Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #11

 

 

iraval edhiri part 11

 

நீண்ட பெல் அடித்தப்பிறகு,

“டேய் எல்லாரும் சாப்பாடு கூடத்துக்கு வாங்க.” என்று கன்னடத்தில் அழைத்தார்கள் வார்டன்கள். பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுப் பொருட்களுக்கு முன்பு தங்கள் தட்டையும் நீர் சேகரிக்கும் கிண்ணத்தையும் சுமந்தபடி வெள்ளை உடையில் வரிசையாக நின்றிருந்தார்கள் கைதிகள்.

“வாசனையே மூக்கைத் துளைக்குது பரவாயில்லைடா வாரத்துக்கு ஒரு தடவையாவது நல்ல சாப்பாடு போடறாங்களே?”

“ம்....வாசனையே மூக்கைத் துளைக்குது.” கைதிகளின் சிலரின் கவலைகள் பாத்திரங்களின் குவிந்திருந்த உணவின் மேலே இருந்தது.

 

அந்த வரிசையின் கடைசியில் நின்றிருந்தான் மைக்கேல், உணர்ச்சிகள் அற்ற முகத்தில் ஒரு அந்நியத்தனம் குடியிருந்தது. கண்கள் இரண்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. காய்ப்புக் காய்ச்சியதைப் போல உதடுகள் இறுகியிருந்தது.

 

அவனுக்கு நேர் எதிரில் மூன்றாவது வரிசையில் நின்றிருந்த மாரியப்பனின் உதடுகள் திரும்பிப் பார்த்து ஏதோ ஒரு கெட்ட வார்த்தையை முணுமுணுக்க, பக்கத்தில் நின்றிருந்த வெள்ளை சட்டைக்காரன் துணுக்குற்று, “நேத்து அவன்கிட்டே அடி வாங்கினதிலே இருந்து நம்மை நிமிர்ந்து பார்க்க பயந்தவன் கூட நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான். மறுபடியும் அவன்கிட்டே வம்பு வேண்டாம். ஆளைப் பார்த்தாலே ஒரு மார்க்கமா இருக்கான் வேற?”

“டேய் ஏதோ அசந்தர்ப்பத்திலே இரண்டு தட்டு தட்டிட்டா அவனென்ன பெரிய ஆளா, வெறும் சந்தேக கேஸூடா அவன். நான் ஆளையே மட்டை பண்ணிட்டு வந்திருக்கேன். இவனை சொருக எத்தினி நேரமாகும்" மாரியின் கண்களில் ரெளத்திரம்.

“சொல்றதைச் சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம்...” அவன் ஒதுங்கிக் கொண்டான். அமைதியாய் க்யூவில் நகர்ந்தார்கள். சாப்பாட்டை வாங்கிக் கொண்டு ஓரமாய் அமர்ந்து சிறு குழுக்களாக மாறி உணவருந்த ஆரம்பித்தார்கள்.

 

மாரி தன் சகாக்களுடன் அமர்ந்தான். சாப்பாட்டை பிசைந்த விதத்திலேயே மைக்கேல் மேலிருந்த கோபம் கொப்பளித்தது. அதற்கு ஒத்து ஊதுவதைப் போன்று, 

“என்ன மாமா அவனை அப்படியே விட்டுட்டியே நாளைக்கு இங்கே எவன் மதிப்பான். மட்டை கேஸூ நீ...! அவனை சந்தேகத்திலேதான் புடிச்சிகினு வந்திருக்காங்க, அடிச்சு துவைக்க வேணாமா?!”

“டேய் மாரி நேத்து ஏதோ நினைப்புலே இருந்தப்போ அவன் வந்து கையை வச்சிட்டான். இப்போ வரச்சொல்லேன் பார்க்கலாம்.”

 

முதலில் பேசிய அந்த வெள்ளைச் சட்டைக்காரன்,

“டேய் ஆளாளுக்கு மாரியை ஏத்தி விடாதீங்க. மறுபடியும் அவன்கிட்டே அடிவாங்குனா நம்ம நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.”

