Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #13

 

 

tt

 

‘முட்டாள்’ என்ற வார்த்தைகளும் நீரஜ்ஜின் சாபமும் இணைந்து கொண்டதோ என்னவோ, ரதி டெக்ஸ்டைல்ஸின் வாசற்படி டைல்ஸ் தன் மடியில் மைக்கேலை வாங்கிக் கொண்டது. தன் கேபினின் ஜன்னல் வழியாக மதன் எட்டிப்பார்க்க கூடவே நீரஜ்ஜூன் கண்களும் சேர்ந்து கொண்டன. அவனின் உதடுகள் கோபத்திலும், அவமானத்திலும் நடுங்கிய மைக்கேலின் உடலைப் பார்த்து மீண்டும் ஒருமுறை ‘முட்டாள்’ என்று கூறிக்கொண்டன.
 
“யார் அவன்? உனக்குத் தெரியுமா நீரஜ்?”
 
நண்பன் சில மணித்துளிகளுக்கு முன்புவரையில் இந்த பகுதிக்கு நான் தேர்ந்த கமெண்டர்களில் ஒருவன். நேர்மை நியாயம் என்ற பேசிவிட்டு இப்போது அடிபடுகிறான்.
 
“பேசிப்பார்க்கலாமா?”
 
“வாய்பில்லை மதன் நான் நிறைய பேசினேன் அவன் எதற்கும் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை, நன்றாக வாழ்ந்து கெட்டவன். பாதிப் பட்டினியிலும் நாணயம் போகவில்லை.”
 
“நீரஜ், இம்மாதிரி ஆட்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள், இவர்களை இலகுவாக வளைத்து விடலாம்.” மதன் தன் இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினான். தயங்கித் தயங்கி தன் காயங்களையும் கலைந்த உடைகளையும் பார்த்தபடியே வெளியேறிய மைக்கேலை நோக்கி இருவர் ஓடினார்கள். மேலும் தன்னை தாக்க வருகிறார்களோ என்று பயந்த அவன் ஓட எத்தனிக்கும் போதே,
 
“ஸார், உங்களை எம்.டி. கூப்பிடறார்.” என்றான் வந்தவர்களின் ஒருவன். மைக்கேல் நம்பாமல் பார்க்க, ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டான். குளிர்பானம் ஐஸ்கட்டிகள் மிதந்து தரப்பட்டது.
 
“எடுத்துக்கோங்க, என்ன ஸார் எனக்குத்தான் தெரியாது. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாது நான் எம்.டிக்கு வேண்டியவன்னு, என் வேலைக்கே உலை வைக்கப் பார்த்தீங்களே தம்பி?!”
 
பவ்யமாய் அருகில் நின்ற அவரை வியப்பு தடவிய கண்களோடு பார்த்தான் மைக்கேல். சற்று நேரத்திற்கு முன்பு ‘வேலைக்கு சேர வந்த நாளே தாமதம் இதில் அட்வான்ஸ் வேற கேட்கிறே? இதென்ன உங்கப்பன் கட்டிவைச்ச கடையா’ன்னு, கேள்வி கேட்டு வார்த்தை முத்தி, அடித்து வெளியே விரட்டிய மனிதர். கிழிந்த பொட்டலம்போல் தூக்கி வீசியவர். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் மனிதர்கள்தான் சட்டென்று எத்தனை நிறம் மாறுகிறார்கள். மைக்கேல் ஏதும் பேசாமல் அமைதியாய் பார்த்தான். குளிர்பானத்தையும் தொடவில்லை.
 
அதே ஆசாமி, “சின்னவர் மேல கூப்பிடறார்.” என்று பவ்யமாக சொல்லிவிட்டு, ஒரு ஊழியருடன் முதல் மாடிக்கு அனுப்பினான். இதுவரையில் கண்களில் இகழ்ச்சியும் சக மனிதன் அவமானப்படுகிறானே என்ற அக்கறையின்றி உதட்டை கன்னத்தின் கடைக்கோடிவரை இழுத்து சிரித்த அனைவரின் கண்களிலும் இப்போது ஒருவித மரியாதையைப் பார்க்க முடிந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை.
 
