Skip to main content

75 வயது முதியவரை தூங்க விடாமல் செய்யும் அந்த நினைவுகள் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 15

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

jay-zen-manangal-vs-manithargal- 15

 

சிறு வயதில் செய்கிற தவறுகள் முதுமையான காலத்தில் நினைவுகளாக வந்து தொந்தரவு செய்த முதியவர் பற்றியும் அவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றியும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார். 

 

கவுன்சிலிங் வருகிற மனிதர்களிடம் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பதை நம்மால் உணர முடியும். ஆனால் 75  வயது உள்ள வயதான மனிதர் ஒருவர் வந்தார். என்னால் சில விசயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை அதனால் உங்களைப் பார்க்க வந்தேன் என்று சொல்லும் அளவிற்கு பக்குவமான மனிதர். உடல் அளவில் ஆரோக்கியமான இருக்கிறார். ஆனாலும் வயதின் மூப்பினால் மரணத்தை நோக்கி நகர்வதையும் உணர்கிறவருக்கு சின்ன வயதிலிருந்து செய்த தவறுகள் எல்லாம் நினைவாக வந்து தூங்க விடாமல் தன்னை தொந்தரவு செய்கிறது என்றார். 

 

உதாரணமாக சில தவறுகளாக, பள்ளிக்காலத்தில் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக நண்பனின் பரீட்சைத்தாளை கிழித்து தூக்கி போட்டிருக்கிறார். கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றியிருக்கிறார். அலுவலகத்தில் பணத்தை திருடியது, திருமண வாழ்க்கையை மீறி உறவு கொண்டிருந்த பெண்ணை ஒரு சமயத்திற்கு பிறகு உறவை முறித்துக் கொண்டது, தன்னுடைய மகள் ஓவியம் வரைய விரும்பியிருக்கிறாள், ஆனால் வேறொரு படிப்பை படிக்க வைத்தது என்று பல விசயங்கள் இவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறார்.

 

வயதான காலத்தில் தனிமையை உணர்கிறவருக்கு தன் வாழ்வில் செய்த தவறுகளெல்லாம் காட்சிகளாகத் தோன்றி அவரை மிகுந்த மன நெருடலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் தான் தற்கொலை ஏதேனும் செய்துகொள்வோமோ என்று கூட பயப்பட ஆரம்பித்திருக்கிறார். நம்மிடம் கவுன்சிலிங் வந்த போது அவருக்கு லாஃபிங் புத்தா பற்றி எடுத்துச் சொன்னேன்.

 

தன் வாழ்நாள் முழுவதும் அனைவரும் சிரிக்க வைக்க நினைத்த மனிதர், இறப்பை உணர்ந்த போது கூட தன்னுடைய உடல் முழுவதும் பட்டாசைக் கட்டிக் கொண்டு இறந்து போனவர், உடையோடு தீ மூட்டிய போது பட்டாசு வெடித்து அனைவரையும் அந்த இடத்திலிருந்து ஓட வைத்து சிரிக்க வைத்தவர். துன்ப நினைவுகளோடு தன்னிடம் வந்த ஒருவருக்கு கைகளில் காய்கறிகளை கட்டி விட்டிருக்கிறார். நாட்கள் கடக்க காய்கறிகள் அழுகி புழு வந்த போது அவிழ்த்து விடுமாறு கேட்ட போது நீ மட்டும் ஏன் அழுகிய நினைவுகளை சுமக்கிறாய் வீசி என்றிருக்கிறார்.

 

இந்த கதையை இந்த 75 வயது முதியவருக்கு சொன்னதும் ஏதோ புரிந்தவராய் சென்றவர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு போய் விழிப்புணர்வு பேச்சுகள் கொடுக்க ஆரம்பித்து தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டார். புறச்சூழல் நமது தவறை கண்டறிந்து நமக்கு தண்டனை தருவதிலிருந்து நாம் தப்பித்தாலும் நம் மனது தருகிற குற்றவுணர்ச்சி தண்டனையிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.