ADVERTISEMENT

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #05

06:40 PM Apr 08, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

விஷ்வாவுக்கு எல்லாமே புதுசா இருந்தது. சென்னையின் பரபரப்பு அவனுக்குப் பிடித்துப் போய் இருந்தது. அதிலும் தாத்தா பாட்டியின் வீடு. வந்து முழுவதுமாக ஒரு நாள்தான் ஆகியிருந்த போதிலும், அவர்களின் அரவணைப்பும் கொண்டாட்டமும் அவனுக்குப் பிடித்திருந்தது.

வெகு யோசனையோடுதான் விஷ்வாவிடம் பேச்சைத் தொடங்கினாள் மேகா. ஒரு ஐஸ்கீரிம் பார்லரில் அவனுக்கு பிடித்த மேங்கோ பிளேவரில் டாப்பிங்ஸைச் சேர்த்துக் கொண்டு ஒரு விள்ளல் வாயில் போட்டபடியே அதன் குளிர்ச்சியை அனுபவித்தவனிடம், “நாம சென்னைக்கு பாட்டி வீட்டுக்குப் போய் தங்கப்போகிறோம்.” என்று சொன்ன அம்மாவை ஒற்றைப் புருவம் தூக்கி வியப்பாய் பார்த்தான் மகன்.

விஷ்வாவின் உயரமும், தீர்க்கமான கண்களும், இப்போது பூக்கத் தொடங்கியிருக்கும் பூனை மீசையும், ஒன்பதாவது படிக்கும் மாணவன் என்பதையும் கடந்து இளைஞனைப் போன்ற கம்பீரத்தைக் காட்டியது. எத்தனை முயற்சித்தும் மாறனை நிமிடத்துக்கு நிமிடம் நினைவூட்டினான்.

“என்னோட அப்பா அம்மா, அண்ணா அவங்க குடும்பம்ன்னு நம்ம வீட்டுக்குப் போகிறோம் விஷ்வா.”

“அப்போ இதுநாள் வரையில் நாம இருந்தது.”

“நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே நான் பெங்களூர் வந்துட்டேன். இத்தனை வருஷமா வீடு, வேலைன்னு நாட்கள் றெக்கை கட்டி பறந்துபோச்சு. உன்னோட தனிமை என் கண்களுக்குத் தெரியாம நான் வாழ்ந்திட்டேன். என்னை மாதிரிதான் நிறைய பெத்தவங்க வீடு முழுக்க பொருட்களை நிறைச்சிட்டாலே பிள்ளைகள் சந்தோஷமா வாழ்ந்திடுவாங்கன்னு நினைச்சிடறாங்க. நான் உன்னை வேணுன்னு தனிமையில் விடலை விஷ்வா. நம்மோட எதிர்காலம் என்னை பயமுறுத்தி இருந்தது. என்னை நிரூபிச்சே ஆகணுங்கிற வெறி உந்தித் தள்ளுச்சு. எத்தனை வலிகளைத் தாண்டி நான் இந்த உயரம் தொட்டு இருக்கேன்னு உன்னால புரிஞ்சி முடியாது விஷ்வா.”

ஒரு ஆண் தன்னோட வெற்றியில் தலைநிமிர்ந்து நிற்கும்போது அவன் தங்களுடன் செலவழிக்காமல் விட்டுப்போன நிமிடங்களை குடும்பம் குத்திக் காட்டுவதில்லை, மாறாக வரவேற்கிறது. அதற்கு குறையாத அத்தனை வசதிகளையும் செய்து தந்து ஒரு பெண் தன்னோட வெற்றியின் இலக்கை எட்டி தலைநிமிரும்போது பெற்றோர்களும், அவளின் குழந்தைகள், குடும்ப உறவுகள்னு இதையெல்லாம் ஒழுங்கா கவனிக்காம என்ன பெரிய வெற்றின்னு அவளோட தலையையை தங்கள் வார்த்தை கரங்களால் தெரியாமலே அழுத்திவிடறாங்க. எப்போதும் ஒரு குற்றவுணர்ச்சியோடயே பெண்களை வைத்துக் கொள்வதில் சமூகத்திற்கு ஒரு அலாதி இன்பம்.

“உன்னோட வெற்றியில் நான் சந்தோஷப்படறேம்மா! உன்னை தலைகுனிய வைக்கணுன்னு நான் நினைக்கலை. சராசரியா கிடைக்காத சில நிமிடங்களைத்தான் சொல்றேன். 'அப்பா' அப்படிங்கிற வார்த்தைக்கு நிழலாய் கூட நீ அர்த்தம் தந்தது இல்லையே. நான் இதுவரையில் உன்னைக் கேட்கலை. தனியா இருந்தாலும் வெறுமை மட்டும்தான் எனக்கு இருந்தது. ஆனா சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகும் போது அவர்களுடைய கேள்விகளையும் பரிதாபமான பார்வைகளையும் சந்திக்கிற நிலைமை வந்திடுமோன்னு பயமா இருக்கு.”

“இல்லை விஷ்வா, நிச்சயமா அவங்க அப்படி நடந்துக்க மாட்டாங்க. என் வாழ்க்கை நான் எடுத்த முடிவு கஷ்டமும் நஷ்டமும் என்னை மட்டும்தான் சேருன்னு நீங்க அதில் தலையிட வேண்டாம்னு நான் சொன்னதுக்காகவே இத்தனை நாள் ஒதுங்கியிருந்தவங்க. நிச்சயம் நம்மை புண்படுத்த மாட்டாங்க. உனக்கு ஒரு குடும்பத்தை தர விரும்பறேன் விஷ்வா ?

“அப்போ என்னை முன்னிருத்திதான் இந்த சென்னை மாற்றலா ?”

“அதுவும் ஒரு காரணம். ஆனா எனக்கே என் பெற்றவள் மடியிலே விழுந்து அழணும் போல இருக்கு. எத்தனை வயசானாலும் நான் அவங்களுக்கு குழந்தைதானே !” மேகாவின் கண்களில் நீர் உருண்டோடியது.

“சரி, ஸ்கூல் ?”

“உங்க HM கிட்டே பேசினேன். இரண்டுமாசம்தானே பேசாம போர்டிங்கில் சேர்த்திட சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. யாரையும் பிரிந்திருக்கும் மன திடம் எனக்கு இல்லை விஷ்வா. அதனால ஆன்லைன் கிளாஸ் எடுத்துக்கறேன்னு எழுதி தந்திட்டேன். எக்ஸாம்ஸ் மட்டும் எழுத பர்மிட் வாங்கிட்டேன். கூடுமான வரைக்கும் நமக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைச்சிக்கலான்னு தோணுச்சி ! நாளை இரவு பிளைட் அதுக்குள்ளே உன் திங்க்ஸ் பேக் பண்ணிக்கோ ?!”

“உங்க வேலை ?”

“சென்னையிலே மாற்றல் வாங்கியாச்சு ?!”

“சரிம்மா” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் பிள்ளை.

இதோ வந்து இறங்கி இரண்டு நாட்களாகவே விஷ்வாவின் முகத்தில் எப்போதும் படிந்திருக்கும் இறுக்கம் சற்றே தளர்ந்தாற்போல தெரிந்தது மேகாவிற்கு.

“எங்க செல்லம்” என்று முதல்நாளே திருஷ்டி எடுத்து கட்டிக் கொண்ட பெரியவர்கள்.

“விஷ்வா இப்போ ரெஸ்ட் எடு நைட்டு பீச் வரைக்கும் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்.” என்ற மாமாவும், “உனக்கு என்ன பிடிக்குன்னு சொல்லுப்பா இன்னைக்கு அதுதான் மெனு.” என்ற அத்தையின் அரவணைப்பும். தன்னைவிட ஒரு வயது சிறியவனான மாமாவின் பையன் அஸ்வினின் குறும்புத்தனமான ஸ்நேகமும் அவனை திக்குமுக்காட வைத்தது.

காலையில் சமைத்த உணவு டப்பாவில் அடைக்கப்பட்டு திறக்கும் போது பாக்ஸின் வாசனையும் உணவு வாசனையும், சூடான வைக்கப்பட்டதால் எப்போதுடா திறப்போம் என்று காத்திருந்து மூடியிலிருந்து வெளிவரும் நீராவித்தண்ணீரும் பலநேரங்களில் முகம் சுளிக்க வைக்கும். மாலையில் ஆயா வெந்நீரில் கொஞ்சம் பால் சேர்த்தாற்போல எதையோ அரைச்சூட்டில் குடிக்க கொடுப்பாள். மேகா தன் இரவு உணவையும் பெரும்பாலும் அலுவலகத்திலேயே முடித்துவிட்டு வந்துவிடுவதால், இரவிலும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் தான். சுடுநீரில் நனைத்து அடுப்பில் ஏற்றி இறக்கும் வேலை. உப்பும் உரப்பும் இன்றி தட்டில் நிரப்பி அவன் முன் வைத்துவிட்டு டிவி சீரியலில் மூழ்கிப் போகும் ஆயா.

இங்கோ தட்டில் பொன்னிறமாய் உப்பலாய் விழும் பூரி, மணக்கும் மசாலா இட்லி, தொட்டுக்கொள்ள வெரைட்டியான சட்னி வகைகள் என்ற வயிறையும் அன்பான அவர்களின் கவனிப்பு மனசையும் நிறைத்தது. ஐந்து மணிக்கு எழுந்து டிராக்கும் ஷூவுமாய் “மாமா கூட ஜாகிங் போறேன்.” என்று அண்ணனுடன் கிளம்பும் மகனை ஆச்சரியமாய் பார்த்தாள் மேகா. அவன் முதல் இணைந்த ஆண் ஸ்நேகம். இதையெல்லாம் தன் தந்தையாய் பிள்ளைக்கு தர வேண்டியவன் எங்கோ தொலைவில். இப்போதும் அவனுக்கு அவன் தொழிலே பிரதானம். தன்னையே கூட இரண்டாம் பட்சமாய்த்தான் வைத்திருப்பான்.

மீண்டும் செக்குமாடாய் மாறனிடம் நின்றது மனம். இப்போது என்னைப் பார்த்தால் என்ன செய்வாய் மாறா ? முகம் திருப்புவாயா ? அல்லது என் உயரம் பார்த்து வியப்பாயா ? இதைப் பெறத்தான் என்னை பிரிந்தாய் என்று குத்திக் காட்டுவாயா ?! எனக்காக இல்லாமல் போனாலும் விஷ்வாவிற்காகவாவது நான் உன்னை சகித்திருக்க வேண்டாமோ ? அவளுள் பல கேள்விகள். ஆனால், இறுதியாக மாறனுக்கு விஷ்வா என்ற ஒருவன் இருக்கிறான் என்பதையே அவள் இன்னமும் தெரியப்படுத்தவில்லை என்பதை உணர்ந்த போது சோர்ந்து போனாள் மேகா.

கமிஷனர் அலுவலகம். அந்த நான்கு ஜோடிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் சோகம் அப்பிக் கிடந்தது. மாறன் தன் அழுத்தமான காலடிகளுடன் அவர்களைக் கடந்து கமிஷனரின் அறைக்குள் நுழைந்து சல்யூட் வைத்தான்.

“மாறன் காணாமல் போன நாலு பிள்ளைகளின் பேரண்ட்ஸ் வந்திருக்காங்க. உங்ககிட்டே பேசணுமாம்.”

“நானே அவர்களை நேரில் சந்திக்கலான்னு யோசிச்சிருந்தேன் ஸார். இறந்துபோன இரண்டு பிள்ளைகளோட பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. அதைப்பற்றி உங்ககிட்டே பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“இறந்து போன இரண்டு சிறுவர்களும் கொடுமையான சயனைடு எடுத்திருக்காங்க. அவங்க மரணம் அதனாலதான் சம்பவிச்சியிருக்கு.”

“சயனைடு. ஆனா சின்ன பசங்களுக்கு அது எப்படி கிடைக்கும். நான் உங்க வீட்டுலே பார்த்த பையன் நம்ம முன்னாடி ஏதும் உட்கொள்ளலையே ?”

“இறந்த சிறுவர்கள் இரண்டுபேருமே தங்களோட தொண்டைப் பகுதியில் புரூசிக் அமிலம் கலந்துள்ள திடமான ஒரு சின்ன கற்பூர வில்லை சைசில் சயனடையை வைச்சிருந்திருக்காங்க. அவங்களோட சுவாசம் ஏற்படற பக்கத்தில் சிறிய அளவுலே தெர்மோக்கோல் வைக்கப்பட்டு இருக்கு அதன் உட்பகுதியில் ஒரு பாலீத்தீன் கவர்ல ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டிருக்கு. பாக்ஸை திறக்கும்போது நாம கேட்ட சப்தம் தெர்மாகோல் உடைந்து ஆக்ஸிஜன் வெளியேறியதால் வந்தது.”

“இந்த சயனைடு காற்றில் வேகமாக ரியாக்ட் பண்ணக் கூடியது. கிளச் விலகியதும் எட்டிப்பாக்குற தோட்டாபோலத்தான் இங்கே விசை உடைந்த தெர்மாகோல், வரவேற்கிறேன் என்ற வார்த்தை மூலம் காற்று அவர்களின் தொண்டைப் பகுதியில் கரையக் காத்திருந்த புருசிக் அமிலத்தை அவங்களோட உமிழ்நீரில் நிமிஷ நேரத்தில்தான் கரைய வைத்து அது இரத்தம் வழியா பயணிச்சு அந்த சிறுவர்களோட இதயத்தைப் பதம்பார்த்து இருக்கு. கத்தி இரத்தம் இல்லாத ரொம்ப கொடூரமான மரணம் சார் இது.”

“மை காட்....வந்திருக்க பேரண்ட்ஸ்க்கு இது தெரியுமா ?”

“தம் பிள்ளைகள் இறந்தது விஷங்கிறது அவங்க தெரிவிக்கப்பட்டு இருக்கு. ஆனா எந்தமாதிரியான விஷம்னு அவங்களுக்கு சொல்லப்படலை. இதைவிடவும் மோசமான ஒரு விஷயம் இருக்குன்னு பிரேதப்பரிசோதனை டாக்டரும், பாரன்சிக் ஆபிசரும் சொல்லியிருக்காங்க. அதைப் பற்றி விவாதிக்க அவங்க இங்கே வர்றாங்க.”

“இதுவே அதிகம்தான் இதைவிடவும் என்ன இருக்க முடியும். மாறன் இந்த கேஸ் இன்னும் மோசமாக மாறுவதற்குள் குற்றவாளிகளைப் பிடிக்கணும்.”

“சைபர்கிரைமில் பேசியிருக்கிறேன் ஸார். அந்த சிறுவர்களின் ஃபோன் இதுவரையில் ஆஃப்லதான் இருக்கு. அது ஆன் பண்ண அடுத்த செகண்டே நமக்கு மெசேஜ் வரும். லேண்ட் மார்க் கண்டுபிடிக்கலாம். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க நான் எப்படியாவது கண்டுபிடிச்சிடறேன்.”

“மாறன் எல்லா உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன். அசிஸ்டெண்ட்ஸ் யாராவது வேணுமா?”

