Skip to main content

தென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா -கொரியாவின் கதை #19

koreavin kathai

 
 

வடகொரியாவை சர்வாதிகார நாடு, கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், தென்கொரியா உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 1997 ஆம் ஆண்டுவரை தென்கொரியா பல சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்திருக்கிறது.

 

வடகொரியாவில் கிம் இல்-சுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி, அவருடைய மகன் மற்றும் பேரன் வரை தொடர்கிறது என்பார்கள். ஆட்சி அதிகாரத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த முக்கிய தலைவர்கள் சிலரை கொன்றார்கள் என்று குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், பொதுமக்களை கொன்றதாக இதுவரை குற்றச்சாட்டு இல்லை. ஆனால், தென்கொரியாவில் 1945 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டுவரை கம்யூனிஸ்ட்டுகள் என்றும், வடகொரியாவுடன் இணைவதற்காக போராட்டம் நடத்தியவர்கள் என்றும், ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் என்றும் 6 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைவிட, பிச்சை எடுத்தவர்களும், சாலையோரத்தில் வசித்த வீடற்றவர்களுமான அப்பாவிகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட துயரமெல்லாம் நடந்தது.

 

ஒருவழியாக, 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் கிம் டாயே-ஜங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளுங்கட்சி சார்பில் லீ ஹோய்-சாங் போட்டியிட்டார். அந்தச் சமயத்தில் புதிய தாராளமயம், உலகமயக் கொள்கைகளால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தது. பொருளாதாரத்தை சீரமைக்க லீ ஹோய்-சாங் சரியான ஆள். அவர் அதிகமாக படித்தவர் என்ற பிரச்சராம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கிம் டாயே-ஜங் முந்தைய சர்வாதிகார ஆட்சியாளர்களால் மரணதண்டனை என்றும் ஆயுள் தண்டனை என்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடியவர். அதன்காரணமாகவே அவர் மீது மக்களுக்கு அனுதாபம் இருந்தது. அந்த அனுதாபத்தில் 40.3 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

 

koreavin kathai


 

அவருடைய வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில்தான், முன்னாள் சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வானுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போகிறவர் என்ற அடிப்படையில் அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கிம் டாயே-ஜங் கேட்டுக்கொண்டார்.

 

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி தென்கொரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கிம் டாயே-ஜங் தென்கொரியாவை முழுமையான ஜனநாயக நாடாக அறிவித்தார். அத்துடன், பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தினார்.

 

தென்கொரியாவின் முதல் ஜனாதிபதியை விரட்டிவிட்டு பொறுப்பேற்ற பார்க் சுங்-ஹீ, சுன் டூ-ஹ்வான், ரோஹ் டாயே-வூ, கிம் யங்-சாம் ஆகிய நான்கு அதிபர்கள் தென்கொரியாவின் ஜியோங்ஸாங் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காலத்தில் தங்கள் பகுதியை வளமாக்கியிருந்தார்கள். அந்தப் பகுதிக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். கிம் டாயே-ஜங் ஜியொல்லா பிரதேசத்தைச் சேர்ந்தவர். சோல்லா என்ற மாகணத்தைச் சேர்ந்த இவர்தனது பகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

 

koreavin kathai


 

1954 ஆம் ஆண்டு தென்கொரியாவின் முதல் ஜனாதிபதி சிங்மேன் ரீ காலத்தில் இவர் அரசியலுக்கு வந்தார். 1961 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதே ஆண்டு பார்க் சுங்-ஹீ நடத்திய ராணுவக் கலகத்தால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதற்கப்புறமும் 1963 மற்றும் 1967 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். 1971 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சியால் பல தடைகள் போடப்பட்டும் எல்லாவற்றையும் மீறி வெற்றிக்கு அருகில் சென்றார்.

 

மிகச்சிறந்த பேச்சாளரான கிம் டாயே-ஜங் தனது ஆதரவாளர்கள் மீது அபாரமான செல்வாக்கு செலுத்தினார். தனது சொந்த பிரதேசமான ஜியோல்லாவில் பதிவான வாக்குகளில் 95 சதவீதம் வாக்குளை இவர் பெற்றார். அந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்க முடியவில்லை.

 

இப்படிப்பட்ட அரசியல் எதிரியை சர்வாதிகார ஆட்சியாளர்கள் விட்டுவைப்பார்களா? 1973 ஆம் ஆண்டு டோக்கியோ சென்றிருந்த இவரை கொரியா உளவுத்துறையினர் கடத்தினார்கள். சர்வாதிகாரி பார்க் உத்தரவின்பேரில் அவர் கடத்தப்பட்ட செய்தி வெளியானவுடன் ஒரு படகில் வாயில் துணியை அடைத்து, கண்களையும் கைகால்களையும் கட்டி தூக்கிப் போட்டுவிட்டு போனார்கள். இவரைத் தேடிவந்த விமானங்கள் ஒருவழியாக கண்டுபிடித்து காப்பாற்றின.

 

koreavin kathai


 

1976 ஆம் ஆண்டு இவர் அரசியலில் தடைசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அந்தத் தண்டனை வீட்டுச் சிறையாக மாற்றப்பட்டது. 1979 ஆம் ஆண்டு சர்வாதிகாரி பார்க் கொல்லப்பட்டபிறகு கிம் டாயே-ஜங் தனது அரசியல் உரிமைகளை திரும்பப் பெற்றார்.

 

ஆனால், 1980 ஆம் ஆண்டு மீண்டும் இவர் கைதுசெய்யப்பட்டு தேசத்துரோக குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டார். சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் ஆட்சியில் நடந்த க்வாங்ஜு புரட்சிக்கு காரணமானவர் என்று கூறி இவருக்கு மரணதண்டனை விதித்தனர். ஆனால், இவருக்கு மன்னிப்பு வழங்கும்படி போப் இரண்டாம் ஜான்பால் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவும் கோரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து அவருடைய மரணதண்டனை 20 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.

 

பின்னர் அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு பாஸ்டனில் தங்கியிருக்கும்படி உத்தரவிடப்பட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை தொடர்பான பாடத்தை எடுத்தார். தென்கொரியா அரசு குறித்து மிக கூர்மையான விமர்சனக் கட்டுரைகளை மேற்கத்திய செய்தித்தாள்களில் எழுதினார். அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பாக இவர் நிகழ்த்திய உரைக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு தென்கொரியா திரும்பினார்.

 

சியோல் வந்ததும் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இருந்தாலும், 1987 ஆம் ஆண்டு நடந்த முதல் நேர்மையான தேர்தலில் போட்டியிட இவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், இவருடைய கட்சி இரண்டாக உடைந்தது. புதிய கட்சியை தொடங்கிய இவர் 27 சதவீத வாக்குகளுடன் தோற்றார். அடுத்து 1992 ஆம் ஆண்டு தேர்தலிலும் தோற்றார். அதைத்தொடர்ந்து பிரிட்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் புரபஸராக பணியாற்றினார்.

 

koreavin kathai


 

1997 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பங்கேற்ற கிம் டாயே-ஜங் வெற்றிபெற்று தென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா என்ற பெயரை பெற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த தென்கொரியாவின் பொருளாதாரத்தை சர்வதேச நிதியத்தின் பரிந்துரைகளை ஏற்று மறுகட்டுமானம் செய்தார். 1998 ஆம் ஆண்டு 5.8 புள்ளிகளாக சரிந்த பொருளாதாரம் 1999 ஆம் ஆண்டு 10.2 சதவீதமாக உயர்ந்தது. இது அவரை உலகளாவிய புகழைப் பெற்றுக் கொடுத்தது.

 

வடகொரியா குறித்த பார்வையை மேம்படுத்தியது இவர்தான். 2000மாவது ஆண்டில் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங்-இல்ஐ சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இரண்டு கொரியாக்களும் நேரடித் தொடர்புகளை தொடங்கின. 2000மாவது ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி இந்த அமைதி முயற்சியை பாராட்டி இவருக்கு நோபல் விருது வழங்கப்பட்டது.

 

ஆனால், இந்த சந்திப்புக்காக பலகோடி டாலர்கள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டதாகவும், தென்கொரியாவில் இருந்த வடகொரியா கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு வெளியானது. இந்த காரியங்களில் ஈடுபட்டதாக தென்கொரியா ராணுவதளபதி பார்க் ஜி-வொன் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

 

முன்னாள் சர்வாதிகாரியான சுன் டூ-ஹ்வானால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் கிம் டாயே-ஜங். இவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் எப்படி நிர்வாகத்தை நடத்தப்போகிறார் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்த கிம் யங்-சாம், சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வானுக்கும், அவருக்கு அடுத்து ஜனாதிபதியான ரோ டாயே-வூவுக்கும் மரணதண்டனை விதித்தார். இவர் பொறுப்பேற்றதும் அவர்களுடைய தண்டனையை ரத்துசெய்து மன்னிப்பு வழங்கினார். இவருடைய காலத்தில் ஜப்பானுடன் இணைந்து 2002 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தினார். க்வாங்ஜு நகரில் கிம் டாயே-ஜங் பெயரில் ஒரு மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

 

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இவருடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் மரணமடைந்தார். தென்கொரியா வரலாற்றில் இரண்டாவதாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி இவர்தான். இவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக வடகொரியா அரசு ஒரு குழுவை அனுப்பியிருந்தது. அமெரிக்கா வரலாற்றில், அமெரிக்க அரசு நட்புடன் இருந்த ஒரே இடதுசாரி ஜனாதிபதி கிம் டாயே-ஜங் என்று விக்கிலீக்ஸ் சமீபத்தில் கூறியிருந்தது.

 

இவர் மரணமடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்தான் 9 ஆவது ஜனாதிபதியான ரோஹ் மூ-ஹ்யுன் தற்கொலை செய்துகொண்டார். அதைப்பற்றி அடுத்து பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

அடுத்த பகுதி:

மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்த தென்கொரிய ஜனாதிபதி! கொரியாவின் கதை #20

 

முந்தைய பகுதி:

மக்களை கொன்று குவித்த தென்கொரியா சர்வாதிகாரியின் இறுதிக் காலம்! கொரியாவின் கதை #18


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்