Skip to main content

"இந்த பிள்ளைகளுக்கு புரியலையே நிழலை நிஜம்ன்னு நம்பி அதுங்களும் ஏமாந்து..." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #3

Published on 21/09/2019 | Edited on 23/09/2019


நாளுக்கு மூன்று முறை வந்து விட்டு செல்லும் பேருந்திற்காக அமைக்கப்பட்ட அந்த நிறுத்தத்தில் பள்ளி முடித்து பக்கத்து சிற்றூருக்கு செல்ல புத்தக மூட்டைகளோடு யுவதிகளும் அவர்களை ரசித்துக் கொண்டு இல்லாத மீசை துடிக்கும் காளைகளும், வயோதிகத்திலும் இதுதான்யா காதல் என்று காலில் விழும் அளவிற்கு கூன் வளைந்த தன் மனைவியை கைப்பிடித்து சாலை கடக்கும் அந்த வயோதிகரும், பள்ளிப்பிள்ளைகளை ஈர்ப்பதற்காகவே தின்பண்டங்களைத் தள்ளுவண்டியில் சுமந்தவர்களையும் தாண்டி என் கண்களுக்கு அந்த ஒடிசலான பெண் தெரிந்தார். சுருங்கியதைப் போன்ற சிறு உருவம், கொஞ்சம் அழுத்திப் பிடித்தால் உடைந்துவிடும் என்பதைப் போன்ற தேகம்.

 

ui



கவிதா தாகத்துக்கு ஏதாவது சாப்பிடறீயா என்று அருகிலிருந்த பெண்மணி கேட்க கேள்வி காற்றில் கரைந்து போனதே தவிர அந்த கவிதா என்று விளிக்கப்பட்ட உருவத்திற்கு கேட்கவில்லை, அவரின் கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தது. அழுதது கண்களில் நீர் வற்றிப் போயிருக்கும் போலும், கன்னங்கள் மட்டும் அழுகை கரையின் ஓவியங்களைச் சுமந்திருந்தது. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார் அந்த கவிதா. அதேநேரம் நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்து புழுதியோடு சில பிரயாணிகளையும் துப்பியது பல்வேறு அலுவல்களில் கூட்டம் கலைய நான் அருகில் உள்ள மரபெஞ்சில் அமர்ந்தேன். பாவடை தாவணியில் ஒரு இளம்பெண் அவளை வாசம் பிடித்துக் கொண்டே ஒரு வாலிபன். காதலர்கள் தங்களைத் தவிர சுற்றத்தை உணர்வதில்லை, காதல் மொழி பேசிக்கொண்டு இருக்க அவன் அந்த பெண்ணிற்கு அருகில் நகர்ந்து அவளின் கைகளைப் பற்றினான். அவளும் பயத்தில் சற்றே நகர அங்கு மெளனமாக காதல் நாடகம் ஒன்று அரங்கேறிக்கொண்டு இருந்தது. நம் உறவு இல்லாதவரையில் எல்லாமே வேடிக்கைதானே! எனக்குரிய வண்டி வருகிறதா என்று திரும்பிப் பார்ப்பதற்குள் பளாரென்ற ஒரு சப்தம் எழுந்து நிற்கவே தெம்பில்லாத மெளனத்தை போர்வையாய் போட்டிருந்த அந்த கவிதாவின் மென்கரங்களில் சிக்கிக் கொண்டு இருந்தான் அந்த வாலிபன்.

ஏண்டா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடா படிக்கிற பிள்ளைங்க மனசை மாத்தி அவங்க எதிர்காலத்தையே பாழாக்குறீங்களே, பெத்தவ எத்தனை நம்பிக்கையோட அனுப்பியிருப்பா ஏமாத்தாதேடா. ஆயிரம் வசவுகள் அத்தனை வன்மம் அதுவும் அந்த பையனை போட்டு புரட்டி எடுக்கும் அளவிற்கு அந்த சிறு உடலில் சக்தியிருக்கிறதா? எனக்கென்னவென்று இருந்த அந்த இடத்தில் இன்சன்ட்டாய் ஒரு கூட்டம். விடு கவிதா எல்லாரும் பாக்குறாங்க. இதென்ன ரோட்லே அசிங்கமா என்று கடிந்து கொண்டு அவரைப் பிடித்து இழுக்க முயன்று தோற்றுபோக சட்டென்று கைகால்கள் வெட்டி இழுத்தது அளவுக்கதிகமான ஏதொவொன்று துடிப்பாய் நடுத்தெருவில் வெளியாகிக்கொண்டு இருக்க, எதிர்பட்ட வாகனத்தில் அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் நான். அவங்க ஏதோ மனத்தாங்கல்ல இருக்காங்க யார் பேரையோ சொல்லி முணங்குறாங்க, இப்போயிருக்கிற உடம்பு கண்டிஷன்லே தூக்கமருந்து கொடுத்திருக்கும் ஆனாலும் அவங்க உடம்பு எடுத்துக்க மறுக்குது சில டெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன் என்று டாக்டருக்கு உரிய கடமையோடு அவர் செல்ல, மனப் பாரம் தாங்காமல் அரற்றிக்கொண்டே மருந்தின் மயக்கத்தில் உறங்கினாலும் அந்த பெண்மணியின் முகம் வேதனையை தான் எழுப்பியது மயக்க மருந்து கூட அவருக்கு மனநிம்மதியைத் தரவில்லை போலும், என்னம்மா ஆச்சு இவங்களுக்கு?

நான் செய்த உதவிகள் என்மேல் நம்பிக்கை வரவழைத்திருக்கும் என்று நினைக்கிறேன் மடை திறந்த வெள்ளத்தைப் போல் உடனிருந்த பெண்மணி வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார். எல்லாம் அவளோட தலைவிதி, சில பிறப்புகள் எப்போதுமே சுகப்படாது. ஆளும்பேருமா இருக்க இங்கனவந்து அநாதையா படுத்துக் கிடக்கிறாளே இவதான். கவிதா அதான் அவ பேரு பிறப்பும் அப்படி சீரும் சிறப்புமில்லை ஆறாவது பொண்ணு எப்படியாவது தாட்டிவிடனுமின்னு விருதா குடிகாரனுக்கு கட்டிக்கொடுத்திட்டாங்க, ஆணும் பொண்ணுமா கண்ணுல ஒத்திக்கிறாமாதிரி இரண்டு புள்ளைங்க அதுங்க வாழ்க்கையைக் காக்க அவளும் எவ்வளவோ போராடினா தீப்பெட்டி ஒட்டி பிள்ளைக்கு போட்ட காதுகம்மலும், கொலுசும் கூட கழட்டிட்டுப் போயிட்டான் அவ புருஷன். பையன் தலையெடுத்து காப்பாத்துவான்னு பார்த்தா அப்பனைப் போல பிள்ளைன்னு அதுவும் ஊதாரியா திரிஞ்சி பத்தொன்பது வயசிலேயே எவளையோ இழுத்துகிட்டு ஓடிடுச்சி பொட்டைபிள்ளைதான் எதிர்காலன்னு இருந்தா?

 

ghjk



ம்... ஏன் அந்த பொண்ணுக்கு என்னாச்சு... சரியா படிக்கலையா?
படிப்பா அதெல்லாம் கணக்கிலடங்காமத்தான் இவ சக்திக்கு உடம்பையே செருப்பா தச்சிப்போட்டு என்ஜினியருக்குப் படிக்கவைச்சா பயபுள்ளை ஒழுங்கா சோறுகூட திங்காது காலேஜீ வண்டி வரும்போது சோத்தை ஊட்டிகிட்டு செலவுக்கு பணம் கொடுத்து தேராய் அலங்கரிச்சுப் பார்த்தா. அது என்னடான்னா கூலிவேலை பார்க்குறே ஒருத்தனைக் கட்டிகிட்டா, இந்த சினிமாவிலே எல்லாம் காட்டுவாங்களே தாலியைக் கட்டிகிட்டு அவங்க அவங்க வீட்டுலே கமுக்கமா இருந்துட்டாங்க இரண்டுபேரும்.

ரிஜிஸ்டர் மேரேஜா...?

