Skip to main content

உலகின் மூன்றாவது பெரிய ராணுவம்! கொரியாவின் கதை #27

Published on 10/01/2019 | Edited on 29/01/2019

 

kk

 

கிம் இல்-சுங், 1984 ஆம் ஆண்டிலேயே தனது வாரிசாக கிம் ஜோங்-இல்ஐ பிரகடனம் செய்திருந்தார். எனவே, வடகொரியாவின் ஆட்சி நிர்வாகத்தை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

 

kk


அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயம் வடகொரியாவில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுப்பண்ணை விவசாயம் மூலமாக பயிர்செய்திருந்த விவசாயம் முழுக்க நாசமடைந்தது. எனவே உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி வடகொரியாவைப் பற்றி பலவிதமான கட்டுக்கதைகளை முதலாளித்துவ நாடுகள் பரப்பின. ஆனால், வடகொரியா வெளிநாடுகளின் உதவியைக் கேட்டது. கொடூரமான அந்த பஞ்சத்தை மக்கள் ஒத்துழைப்போடு சமாளித்தது அரசு. அவ்வளவு நெருக்கடியான காலகட்டத்திலும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லை. வடகொரியாவிலிருந்து ஏராளமானோர் சீனாவுக்கு கடந்து சென்று அங்கு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

 


1998 ஆம் ஆண்டு கிம் ஜோங்-இல் அரசு சொன்கன் அல்லது ராணுவத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அறிவித்தது. அதாவது, கொரிய கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் கொரிய மக்கள் ராணுவம்தான் முன்னுரிமை பெற்றது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வடகொரியா ராணுவம் முன்னெப்போதையும் விட சக்திவாய்ந்தது ஆகியது. 

 


இந்நிலையில்தான், தென்கொரியாவில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட கிம் டாயே-ஜங் வடகொரியாவுடன் இணக்கமான உறவுகளுக்கான முயற்சியை முன்னெடுத்தார். இது அன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் டபிள்யு புஷ்சுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவின் அணு ஆயுத தயாரிப்பை முன்வைத்து அந்த நாட்டின் மீது பல தடைகளை முன்மொழிந்தார்.

 

ஆனால், வடகொரியாவும் தென்கொரியாவும் இரு நாடுகளிலும் பிரிந்து வாழும் உறவினர்கள் சந்திக்க அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டன. 2000மாவது ஆண்டில் நடந்த இரு நாட்டு ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பில் வடகொரியா இணைய முடிவு செய்தது. தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்யாங் வரையான ரயில் பாதையை இணைக்கவும், எல்லைப்பகுதி பேச்சுவார்த்தைக்கான அலுவலகங்களை திறக்கவும், 50 ஆண்டுகளாக இரு நாடுகளிலும் பிரிந்து கிடக்கும் உறவினர்களை 100 குடும்பங்களாக சந்திக்க அனுமதிக்கவும் உடன்பாடு எட்டப்பட்டது.

 

அதே ஆண்டில் வடகொரியாவுடன் அரசுப்பூர்வ உறவுகளை வைத்துக்கொள்ள ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. இரண்டு கொரியாக்களின் இணக்கமான உறவு அமெரிக்காவை எரிச்சலூட்டியது. உடனே, ஈரான், இராக், வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் தீயசக்திகள் என்று ஜார்ஜ் புஷ் அறிவித்தார். 2002 ஆம் ஆண்டு வடகொரியா ரகசியமாக அணுஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், தென்கொரியா, ஜப்பான் ஆகியவை வடகொரியாவுடன் உறவைத் துண்டித்தன. வடகொரியாவில் அணு உலைகளை சோதனையிட வந்த சர்வதேச ஆய்வாளர்களை வெளியேற்றிவிட்டு, தனது அணு உலைகளை மீண்டும் இயக்கியது. அத்துடன், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது.

 


இந்த முடிவைத்தொடர்ந்து, 2003ல் வடகொரியா, அமெரிக்கா, சீனா நாடுகளின் பிரதிநிதிகள் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார்கள். இது தோல்வியில் முடிந்தது. ஆறு அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு 8 ஆயிரம் ராடுகளை செரிவூட்டியிருப்பதாக வடகொரியா அறிவித்தது.

 


அதே ஆண்டு கிம் ஜோங்-இல் மீண்டும் வடகொரியா அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 2004 ஆம் ஆண்டு பெட்ரோல், ரசாயணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ரியோங்சோன் அருகே வெடித்தது. இந்த கொடூரமான விபத்தில் 160 பேர் உயிரிழந்தனர். சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்தன.

 


அணு ஆயுதங்களை தனது சுய பாதுகாப்புக்காகவே தயாரிப்பதாக வடகொரியா 2005 ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, வடகொரியாவில் இயங்கிய உலக உணவு உதவிக்கான ஐ.நா. அமைப்பின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அதே ஆண்டு குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக ஏவியது. வடகொரியா தனது நாட்டில் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஐ.நா.மனித உரிமைக் கமிஷன் கண்டனம் தெரிவித்தது.

 


2006 ஆம் ஆண்டு மத்திய தூரம் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக ஏவியது. இதையடுத்து, அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து வடகொரியாமீது அடுக்கடுக்காக பொருளாதாரத் தடைகளை ஐ.நா.விதித்தது. இந்த தடைகளைத் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி இல்லாமல் வடகொரியா மிகவும் பாதிக்கப்பட்டது. ஆறுநாடுகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதிக்காக முக்கியமான அணுஉலையை மூட வடகொரியா சம்மதம் தெரிவித்தது.

 


2007 ஆம் ஆண்டு 56 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லையைத் தாண்டி பயணிகள் ரயில் முதன்முறையாக கடந்தது. இரண்டு நாடுகளின் பிரதமர்களும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தனர்.

 

வடகொரியாவில் இரண்டு கொரியாக்களும் இணைந்து மேற்கொண்ட தொழிற் கட்டமைப்புகளில் தென்கொரியா மேலாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், லீ மியுங் பாக் என்பவர் வடகொரியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால் அவர்களை வெளியேற்றியது.

 


2008 ஆம் ஆண்டு அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய வடகொரியா, 2009 ஆம் ஆண்டு தென்கொரியாவுடனான அனைத்து ராணுவ மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. 2009 ல் தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிறைவேற்றியவுடன் அமெரிக்கா பதறியது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் அவசரமாகக் கூடியது. கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து வடகொரியா அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. வடகொரியாவுக்குள் ஊடுருவிய இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட் டது. இது சர்ச்சையாகி, அவர்களுடைய விடுதலைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வடகொரியாவுக்கு சென்று பேச்சு நடத்தினார். முடிவில் அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் விடுவிக்கப்பட்டனர்.

 


2010 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான பகையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக கிம் ஜோங்-இல் அறிவித்தார். அதே ஆண்டு, தென்கொரியாவுக்கு சொந்தமான போர்க்கப்பலை வடகொரியா மூழ்கடித்தது. இதற்கிடையில் தனது இளைய மகன் கிம் ஜோங்-உன்ஐ வடகொரியா ராணுவத்தின் நான்கு நட்சத்திர தளபதியாக கிம் ஜோங்-இல் அறிவித்தார். உடல் நலிவுற்றிருந்த கிம் ஜோங்-இல் 2011 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, கிம் ஜோங்-உன் வடகொரியாவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். உடனே, அணு ஆயுத திட்டத்துக்கான யுரேனியம் செறிவூட்டும் பணிகளை நிறுத்துவதாக அவர் அறிவித்தார்.

 

 

kk


அதற்குப் பதிலாக தனது தொலைத்தொடர்புக்காக விண்ணில் செயற்கைக் கோள் ஏவும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டது. 2012ல் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி வெற்றிபெற்றதும் அதை ஐ.நா. கண்டித்தது. இதுவும் ஏவுகணைச் சோதனைக்கு நிகரானதுதான் என்று கூறியது. இதையடுத்து, இதற்கு முன் 2009ல் நடத்திய அணுகுண்டு சோதனையைக் காட்டிலும் இரு மடங்கு சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியது. உடனே, புதிய வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளை விதித்தது. தடைகளை பொருட்படுத்தாமல், தனது புளூட்டோனியம் உலையை மறுபடியும் இயக்கப்போவதாக அறிவித்தார் கிம் ஜோங்-உன். அதுமட்டுமின்றி, தென்கொரியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறும்படியும், இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுதப் போர் நடக்கப்போவதாக வும் அவர் எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கொரியா அமைதி பேச்சுக்கு வந்தது. நிறுத்தப்பட்டிருந்த கூட்டுத் தொழிற்சாலைகள் அடங்கிய தொழில்நுட்ப பூங்கா வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

 

2013 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சி செய்ததாக கிம் ஜோங்-உன்னின் சித்தப்பா ஜேங் சோங்-தயீக் கைது செய்யப்பட்டு, பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டார். யுரேனியம் செறிவூட்டும் உலை விரிவுபடுத்தப்பட்டு, புளூடோனியம் உலை மறுபடியும் இயக்கப்பட்டது.

 


2014 ஆம் ஆண்டுதான் அமெரிக்காவை கிம் ஜோங்-உன் அலறவிட்டார். மத்தியதூரம் சென்று தாக்கும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், அடுத்து, குறுகியதூரம் சென்று தாக்கும் 30 ஏவுகணைகளையும் அடுத்தடுத்து வடகொரியா வெற்றிகரமாக ஏவியது.

 

முந்தைய பகுதி:

 

கியூபாவுக்கு மாடல் வடகொரியா என்றார் சே குவேரா! கொரியாவின் கதை #26

 

 

 

 

 

Next Story

கடல் கடந்த காதல்; தென்கொரிய இளைஞரை கரம் பிடித்த கரூர் பெண்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Karur woman married to South Korean man

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சார்ந்தவர் விஜயலட்சுமி(28). பொறியியல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆங்கில மற்றும் கொரியன் மொழி தெரிந்துள்ளதால் ஆன்லைனில் தனது தொழில் சம்பந்தமாக  வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அப்போது தென் கொரிய நாடு டோங்யோங் பகுதியைச்  சார்ந்த மின்ஜுன் கிம் (28) உடன் வலைத்தளம் மூலம் பேச ஆரம்பித்துள்ளார்.

இவர் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் கொரிய நாட்டில் உள்ள தனியார் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் பேசி வந்த அவர்கள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நேரில் காண்பதற்காக தென் கொரியா சென்ற பெண்மணி மின்ஜுன் கிம் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசியதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். அதேபோன்று பெண் வீட்டார் சார்பிலும் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் இரு விட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். பெண் வீட்டார் திருமணம் பத்திரிகை அடித்து 19.05.2024 தேதி கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு வழங்கினர். தென் கொரியா நாட்டைச் சார்ந்த மின்ஜுன் கிம் குடும்பத்தினர் தாய் தந்தை அவரது நண்பர் உட்பட நான்கு நபர்கள் கடந்த வாரம் தமிழ்நாடு வந்தனர்.

வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கோம்புபாளையம் பெருமாள் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் தமிழ் முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். கிராம பகுதியில் முதல் முறையாக இது போன்ற திருமணம் நடைபெற்றதால் கொரியா நாட்டைச் சார்ந்த மணமகனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

குறிப்பாக நேற்று இரவு நிச்சயதார்த்தம்  நடைபெற்ற போது புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர். திருமணம் செய்து கொண்ட இருவரும் மணமகன் குடும்பத்தாருடன் தென் கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் அங்கு விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்ற பிறகு நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுத உள்ளதாக கூறினார்.

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.