Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #14

Published on 25/07/2022 | Edited on 04/08/2022

 

iraval edhiri

 

வெல்கம் டூ அலைகள் நியூஸ் சானல் நான் உங்கள் ஷோபா இன்னைக்கு நாம பேசப்போறே விஷயம் அவசியமானது மட்டுமல்ல கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட, இக்கட்டான ஒரு காலகட்டத்தை கடந்து வந்தாலும் அதோட வடுக்கள் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் பொருளாதாரம், மனசிதைவு, சிறுதொழில் இழப்புன்னு நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நம்ம எல்லாருக்கும் பெரிய சவாலா அமைந்த பல விஷயங்களில் ஒன்று ஆன்லைன் பள்ளிக் கல்லூரிப் படிப்புகள்.

 


அதை பேஸ் பண்ணி ஆன்லைன் அலப்பறைகள்ன்னு நிறைய வீடியோஸ் நகைச்சுவையா வந்தாலும் உண்மையில் இந்த ஆன்லைன் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எதை அவர்கள் கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட பெற்றோர்கள் 
மன அழுத்தத்திற்கு நிறைய மாணவர்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் பிரபாகர் அவர்கள் வணக்கம் சார்.

 

பிரபாகர் அந்தக்கால கமலஹாசனை நினைவு படுத்தினார். வசீகரக் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்திருந்தாரோ என்னமோ ?! அடிக்கடி அதை மூக்கின் மேல் தூக்கிவிட்டு கொண்டது கூட ரசனையாய் இருந்தது. 

 

வணக்கம் என்று கேமிராவைப் பார்த்து கையை குவித்தவர். ஷோபாவைப் பார்த்து பேச ஆரம்பித்தார். எதையும் தொட்டு உணரும் நிலை உன்னதமானது இல்லையா ?! பல வார்த்தைகள் பேச முடியாத விஷயத்தை ஒரு மெளனமும் தொடுதலும் கொடுத்துவிடும் ஆனா ஆன்லைன் கலாச்சாரம் உள்ளே நுழைந்ததும், எல்லாம் மாறிப்போனது. ஒரு பெட்டிகடையை எடுத்துக்கோங்க அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அந்தக் கடைக்காரருக்கு தெரியும், இன்றைய கூகுள் மாதிரி எந்த வீட்டில் யார் இருக்காங்க என்ன செய்யறாங்கன்னு நிறைய தகவல்கள் மனிதர்களைப் படித்து வைத்திருந்தாங்க ஆனா எல்லாமே ஆன்லைன் ஆனபிறகு, நான் ஆன்லைனில் வாங்கினேன் இப்போ எல்லாம் நேரா யாருப்பா நேரத்தை செலவு பண்ணிட்டுப் போறாங்க ரிலாக்ஸா எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்றது எத்தனை செளகரியம்ன்னு பேசறது பெரிய பேஷனும் கெளரவமும் ஆகிட்டது. 

 

இப்போதைக்கு உலகமே இதில் தான் இயங்கிட்டு வர்றது இந்த வசதிகள் தப்புன்னு சொல்றீங்களா ஸார் ?

 

விஞ்ஞானம் வளரவளர மனிதம் சுருங்குது பார்த்தீங்களா ? வெறும் தொடுதிரையில் ரசிக்கும் பழக்கம் விடுத்து நாலு கடை ஏறி இறங்கி காய்கறியோ பொருளோ வாங்குங்க அங்கே எத்தனை வார்த்தைகள் வலம் வரும். நம்மையும் அறியாம எத்தனையோ கற்றுக் கொள்ளலாம் ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரம் இருக்கலை. அதனாலதான் வளரும் சமுதாயம் வெளிப்படையா பேச தயங்குது. தனக்கு என்ன வேணுன்னு கூட கேட்கத் தெரியாத மனித குலம் உருவாகுது. அதைச் சுற்றிலும் விளம்பர விரல்கள் ஆக்கிரமிக்கிறது. என் தேவைகள் அடுத்தவனின் விருப்பமாக போகிறது. அப்பா அம்மா சொன்னா அநேக விஷயங்களில் எதிர்த்துப் பேசும் பிள்ளைகள் முகம் தெரியாத யாரோ ஒருத்தர் சொன்னா இதுதான் எனக்கானதுன்னு சட்டுன்னு எடுத்துக்கிற அளவுக்கு அவங்களைப் பழக்கப்படுத்தி வைச்சிருக்கு இந்த இணைய உலகம்
சரியா சொன்னீங்க சார் ? இதனால என்ன பாதிப்புகள் வருது.

