Skip to main content

விபத்தில் காலை இழந்து தன்னம்பிக்கையால் உயர்ந்த மனிதர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 13

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

jay-zen-manangal-vs-manithargal- 13

 

மாற்றுத்திறனாளி ஒருவரின் கதை குறித்து “மனங்களும் மனிதர்களும்” என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் விவரிக்கிறார்.

 

'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...' என்று சொல்வதன் மூலம் நோய் இல்லாமல் பிறந்தவர்கள் சிறந்தவர்கள் போலவும், மாற்றுத்திறனாளிகளாய் பிறந்தவர்கள் நம்முடைய பரிதாபத்துக்கு உள்ளானவர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது. ஒரு விபத்தினால் காலில் அடிபட்டு மாற்றுத்திறனாளியான ஒருவர் நம்மிடம் வந்தார். வீல்சேர் அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவியது. ஒரு அலுவலகத்தில் அவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு நிறைய மன அழுத்தம் இருந்தது. 

 

மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் இந்த சமுதாயம் அவருக்கு கால் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது. அவர் மறக்க நினைத்த விஷயத்தை சமுதாயம் அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தது. அவருக்கு சம்பளத்தை உயர்த்தினால் கூட கால் இல்லாததால் பரிதாபத்தில் செய்தது போல் பேசினர். இயல்பாக அவருக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்களை பரிதாபத்தால் கிடைப்பது போல் அனைவரும் சேர்ந்து உருவாக்கினர். 

 

இதை எதிர்கொள்வது எப்படி என்று என்னிடம் அவர் கேட்டார். அவருக்கு சில கதைகளின் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை நான் உணர்த்தினேன். நகைச்சுவை பொதிந்த அந்தக் கதைகளைக் கேட்ட அவர் விழுந்து விழுந்து சிரித்தார். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அவருக்கு வந்தது. எதனாலும் தன்னுடைய மதிப்பு குறையப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். மற்றவர்கள் தன்னை எவ்வாறு நடத்தினாலும், தன்னுடைய பெஸ்ட்டைத் தான் உலகுக்கு வழங்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவர் வந்தார். 

 

தன்னுடைய பணியில் அடுத்த நிலைக்கு அவர் முன்னேறினார். தனக்குக் கீழே பணியாளர்கள் வரும் நிலைக்கு அவர் சென்றார். பணத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்பதை உணர்த்தும் கதையும், கல்லை அடிக்கும் ஒவ்வொரு அடியும் சிலையாக மாற்றுவதற்குத் தான் என்பதை உணர்த்தும் கதையும் அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதுபோன்ற தன்னம்பிக்கையோடு, வாழ்வில் அனைத்து சவால்களையும் சந்தித்து வெற்றிநடை போட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்.

 

 

Next Story

இறந்த மனைவியின் நினைவு; மீட்டெடுத்த கண்ணாடி ஓவியம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 22

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
jay-zen-manangal-vs-manithargal- 22

மனைவி இறந்த பிறகும், உடன் வாழ்ந்த நினைவுகளை விடமுடியாமல்  சுமந்து இருக்கிறவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தன் நண்பருக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று ஒருவர் அனுகினார். தன் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த தன் நண்பர் அவர் இறந்த பிறகு தற்போது முற்றிலும் வேறொரு ஆளாக இருப்பதாக கூறி எவ்வாறு உங்களிடம் அழைத்து வருவது  என்று கேட்டார். பொதுவாக எல்லாரும் செய்யும் தவறு, பாதிக்கப்பட்டவரிடமே சென்று கவுன்சிலிங் வா என்று அழைப்பது. அது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே என்னை சந்தித்தவரிடம், உங்கள் நண்பரிடம், நீ வாழ்வது சரிதான், இன்றும் நன்றாக அதை சிறக்கவைக்க என் நண்பர் ஒருவரிடம் சாதாரணமாக பேசலாமா? என்று சொல்லி கூட்டி வாருங்கள் என்றேன். அந்த நண்பரும் என்னைப் பார்க்க வந்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரிடம் வேறு எந்த ஒரு புகாரும் இல்லை. சந்தோஷமாக தான் இருக்கிறார். இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, இறந்த தன் மனைவியுடன் வாழும்போது கேட்ட பாடல்களை கேட்டாலோ, சேர்ந்து போன இடங்களுக்கு சென்றாலோ, பழைய நினைவுகள் வந்து நாள் முழுதும் மனது வலிப்பதாக கூறுகிறார். எனவே எங்கு செல்வதையும் முற்றிலும் தவிர்த்து வருவதாக சொல்கிறார். இறந்த என் மனைவியை பற்றி நீண்ட மாதங்கள் கழித்து யாரேனும் வந்து பேசினால், அவர்கள் போன பிறகு அவ்வளவு மனவலியை கொடுக்கிறது என்றார்.

நான் அவரிடம், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் முகத்தில் சட்டென்று மகிழ்ச்சி. தன் மனைவி தத்ரூபமாக கண்ணாடி ஓவியங்கள் வரைவார் என்று, என்னைக் கூட அப்படி ஒரு ஓவியம் வரைந்து திருமணத்திற்கு பின்பு பரிசளித்தார் என்றும் சொன்னார். நீங்கள் ஏன் உங்கள் மனைவியைப் போன்று நிறைய கண்ணாடி ஓவியங்கள் வரையும் திறமையானவர்கள் பயிலும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று பார்க்கக் கூடாது என்று கேட்டேன். உங்கள் மனைவியின் திறமைகளை ரசித்துச் சொல்கிறீர்கள், ஒருவேளை யாருக்கேனும் அந்த திறமையை வெளிப்படுத்த உதவி தேவைப்பட்டு, நீங்கள் அதற்கு உதவினால் அப்போது எப்படி உணர்வீர்கள் என்று கேட்டேன். தயக்கத்துடன், இப்போது தெரியவில்லை, ஆனால் சந்தோஷமாகத் தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, போய்ப் பார்க்கிறேன் என்றார்.

சொன்னது போல, மும்பை ரூரலில், ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்று, அங்கு தன் மனைவி போல பல திறமையானவர்கள் வரைந்திருக்கும் கண்ணாடி ஓவியங்களைப் பார்க்கிறார். அங்கிருக்கும் மேலாளரிடமும் பேசுகிறார். அவர் மூலமாக, கல் உடைக்கும் வேலையில் இருக்கும் ஒரு சிறிய பெண், இங்கு அனைவரையும் விட சிறப்பாக ஓவியம் வரைவாள், ஆனால் அவளால் இங்கு வர அவளுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்று கூறுவதைக் கேட்கிறார். என்னிடம் வந்து இதைப் பகிர்ந்து, ஏனோ மனதிற்கு கேட்டதிலிருந்து உறுத்தலாக இருப்பதாகச் சொன்னார். நான் அந்த பெண்ணைச் சென்று சந்தித்து  திறமை இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்திற்கு முடிந்ததை செய்யமுடியுமா என்று பார்க்கலாமே என்று ஒரு பரிந்துரை மட்டும் செய்தேன்.

மூன்று மாதம் கழித்து சாதாரணமாக பேசும்போது, அந்த பெண்ணிற்கு மாதம் ஏழாயிரம் கிடைத்தால் அந்த வேலையே விட்டுவிட போதுமானதாக இருந்தது என்று அறிந்து, அவர் மாதம் பத்தாயிரம் குடுத்து உதவி இருக்கிறார். இப்போது அந்த பெண் அந்த பள்ளியில் முழு நேரம் செலவிட்டு நன்கு படித்து முடித்து ஒரு ஓவியம் வரைந்தால் அந்த பெண்ணிற்கு சுமார் பதினைந்தாயிரம் கிடைக்கும் அளவிற்கு வந்து நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அந்த பெண்ணிற்கும் இவரிடம் நல்ல அழகிய பாச உறவாக மாறி இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஒரு வருடம் கழித்து சந்திக்கையில், என் மனைவி போன பிறகு நாங்கள் மூவர் என்று நினைத்தேன். இப்போது அந்த பெண்ணையும் சேர்த்து எனக்கு மூன்று மகள்களாக மீண்டும் நால்வர் என்று ஆகிவிட்டோம் என்றார்.

அவரிடம், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றும், முதலில் என்னை வந்து பார்த்தபோதும், இப்போதும் என்ன வித்தியாசம் உணருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சற்று யோசித்துச் சொன்னார், நான் முதலில் வந்தபோது நான் இழந்தது மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது. இப்போது என் மனைவியின் இழந்த வலி இன்னும் இருக்கிறது என்றாலும், அவரின் திறமையை நான் இழக்கவில்லை, இந்த பெண்ணை சந்தித்த பின், அதை வேறொரு பக்கமாக தொடங்கி வைத்து விட்டேன் என்றார். அந்த பள்ளி மேலாளரிடமும் இதே போல வேறு ஏதேனும் மாணவருக்கு நிதி உதவி தேவைப்பட்டால், தன்னை அழைக்குமாறு கூறி இருக்கிறேன் என்று மன நிறைவோடு சொன்னார். 

Next Story

பிணவறை மனிதரின் இறப்பு குறித்த பார்வை - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 21

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
 jay-zen-manangal-vs-manithargal- 21

கவுன்சிலிங் கொடுப்பது என்பது மனச்சிக்கலோடு நம்மிடம் வருபவர்களுக்கு நாம் மனநலத்திற்கான ஆலோசனை வழங்குவது தான். சில சமயம் நாமும் பலரிடமிருந்து ஆலோசனையை அனுபவங்களாகப் பெற்றுக் கொள்வோம். அப்படி பெற்றுக்கொண்ட ஒரு கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நண்பரின் அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று விட்டார்கள் என்றும், அங்கே சென்றால் இறந்துவிட்டார் பிணவறையில் வைத்திருக்கிறோம் என தகவல் கிடைக்கப்பட்டு அங்கே சென்று பார்த்தால் பல வகையில் மரணமடைந்த பிணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பிணங்களிடையே இருந்து ஒருவர் எழுந்து வருகிறார். நியாயமாகப் பார்த்தால் இந்த இடத்தில் பயந்திருக்க வேண்டும். ஆனாலும் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்த்தால் பிணவறை நிர்வாகியாக இருப்பவர் அங்கிருந்து வருகிறார். அவரிடம் விவரத்தைச் சொல்லி கேட்டதும், அவரும் விவரத்தை உறுதி செய்து கொண்டு காத்திருக்கச் சொன்னார். அப்பாவின் பிணத்தை வாங்க நண்பர் வரும் வரை காத்திருந்த நேரத்தில் அந்த பிணவறை நிர்வாகி என்னிடம் பேச்சு கொடுத்தார்.

நீங்க இறந்தவருக்கு யார் என்றதும், நண்பனின் அப்பா என்று சொன்னேன். என்ன வேலை பாக்குறீங்க என்றதும், பெரிய நிறுவனங்களுக்குச் சென்று திறமையை வளர்த்தெடுக்கும் பயிற்சி கொடுப்பது மற்றும் மனநிலை சிக்கலை சரி செய்வது குறித்து மனப்பயிற்சி கொடுப்பது போன்றவைகளை செய்கிறேன் என்றேன். அவரோ ‘நீங்க சொன்னா கேட்டுக்கிறாய்ங்களா’? என்று கேட்டார். கேட்டுக்குறாங்களா இல்லையான்னு தெரியலை, ஆனால் என் பயிற்சிக்கு பிறகு நிறைய மாற்றம் வந்ததாக நினைக்கிறார்கள். அதனால் தான் திரும்ப என்னை கூப்பிடுகிறார்கள் என்றேன். அவரோ அதெல்லாம் சும்மா நடிப்பானுங்க, நீங்க சொல்றதை எவனும் உள் வாங்கியிருக்க மாட்டான் என்றார்.

அவருடைய பேச்சில் இருந்த ஒரு ஈர்ப்பில் மேற்கொண்டு கவனித்தேன். அவரே தொடர்ந்தார், வாழ்க்கையில் ரொம்ப ஆட்டம் போடுறவய்ங்க பலரை இந்த பிணவறையை காலையும், மாலையும் ஒரு தடவை பார்க்க சொல்லுங்க, தானாக அடங்கிடுவானுங்க. ஏனெனில், இங்கே இறப்பு குறித்த பயம் எல்லாருக்கும் போயிடுச்சு அதனால் தான் நிறைய ஆட்டம் ஆடுறாங்க என்றார். இங்க வந்து தொடர்ச்சியாக பார்த்தால் வாழ்க்கை குறித்த பயம் வந்து பொறுப்பு அதிகரித்து எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆட்டம் போடாமல் அடங்கி இருப்பார்கள் என்றார்.

மேலும், சாவை உணர்ந்த மனிதன் சரியான மனிதனா இருப்பான். அதை உணராதவன் தான் நிறைய சிக்கலோடு இருப்பான். அவனுக்கு வாழ்கிற காலத்திலேயே நன்மைகளை செய்து விட வேண்டும் என்பதை இதுபோன்ற பிணக்குவியல்களை அடிக்கடி பார்த்தால் தான் உணர முடியும். இதைச் சொல்ல எதற்கு ஒரு பயிற்சி வகுப்பு, வாத்தியார், போதனை எல்லாம் என்று சொன்னார். பெரிய தத்துவங்கள், புத்தகங்கள் இவையெல்லாம் சொல்லாத ஒரு விசயத்தை ஒரு சாமானிய மனிதர் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டார். இதை இன்றும் நான் எனக்கு கொடுக்கப்பட்ட, என்னுடைய சிந்தனையை மேம்படுத்திக்கொள்ள ஒரு கவுன்சிலிங்காகத் தான் எடுத்துக் கொள்கிறேன்.