Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #10

Published on 02/06/2022 | Edited on 03/06/2022

 

iraval ediri part 10

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

சுற்றிலும் செடிகளுக்கு நடுவில் வெயிலுக்குப் பயந்து நிழல் போர்வையைச் சுற்றிய பெண்ணைப் போல தனித்து ஒதுங்கியிருந்தது அந்த வீடு. வீரகுமார், ரிடையர்ட் ஏசி என்ற பெயர் பலகையைத் தாங்கியபடி இருந்த கதவுக்கு பக்கத்தில் அனாதையாய் நின்ற காலிங்பெல்லை அழுத்த, இரண்டு பறவைகள் எட்டிப் பார்த்து தங்கள் தனிமையைக் கலைத்து விட்டாயே என்பதைப் போல கோபமாக கத்திவிட்டு மீண்டும் குடிலுக்குள் புகுந்து கொண்டது.

 

கதவின் மினி டோர் சங்கிலியின் உபயத்தில் நாசூக்காய் விலக்கப்பட்டு அவள் முகம். பால் போல் அத்தனை வெண்மையான அம்முகத்தில் கருப்பாய் ஒரு ஸ்டிக்கர் தனியாய்த் தெரிந்தது செர்ரிப் பழத்தை ஒட்ட வைத்திருந்தாற் போன்ற இதழ்களைத் திறந்து,

“எஸ்” என்றாள்.

“மாறன் ஃப்ரம் சிபிஐ.... ஒரு கேஸ் விஷயமாக ஸாரைப் பார்க்கணும்.” என்றதும் சங்கிலியை நீக்கி கதவை அகலத் திறந்தாள். மிடியும் டாப்ஸூமாய் கல்லூரிப் பெண்மைத் தனம் காட்டினாலும் முகத்தில் ஒரு கம்பீரம் இருந்தது.

“உட்காருங்க அப்பா வருவாங்க.” என்று மாறனுக்கு இருக்கையைக் காட்டிவிட்டு, “அப்பா” என்ற அழைப்பின் நான்காவது நிமிட முடிவில் அவர் வெளிப்பட்டார். வழுக்கைத் தலை, சரிந்த தொந்தி என்று வழக்கமான போலீஸாக இல்லாமல் டிரிம்மாக இப்போதும் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர மனிதரின் தோற்றத்தில் வெளியே வந்தார் ஆரல்வாய் ஏசி வீரகுமார்.

“வெல்கம் மிஸ்டர் மாறன்.” என்று கை குலுக்கலை செலவழித்துவிட்டு, 

“என்ன சாப்பிடறீங்க என்றார் ?”

மாறன் மறுப்பதற்குள் லைம் ஜூஸ் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அந்த மிடியை நன்றியுடன் பார்த்தான் அவன்.

“நீங்கதானே அந்த குழந்தைகள் கிட்நாப் கேஸை விசாரிக்கிறீங்க ? என்ன இம்ப்ரூவ்மெண்ட் ?”

சொன்னான்.... லைம் ஜூஸிற்கு நன்றி சொல்லிவிட்டு “உங்ககிட்டே கொஞ்சம் பேசணும் ஸார்.”

“நோ பார்மாலிட்டிஸ். பை தி வே இது என் டாட்டர் மாயா. நம்ம டிப்பார்ட்மெண்ட் தான் சைபர் கிரைம். உங்க கேஸில் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.” என்று பேசிவிட்டு மாறன் பேசட்டும் என்று காத்திருந்தார்.

தன் சட்டைப்பையில் டெவலப் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டினார். “ஸார் சிறுவன் ரவி கடத்தப்பட்ட அன்று ஜஸ்டிஸ் சபேசன் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் ரொம்ப நேரமாக ஒரு கருப்பு காண்டஸா நின்று இருக்கு, இப்போதைய விசாரணையில் அது தெரிய வந்தது. பாதி மூடிய நிலையில் முன்சீட்டில் ஒருவனின் முகம் பதிவாகியிருக்கு இன்னொரு போட்டோவில் அரைகுறையா நம்பர் ப்ளேட், ஆர்.டி.ஓ வில் விசாரித்ததில் அது உங்க வண்டின்னு....” அவன் இழுக்க,

“மை காட்... மாறன் இது என் வண்டி நம்பர்தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம். தப்பு செய்யறவன் ஏதாவது ஒரு விதத்திலே தானே அறியாமல் ஒரு தப்பை செய்வான் சில கேஸில் அதுதான் நமக்கு லீட் பாயிண்ட்டா இருக்கும். என் கூட வாங்க...” 

 

அவர்கள் இருவரும் வீட்டின் பின்பக்கம் செல்ல அந்த மிடி டாப்ஸும் தொடர்ந்தது. அங்கே தன் ஷட்டரை நோக்கி சென்று அதை விலக்கினார் வீரகுமார். பெட்ரோல் வாசனை மூக்கை நிறைக்க, எத்தனை சுத்தமாக இருந்தாலும் என் வரவை நீ தடுக்க முடியாது என்று வம்பிழுப்பதைப் போல ஒரு எலி அவர்களின் காலைத் தாண்டி ஓடியது.

 

அங்கே மாறனின் புகைப்படத்தில் இருந்ததைப் போன்ற அதே கருப்பு காண்டஸா. புகைப்படத்தில் பார்த்ததற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

“உங்க போட்டோவில உள்ள நம்பர் ப்ளேட்டை காட்டுங்க.”  என்றார் வீரகுமார்.

 

வண்டியின் முன்பக்கமும் பின்பக்கமும் உள்ள நெம்பர் ப்ளேட்டுகளைப் பாருங்க என்றார். இரண்டிலும் எண்கள் ஒன்றுதான் ஆனால் ஒவ்வொரு வண்டியின் எண்ணிற்கு மேலும் அரசின் எம்பளமும் சின்ன உருவத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. 

“மாறன் இது என்னோட முதல் வண்டி, ரொம்பவும் ராசி பேவரைட் அதற்கு இணையாக நான் நேசிச்சது என்னோட டிப்பார்ட்மெண்டை... ஸோ இந்த வண்டியோட எண்ணில் சின்ன மாற்றம் ஸ்பெஷலா இருக்கும், தவிரவும் கிரிமினல் பயன்படுத்திய வண்டியில் காரின் கண்ணாடிகளில் பிளாக்ஷீட் ஒட்டப்பட்டு இருக்கு. கண்ணாடியின் பாதி திறந்திருந்த சைட் டோரில் அது தெரியுது பாருங்க. கவர்மெண்ட் ரூல்ஸ்படி வண்டியை எடுக்கலைன்னாலும், நான் கருப்பு திரைகள் ஒட்டவில்லை, கிரிமினல் இந்த இரண்டு விஷயத்தில் கோட்டை விட்டு இருக்கான்.”

“இன்னொரு விஷயமும் இருக்கு டாடி.” என்றாள் மாயா.

“என்ன ?” 

“மாறன் ஸார் கிட்டே இருக்கிற போட்டோவில் காரின் ஹெட்லைட்டுக்கு மேல கருப்பு நிறம் மூன்று லேயர்களாக பெயிண்ட் அடிக்கப்பட்ட அடையாளம் இருக்கு, இந்த காரோட உண்மையான நிறம் வேறயா இருக்கும் அவசரத்திலேயோ அல்லது அலட்சியமாகவோ இந்த வண்டியை கலர் மாத்தியிருக்காங்க. அப்போ இலேசா பெயிண்ட் வடிசல் இந்த ஹெட்லைட்டுக்கு மேல கோடுகளா வழிந்திருக்கு. அதை துடைக்காம விட்டதும் நமக்கு ஒரு ஆதாரம்.” மாறன் ஒப்புக் கொண்டதாய் தலையசைத்தான்.

“கிரிமினல்ஸ் உங்க வண்டியின் நிறத்தையும் நம்பர் ப்ளேட்டையும் பயன்படுத்தியிருக்காங்கன்னு நானும் ஊகித்தேன் ஸார். இருந்தாலும் தெளிவு படுத்திக்கொள்வது நல்லதுன்னுதான்... டோண்ட் மிஸ்ட்டேக் மீ சார்.”

“நோ...நோ... ஒரு போலீஸ்காரன் தன் சந்தேகத்தை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம் மாறன். நமக்கு விரோதிகள் அதிகம். ஒரு வகையில் எனக்கே தெரியாம நான் அவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விரோதியா இருந்திருக்கலாம். கார் எங்கேயிருந்ததுன்னு சொன்னீங்க ?”

“ஜஸ்டிஸ் சபேசன் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்!”

“அவர்கிட்டே விசாரிச்சீங்களா?”

“ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த வண்டியை பற்றி பெரிதா எந்தத் தகவலும் இல்லை ஸார். யாருக்கும் சரியா தெரியலை. அவங்க வீட்டுலே பாதுகாப்பிற்காக இருந்த சார்ஜன்கிட்டே விசாரிச்சேன். சிசிடிவி அன்றைக்கு பழுதாகியிருந்தாகவும் அதற்காக சர்வீஸ்க்கு ஆட்கள் வந்தாங்கன்னும், மறுநாள் சபேசன் அவர்களின் மகள் வளைகாப்பு இருந்ததால் விழா தொடர்பான பலவேலைகளில் இந்த வண்டி பற்றிய விவரம் தெரியலைன்னும் சொல்லியிருக்காங்க.”

“நோ.... நோ... ஒரு ஜஸ்டிஸ் வீட்டுக்குப் பக்கத்தில வண்டியை நிறுத்தியிருந்திருக்கான்னா நிச்சயம் அவங்க பார்வையிலே ஏதாவது வித்தியாசம் இருக்கும், நீங்க இன்னமும் கொஞ்சம் அந்த ஏரியாவில் ஆழமா விசாரிச்சா நல்லதுன்னு என் மனசுக்குப்படுது.”

“எஸ் ஸார். உங்க ஒத்துழைப்பிற்கு மிகவும் நன்றி, டிராபிக் டோல் ரூட் பிரகாரம் வண்டியோட கடைசி பதிவு சோலிங்கநல்லூரில் ஒரு சிக்னலில் கிடைச்சிருக்கு அங்கிருந்து வேற எந்த டோல்கேட்டிலேயோ, சிக்னலிலோ வண்டி நின்னதுக்கான அடையாளம் இல்லை. ஸோ அவனோட எண்டிங் பாயிண்ட் சோலிங்கநல்லூர். அங்கே ஸ்டேஷனில் பக்கத்துலே யாராவது இந்த வண்டியைப் பார்த்தாங்களான்னு விசாரிக்கச் சொல்லியிருக்கேன்.”

“நல்ல விஷயம் மாறன் உங்களுக்கு எந்த உதவி தேவைன்னாலும் எனக்குத் தகவல் தெரிவியுங்கள். எனக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் உதவி செய்யறேன்.” என்றார் வீரகுமார்.

 

அவருக்கும் மாயாவிற்கும் நன்றி சொல்லிவிட்டு தன் வண்டியை எடுத்தான் மாறன். எந்தப் பக்கத்தில் இருந்தும் ஒரு தெளிவில்லாததைப் போல இருந்தது அவனுக்கு.

 

மேகா அறையில் சுருண்டுப் படுத்திருந்தாள். உடல் நெருப்பாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. அதைவிடவும் மனது. பல வேறான குழப்பங்களில் அவள் தன்னை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றியது கெளரிக்கு. மேகாவிற்கென இரவு உணவிற்கு கஞ்சியைத் தயாரித்துக் கொண்டு இருந்தாள்.

 

வெதுப்பான சூட்டில் அதை எடுத்துக் கொண்டு மேகாவின் அறைக்குள் நுழைந்தாள் கெளரி. 

“மேகா எழுந்திரும்மா இந்த கஞ்சியைக் குடிச்சிட்டு படுத்துக்கோ.” என்றாள்.

“வேண்டாமே அண்ணி ?!” 