“என்னடா அப்படி சொல்லிகின நேத்து ரவுண்ட்ஸ்க்கு ஆபிசருங்க வந்ததால இவன் தப்பிச்சான். இல்லைன்னா மாரி மேல ஒருத்தன் கையை வைச்சிட்டு போயிட முடியுமா ? ஆமா அந்த புது கேஸூ வெளியேவே வரலையே ? துரை அத்தினி பெரிய ஆளா. வார்டன் சாப்பாடு கொண்டு போயி கொடுக்கறான்?!”

“அட நீ வேற ? அவனை நேத்து மதியத்திற்கு கொண்டு வந்து நைட்டே அவன் கால்ல கட்டுப் போட்டாச்சு, எனக்குத் தெரிஞ்சி இன்னும் ஆறுமாசத்துக்கு எழுந்திருக்க முடியாது. ஏதோ பெரிய இடத்துப் பொல்லாப்பு போல கீது ?!”

“நைட்லெல்லாம் ஒரே அனத்தல். காலையிலேதான் மாவுக்கட்டு போட்டாங்க போல, யாருகிட்டேயும் பேசவும் விடலை தனி செல்லு வேற ?!”

“ம்....இரண்டு மூணு நாள் போகட்டும் மெதுவா விசாரிக்கலாம்.” என்ற மாரியை நோக்கி....

“இன்னிக்கு சரக்கு வந்துடுச்சா மாரி. கையெல்லாம் நமநமங்குது. அப்பாலே நம்ம காண்டிராக்டர் சோமுகிட்டே செல்போனு கொண்டாரச் சொல்றேன்னு அல்லார்கிட்டேயும் இரண்டாயிரம் ரூவா வாங்கினியே ? என்னாச்சு ?!”

“வருவாண்டா... இன்னிக்கு கொண்டாரேன்னு நேத்திக்கு சொல்லிட்டுப் போனான். அப்பாலே சரக்குக்கு இன்னமும் பேலன்ஸ் இருக்கு. எவன்னு தெரியுமில்லை கலெக்ட் பண்ணிடு. இந்த மைக்கிலுக்கு நான் வேற ஐடியா வைச்சிருக்கேன்.”

“என்னாது....?! பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு சொல்லுவாங்க இரவைக்கு நம்ம செல்லுக்குள்ளே திட்டத்தைச் சொல்லுறேன்.” அவர்கள் மேலும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, 

“டேய் இன்னமும் என்னபேச்சு போய் வேலையைப் பாருங்க.” என்று வார்டன் கம்பைச் சுழற்றிக்கொண்டு வர அனைவரும் கலைந்தார்கள்.

 

நேரம் ஏழரையை நெருங்கிக் கொண்டு இருந்தது. சார்ஜன்கள் இருவர் நாளை சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இறக்கி வைக்கச் சொல்லி சில கைதிகளுக்கு உத்தரவிட்டு மற்றவர்களை செல்லுக்கு அனுப்பும் பணியில் இருந்தார்கள். ஜெயிலர் அன்று கைதிகளின் வேலை நிலவரம், முடிவடைந்த பணிகள் ஒவ்வொருவரின் வேலைக்கேற்ற ஊதியங்கள் அடங்கிய லெட்ஜரில் கையெழுத்து இட்டுக் கொண்டே, புதியதாக வந்த கைதிகளின் எண்ணிக்கை, அவர்களை எந்தெந்த செல்லில் போட்டு இருக்கிறார்கள் என்ற விவரங்களையும் விவாதித்தபடி இருந்தார்.

 

அவருக்கு அடுத்தபடியாக பணியில் உள்ள ஐந்து வார்டன்களிடம், 

“நேத்து ஏதோ கோஷ்டி மோதல் பற்றி கேள்விப் பட்டேனே...” என்ற கேள்விக்கு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பிறகு பதிலளித்தார்கள்.

“ஆமாம் ஸார் தோட்டவேலை செய்து கொண்டு இருந்த மாரியும் இன்னும் நாலைந்து பேருக்கும், நம்ம சந்தேக கேஸ்லே அரஸ்ட் பண்ண மைக்கேலுக்கும் சண்டை. தோட்ட வேலை பார்த்துகிட்டு இருந்தப்போ இரண்டு பேருக்கும் வார்த்தை தடிச்சி கைகலப்பு ஆயிருக்கு.”