 

இப்போதைக்கு பாதுகாப்பு நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளேயேதான் யாரும் யாரையும் கண்காணிக்க முடியாது தனி மனிதனோட ஒழுக்கம் மட்டும்தான் அவர்களை சீர்படுத்தும் கத்தியின் முனை கூர்மையாத்தான் இருக்கு அதன் பாகத்தின் பாதுகாப்பினை நாம உணர்த்தணும் அங்கே தவறுவதால்தான் நிறைய காயங்களை உள்ளே எடுத்துக்கிறோம். கண்பார்வைகள் கோளாறு அதிகமாகுது. நிறைய பிள்ளைகள் வாதத்தினால் பாதிக்கப்படுவதாக ஆர்த்தோ டாக்டர்கள் சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடி அடிபட்டு கத்துக்க வேண்டியவைகளைக் கூட இப்போ திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு கற்பனையிலேயே வாழ்க்கை அமைவது அவர்களின் புலன்களை மட்டுமல்ல மனதையும் மந்தப்படுத்துகிறது. 

 

சமீப காலமா மாணவர்களின் தற்கொலை செய்திகள் அங்கொன்னும் இங்கொன்னுமா படிக்கிறோம், நான்கு பேர் காணாமல் போயிருக்காங்க இப்படி எத்தையோ பிரச்சனைகள் இதுக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும் ஸார். 

 

மறக்கமுடியாத இணைப்புகளை நாம பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தாச்சி, தவறுகளை இலகுவாக கத்துக்க சந்தர்ப்பங்களை வலைவிரிச்சி கொடுக்கிறோம். அவர்களுக்கு அக்கறையும், அன்பையும் கொடுக்கணும். இயந்திரங்களை விடவும் அப்பாவும் அம்மாவும் நமக்கு அநேக அன்பைத் தருவாங்கன்னு உணர வைக்கணும். கண்காணிப்பது தெரியாமயே அவங்க தப்பைச் சுட்டிக் காட்டணும். உண்மையைச் சொல்லணுன்னா அப்பாஅம்மாக்கு பயந்தாற்போல நாம பெத்த பிள்ளைகளுக்கும் பயப்படும் ஜெனரேஷன் நாமகாத்தான் இருப்போம். 

 

ரொம்ப அழகா சொன்னீங்க சார் ? நீங்க சொன்னாற் போல விளம்பரங்கள் இலவசங்கள் கவர்ச்சியான அறிவுப்புகள்னு எல்லாம் விற்பனை மயமாகவே போயிட்டது. யாரை எப்படி பயன்படுத்தலான்னு யோசிக்கும் மனநிலைக்கு எல்லாரும் வந்தாச்சு. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு விளம்பர அறிவிப்பினைக் கேட்டேன். வளர்ந்து வரும் மாலில் ஒரு கேம் கம்பெனி தன்னோட கிளைகளை திறக்கிறாங்க. மாணவர்கள் தான் அவர்களின் டார்கெட். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மாதிரி அறிவிச்சியிருக்காங்க. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, கேம் ஷோல நிறைய பரிசுகள் இருக்காம். ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் கோலோச்சிக்கிட்டு இருக்கும் போது இந்த அறிவிப்பின் தாக்கம் எப்படியிருக்குன்னு நாம அடுத்த வீடியோவில் பார்க்கலாம் அதுவரையில் சைனிங் ஹாப் ஷோபா மற்றும் நம்ம வேலியபுள் கெஸ்ட் மருத்துவர் பிரபாகர் அவர்கள். திரை அணைக்கப்பட்டது. 

 

எங்கே ஆரம்பிக்க போறாங்க ? அந்த வீடியோகேம்.

 

மாயா தன் மொபைலை உயிர்ப்பித்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள். மாறன் அதை கவனித்தான். இந்தவாரம் நாம இங்கே போகணும் மாயா. 

 

ஏன் ஸார் ? ஸாரி சார் கூப்பிடவேண்டான்னு சொன்னீங்க இல்லை, ஏன் மாறன் ?

 

ஜஸ்ட் பார்க்கணுன்னு தோணுது. என் உள்ளுணர்வு எச்சரிக்கிறது நிச்சயம் அங்கே ஏதாவது ஒரு லீட் கிடைக்கலாம். மாயா இப்போ நாம போற இடம் சமீபத்திய துக்கத்தை விழுங்கியிருக்காங்க கொஞ்சம் பார்த்துப் பேசணும்.

 

என்னோட பேச்சு உபகரணங்களோடதான். அதனால் நீங்க கவலைப்படவேண்டாம். கார் அந்த காம்பெளண்டை தொட்டது. 