“மூச்...நல்ல காய்ச்சல். அங்கே போயிட்டு வந்ததில் இருந்தே நீ சரியில்லை, உன் மனசு எதையோ நெனைச்சு பயந்துகிட்டு இருக்கு. இது பெங்களூர் இல்லை, சென்னை. இங்கே உனக்கு ஒண்ணுண்னா ஏன்னு கேட்க நாங்க இத்தனை பேரு இருக்கோம். இன்னும் நீ அந்நியமாக உணரவேண்டாம் மேகா.”

“புரியுது அண்ணி ஆனா.....! அந்த பையனைப் பார்த்ததும் விஷ்வா நினைவுக்கு வந்திட்டது எனக்கு. அங்கே அவனும் இப்படித்தான் கவனிக்க ஆள் இல்லாம இருந்தான்.”

“அதான் சரியான நேரத்திற்கு வந்திட்டியே ? அத்தை, நான், எல்லாத்துக்கும் மேல உங்க அண்ணன்... இன்னும் என்ன பயம் உனக்கு. நாங்க இருக்கோம் மேகா உன்னைத் தாங்க. ஏதோ தனிமையிலே சில கெட்டப் பழக்கங்கள் விஷ்வாவுக்கு இருந்திருக்கலாம். ஆனா போகப் போக அவன் சரியாயிடுவான். பரிதி கூட சேர்ந்து படிக்க ஆரம்பிச்சாச்சு, ஓய்வு நேரங்களில் தாத்தாவோட வாக்கிங், அத்தையோட கோவில், உங்க அண்ணன் கூட அவுட்டிங்குன்னு அவன் இந்த ஒரு வாரத்தில தன்னோட ரொட்டீனை மாத்திக்கிட்டான். இப்போ அதிகமா மொபைலை யூஸ் பண்றதே இல்லை, ஆன்லைன் கிளாஸ் தவிர்த்து !”

“விஷ்வா மட்டும்தான் உன்னோட பயம்னா அதுக்கு மருந்து எங்ககிட்டே இருக்கு.” கஞ்சியைப் புகட்டிவிட்டு மாத்திரைப் பட்டையைப் பிரித்து ஒரு டோலோவைத் தந்தாள். 

“நல்லா தூங்கு காலையிலே பேசிக்கலாம். நாளைக்கு சண்டேதானே.”

“ஆமாம் பட் எனக்கு முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கு ?!”

“ஓய்வெடுக்கலாமே மேகா ?”

“இல்லைண்ணி என்னோட வெறுமையை நான் வேலையிலேதான் போக்கிக்க முடியும். வீட்டிலே இருந்தா பைத்தியமே பிடிச்சிடும்.” அவளுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவைத் தாழிட்டு தங்கள் அறைக்கு வந்தாள் கெளரி.

 

கேசவன் விழித்துக் கொண்டு இருந்தான். 

“என்னாச்சு இத்தனை நேரம்....?!”

“மேகாவுக்கு நல்ல ஜீரம் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டேன் வரலை. கஞ்சியும் மாத்திரையும் கொடுத்திட்டு வர்றேன்.?”

“மைகாட், நான் போய் பார்த்திட்டு வர்றேன். அங்கே டெத் வீட்டுக்கு வந்ததில் இருந்தே அவ சரியில்லை....” கிளம்பிய கணவனைத் தடுத்தாள் கெளரி.

“அவளோட பயத்துக்கு அதுவும் ஒரு காரணங்க.”

“அதுவும்னா வேற ஏதாவது இருக்கா?!”

“ம்... ஏற்கனவே விஷ்வாவோட நடவடிக்கைகளில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி, அந்த பையன் இறந்ததை விசாரிக்க மாறன் வந்திருந்தார். அவரை எதிர்பாராம பார்த்ததுதான் இந்த ஜீரத்திற்குக் காரணம்.”

“மாறனா ?”

“ம்... அவர் இவளைப் பார்க்கலை, மேகா மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிருக்காங்க, மாறனை வெளியே வெறுக்கிறா மாதிரி காட்டினாலும் உள்ளே அவரை அவ இன்னமும் மறக்கலை. தான் செய்தது தப்போன்னு அவங்களுக்குள்ளே விலகலைப் பற்றி இப்பத்தான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கா.”

“ம்...மாறன் ரொம்பவும் நல்லவர் கெளரி. மேகா ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸாண்டிங்கை பெரிசாக்கிட்டா. சின்ன வயசிலே இருந்தே அவளுக்கு பிடிவாதம் அதிகம். விளையாட்டுக்கு கூட ஏமாத்தினா அவளுக்குப் பிடிக்காது. இதே மாறனை வேண்டான்னு அப்பா சொன்னப்போ எத்தனை ஆர்க்கியூ பண்ணாத் தெரியுமா ?”

“நீங்க ஏன் மாறனைப் பார்த்துப் பேசக் கூடாது ? மாறன் நல்லவர்ன்னு சொல்றீங்க. மேகாவும் அவரும் இன்னமும் விவாகரத்து வாங்கலை, சட்டபூர்வமா இப்பவும் அவங்க கணவன் மனைவிதான். அவதான் கோபமா இருந்தான்னா நீங்க தலையிட்டு இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைத்திருக்கலாமே ?!”

“நான் அதுக்கான நிறைய முயற்சிகள் எடுத்தேன் கெளரி, மாறன் இறங்கிவந்தாலும் மேகா பிடிவாதமா பெங்களூர் கிளம்பிட்டா, அவ அங்கே போனதும்தான் பிரக்னென்ட்டா இருக்கிற விஷயமே தெரியும். குழந்தை பிறந்தப்ப கூட எங்களைக் கூப்பிடலை, அத்தனை பிடிவாதம். நானும் அம்மாவும் அவளைப் பார்க்க போனப்போ விஷ்வா பிறந்து முப்பதாவது நாள். கைக்குழந்தையோட தனியா இருக்க வேண்டான்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்.

 

தனக்கு குழந்தை பிறந்ததையோ நான் பெங்களூரில் இருப்பதையோ மாறனுக்கு தெரியப்படுத்தினா இங்கிருந்தும் போயிடுவேன், அப்பறம் உங்களுக்கு கூட நான் இருக்கிற இடம் தெரியாம போயிடுன்னு சொன்னா. அவளோட பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமா தளருன்னு நாங்களும் காத்திருந்து கடைசியிலே விட்டுட்டோம்.”

“மாறன் அதுக்குப்பிறகு வரவேயில்லையா ?”

“ஏன் வரலை ? எத்தனையோ முறை கேட்டார். என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறீங்களான்னு கத்தினார். ஆனா அவளோட பிடிவாதத்தைப் பற்றி சொன்னப்போ அவரும் ஒரு கட்டத்தில் அமைதியாயிட்டார். ஆனா விஷ்வாவைப் பற்றி இப்ப கூட நான் சொல்லலை.”

“தப்புங்க. இது சாதாரண சண்டைதான் யாரும் இறங்கிவரத் தயாரா இல்லை. சின்ன பிரிவு பேசத் தயங்கியே பெரிசாப் போய், பெரிய பிளவாகிப் போயிட்டது. விஷ்வா வளர்ந்திட்டான். பரிதி கூட நீங்க பேசும் போது விஷ்வாவின் முகத்தில் ஒரு வலியைப் பார்க்க முடியுது. இந்த சின்ன வயசிலே இது தேவையா ? மறுபடியும் உங்க தங்கச்சிகிட்ட பேசி புரயோஜனம் இல்லை. ஏன்னா இன்னைக்கு மாறனைப் பார்த்ததைக் கூட அவ என்கிட்டே சொல்லலை. ஆனா மாறன்கிட்டே பேசலாம். நீங்க நேசிச்ச மனைவி உங்க வாரிசு இத்தனை வளர்ந்து நிக்கிறான்னு! பிள்ளைக்காகவாவது இரண்டும் பேரும் மனசு மாற வாய்ப்பிருக்கு.”

 

கேசவன் ஒருமுறை யோசித்துவிட்டு சரி என்பதைப் போல தலையசைத்தான்.

 

தொடரும்...

-லதா சரவணன்