advertisment

auto sankar lady 21

அந்த (சாக்)கடை நான் துவங்கினது அல்ல. ஒரு பெண்மணி! கௌரவமான பெண்மணி. அவரை ஜனங்களுக்கு அதிகமாகத் தெரியாது. அவர் கணவரை? மிஸ்டர் மில்க் அவர்! போலீசில் ரொம்ப மற்றும் ரொம்ப உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். இப்போதும்தான்! கணவரது பேச்சுக்கு எதிராய் ஒரு வீடியோ கேம்ஸ் கடையை அந்த அம்மையாரே நடத்தினார்!

திருவான்மியூரில் வயசுக்கு வந்த ஆடவர்களில் அநேகம் பேர், ஒன்று அந்த வீடியோ கேம்ஸில் இருந்தனர். அல்லது எனது வீ.டி. கேம்ஸில்! பூட்சுக்குள் சிக்கின மண் துகள் மாதிரி என்னை அந்த வீடியோ கடை உறுத்திக் கொண்டே இருந்தது. கடை கூட அல்ல. அந்த முதலாளி பெண்மணியும்தான்.

எப்படியாவது அந்த அம்மையாரின் நட்பு கிடைத்தால் தேவலையே என எல்லா எண்ணங்களிலும் விரும்பினேன். என்னதான் சாராயத்திலும், விபச்சாரத்திலும் லாபம் எக்குத்தப்பாகவும், தப்புப் தப்பாகவும் குவிந்து கொண்டிருந்தது என்றாலும், வெளியே யாராவது கேட்டால் கௌரவமாக சொல்லிக் கொள்ளமுடியாத தொழிலாக இருக்கிறதே என்ற சங்கடம் எப்போதும் உண்டு. எப்படியாவது செல்வாக்கு பெற்று ஒரு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என்று மனசு துடித்தது. என்றைக்காவது ஒரு நாள், சட்டமன்றத்துக்குள் நுழைந்தே தீருவேன் என்று மற்றவர்களிடம் அடிக்கடி மந்திரம் ஜபித்தேன்!

Advertisment

bookstore ad

தேர்தலுக்குள் நுழையுமுன் அரசியல் மட்டத்திலும் அதிகார மட்டத்திலும் சகலரின் சிநேகமும் சம்பாதிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது. அந்த நட்புக்காக உ.பொ.ஆ. அர்ப்பணிக்கவும் தயாராக இருந்தேன். நீக்கப்பட்ட தெலுங்கு தேச கட்சியின் பெண் எம்.பி. ஒருவரது பெயரை, தன் பெயரின் முன்பகுதியாகக் கொண்டவர் அந்த அம்மையார்.

பெயரின் பின் பாதியில் தேவி உண்டு! அதென்னவோ எனக்கும் தேவி என்ற பெயருக்கும் அவ்வளவு ராசி; அப்புறமாய் அதைப் பார்ப்போம். முதலில் அந்த அம்மையார்! படகு சைஸ் காரில் அவர்கள் இறங்கி வருகிற தோரணையும், சரக போலீஸ்காரர்கள் காண்பிக்கிற பயபக்தியும் பார்த்துப் பார்த்து ஆவல் பொங்கிற்று எனக்கு.

அந்த அம்மையார் சிநேகம் பெற வேண்டுமே, எப்படி? இந்த "எப்படி' என்ற வார்த்தை மாம்பழத்து வண்டாக மனசைக் குடைந்தது. தம்பி மோகன் சொன்னான் "அண்ணா...! நமக்குதான் அந்த பெண் எம்.எல்.ஏ. செல்வாக்கு இருக்குதே...! போட்டிக்கு நாமும் ஒரு கடை போடுவோம்... இவங்க கடையை ஆளுங்களை வச்சு அடிச்சு நொறுக்குவோம்!''

"சேச்சே...''

"எனக்குத் தேவை அவங்களோட கடை இல்லை... அவங்கதான்!''

அப்புறம் ஒரு நாள், பதட்டத்துடன் ஓடிவந்தான் மோகன்... ஓடிவந்ததில் மூச்சு வாங்கினது. கண், காது, மூக்கு என எல்லாவற்றிலும் காற்றை வெளியே விடுவான் போலிருந்தது.

"அண்ணே... விஷயம் தெரியுமா? அந்த வீடியோ கடையிலே யாரோ நாலைஞ்சு பேர் புகுந்து அடிச்சு நொறுக்கறாங்களாம்!''

சட்டென சுறுசுறுப்பு என்னுள் சவாரி செய்தது.

"சீக்கிரம் வண்டி எடு''

அடுத்த பகுதி:

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22

முந்தைய பகுதி:

ஆஸ்பத்திரியில் ஆட்டோ சங்கர்! - ஆட்டோ சங்கர் #20

serialkiller crime autosankarinmaranavaakumoolam auto shankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe