Skip to main content

பெருந்துயரிலிருந்து மீண்டெழுந்த கணவனை இழந்த பெண் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 03

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Jay zen - Manangal vs Manithargal - 03

 

தான் கையாண்ட வித்தியாசமான கவுன்சிலிங் குறித்து ‘மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியாக ஜெய் ஜென் விவரிக்கிறார். கணவன் இறந்த பிறகு வாழ்க்கையே முடிந்து விடும் என்று நினைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மீண்டெழுந்து வெற்றி பெற்ற பெண்களும் இருக்கிறார். அப்படியான ஒரு பெண்ணைப் பற்றி...

 

கணவனை இழந்த பெண்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சேலை தான் கட்ட வேண்டும் என்கிற நிலை இருந்தது. அதனால் பத்து பேர் இருக்கும் ஒரு இடத்தில் அவர்கள் மட்டும் தனியாகத் தெரிந்தனர். முக்கியமான நிகழ்வுகளில் அவர்கள் ஒதுக்கப்பட்டனர். அந்த சடங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய சமூகம் உடைத்தது. அவர்களுக்கு பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை ஆண்கள் கொடுக்கின்றனர். இதனால் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர்.

 

கணவனை இழந்த பெரும்பாலான பெண்களின் தற்கொலையைத் தடுப்பது அவர்களுடைய குழந்தைகள் தான். தனியாக இருக்கும் ஒருவரை உடலால் மட்டுமல்லாமல் வார்த்தைகள் மற்றும் நடத்தையாலும் துன்புறுத்த முடியும். கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணுக்கு இது நடந்தது. அப்பா, மகன் என்று இருவரும் அந்தப் பெண்ணுக்கு துன்புறுத்தலை அளித்தனர். அவருடைய பெயரைக் கெடுக்கவும் தொடர்ந்து முயற்சித்தனர். திறமையினால் மட்டுமே நம்முடைய பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும். 

 

வரைதலில் அவருக்கு பள்ளிக் காலம் முதலே ஈடுபாடு இருந்ததால் அவர் அதை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று கூறினேன். அதற்கான வகுப்பில் அவர் சேர்ந்தார். அங்கு அவர் நல்ல பெயர் எடுத்தார். மனதளவில் நல்ல ஒரு நிலைமைக்கு அவர் வந்தார். வீடுகளில் வரையும் பணியை அவர் ஏன் மேற்கொள்ளக்கூடாது என்று நான் சொன்ன ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய இடத்திலிருந்தே அவர் வரைந்து கொடுக்கிறார். அவருடைய திறமை தற்போது ஒரு முதலீடாக மாறியுள்ளது. நிறைய சம்பாதிக்கிறார். 

 

தன்னை மிரட்டியவர்கள் மீது இப்போது அவருக்கு பயமில்லை. அதற்குக் காரணம் அவருடைய திறமையை அவர் உணர்ந்தது தான். தனியாக இருப்பவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு அவர்களுடைய திறமையை நிச்சயம் உணர வேண்டும். தங்களுக்குள் திறமை இருக்கிறது என்பதை அவர்கள் முதலில் நம்ப வேண்டும். நம்மிடம் பல திறமைகள் இருந்தாலும் அதில் சிறந்த திறமை எது என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு புதிய கதவு திறந்து, புதிய வாழ்க்கை ஒன்று உருவாகும்.