“எல்லாத்தையும் கன்ட்ரோல் பண்ணுங்க, ஏற்கனவே இங்கே டிரக்ஸ் சப்ளை ஆகுதுன்னு ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. உள்ளே வர எல்லா வண்டியும் செக் பண்ணித்தானே அனுப்பறீங்க ?!”

“ஆமா ஸார்.” கோரஸாக குரல் வந்தது.

“ஜாக்கிரதை !” வெளியே ஏதோ சலசலப்பு கேட்டது. 

“மறுபடியும் என்னய்யா அங்கே பிரச்சனை ?” அவர்கள் அனைவரும் வெளியே வர, மைக்கேல் கான்டிராக்டர் சோமுவை அடித்துக் கொண்டு இருந்தான்.

“ஏய் ! இதே வேலையாப் போச்சு.” இருவரையும் விலக்கிவிட, 

“ஸார் காய்கறி கொண்டு வர வண்டியிலே மொபைல் போன் எடுத்துட்டு வந்து கொடுக்கிறான் ஸார். கேட்டதுக்கு கெட்ட வார்த்தையில் பேசினான் அதனால் அடிச்சேன்.” என்றான் மைக்கேல். அவன் கண்கள் ரத்த சிவப்பாய் சிவந்திருந்தது.

“அதுக்கு என்கிட்டே சொல்ல வேண்டியதுதானே நீயே அடிப்பியா ?” என்று மைக்கேலைத் தள்ளி விட்டவர். 

“என்ன சோமு இதெல்லாம்....?!”

“ஸார் ஸார் மன்னிச்சிடுங்க ஸார்... தப்புதான் காசுக்கு ஆசைப்பட்டு ?”

“இந்த கைதிங்கிட்டே என்னய்யா காசு பார்க்கப்போறே ?” வார்டன் எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று சோமுவை லாட்டியால் தட்ட,

“நிறுத்துய்யா முதல்ல யாருக்கு நீ இதை சப்ளை செய்ய எடுத்துட்டு வந்தே. இதுதான் முதல் தடவையா இல்லை ? டிரக்ஸ் கூட நீதான் சப்ளை பண்றீயா ?”

“அய்யா நான் இதுதான் முத தடவைங்க, நம்ம மில்லுக்கு மரம் அறுக்குற காசி இருக்கான்லே அவனும் இந்த மாரியும் கூட்டாளிங்க, ஏதோ விவரம் பேசணுன்னு செல்போனை தந்துவிட்டாங்க எனக்கு அதுக்கு 50ஆயிரம் பணமும் தந்தாங்க. சரி சும்மா கைமாத்திவிடறதுக்கு இத்தனை பணம் வருதேன்னு நானும் ஒப்புக்கிட்டேன். தப்புத்தான் ஸார் நான் புள்ளை குட்டிக்காரன் என்மேல....ஏதும் நடவடிக்கை எடுத்துடாதீங்க ஸார் இனிமே இந்தமாதிரி தப்பு செய்ய மாட்டேன்.” என்று ஜெயிலரிடம் கெஞ்சினான்.

“இனிமே உன்னை உள்ளே விட்டாத்தானே நீ தப்பு செய்யறதும் செய்யாததும்...” ஜெயிலர் தன் அருகில் உள்ள இன்னொரு அதிகாரியை அழைத்து, “இவனோட காண்டிராக்ட்டைக் கேன்சல் பண்ணுங்க செல்போனை எல்லாம் பறிமுதல் பண்ணி லாக்கரில் வைச்சிடுங்க.” என்று உத்தரவிட்டார்.

“அய்யா" என்று அவன் இழுக்க....!

“உன்னோட பாக்கியை வாங்கிகிட்டு நடையைக் கட்டு ராஸ்கல். என்ன தைரியம் இருந்தா இந்தக் காரியம் பண்ணுவே எங்கய்யா அந்த மாரி ?”

 

மாரி தன் குழுவினரோடு வந்து நின்றான் விறைப்பாகவே, 

“சார் நான்தான் கொண்டு வரச்சொன்னேன்னு அவன் சொன்னா நீங்க அப்படியே நம்பிடுவீங்களா ? இந்தாளுகிட்டே நான் என்னைக்காவது பேசியிருக்கேனா நீங்க வார்டன் கிட்டே வேணுன்னா கேளுங்க ?!”