 

மாறன் அந்த வீட்டின் வாயிற்படியில் சற்றே தயங்கித்தான் நின்றிருந்தான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பெரும் மனக்குழப்பம் எழுந்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு வாசல் முழுவதும் குத்தகைக்கு எடுத்திருந்த காலணிகள் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தன. வீடு பிடிக்காத ஒரு மெளனத்தைப் பூசிக் கொண்டு இருந்தது. 

 

 

பக்கத்து பிளாட் பெண்மணி மெல்ல எட்டிப்பார்த்து மாறனைக் கண்டதும் சட்டென்று தலையை இழுத்துக் கொண்டாள். தனக்கேன் வம்பு என்பதாகக் கூட இருக்கலாம். 

 

நகர்ப்புறங்களில் நத்தையாய் இம்மாதிரிக் கட்டிடங்களுக்கு சுருண்டு கொள்ளும் மனிதர்களின் மத்தியில் மனிதத்தை எதிர்பார்ப்பது என்பது ஆழ்கடல் முத்தை தேடுவதைப் போலத்தான் அதில் கூட மனிதன் வெற்றிப் பெறுகிறான் ஆனால் மனிதத்தில் தோற்றுப் போகிறான். அட என்ன இப்படியே நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா உங்க உடம்பு என்னாகுறது ? எழுந்து வேலை வெட்டியப்பாருங்கய்யா ? ன்னு கலயத்தில் கஞ்சியைக் கொண்டு வந்து நீட்டும் மனிதர்கள் இப்போது இல்லை. கிராமப்புறங்களில் கூட சற்று விநோதமான நகர கைகள் வளைத்துவிட்டது. 

 

கோலம் அடைத்த வாசலில் எல்லாம் அதன் வண்ணங்களைக் கலைப்பதைப் போல வாகனங்களின் கால்தடங்கள் பதிய துவங்கிவிட்டது. ஆதிச்ச நல்லூரைப் போல இதுநான் எங்கள் காலம் என்று நாம் ரசித்து வாழ்ந்த பக்கங்களை மண்ணுக்குள் தேடும் காலம் விரைவில் இல்லை என்ற நிஜம் நெஞ்சை அழுத்தியது. கூலர்ஸை கழட்டினான். 

 

தொட்டதும் திறப்பதைப் போன்று இருந்த கதவை அலட்சியம் செய்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். சாத்தலைங்க திறந்துதான் இருக்கு.

 

நான் மாறன் இவங்க மாயா இரண்டுபேரும்

 

 தெரியும் ஸார் அன்னைக்கு என் பேரனுடைய கடைசி நாளில் பார்த்தேனே ?!

 

மன்னிக்கணும். எனக்கு இந்த நேரத்தில் உங்களை வந்து தொந்தரவு செய்ய கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்க அதில் இரண்டுபேர் இப்போ உயிரோடவே இல்லை, ஒரு பையன் கிடைச்சும் பலனில்லை. 

 

தம்பி அதுக்கும் என் பேரனோட இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?! அவன் தற்கொலை இல்லை பண்ணியிருக்கான். அவர் அந்த வார்த்தையைச் சொல்லும் போது உடைந்து அழத் தயாராய் இருப்பதைப் போல இருந்தது. 

 

ஸார் நடந்து போன சம்பவத்துக்கும் உங்க பேரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம் ஆனா இறந்த போன உங்க பையனுக்கும் அந்த பிள்ளைகளுக்கும் வயது ஒண்ணுதான் காணாமல் போன பையனும் இவனும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறாங்க. எனக்கு அவனோட அறையை மற்றும் அவனின் பொருட்களை கொஞ்சம் பார்க்கணும். 

 

அன்னையிலே இருந்து அது பூட்டித்தான் இருக்கு. நிற்க நேரமில்லாத என் மகனும் அவன் மனைவியும் கூட இப்போ இதோ பக்கத்து அறையில் முடங்கிக் கிடக்கறாங்க. திறந்துதான் இருக்கு போங்க என்று மாறன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த அறையைக் காட்டினார். மாறனும், மாயாவும் எழுந்தார்கள். 

 

அந்த அறையை நோக்கி கடக்கும் போதே மெல்லியதாய் முனகல் சப்தம். ஏங்க கார்டுலே கடனாயிடுச்சின்னு அவனைத் திட்டாதீங்க என்னோட நகை இருக்கு நான் வைச்சித்தர்றேன் இல்லைலேன்னா ஆபீஸ்லே லோன் போட்டுத் தர்றேன் பாவம்ங்க அவன்

 

சரிம்மா நான் திட்டலை இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று ஒரு ஆண் குரல் சமாதானப்படுத்தியது. பெரியவர் கதவைத் திறந்து உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அந்த குரலுக்குச் சொந்தகாரன் ஆன மனிதன் வெளியே வந்தான்.