“இந்த கேஸ்லே இன்ஸ்பெக்டர் சக்ராவோட குறுக்கீடுகள் நிறைய இருக்கு. மனுஷன் நல்லவிதமாகவும் தெரியலை, நிறைய கரும்புள்ளிகளை சுமக்கிறார். அதே ஸ்டேஷன்லே எஸ்.ஐ. வேந்தன் சரியா வருவார்ன்னு நினைக்கிறேன். ஏன்னா கேஸ் பைல்ல நேரடி விசாரணையை அதிகம் செய்தது வேந்தன்தான். அவருக்கு நல்ல நாலெட்ஜ் அண்ட் இன்ட்ரஸ்ட் இருக்கு.”

“ஒகே... மாறன் டாக்டர்ஸ் வர்றதுக்குள்ளே நாம பேரண்ட்ஸை சந்திச்சிடலாம்.” கமிஷனரும் மாறனும் வெளியே ஹாலுக்கு வந்தார்கள். மாறனைப் பார்த்தவுடனேயே இறந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அழ ஆரம்பித்தார்கள். மற்றவர்கள், “சார் எங்க பிள்ளைங்களோட நிலைமை என்னன்னு தெரியலை. எப்போ என்ன செய்தி வருமோன்னு பயமா இருக்கு.”

“நிச்சயமா என்னை நம்புங்க. இந்தக் கடத்தலுக்கு காரணம் பணமா இருந்தா இந்நேரம் உங்களுக்கு திரெட்னிங் கால் வந்திருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் அவனோட மோட்டிவ் என்னன்னு கண்டுபிடிப்பதில் தீவிரமா இருக்கோம். உங்க பிள்ளைகளோட செல்போன் சிக்னலும் கிடைக்கலை, எல்லா வழியிலேயும் முயற்சி செய்கிறோம். உங்க சைடில் இருந்தும் எனக்கு உதவிகள் தேவைப்படும்.”

“சொல்லுங்க ஸார் நாங்க என்ன செய்யணும் ?” கேட்ட அவரின் பாக்கெட்டில் இருந்து ஒலி எழுப்பியது எடுத்துப் பார்த்தவர் அணைத்தார். “எங்களுக்கு எங்க பிள்ளைங்க உயிரோட கிடைச்சாப் போதும்.” அவர்களின் குரல் அழுகையில் இறங்கினார் மீண்டும் அவரின் செல்போன் ஒலித்தது?

“கவலைப்படாதீங்க நான் நிச்சயம் என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்.”

“என்ன விசாரிச்சு என்ன ஸார் ஆகப்போகுது. எம்பிள்ளை போனது போனதுதானே ! மீதி இருக்கிற பிள்ளைகளையாவது கண்டுபிடிங்க. ஒத்த புள்ளை சார். கல்யாணமாகி ஆறுவருஷம் தவமிருந்து பெத்த பிள்ளை பொணமா தூக்கிட்டுப் போடான்னு பொட்டலம் கட்டி கொடுத்தாங்க. நாங்க யாருக்கு எந்த கெடுதல் சார் செய்தோம்.”

“ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.” என்று மாறன் அவரை ஆறுதல்படுத்தினான் மீண்டும் அந்த மனிதரின் ஃபோன் ஒலித்தது.

“ஏதாவது முக்கியமான காலா இருக்கப்போகுது பேசிடுங்க.” மாறன் சொல்ல எடுத்து பேசியவரின் முகம் பிரகாசத்திற்குப் போனது. “என்னது உண்மையா ? எப்போ ? இதோ உடனே உடனே வந்திடுறேன்.” அவரின் பதட்டம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ள,

“சார் சார் என் பையன் வீட்டுக்கு வந்திட்டான். சார் இப்பத்தான் பக்கத்து வீட்டுக் காரங்க ஃபோன் பண்ணாங்க நான் நான் வர்றேன் சார்.” என்று அவர் கிட்டத்தட்ட ஓட, மாறனும் கமிஷனரிடம் தலையசைத்துவிட்டு வாசலுக்கு ஓடினான்.

-தொடரும்

-லதா சரவணன்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT