Skip to main content

30 வயசுல இண்டர்நெட்னா என்னன்னே தெரியாது... ஆனா இப்போ? - ஜாக் மா | வென்றோர் சொல் #5

 

jack ma

 

 

இண்டர்நெட்டா... அப்படினா என்ன??? என்னது... இ-மெயிலா... அப்படினா என்ன??? தன்னுடைய 30 வயதில் இப்படி கேட்ட ஒருவர் இன்று இணையதள வர்த்தக உலகின் முடிசூடா மன்னன் என்றால் நம்ப முடிகிறதா? சீனாவின் மொத்த ஆன்லைன் வணிகத்தை தன் கையில் வைத்திருக்கும் 'அலிபாபா' நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா தான் அவர். சீனாவைத் தவிர்த்து இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும் தன்னுடைய வணிகக் குடையை கணிசமான அளவில் விரித்து வைத்துள்ளது இவரது அலிபாபா நிறுவனம்.

 

உலை நெருப்பிலிட்டு நன்கு சுடப்பட்ட செங்கற்களைக் கொண்டு தான் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இங்கே ஜாக் மா சுடுசெங்கல் என்றால் அவரது வாழ்க்கை தான் உலை நெருப்பு. ஆரம்பப்பள்ளி தேர்வுகளில் இரண்டு முறை தோல்வி, நடுநிலைப்பள்ளி தேர்வுகளில் மூன்று முறை தோல்வி, கல்லூரி நுழைவுத்தேர்வுகளில் இரண்டு முறை தோல்வி, வேலை தேடிச்சென்ற இடங்களில் எல்லாம் நிராகரிப்பு, ஆசையாசையாய் தொடங்கிய 'china page' என்ற நிறுவனத்தை பொருளாதார நெருக்கடியால் இழுத்து மூடுதல் என அவரை எவ்வளவு சுட்டெரிக்க முடியுமோ அந்த அளவிற்கு சுட்டெரித்தது அவரது வாழ்க்கை எனும் உலை நெருப்பு. எவ்வளவு வலிமையான சுடு செங்கலினைக் கொண்டு அலிபாபா சாம்ராஜ்ஜியம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு  புரிந்திருக்கும்.

 

வாழ்க்கையில் தேடல் என்ற ஒன்று இருந்தால் எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும் வசப்படுத்திவிடலாம். இன்று பல இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் ஜாக் மாவிற்கு சிறு வயதிலேயே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற கனவும் அதை நோக்கிய தீவிர தேடலும் இருந்தது. தாய்மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் சீனாவில் அதை அடைவதற்கான வழிகள் சொற்பமாகக்கூட இல்லை. பின் சீனாவிற்கு சுற்றுலா பயணிகளாக வரும் மேலைநாட்டினருக்கு பயண வழிகாட்டியாக செயல்பட்டு ஆங்கிலம் கற்க தொடங்குகிறார். தன் தேவைக்கான வாய்ப்பை தானே உருவாக்கிக் கொள்ளும் திறமையும் ஆற்றலும் ஜாக் மாவிற்கு இளம் வயதிலேயே வாய்த்திருக்கிறது. தொடர் உழைப்பும், லட்சியத்தை நோக்கிய சரியான பயணமும் தான் அவரை உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது.

 

நிராகரிப்பையும், தோல்விகளையும் வழிப்போக்கர்களாக கொண்டிருந்த ஜாக் மா வெற்றி குறித்துப் பேசியது... “நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். 30 முறைகளுக்கு மேல் நான் நிராகரிக்கப்பட்டேன். போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, என்னுடைய உடல்வாகை காரணம் காட்டி நிராகரித்தார்கள். பின் KFC நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு மொத்தம் 24 பேர் சென்றோம். என்னை தவிர அனைவருக்கும் அன்று வேலை கிடைத்தது. வெற்றிக்கான முதல் படியே உங்கள் கனவுகளை உயிர்ப்போடு வைத்திருப்பதுதான். இன்றைய நாள் கடினமாக இருக்கலாம், நாளை அதை விட மோசமாக இருக்கலாம், ஆனால் சிறப்பான நாளொன்று அதற்கு அடுத்து இருக்கலாம். முயற்சியைக் கைவிடாதீர்கள். முயற்சியை பாதியில் கைவிடல் என்பதுதான் உண்மையான தோல்வி. இணைய பணபரிவர்த்தனைக்காக 'Alipay' என்ற ஒன்றை நான் உருவாக்கும்போது முட்டாள்தனமான ஒன்று என்றார்கள். இன்று 800 மில்லியன் மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர். உங்களுக்கு சரியென்று படுகிற விஷயத்தை செய்யுங்கள். தினமும் புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொண்டே இருங்கள்.” 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்