 

நீங்க....

 

நான்தான் அவனோட அப்பா அவர் சுட்டிக்காட்டிய திசையில் சில தினங்களுக்கு முன்பு அதுவா இருந்த அச்சிறுவன் அவனாகச் சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் அவர். முகத்தில் சில நாட்களின் தாடி முளைத்திருந்தது. கண்களில் சொல்லொண்ணா சோம் துளிர்த்திருந்தது. 

 

அறைக்குள் நுழைந்தார்கள். மாயா தன் போனில் நோட்பேடைத் திறந்தாள். அறையை சுற்றிலும் ஒரு பார்வையிட்டு சில குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

 

அறை முழுவதும் பணத்தின் செழுமை படர்ந்திருந்தது. விலையுயர்ந்த படுக்கை, கிரிக்கெட் பேட், சுவரோரமாய் கம்ப்யூட்டர் அதன் அருகில் சுவரின் பிளக்பாயிண்ட்டில் மொபைல் போன்களுக்கு உயிரூட்டும் சார்ஜர்கள். சுவரில் பெரியதாக கோலியும், டோனியும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறு அலமாரியில் சில பொம்மைகள் அதன் நடுவில் பாடப் புத்தகங்கள் பக்கத்தில் ஒரு மொபைல் போன் அநாதையாய் கிடந்தது. 

 

இது....

 

என் பையனோட போன். ஆன்லைன் கிளாஸ்க்காக வாங்கித் தந்தது. 

 

போலீஸ் இதை எடுத்துப் போகலையா ?

 

இல்லை ஸார் அவன் இறந்தப்போ போலீஸ் வந்து விசாரிச்சப்போ இது எங்கே இருந்ததுன்னே தெரியலை நேத்து அவனின் ஈமக்காரியங்களுக்காக அவன் உபயோகிச்ச பொருட்களை எடுக்கும் போது கிடைச்சதுன்னு வேலைக்காரம்மா கொண்டுவந்து கொடுத்தாங்க. 

 

மாயா அதைக் கையில் எடுத்தாள் நான் காஸ்ட்லியான வஸ்த்து என்று அது சிரித்தது. சார்ஜர் பாதி தீர்ந்து போயிருக்க தொடுதிரையில் செக்யூரிட்டி வளையம். 

 

பாஸ்வேர்டு ....

 

எனக்கு தெரியாது ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் ஆனா எதையும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே பையன்னு செல்லம் கொடுத்து அவனுக்காகவே கால நேரம் பார்க்காம உழைச்சோம் சார் ஆனா பாருங்க எல்லாத்தையும் .....!

 

உங்க வருத்தம் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அவன் எப்படி ரொம்ப மூடி டைப்பா இல்லை நல்லா பேசுவானா ? 

 

ரொம்ப பேசமாட்டான் ஸார். அவனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவளோட உடல்நிலை ஒப்புக்கலை அதனால இவன்தான் எங்களுக்கு எல்லாமா இருந்தான். இங்கே நின்றால் எனக்கு அவன் நினைவு அதிகமாக வருகிறது என்று நகர்ந்தவர் உங்களுக்கு குடிக்க ஏதாவது என்று கேட்டார்.

 

வேண்டாம் ஸார் .... என்றனர் ஒரே குரலில் கோரஸாய் மாறனும், மாயாவும்.

 

அதேநேரம் வாசலில் ஒரு அரவம் கேட்டது. ஒரு சிறுவன் அங்கிள் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம் உங்க வீட்டு பால்கனியில் எங்க பால் விழுந்திட்டது என்ற குரல். மாறன் அக்குரலில் ஈர்க்கப்பட்டு வெளியே வந்தான். 

 

பால்கனிப் பந்திற்காய் காத்திருக்கும் ஆர்வம். நீளமான டிராக்ஸூம், மஞ்சள்நிற டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். பேட்டை தாங்கியபடி அவன் சற்றே சாய்வாய் நின்றிருந்த விதம் மாறனுக்கு எதையோ நினைவூட்டியது. அந்த சிறுவனின் உருவம் அவனைப்போல தோன்ற மெலிதாய் ஒரு ஈர்ப்பு எட்டிப் பார்த்தது. விசாரிப்பதற்குள் தான் தேடி வந்த பொருளைப் பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் அவன்.

 

மாறன்...இங்கே வாங்களேன் மாயாவின் குரலில் வழிந்த டெசிபல் அவனை பின்னோக்கி நகர வைத்தாலும் மனம் முழுக்க அச்சிறுவன் வியாபித்திருந்தான்.