Advertisment

சிங்கிள் மதர் செய்த தவறு; தற்கொலைக்கு முயன்ற டீன் ஏஜ் பெண் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 34

jay zen manangal vs manithargal 34

மூன்று முறை தற்கொலைக்கு முயன்ற டீன் ஏஜ் பெண்ணுடைய, அம்மாவுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

ஒரு டீன் ஏஜ் பெண், கவுன்சிலிங் வந்திருந்தார். 12வது படிக்கும் பெண் விவாகரத்தாகிய அம்மாவுடன் ஏழு வருடமாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இப்பொழுது அந்தப் பெண்ணுக்கு பிரச்சனை என்னவென்றால் அருகில் இருக்கும் தெரிந்தவர்கள் யாரேனும் சந்தோஷமாக அப்பா அம்மா என்று இருப்பதை பார்க்கும் பொழுது தனக்கு கவலைகள் வருவதாகவும், தனது அம்மா அதிக கோபத்தில் தன்னை திட்டி, நீயும் அப்பாவை போல தொலைந்து போக வேண்டி தானே, என்றெல்லாம் கூறும்போதெல்லாம் தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது என்று கவுன்சிலிங்கில் கூறுகிறார். மேலும், நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி வாழ்க்கை அமைந்திருக்கிறது, இனிமேல் நாம் ஏன் வாழ வேண்டும் என்று தோன்றுவதாகவும் கூறினாள். அம்மா பின்னர் மன்னிப்பு கேட்டாலும், அந்த வார்த்தைகளின் வலி தனக்கு மிகவும் துன்பத்தை கொடுத்திருக்கிறது என்றும் கூறுகிறாள்.

Advertisment

தற்கொலை என்ற எண்ணம் வந்தவுடன் அதை மாற்ற வேண்டும் என்று எண்ணத்துடன் வந்திருப்பதாலும் தன் அம்மா சிங்கிளாக இருப்பதினால் அவருடைய இயலாமையினால் தான் இப்படி இருக்கிறார் என்றபுரிதலும் இந்தப் பெண்ணுக்கு வயதுக்கு மேல்இருந்தது. இந்தக் குழந்தையை விட அவரது அம்மாவுக்கு தான் பிரச்சனை இருக்கிறது என்பதால் அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அம்மாவை முதலில் போனில் அழைத்த போது முதலில் மறுத்துவிட்டு பிறகு தான் பேச ஒப்புக்கொண்டு தொடர்பு கொண்டார்.

முதல் செஷனில் பெண் இல்லாமல் அம்மாவிடம் மட்டும் தனியாக பேசப்பட்டது. அந்த அம்மாவிற்கு தன்னுடைய கணவனுடன் விவாகரத்து வாங்கி அந்த வலியுடனே இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் குழந்தையிடம் அடிக்கடி காட்டுவது. எனவே முதலில் அம்மாவை சரி செய்ய வேண்டி இருந்தது. அவர் அந்த வலியில் இருந்து வெளியே வரவில்லை என்றால் அது குழந்தையிடம்தான் போய் சேரும். அவருடைய இயலாமைதான் குழந்தையின் மீது வந்திருக்கிறது. என்னிடம் பேசும்போதே அப்பா இல்லை அதனால் நன்றாக வளர்க்க வேண்டும் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று அதிக பயம் அவரிடம் இருப்பது நன்றாக தெரிந்தது.

நான் அவரிடம் உங்கள் கணவர் இன்னும் இருக்கிறாரா அல்லது தொலைந்து போய் விட்டாரா என்று அவர் மகளை திட்டும் பாஷையில் நேரடியாக கேட்டேன். அவர் அதற்கு, கனவர் தொலைந்து போய்விட்டார் என்று பதிலளித்தார். தொலைந்து போனவரை பற்றி நீங்கள் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் அந்தக் குழந்தையிடம் அப்பாவைப் போல தொலைந்திருக்கலாமே என்று அடிக்கடி அப்பா நம் வாழ்க்கையில் இல்லை என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறீர்கள். அவர் உங்கள் குடும்பத்தை விட்டு இன்னும் போன மாதிரி எனக்கு தெரியவில்லை என்றேன். நீங்கள் அடிக்கடி அப்பாவை நினைவூட்டுவதனால் தான் மற்ற அப்பாக்களை பார்க்கிறாள். தன் அப்பா இருந்தால் ஒரு வேலை இப்படி இருக்குமோ என்ற எண்ணத்தை நீங்களே தான் அவளுக்கு கொடுத்து விட்டீர்கள் என்று பெண்ணைக் கவனிக்குமாறு கோடிட்டு காட்டினேன்.

திட்டியதும் அன்றே நீங்கள் மன்னிப்பு கேட்டு விட்டாலும், ஆனால் உங்கள் பெண் மீண்டும் நார்மல் ஆக நான்கு நாட்கள் ஆகிறது. அதற்குள் அந்தப் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் எல்லாம் வந்துள்ளது. அந்தப்பிரச்சனைக்காகத்தான் இப்போது கவுன்சிலிங் வந்திருக்கிறாள். அதை நீங்கள் ஏன் கண்காணிக்கவில்லை என்று புரிய வைத்தேன். அதன் பிறகு குழந்தை வந்ததும் அம்மா நன்றாக அழுதார். மகள், அம்மாவை சமாதானப்படுத்தி சரியானதும், நான் அந்த இளம் வயது பெண்ணிடம் மூன்று முறை சாக வேண்டும் என்று தோன்றியும் ஏன் செய்யவில்லை எனக் கேட்டேன். அதற்கு அந்தப் பெண் அழகாக ஒரு பதிலை சொன்னாள். எங்க அம்மாவை ஏற்கெனவே எல்லாரும் சிங்கிள் பேரண்ட் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நான் இறந்து விட்டால் உண்மையாவே என் அம்மா சிங்கிள் பாரன்டாகவே ஆகிவிடுவார் என்றாள். அந்த இடத்தில் அம்மா குழந்தையாகவும், குழந்தை அம்மாவாகவும் மாறியிருந்தார்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe