Skip to main content

நேசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளும் தொடுதலும் தேவையில்லை - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #6


காதல் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து கோவிலில் ஆரோக்கியமாய், பார்க்கில் புதர்களுக்கு நடுவில், பீச்சில் துப்பட்டாவின் மறைவில், விளக்கை தேடி வரும் விட்டிலாய் விடலைகளின் மனதில் அலைந்து நொடிக்குள் தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது. ஆதிக்காலத்தில் இருந்தே சினிமா காதலைத் தத்துப் பிள்ளையாய் எடுத்துக் கொண்டு விட்டது. இரு பூக்கள் முத்தமிடுவது, வண்டுகள் துளைப்பது, முகத்தை மூடிக்கொண்டு ஒருகையால் வெட்கப்பார்வை பார்ப்பது, காதலனின் புகைப்படத்தை எரித்த சாம்பலை காப்பியில் கலந்து குடிப்பது, பார்த்த காதல், பார்க்காத காதல்,டெலிபோன் காதல், பணக்கார திமிர்பிடித்த பெண்ணின் ஆணவத்தை அடக்கும் காதல், இப்போது நாம் எதிர்பார்க்காத யதார்த்தப் பள்ளிக்காதல் என்று காற்றிலும் கூட வியாபித்து இருக்கிறது. காதல் பரிமாணம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் போனதுதான் மிச்சம். 

நேசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளும் தொடுதலும் தேவையில்லை அவளின் சுவாசம் மட்டுமே போதும் என்று வாழும் ஒரு காதலனின் கதை! ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்த ஒரு நிகழ்வில் அவர்களின் காதல் முகிழ்த்திருக்க வேண்டும் இதோ அவன் காதலின் நிழலாய் சில வலிகள். இடுங்கிய விழிகளோடு புருவமும் இமைகளின் அடர்த்தியும், கொட்டி ஜீவனில்லாமல் எனை வரவேற்ற அந்த சிரிப்பை நான் சத்தியமாய் வெறுத்தேன் இதே சிரிப்பிற்காக மாடலிங்கில் அவள் இரண்டு லகரம் வெற்றி பெற்றால் என்றால் யாரும் இப்போது நம்புவதற்கில்லை. அத்தனை அழகு என் அச்சும்மா! நீண்ட மீன் விழிகள் அடர்த்தியான காஜலின் ஜொலிப்பில் காதலாய் எனை இம்சித்ததும், இளஞ்சிவப்பில் பளபளத்த இதழ்களும், கிளிகளைப் போல அவள் தோளில் கொஞ்சிய கூந்தலையும் காவு கொடுத்திருக்கிறாள் கீமோதெரபி என்று அரக்கனுக்கு!

 

bகாதலிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் அவனின் காதலி ஒரு தேவதைதான். என் தேவதையை உருக்குலைய வைத்தது புற்றீசலாய் அந்த மென் உடலை விருந்தாக்கிக் கொண்ட புற்றுநோய். வலுவிலந்த அந்த கரங்கள் என்னுடன் கைகோர்த்துக்கொண்டு அவளை அடைத்திருக்கும் அந்த சிறைக்குள்ளேயே நாங்கள் நடைபயின்றோம். வெளிச்சத்தை சந்திக்கவே சிரமப்பட்ட அவளை நான் வாசலுக்கு அழைத்தேன். இன்பெக்ஷன் ஆகிவிடும் வெளிக்காற்றுப் பட்டால் என்று வெளிச்சத்திற்கு அவள் எதிரியாக்கப்பட்டாள். எத்தனை உபாதைகள் உப்புச் சப்பில்லாத பருப்பில் கீரையின் மிதப்பதைக் கண்டு குழந்தையாய் அவள் சிணுங்கிய தருணங்கள், கண்ணா இன்னும் எத்தனை நாள்னு தெரியலைடா எத்தனை முயன்றும் அந்த கோரச்சிரிப்பிற்கு கண்கள் தழும்பத்தான் செய்தது எனக்கு! எப்படியாவது எமனுடன் போராடிய சாவித்திரியிடம் என்னை அழைத்துச் செல்லுங்களேன் என்று நான் வேண்டாத கோவில் இல்லை, பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இந்த பூஜ்ஜியத்திற்கு மதிப்பளித்த என் ஓவியம் இன்று சிதைந்து போய் பக்கத்து அறையின் இறப்பைக் கண்டு அஞ்சி... தினமும் ஊசி குத்துறாங்க இரத்தம் எடுக்கறாங்கடா வலிக்குது என்று போர்வைக்குள் உறங்குவதைப் போல பாவனை காட்டியும் செவ்வனே தன் கடமையைச் செய்யும் செவியிலிடம் வேண்டாம் சிஸ்டர் என்று இரைஞ்சும் அவளை கண்டு கதறுகிறேன் சப்தம் இல்லாமல். நண்பனாகக் கூட ஏற்றுக்கொள்ள தயங்கும் தோற்றம் கொண்ட என்னிடம் நட்பு பாராட்டி நண்பனின் வேண்டுதலில் என் காதலை ஏற்று என்னைத் தாங்கிய தேவதையவள். என் நடை உடை பாவனைகள் மாற்றி, என் கனவுகளை நோக்கி பயணிக்க தூண்டும் ஆசிரியையாய், பசியறிந்து வயிற்றை நிரப்பும் தாயாய், கணவனின் இதயம் மனைவியின் இரண்டாம் கருவறை என்று ஒரு கவிதையைப் படித்தேன். ஆனால் என் அச்சும்மாவின் இதயம் என்னை சுமந்தது. 

 

ghfஇன்று ஒரு பாடகராக நான் இருக்கக் காரணம் அவள், நான்கு சுவர்களின் சட்டத்தில் எனக்கான உயிர்ப்பு புன்னகையை விட்டுச் சென்றிருக்கிறாள் அந்த சுவாசத்தில் தான் நான் வாழ்கிறேன். மல்ட்டி நேஷனல் மருத்துவ மனையாய் இருந்தாலும், அந்த வார்டு மட்டும் இலேசாய் இரத்த வாடை சுமந்த டிராகுலாவைப் போலத்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. பாலாடைக் கட்டியைப் போல வந்து விழும் இதழ் இதழாய் இரத்தமும் சலமுமாய் மலம் மிதக்கும் பெட்பேனினை சுமக்கும் போதெல்லாம் என் குடல் எல்லாம் மலத்தில் வெளியே வருதோ அதைக் காணப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொள்வாள். நீயேன் கண்ணா இதை எடுக்கிறே என்ற அவளின் அதரத்தில் நான் வலிக்காமல் என் இதழ் பதித்தேன் அந்த முத்தம் தந்த வெப்பத்தினை விடவும் அவள் உடல் கொதித்தது.

எனக்காக நீ இருந்தாயே கண்ணம்மா என்றேன் இதேபோல் ஒரு விபத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேல் நான் கோமாவில் இருந்தபோது என்னைத் தாயாய் கவனித்தாயே நான் செய்வது கொஞ்சம்தான் என்று அணைத்துக் கொண்டேன். நடுங்கிய அவளின் உடலை என் கைவளைவுகளுக்குள் அழுத்திக்கொண்டு எங்கள் காதல் கதைகளைப் பேச ஆரம்பித்தேன். கடைசியிலே அந்த ஜோசியக்காரன் சொன்னதுப் போலவே ஆகிடுச்சில்லே, அவன் எனக்கு கண்டமின்னு சொன்னான் சொல்லி முடிக்கும்போதே அவள் வாயில் இருந்து குபுக்கென்று இரத்தம் வழிந்தது, நான் அதை துடைத்தபடியே, நீ சரியான ஜோசியப் பைத்தியம் கண்ணம்மா அதனால்தான் அவன் சொன்ன நாளிலிருந்து ரோடு கிராஸ் பண்ணக் கூட பயப்பட்டாய் என்று அவளைப் போலவே நடித்துக் காட்டி சிரிக்கச்செய்தேன் அப்போது எனக்குத் தெரியாது அதுதான் அவளின் கடைசி சிரிப்பு என்று என்று என் நகைச்சுவையை ஏற்றாற்ப்போல ஆறுமாத தண்டனை வலி அவளுக்கு விடை கொடுத்தது. என் கைகளை அழுந்தப் பற்றி தோளில் ரத்தம் சுமந்த இதழ்களோடு சரிந்தாள் என் அச்சும்மா. அரைமணிநேரம் அசையாமல் நின்றேன் கண்களில் கண்ணீர் வரவில்லை.

