Skip to main content

நல்லா படிக்கிறது தப்பா? மாணவிக்கு நடந்த டார்ச்சர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 14

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 14

 

மாணவி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் விவரிக்கிறார்

 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடமிருந்து எனக்கு கால் வந்தது. அவரோடு பேசும்போது அவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருப்பது தெரிந்தது. தான் நன்றாகப் படித்தாலும், படிக்காத பிள்ளையை ட்ரீட் செய்வது போலவே தன்னை தன்னுடைய பெற்றோர் நடத்துவதாக அவர் தெரிவித்தார். தான் என்ன செய்கிறேன் என்பதே தெரியாமல் தன்னுடைய பெற்றோர் தனக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருவதாக அவர் கூறினார். அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று தனக்குத் தெரியவில்லை என்றார். 

 

தன்னுடைய நண்பர்களும் தான் நன்றாகப் படிப்பதால் தன்னை ஒதுக்குவதாக அவர் நினைத்தார். ஆசிரியர்களும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என அவருக்கு பிரஷர் கொடுத்தனர். இவை அனைத்தையும் அவர் என்னிடம் தெரிவித்த பிறகு, அவரோடு நான் உரையாடத் தொடங்கினேன். பெற்றோரை மாற்றுவது சாத்தியமில்லை என்றேன். ஆனால் தன்னிடம் சில விஷயங்களை மாற்றிக்கொள்வது எளிது. தான் படித்துக்கொண்டிருப்பதை தாயிடமும் தந்தையிடமும் அப்டேட் போல் தெரிவிக்குமாறு கூறினேன். பெற்றோருடன் அமர்ந்து பேச வேண்டும் என்று கூறினேன்.

 

அவரும் அதை ஏற்றுக்கொண்டார். முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சொல்வதற்கு முன் அது குறித்து தானே அவர்களிடம் உரையாடலாம் என்றேன். இதன் மூலம் அவர்கள் பேசுவது குறையும். நண்பர்களிடமும் படிப்பு தவிர மற்றவை குறித்த உரையாடலைத் தாமாக முன்னெடுக்கலாம் என்றேன். இதையெல்லாம் செய்த பிறகு அவருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பெரிய மாற்றம் தெரிந்தது. 

 

நண்பர்களும் அவரோடு சகஜமாக, விளையாட்டாகப் பேச ஆரம்பித்தனர். அனைத்து குழந்தைகளுமே இந்த முறையைப் பின்பற்றலாம். பாதுகாப்பான முறையில் வாழ்க்கையை எதிர்கொள்வதை விட, பக்குவப்பட்ட  முறையில் சில முன்னெடுப்புகளை நாமே மேற்கொள்ளும்போது நல்ல விளைவுகள் கிடைக்கும். ஆனால் இதைச் செய்யும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் மரியாதை குறைவாக நடந்துவிடக் கூடாது. படிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை நிச்சயமாக உதவும் என்பதில் சந்தேகமில்லை.