உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் செய்த தவறால் நிம்மதி இழந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு கொடுத்த கவுன்சிலிங்கைப் பற்றி விவரிக்கிறார்.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் தனக்குத் தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தின் மூலம் என்னைத் தொடர்புகொண்டு என்னுடைய அலுவலகம் வந்தார். அவர் தன்னுடைய பணி காலங்களில் தான் தெரிந்து செய்த தவறுகளை எண்ணி மன சாட்சிக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து தனிமையில் வாடினார். இந்த விஷயத்தை அவர் என்னிடம் சொல்லும்போது, அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு தான் பல அப்பாவிகளுக்கு தீங்கு செய்தாக வருத்தப்படுவதாகக் கூறினார். உதாரணத்திற்கு சிவலிங்கம் என்ற ஒருவருக்கு போலீசாரால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து டீவி-யில் பார்த்தால், இதற்கு முன்பு தானும் ஒரு சிவலிங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த பிரச்சனை நீண்ட நாளாக அவருக்கு இருந்ததால் வேறு வழி இன்றி என்னிடம் வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.
அதன் பிறகு அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க தொடங்கினேன். நான் இல்லையென்று நினைத்துக்கொண்டு உங்கள் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் செய்த தவறுகளை வரிசையாக சொல்லுங்கள் என்றேன். அவர் கிட்டதட்ட தண்ணீர் கூட குடிக்காமல் நான்கு மணி நேரத்திற்கு மேல் தான் செய்த அனைத்து தவறுகளைச் சொன்னார். அவர் சொன்ன அனைத்தும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாதவையாக இருந்தது. அவர் சொல்லி முடித்ததும் அப்பாடா என்று பெரு மூச்சு விட்டார். அங்கேயே அவருக்கான பாதி கவுன்சிங் முடிந்து விட்டது. என்னிடம் அவர் செய்த தவறுகளைச் சொன்ன பிறகு கை கடிகாரத்தைப் பார்த்து 4 மணி நேரமாக சொல்லியிருக்கிறேனா என்று ஆச்சர்யதுடன் மன நிறைவை உணர்ந்தார்.
தன்னுடைய குற்ற உணர்ச்சியால் வாடிய அவருக்கு அதிலிருந்து வெளி வருவதற்காக இரண்டு வழிகளைக் கூறினேன். முதலில் இதுபோல காவல்துறை வேலையில் பிரச்சனைகள் உருவாகும் என்ற பயிற்சி வகுப்பை இப்போது பணியில் இருக்கும் காவலர்களிடம் பேசுங்கள் என்றேன். இரண்டாவதாக காவல் நிலையம் வந்தால் சாமானிய மக்களுக்கு எங்கு எந்த விதமான பிரச்சனை வரும். அதை யாரிடம் சென்றால் தீர்க்க முடியும் என்பதற்கு வழிகாட்டிய செயல்படுங்கள் என்றேன்.
ஓய்வு முடிந்தும் இந்த பணிகள் உங்களுக்குத் தொந்தரவாக இருந்தாலும் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக இருக்கும் என்றேன். நான் சொன்ன இரண்டிற்கும் ஒப்புக்கொண்ட அவரிடம் இறுதியாக தவறு செய்தவர்களுக்கு மீண்டும் உதவ வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். இப்போது அவர் தன்னால் முடிந்த உதவியைச் சாமானிய மக்களுக்கு செய்து தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு வருகிறார். வெளியில் கட்டப்பட்டிருக்கும் நீதிமன்றத்தில் குற்றங்களை மறைத்துவிடலம். ஆனால் மனதில் இருக்கும் நீதிமன்றத்திற்கு தவறு செய்தவர்கள் என்றைக்குமே குற்றவாளிகள்தான் முடிந்தளவிற்கு மற்றவர்களுக்கு நேர்மையாக இருங்கள் என்றார்.