அந்தக் கண்றாவிதான், ஏந்தம்பி நீயும் சின்னவயசுதானே வயித்தைக் கிழிச்சிப் பெத்துப்போடும் போது இந்த பாழாப்போன காதல் எங்கேப்பா போச்சு, மூச்சிலிருந்து, பேச்சிலிருந்து, பசியறிந்து சோத்தைப் போட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தி வளர்த்தாலும் உன்னையே தானே நம்பி கிடந்தா கட்டினதுதான் சரியில்லை பெத்த ஒண்ணாவது ஒழுங்கா இருக்கவேண்டாம். நாலுபேரு பாக்க எனக்கு ஆத்தா வேணான்னு விடுதலைப்பத்திரத்தில் கையெழுத்து போட்டாளே அந்த கையெழுத்தை கத்துகொடுத்தது கூட பெத்தவதானே அவ உழைப்புதானே உங்களையெல்லாம் நாங்க காதலிக்க வேண்டான்னு சொல்லலை அதை மறைத்து ஏன் பெத்தவளை ஏமாத்தனுன்னு கேக்கிறேன். பசியாத்தி வழியனுப்பி வைக்கிறவ நீ படிக்கிறேன்னு தானே நம்பிக்கையா இருப்பா நீ இப்படி இரவல் வாங்கின உடம்பும், உடையுமா அலங்கரிச்சு இன்னொருத்தன் கண்ணுக்கு விருந்து கொடுக்கிறேன்னு எந்த தாயாவது நினைப்பாளா?! காதல் என்ன தம்பி காதல் நேர்மையில்லாத எதுவும் சுயநலம் தலைவிரித்தாடும் எதுவும் நிலைக்காது. அதுங்களைச் சொல்லியும் தப்பில்லை தம்பி இன்னைக்கு உலகம் துரோகத்தையும், ஏமாற்றையும் தானே சொல்லித்தருது. மலிவு உணர்வைகளைத் தானே தட்டில் வைச்சி ஊட்டிவிடுது. அதுக்குத் தகுந்தாமாதிரிதானே புத்தியும் இருக்கும்.

அந்த பொண்ணு....

இதோ மூணாவது தெருவில எங்கே ஆத்தா வந்து தன்னை கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு அந்த பையன் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு கிடக்கா. இந்த முட்டாள் சிறுக்கி நாலுநாளா பச்சைத் தண்ணி பல்லுலே ஊத்தாம விட்டுத் தொலைன்னு சொன்ன உறவுகளை மதிக்காம பிள்ளை என் பிள்ளை என்னைப் பார்த்தா ஓடிவந்திடுவான்னு குருட்டுத்தனமா நம்பி வந்திட்டா, இரண்டு நாளைக்குப் பிறவுதான் அந்த பொண்ணு முகத்தையே பார்த்தோம். பெத்தவ ரோட்டிலே அநாதையா இருக்க, யார் யார் காலிலே விழுந்து ஒருதடவை எம்பிள்ளையை பார்த்திடறேன்னு கெஞ்சிக்கிட்டு இருக்க அவ காதல் மயக்கத்தில அவன் கூட கல்யாணத்திற்கு தயாராயிட்டா. அவங்க சனங்க இழுத்து தள்ளினாங்க அப்ப கூட ஒருவார்த்தை கேட்கலை தம்பி. மனசு உடைஞ்சி போயி வந்திட்டா பெத்தவ இல்லையா இங்கே நடந்ததைப் பார்த்ததும் அடக்கி வெச்சதெல்லாம் வெளியே வந்திட்டது. இப்படித்தானே அவளோட பொண்ணையும் இன்னொருத்தன் மயக்கியிருப்பான்.

 

hj



இந்த பிள்ளைகளுக்கு சினிமாவைப் பார்த்து ஆசை வருது. இந்தப் படத்தில இவ கிடைக்கலைன்னு செத்தவன்னு, நாக்கை அறுத்தவன், கட்டிப்பிடிச்சிகிட்டு மலையிலிலே இருந்து விழுந்து செத்தவன் எல்லாம் அடுத்த படத்திலே இன்னொருத்தி கூட ஆடிப்பாடுடப் போயிடுவான் படிக்காத சிறுக்கி எனக்கு புரியுது. இந்த பிள்ளைகளுக்கு புரியலையே நிழலை நிஜம்ன்னு நம்பி அதுங்களும் ஏமாந்து பெத்தவங்களையும் இல்லை ஏமாத்துங்க. என்னசெய்யறது கலிகாலம். படுத்திருந்த அந்த பெண்மணியின் நினைவில் என்ன தோன்றியதோ மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் உடல் வெட்டி வெட்டி இழுக்க அந்தம்மாள் மருத்துவரைக் கூப்பிட ஓடினாள். செத்த பாத்துக்கோங்க என்று! நான் கண்ணிமைக்காமல் அந்த தாயையே பார்த்துக் கொண்டு இருந்தேன். சுயநலங்கள் வஞ்சித்த கலைந்த ஓவியமாய் அவர்.  மகளை மீட்டெடுக்கும் வைராக்கியம் தோற்றுப் போனதையும், நெஞ்சின் லயமாய் துதித்த மகளின் ஏமாற்றத்தையும் தாங்காமல் அந்த இலக்கற்ற விழிகள் ஒரே திக்கில் நிற்க பொங்கிய கண்ணீரோடு நான் திரும்பியும் பாராமல் வெளியேறினேன். 

 

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.