பணம் சட்டைப் பையினை மீறி வெளியே எட்டிப்பார்த்தபோது,
 
“சார்... சார் என்ன வேண்டும்?”
 
“மச்சி அங்க போகணும்டா நீ?!” கார் கதவை பவ்யமாய் திறந்துவிட்டு, “வெல்கம் யூ” தலைசரித்து வணங்கியதும், பில்லுக்கு மீறிய டிப்ஸ்க்குகாக அடிவயிறுவரை சரிந்து வணங்கியதும், ‘இதெல்லாம் அந்த மோசமான நாளுக்குப் பிறகு, அப்படியே தலைகீழாக மாறிப்போனதே ஏன்? நான் இப்படி சபிக்கப்பட்டேன்.’
 
“சார் நீங்க உள்ளே போகலாம்...” மீண்டும் அதே பெரியவர்?! மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“ஹாய் மைக்கேல்?!” என்று மதனின் பின்னால் நின்று குரல் கொடுத்த ராஜீவ்வைப் பார்த்தவுடன் தனக்கு கிடைத்த மரியாதையை சட்டென்று புரிந்து கொண்டான் மைக்கேல். அன்று ஆரம்பித்த பழக்கம். இந்த இழிநிலையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறு இல்லைன்னு மனசுக்குள்ளே தோண ஆரம்பிச்சது.
 
“இரண்டு வருஷம் இப்படியே போச்சு அதற்குப்பிறகுதான் பிரச்சனையே?”
 
“அப்படியென்ன தொழில் பண்ணீங்க? கள்ளக்கடத்தலா?”
 
“இல்லை நவீன தொழில் நுட்பங்களோடு நூதனமா ஒரு திருட்டு.” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் மைக்கேல்.
 
தன் வீட்டின் முன்னால் வந்து நின்ற வேனைப் பார்த்து அம்மா அதிசயித்தாள், மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“இந்த பிரிட்ஜ், கேஸ் ஸ்டவ் எல்லாம் கிச்சன்லே வைச்சிடுங்க. அப்பறம் அந்த மர பீரோவை எடுத்துட்டு புது பீரோவை வைங்க. சோபா இங்கே சுவரோரமா இருக்கட்டும். டிவி கூட, செல்ப்பில் வேண்டாம் சுவற்றில் அடிச்சிடுங்க...” தன் முன்னால் நின்ற நான்கைந்து இளைஞர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் மைக்கேலை அம்மாவும், தங்கையுமாய் ஆர்வமாய் பார்த்தார்கள்.
 
“என்ன மைக்கேல் இது? அண்ணா புது டீவியா ஏதுன்னா காசு?”
 
“பிரண்ட் ஒருத்தனோட சேர்ந்து புதுசா தொழில் தொடங்கியிருக்கேன்.” வேலைகளை மேற்பார்வையிட்டபடியே சொன்னவன்.
 
“புது தொழிலா? மூலதனம் இல்லாம எப்படி மைக்கேல்?!” அம்மாவின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்துவிட்டு,
 
“உலகத்திலே எல்லாரும் கெட்டவங்களா இருக்கப் போவது இல்லைம்மா, நாம நல்லாயிருந்தப்போ நம்மால யாரோ ஒருத்தர் பயன்பட்டு இருப்பாங்களே அவங்களில் ஒருத்தன்தான் இவன். எப்படியோ நம்ம கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சு இன்னும் நல்ல லாபம் வந்தா சொந்தமா வீடு வாசல்லன்னு செட்டில் ஆகிடலாம் தங்கச்சிக்கு நல்ல இடத்திலே கல்யாணம் செய்யலாம். முதல்ல இந்தா பிடி இதிலே இருபத்தைந்தாயிரம் இருக்கு வீட்டுவாடகை கரண்ட் பில் எல்லாம் செட்டில் பண்ணு.” மைக்கேல் அம்மாவின் கரங்களில் திணித்துவிட்டு தங்கையிடம் ஒரு பார்சலைத் திணித்தான்.
 
“இனிமே கிழிந்ததை தச்சிக் கட்டிக்க வேண்டாம் ஐந்து சல்வார் இருக்கு அடுத்த மாதம் உன்கிட்டே பணம் தர்றேன். வேணுங்கிறதை வாங்கிக்க.” என்று புதியதாக கவர் பிரிக்கப்படாமல் இருந்த சோபாவில் அமர்ந்தான் மேலே உறையாய் இருந்த பிளாஸ்டிக் கவர் நசுங்கி சிணுங்கியது அவனின் மனதைப் போலவே?!
 
கண்ணாடித்தடுப்புகளுக்கு நடுவில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் மைக்கேல் அவனின் லேப்டாப்பின் தொடுதிரையில் பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளின் டேட்டா பேஸ். அவற்றை எடுத்து எக்ஸலில் அப்பலோட் செய்துவிட்டு, க்ரூப் கால் கனெக்ட் செய்தான்.
 
“உங்க மொபைல்ல நம்ம குரூப்-க்கு தகவல்கள் எல்லாம் அனுப்பியிருக்கேன் இன்னும் நாலைந்து நாளுக்கு இந்த டார்கெட்ஸ் எல்லாம் முடிக்கணும்.”
 
“எஸ் ஸார்.” என்ற பதில்கள் கோரஸாக வந்தது.
 
ராக்கேஷ் மைக்கேலை நிமிர்ந்து பார்த்தான்.
 
“எஸ் ஆன்-லைன் சூதாட்டம்தான் சம்பந்தப்பட்ட நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம் அவங்க ரெஸ்பான்ஸ்ஸை பொறுத்து வலை விரிப்போம். எங்களோட டார்கெட் பேராசைப் பிடித்த ஆசாமிகள்தான். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிச்சிட்டு வந்ததால தங்களோட தொலைபேசி இணைப்புகளை அதில் குறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அந்த தளத்தில் செயல்படறதுக்காக கேஷ்பேக், சில பரிசுக்கூப்பன்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்படும், இதே போல் மொபைல் நெட்வொர்க்கில் அவங்க நெம்பரை ஹேக் பண்ணிட்டா அவங்க பங்கேற்ற தகவல்கள் அந்த போனின் எண் எந்த இடத்தில் எல்லாம் லாகின் ஆகுன்னு தெரியும்.
 
உங்களுக்கு ஒரு ஆபர் இருக்குன்னு இரண்டு மெசேஜ் போகும், பார்க்கலைன்னா கவர்ச்சிகரமான குரலில் ஒரு பெண்ணை பேச வைப்போம். பாதிபேர் அதிலேயே மயங்கி விவரங்களை கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. எங்களோட சைட்டில் விவரம் கேட்பாங்க, டம்மியா சில கேள்விகள் கேட்போம். குழந்தை கூட பதில் சொல்வதைப் போல இலகுவா, பத்தாவது கேள்விக்கு பிறகு அவங்க எங்க லிங்கை அவங்க நண்பர்களுக்கும் குழுக்களுக்கம் ஷேர் பண்ணச் சொல்லுவோம். எல்லாம் முடிந்து இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு பெரிய பரிசை வின் பண்ணியிருக்கீங்கன்னு மெசேஜ் தருவோம். அந்த கங்கிராட்ஸ்க்கு மேல விழற கலர் பூக்கள் தான் நாங்க அவங்களுக்கு விரிக்கிற வலை.
 
இது ஏதும் தெரியாதவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வாங்க. ஐபோனும், லேப்டாப், காஸ்ட்லி திங்க்ஸ் வெறும் கேள்விக்கு பதில் சொல்லி கிடைச்சா யார் விடமாட்டாங்க. இந்த போட்டிக்கு உள்ள டிமாண்ட்ஸை அவங்களுக்கு புரியாத வியாபார வார்த்தைகள் மூலம் அனுப்பி சப்மிட் பட்டனை கிளிக் பண்ணா?! இந்த பரிசை இத்தனை மணி நேரத்தில் நீங்கள் வெல்லலாம் அதற்கு ஒரு 20ஆயிரம் 30 ஆயிரமின்னு பொருளோட விலைக்கு ஏத்தாமாதிரி டெபாசிட் பண்ண சொல்வோம்.
 
சில பேர் பண்ணிடுவாங்க, அவங்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் கால்வாசி கூட இல்லாத இந்த டெபாசிட் பெரிசா தெரியாது. சிலர் எஸ்கேப் ஆயிடுவாங்க அவங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். எங்க வெப்சைட்டின் தகவல்கள் அனுப்புவோம் பாருங்க இந்த சைட்டில் நாங்க இதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் ஒரு 50 அல்லது 60 ஐடி கிரியேட் செய்து ரிவ்வியூஸ் பதிவு செய்து அவங்க நம்பிக்கையை அதிகப்படுத்துவோம். பணம் வந்ததும் அந்த ஐடி எங்க ஆப்பில் இருந்து அன்கன்சிடர் பகுதிக்குப் போயிடும் சர்வரோட கனெக்ட் செய்யவும் முடியாம, பணத்தை இழந்தவர்கள் அதிகம்.”
 
“இது தப்புன்னு உனக்குத் தோணலையா மைக்கேல்?!”
 
“சரி தப்பைப் பார்த்தா நான் எப்படி பிழைக்க முடியும். அதிலும் நான் யாரை ஏமாற்றினேன் பேராசை பிடித்த மனிதர்களை எல்லாமே இலகுவா கிடைச்சிடும்ன்னு குறுக்கு வழியில் முயற்சிக்கிற மனிதர்களை அவர்களை ஏமாற்றுவது எனக்குத் தப்பா தெரியலை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. எல்லாம் என் ஏரியாவிற்கு வந்த புது இன்ஸ்பெக்டரை சந்திக்கும் வரையில்!
 
ஆன்லைன் சூதாட்ட ஏமாற்றத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்திட்டாங்கன்னு பேப்பரில் நீயூஸ் படிச்சதும் மேற்கொண்டு இதை தொடறணுமான்னு தோணிச்சி. இரண்டு மனசா நான் தவிச்சிக்கிட்டு நின்னப்போ போலீஸ் விரிச்ச வலைன்னு தெரியாம அவங்களுக்கு எங்க டீமில் உள்ள பையன் கால் பண்ணிட்டான் ட்ரேஸ் பண்ணி அவனைப் பிடிச்சி என்னையும் அதே நேரம், நான் என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருந்தேன்.
 
எத்தனை சுலபமா வளர்ந்தேனோ அத்தனை இழந்தேன் ராக்கேஷ், எல்லாம் காலேஜ் பசங்க அவங்க தப்பிக்க அப்ரூவர் ஆகி என்னை கை காட்டிடாங்க, நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். டிராக்டிங் ஐடி லாக் பண்ணலை, நீரஜ் தன் வரையில் தப்பிக்கணுன்னு கம்பி நீட்டிட்டான். தங்கச்சியோட கல்யாணம் நின்னுபோச்சு அவ தற்கொலை பண்ணிகிட்டா அந்த ஏக்கத்திலேயே அம்மாவும் எல்லாத்தையும் இழந்திட்டேன் ராக்கேஷ்.”
 
மைக்கேல் கதறி அழுதான்.
 
“ஜெயிலுக்கு வந்தபிறகு கூட எனக்கு பிரச்சனைகள் ஓயலை. நீரஜ் பற்றிய உண்மையைச் சொல்லக் கூடாதுன்னு ஒரே மிரட்டல். இங்கே யாரையும் நம்ப முடியலை, யாரைப் பார்த்தாலும் என்னை கொல்ல வர்றா மாதிரியே இருக்கு. எப்படியோ தப்பிச்சிகிட்டே வர்றேன். நீரஜ் பற்றி வாய் திறக்கலை எல்லாமே என்னோட பிளான்னு ஒத்துக்கிட்டேன். குற்றத்தை ஒப்புக்கிட்டதாலே தண்டனை கொஞ்சம் குறைஞ்சது.”
 
“ம்...ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சிக்கல்.” மைக்கேலின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தான் ராக்கேஷ்.
 
“எவன் குடிய கெடுக்க இன்னமும் கண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று லாட்டியில் கம்பியைத் தட்டியபடியே கன்னடத்தில் கேட்ட செக்யூரிட்டியைப் பார்த்துவிட்டு இருவரும் தங்கள் உறங்க எத்தனித்தார்கள். மனத்தைப் போலவே விழிகளும் மூடாமல் வெறித்தன.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !