மனைவியிடம் நெருக்கமின்மை; ஆண் நண்பரோடு தனிமையில் கணவர் - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 08

Lady Detective Yasmin  Case Explanation  08

தன்பாலின ஈர்ப்பாளர் பற்றியும் அவரை மையமிட்டு நடந்த துப்பறிந்த வழக்கு ஒன்றை கையாண்டது பற்றியும் நம்மிடம் துப்பறிவாளர் யாஸ்மின் விவரிக்கிறார்.

தன்பாலின ஈர்ப்பு என்பதும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் நம்முடைய சமுதாயத்தில் அது பலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இப்போது காலம் மாறி வருகிறது. ஆண்கள், பெண்கள் என்று இருபாலருக்கும் இதுபோன்ற உறவுகள் இருக்கும். ஒரு பெண் எங்களிடம் புகார் கொடுக்க வந்தார். தன்னுடைய கணவர் தன் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்றும், தன்னை நன்றாக கவனித்துக்கொள்வார் என்றும், ஆனால் உடலுறவில் அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறது என்றும் கூறினார். வேறு யாருடனோ தன் கணவருக்குத் தொடர்பிருக்க வாய்ப்புண்டு என்று அவர் நினைத்தார்.

தன் கணவரின் மீது சந்தேகம் இருப்பதால் நாங்கள் விசாரிக்க வேண்டும் என்றார். அவருடைய கணவர் தினமும் காலையில் காய்கறி மண்டிக்கு சென்றார். வாரம் ஒருமுறை அவர்களுடைய தோட்டத்துக்குச் சென்றார். அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் இருந்தது. அவர்களுடைய தோட்டத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவருடன் மட்டும் நெருக்கமாக இருந்தார். தோட்டத்துக்கு செல்லும் நேரங்களில் மட்டும் வீட்டுக்கு வராமல் இருந்தார். தோட்டத்தில் அடிக்கடி இரவில் தங்க ஆரம்பித்தார். ஒரு பெண்ணிடம் பேசுவது போலவே அந்த நண்பரிடமும் பேசினார். இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாய் தனிமையில் இணைந்து இருப்பது தெரிந்தது.

உண்மையை அவருடைய மனைவியிடம் நாங்கள் சொல்லிவிட்டோம். எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் முடிந்தவரை எங்களுடைய ரிப்போர்ட் இருக்கும். அவருடைய கணவர் இதை துரோகம் என்று நினைத்து செய்யவில்லை என்றாலும் ஒரு வகையில் அது துரோகம் தான். உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் இறுதி வரை துணையாக இருப்பது தான் மனிதர்களுக்கான தேவை. அது சிலருக்கு தன்பாலின ஈர்ப்பின் மூலமும் அந்த துணையின் மூலமும் நடக்கிறது. இந்த வழக்கில் நாம் பார்த்த ஆணைபோன்றவர்கள், திருமணம் செய்த பெண்ணுக்கு இதைத் தெரியப்படுத்தாமல் ஏமாற்றுவதை விட அந்த பெண்ணை திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது சரியான முடிவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்
Subscribe