 

lmjசுற்றியிருந்த சொந்தங்கள் எல்லாம் அவளின் ஈமக்கிரியைக்கு வந்துவிட்டது. இதுவரையில் விரோதியைப் போல பார்த்த அவளின் அண்ணனும் தந்தையும் ஆதரவாய் வந்து என் தோளைத் தட்டினார்கள். அவளைக் கிடத்தினேன், யாரையும் தொடவிடாமல் நானே குளிக்கவைத்தேன். அவள் என் தொடுதலை உணர்ந்தாலா என்று தெரியவில்லை, ஐயா காலு கையெல்லாம் விரைச்சிடுச்சி உட்கார வைக்கணுமின்னா நான் காலை உடைக்கணும் என்றவனை பளாரென்று அறைந்தேன் போதையில் என்னை கெட்டவார்த்தையில் திட்டினான் வேண்டாம் அவளை ஊனப்படுத்த வேண்டாம் என்ற என் கதறல் மறுக்கப்பட்டது அவர்களின் சாதியில் படுக்க வைக்க மாட்டார்களாம். முட்டாள்கள் இறப்பில் கூட சாதியைப் பார்க்கிறார்கள். 

தாயைப் பிரிந்த குட்டியைப் போல என் ஏக்கப்பார்வைகளை சுமந்து கொண்டே அச்சும்மா தன் இறுதியாத்திரையைத் தொடங்கினாள். நான் பொங்கிய கண்ணீரோடு அவளையே பார்த்திருந்தேன். அந்த உடலின் மிச்சம் நெருப்பு சுவைத்ததை தாண்டி கலசத்தில்! 

அச்சும்மா நான் உன் பெயரை பச்சைக் குத்திக்கப் போறேன்?

பச்சைக் குத்திகிட்டாத்தான் காதலா கண்ணா, உன்னோட நேசம் எனக்கு தெரியும், நீ உன் துறையில் நல்லா வரணும் சீக்கிரமே அதுதான் என் ஆசை அதை செய் முதல்ல!

நான் அவளின் ஆசையை நிறைவேற்ற தயாரானேன் இன்று நான் இசைத்துறையில் இருக்கிறேன் அவளின் நினைவுகளைச் சுமந்தபடியே, சென்ற வாரம் நடந்த இசை சங்கமத்தை ஒளிபரப்பிய தொலைக்காட்சியில் பத்தாவது வரிசையில் என் அச்சும்மாவுடன் அமர்ந்திருந்தேன்.இப்போது என் கைகளில் அவள் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தை ஆசையோடு பார்க்கிறாள் வலிக்கலையாடா என்று சிறு கண்டிப்பிலும் பெருமையோடு!

கண்ணனை நீங்களும் கூட பார்க்கலாம் மயிலாப்பூர் பகுதியில் எங்காவது இரண்டு ஐஸ்கீரிம் ஆர்டர் செய்துவிட்டு ஒன்றை சுவைத்து அடுத்ததை அவனின் அச்சும்மா எதிரில் அமர்ந்து சாப்பிடும் அழகை ரசித்தபடியே அவளின் அதரங்களில் வழிந்த ஜஸ்கீரிமை துடைத்தபடியே குழந்தைமாதிரி சிந்திதான் சாப்பிடுவியா அச்சு என்று பேசியபடியே?!

அவளுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அவளையும் சுமந்து கொண்டு செல்வதைப் போல தியேட்டரில் இரண்டு டிக்கெட் எடுத்து கதைப் பற்றிய விளக்கம் சொல்லியபடியே, நமக்குத்தான் அது காலி இருக்கை அவனைப் பொறுத்தவரையில் அவனின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அச்சும்மா அவனுடனேயே பயணிக்கிறாள். காதலின் உச்சம் தொட்ட நெகிழ்வு அந்த காதலன் நம் முகப்புத்தகத்திலும், என் நட்பு வட்டாரத்திலும் இருக்கிறார்.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்