“ஏய்... வாயை அடக்கு நீ யாரோட கையாளு? என்ன வேலைப் பண்ணுவே பண்ணமாட்டேன்னு எனக்குத் தெரியும். இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே உன்பேர்ல ஏதாவது தப்புத்தண்டான்னு வந்தது தண்டனைகள் கடுமையா இருக்கும் புரிஞ்சிக்கோ.” என்றவர் மைக்கலை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, 

“இங்க பாரு மைக்கேல் பிரச்சனைன்னா நீ எங்கிட்டயோ அல்லது வார்டன்கிட்டேயோ சொல்லணும் அதைவிட்டுட்டு இப்படி நீயே அடிதடியில் இறங்கக் கூடாது.” என்று எச்சரித்து தன் அறைக்குள் நுழைந்தார்.

“என்ன வார்டன் அந்தாளு அத்தினி பேசிட்டுப்போறான் நீ வாங்குற மாமூல்ல அவருக்கு கொஞ்சம் தள்ள வேண்டியதுதானே....?!” 

“டேய் இப்படி எடக்கா பேசி மாட்டிக்காதே அந்தாளு கை சுத்தம். யார் மூலமாவோ தகவல் போயிருக்கு இந்த சோமு வேற எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டான். நானே அந்தாளு அடுத்து என்ன செய்வானோன்னு பயத்திலே இருக்கேன். கொஞ்ச நாளுக்கு எல்லாத்தையும் அடக்கியே வைய்யி !”

“அப்படியெல்லாம் இருக்க முடியாது. என் வழியிலே குறுக்கிடற அந்த மைக்கேலுக்கு மட்டும் இன்னைக்கே ஒரு பாடம் கற்பிக்கணும்.”

“இப்ப நிலைமை சரியில்லை மாரி.....?! அப்பறம் நான் நினைச்சா கூட உன்னை காப்பாத்த முடியாது.”

“நீ வேற ஒண்ணும் செய்ய வேண்டாம். அவனை இன்னைக்கு என் செல்லுல போட்டுடு மீதியை நான் பார்த்துக்கறேன்.” என்றான் 

“சரி” என்று மாரி தலையாட்டிவிட்டு வார்டனும் நகர, பணிரெண்டு மணிக்கு விளக்குகள் அணைக்கபட்டு சில ரோந்து காவலர்கள் மட்டும் ரவுண்ட்ஸில் இருந்தார்கள். சற்றே அலட்சியமாய் அவர்களின் காவல் பணி இருந்த சமயம். 5ம் நம்பர் செல்லுக்குள் இருந்து வெளிவந்த கூச்சல் அவர்களை சுறுசுறுப்பாக்கியது.

 

செல்லை அவசரமாக திறந்து பார்க்கும் சமயம் மீண்டும் மாரியும் மைக்கேலும் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். 

“அடடா உங்களுக்கு இதே வேலையாப்போச்சு” என்று கத்தியபடியே அவர்களைப் பிரித்து, “இவனை அந்த 9ம் நம்பர் செல்லுல போடுடா.” என்று மைக்கேலை வெளியே அனுப்பினான் வார்டன்.

 

மைக்கேலின் இடது கண்ணின் மேற்புறம் ரத்தம் ஒழுகியது இடது கை விரல்கள் இரண்டு உடைந்து தொங்கிட அவன் முகம் முழுவதும் வலியின் வேதனை பரவியிருந்தது. 

“நீ இங்க இரு.” என்று 9ம் நம்பர் செல்லில் அவனை விட்டுவிட்டு உடன் வந்த காவலன் மீண்டும் சர்ச்சைக்குரிய அந்த செல்லிற்கு சென்றான். இப்போது அங்கே முழு நிசப்தம்.

 

அவசர உதவிகள் செய்யப்பட்டு ஆளாளுக்கு முகத்திலும் கைகளிலும் பெருக்கல் கூட்டல் குறிகள் போட்டுக் கொண்டு இருந்தார்கள். 

