உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.
ஒரு கணவன் மனைவி இருக்கிறார்கள். அந்த நபர் மிகவும் நல்ல கணவர் என்றும் நல்ல மனிதர் என்றும் அந்த நபருடைய குடும்பத்தினரிடமும் இந்த பெண்ணுடைய குடும்பத்தினரிடமும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். அவருக்கு படிப்பு, தொழில் எல்லாமே சரியாக இருக்கிறது, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை, குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்வார், மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வார். ஆனாலும், அவரும் சில சமயங்களில் கோபப்படுவார், மனைவியை அடித்திருப்பார். கோபப்பட்டத்துக்கு அடுத்த நாளே மன்னிப்பும் கேட்டிருப்பார்.
இந்த நல்ல மனிதன் ஆங்காங்கே செய்த தவறுகளை இந்த மனைவி பெரிதாக்கி, அவருடைய குணத்தை கேவலப்படுத்துகிறார். அந்த நபர், மற்றவருக்கு நல்லது செய்தால் கூட அதை பலவீனமாக காண்பிப்பது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகுகிறார் என்று அவருடைய குணத்தை சிதைப்பது, இல்லற வாழ்க்கையில் நடக்காத டார்ச்சரை சொல்வது என அவருடைய குணத்தை கொஞ்ச கொஞ்சமாக சிதைக்கிறார். அவருடைய ஆண் தன்மையையே கடைசியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில், இந்த பெண்ணின் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஆனால், போக போக மற்றவர்களும் அதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். உன் வீட்ல உனக்கு நல்ல பேர் இருக்குல அதை முதல்ல ஒழிக்கணும் அப்படியென்று தான் அந்த பெண், இந்த நபரிடம் சொல்லியே இதையெல்லாம் செய்கிறார். ஏனென்றால், அந்த பெண் வேறொரு வாழ்க்கைக்கு செல்ல நினைக்கிறார்.
அந்த பெண்ணிடம் நான் பேசினேன். பேசும்போது இந்த விஷயத்தை தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அந்த பெண்ணிடம் பேச பேச அவர் சொல்வது அனைத்தும் பொய் என தெரிந்தது. எல்லாவற்றிலும் சரியாக இருக்கிற ஒரு ஆண் தனக்கு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணனும் என்ற எண்ணத்தால் அந்த பெண் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார். தன் வீட்டிலும் கணவர் நல்லவராக இருப்பதால் அவருடைய குணத்தை சிதைத்து வேறு ஒரு திருமண வாழ்க்கைக்கு செல்ல நினைக்கிறார். இவ்வளவு தாக்குதலில், அந்த நபர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். அவரை காப்பாற்றி எழுந்து நிற்கும் போது தான் நான் அவரை பார்க்கிறேன். அப்போது நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அதாவது மனைவிக்கு எப்போது மாதவிடாய் வரும் என்று தோராயமாக தேதிகளை குறித்து வைத்திருக்கிறார். மாதவிடாய் வரும் ஒரு வாரம் முன்னாடியும் பின்னாடியும் மனைவியை தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்து வாழ்கிறார். மனைவிக்கு பிரைவேசி கொடுக்கக் கூடிய ஆள். சில நேரங்களில் வரும் கோபத்தால் மனைவியை அடிக்கும் தவறுகளை அவரும் ஒப்புகொள்கிறார். அதற்கு அடுத்த நாளே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
அந்த பெண்ணிடம் பேசும் போது அவர் வைத்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவாக விளக்கம் கூறினேன். உடனடியாக அடுத்த பொய் குற்றச்சாட்டை வைக்கிறார். நான் அந்த பெண்ணிடம் உங்களுக்கு வேறு ஏதாவது எண்ணம் இருக்கிறதா? அந்த உண்மையை வெளிப்படையாக சொல்லுங்கள் என இரண்டு நாள் டைம் கொடுத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெண் என்னிடம் வந்து நான் சொன்னதெல்லாம் உண்மை தான் ஆனால், இந்த வாழ்க்கையில் இருந்து விலகி வேற வாழ்க்கைக்கு செல்ல நினைக்கிறேன் என்று சொல்லி கிளம்பினார். வேறு வாழ்க்கைக்கு செல்ல விரும்ப நினைத்து அந்த நபரின் குணத்தையே கேவலப்படுத்திருக்கிறார்.