“இந்தா வார்டன் அவனுக்கு நைட்டு எந்த சிகிச்சையும் செய்யக் கூடாது சொல்லிப்புட்டேன். மாரியா கொக்கா என்கிட்டே அடிபட்டே அவன் செத்திருப்பான். அதுக்குள்ளே நீ வந்துட்டே ?!”

“நல்லாச்சொன்னே இதுக்கே நான் அந்த ஜெயிலர்கிட்டே வாங்கிக் கட்டிக்கிடணும். காசியை வீட்டுக்கு வந்துட்டுப் போகச் சொல்லு. பணத்தேவை கிடக்கு.” என்று தன் செல்போனை எடுத்து மாரியிடம் கொடுக்க அவன் மூன்று நிமிடங்கள் கழித்து கொடுத்தான். 

“நாளைக்கு உன்கிட்டே பணமும் இரண்டு செல்போனும் தருவான் காசி. சந்திரியில்லாம கொண்டாந்துடு அதுக்கும் சேர்த்து தனியா கவனிக்கச் சொல்றேன்.” என்றதும் வார்டன் சந்தோஷமாய் தலையாட்டிவிட்டு செல்லைப் பூட்டினான்.

“இந்தா இந்த பெட்டியை 9 ம் நம்பர் செல்லுலே இருக்கிற மைக்கேல்கிட்டே கொடுத்து மருந்துப் போட்டுக்கச் சொல்லு...”

“அட என்ன பா நீதான் இப்ப ஏதும் சிகிச்சை செய்ய மாட்டேன்னு மாரிகிட்டே சொன்னீயே ?”

“மாரியென்ன கடவுளாடா ? அவ நமக்கு கீழே இருக்கிற கைதி. அதிகாரம் நம்மகிட்டதான் இருக்கு என்னைக்கு கை மீறிப்போறானோ இதே மாதிரி இன்னொருத்தனை உசுப்பிவிட்டு இவனை கையை காலை உடைக்க வேண்டியதுதான்.” வார்டன் சொல்லியபடியே செய்துவிட்டு மீண்டும் லட்டியை முட்டுக்கொடுத்து விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான் அந்த காவலாளி.

 

மைக்கேலுக்கு வலியின் தீவிரம் உறைத்தது, இருந்தாலும் மனதளவில் எத்தனையைத் தாங்கிவிட்டான் அவன். அரையடி தூரத்தில் இருந்த பெட்டியை பிரித்தான் சிறு பேண்டேஜ் எடுத்து கைகளில் டின்சர் போட்டு சுற்றியபோது எதிர்புறத்தில் இருந்து சிறு முனகல் சப்தம். யாரோ எழ முயன்று விழுந்ததைப் போல, புதியதாய் வந்த கைதியை இங்கே அடைத்து வைத்திருந்ததையும், அதிகாரிகளின் கவனிப்பில் அவனின் கால் உடைந்திருந்தது என்பதும் காலையில் சக கைதியின் மூலம் தெரிந்தது.

 

சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க முடியாமல் அவன் தவழ தன் வலி மறந்து அந்த உருவத்தைத் தாங்கிப் பிடித்தான் மைக்கேல்.

“என்ன வேண்டும்?”

“பாத்ரூம் போகணும் ?!”

 

மங்கிய வெளிச்சத்தில் அவனின் இடது காலிற்கு தற்போதைக்கு நடக்கும் சக்தியில்லை என்பதை உணர்ந்து தோளில் கைபோட்டு அறையின் அடுத்த மூலைக்கு அழைத்துச் சென்றான். தன் அவசரம் முடிந்ததும் அந்த புதியவனின் தோளிலேயே பயணப்பட்டு தன் இடம் வந்தவன்.

“உனக்கும் அடிபட்டு இருக்கே ?”

“ம்.....நேர்மைக்கு பரிசு. நீ யார்? எதனால இங்கே வந்தே ? உன் பெயர் என்ன?” என்றான் மைக்கேல்.

 

அவனின் காயத்திற்கு மருந்திட்டபடியே, “என் பெயர் ராக்கேஷ்.” என்றான் அவன் மங்கிய வெளிச்சத்தில் அவன் முகத்தில் ஒரு ஸ்நேகம் ஒட்டியிருப்பதைப் போல தோன்றியது மைக்கேலுக்கு.

 

தொடரும்

 

-லதா சரவணன்

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !