Skip to main content

"அந்த நிமிடம் வரையிலும் ஆண் என்ற அகம்பாவம் கொழுந்து விட்டு எரிந்த தீயைப்போல.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #22


இத்தனை நாளில் இப்படியொரு தூக்கத்தை நான் அனுபவித்ததே இல்லை, இமைகளை பிரிக்கவே முடியாதபடியானதொரு தூக்கம் என்னை ஆட்கொண்டு விட்டிருக்கிறது. இன்று காலையில் இருந்தே ஆனால் இமைகளைத் தான் திறக்க முடியவில்லையே தவிர்த்து என்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் என்னால் நேற்றிலிருந்தே உணர முடிந்துதான் இருக்கிறது. நான் மாரிச்செல்வம் பெயரில் மட்டும்தான் செல்வந்தன் நிஜத்தில் இல்லை. சொந்தமென்று சொல்லிக் கொள்ள ஒரு ஓட்டு வீடு இப்போதோ நாளையோ கூரை வந்து விழுவேன் என்ற பயமுறுத்தலோடு அதன் வாசலில் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டுவிட்டு சென்றானடி என்ற பாடலை பேண்ட் வாத்தியக்காரர்கள் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். ஸ்பைடர் பட எஸ்.ஜே.சூர்யாவைப் போல என்னைச் சுற்றிய ஒலித்த அழுகைக் குரல்கள் எனக்கு ஆனந்தத்தை அளிக்கவில்லை மாறாக எரிச்சலை அதிகரித்தது. என்ன இழவு விழுந்திட்டதுன்னு இப்படி அழுகுதுங்க அதுவும் கும்பல் போட்டு, நேற்றிலிருந்து இதே நிலைதான் என்னால் கண்களை எத்தனை முயன்றும் திறக்க முடியவில்லை.

ஏன்யா இன்னும் ஊரிலேயே இருந்து ஆளு யாரும் வரணுமா? சீக்கிரம் எடுங்கப்பா நல்லபடியா செத்திருக்கான் ஊரு கட்டுப்பாடு தெரியுமில்லை. ஏதோவொருவனின் குரல் கூடவே என் மனைவி காவேரியின் அழுகுரல் இவளுக்கு என்ன வந்தது. அழட்டும் என்ன வாய் பேசினா நேத்து அத்தனை சண்டை போட்டாளே இன்று என்ன கேடு, நாலுபேர் இருந்தால் நல்லவளைப் போல நடித்துக் கொள்கிறாள். நேற்றைக்கு மதியம் தள்ளாடிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது நினைவுக்கு வந்தது. யோவ் சம்பந்தம் பண்ணியாச்சு வீட்டுக்கு தலைப் பொங்கலுக்கு மருமகன் வந்தாச்சு இன்னமும் இப்படி மொட்டைப் பையன்மாதிரி குடிச்சிட்டு இருக்கியே ஏற்கனவே அழிச்சதெல்லாம் பத்தாதா? ஏய் என்னடி சும்மா எடக்கு பேசிட்டே இருக்கே மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை என்ன உன் தம்பிதானே, என்னைப் பார்த்தாலே.... அவனுக்கு எல்லாம் மரியாதை தரணுமாக்கும். இதபாரு உன் காசைக் கரியாக்கலே நான் சம்பாரிச்ச காசு சட்டைப் பையினைத் தட்டிக் காட்டி அவளிடம் வம்பிழுத்தது நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் தடித்து, வேலை செய்யும் இடத்தில் மூட்டைத் தொல்லைக்கு தாங்காமல் வாங்கி வைத்த பூச்சி மருந்தை அவளை பயமுறுத்த குடித்த நினைவு வந்தது . அதற்கு பிறகு கண்கள் சொருகி தரையில் விழுந்தேன், அது போதையிலே மூட்டையின் மருந்தாலா என்று தெரியவில்லை.

 

sdஅப்போதிலிருந்துதான் என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை, பூச்சி மருந்து குடிச்ச கேஸா போலீஸ்க்கு சொல்லுங்க என்று டாக்டரின் குரல் அதெல்லாம் பார்த்துக்கறேன். இவன் என் பையன்தான் சீக்கிரம் பாருங்க நான் இந்த ஊரு கவுன்சிலர் என்ற சித்தப்பாவின் குரல் அதன்பிறகு எனக்கு நினைவு வந்தது மாலையில்தான் இதே அழுகைக் குரல்களைக் கேட்டுத்தான். ஏம்மா பையனை எங்கே காணோம் தலைக்கு மொட்டை போடணும், பொம்பிளைப் பிள்ளைங்க எல்லாம் நீர்மலைக்கு தயாராகுங்க, குடியானவனின் குரலில் ஒருவித அவசரம் தொற்றிக் கொண்டு இருந்தது வேலையை முடித்து விட்டு சென்றால்தானே கடை மூடுவதற்கு முன்பாக போக முடியும் அந்த அவரசமாக இருக்கும் என் இனம் அவனும். முன்னுக்குப் பின் யோசனைகள் குமிழிக்கொண்டே இருந்தது. எப்போது இந்த அழுகைக் குரல்கள் ஓயும். என்னை நாற்காலியில் அமர வைத்து தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். உடல் சில்லிட்டு இருந்ததில் நீரின் சில்லிப்பு என்னை அவ்வளவாக தொற்றிக் கொள்ளவில்லை. நெற்றியில் விபூதி கீற்று , ஏம்மா பொறந்த வீட்டு கொடி எங்கே? புது துணி போற்றப்பட்டது. ஏம்பா புதைக்கவா போறீங்க? அகால மரணம் எரிச்சிடலாமே? அவங்க வழக்கம் அதுதானே...

சரி சரி தேரை அலங்கரிச்சிடுங்க அவனோட மச்சான் இருக்கான் இப்போ மாப்பிள்ளை வேற அவன் கிட்டே காசை வாங்கிடுங்க. பளபளவென்று தங்கத்தில் வார்த்தெடுத்தாற் போல தேர் வந்து நின்றது. எல்லாம் எனக்குதான் நேற்றே நான் இறந்து போயிருக்கிறேன் கஷ்டப்பட்டு உழைச்ச காசு இப்படி சாப்பிடமா கொள்ளாமல தண்ணியைப் போட்டுட்டு வந்திருக்கிறே? இப்பத்தான் வயிற்றுவலின்னு தேத்தியிருக்கிறேன் நாளைக்கு சீக்கு வந்து பொட்டு போயிட்டா நீ பெத்து வைச்சிருக்கியே மூளை வளர்ச்சியில்லாத பொண்ணு அவளுக்கு யாரு இருக்கா?! அப்ப நான் செத்துபோறது கூட உனக்கு கஷ்டம் இல்லை. அந்த பொட்டைப்பிள்ளையை யாரு பாத்துக்கிறதுன்னுதான் யோசனை நிற்கவே முடியாமல் தடுமாறியபடியே வார்த்தைக் குழறல்களோடு நேற்று மனைவியிடம் சண்டையிட்ட அந்த குட்டிப் பெண்ணை நான் இனிமேல் வரவே மாட்டேன் என்பதைக் கூட அறியாமல் அது அப்பா எழுந்திருப்பா என்று என் உடல் மேல் மீண்டும் கதறியழுததைக் கண்டபோதுதான் என் தவறு எனக்கே புரிந்தது.

நாளைன்னு தலைப்பொங்கலு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் விருந்துன்னு சொல்லி கூப்பிட்டியே அண்ணே போயிட்டியே என்று பூதங்குடியிலிருந்து வந்து அழுத தங்கை, அப்பாவோட சொத்துல பொண்ணுக்கும் பங்குண்டு. இந்த வீட்டை வித்து எனக்கு பங்கு கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவே உன் குணத்துக்குத்தான் இப்படி ஒரு லூசு பிள்ளையை பெத்து போட்டு இருக்கே ? என்று சொல்லி அடிவாங்கிப் போனவள் இன்று அதே பிள்ளையைக் கட்டிக் கொண்டுதான் அழுகிறாள். சிங்கம் மாதிரியிருந்தவரு இப்படி அநியாயமா கொன்னுடீங்களே எங்கண்ணனை என்று ஒன்று வித்த தம்பியொருவன் இப்படிக் கத்தினால் ஏதாவது சில்லறை தேறும் என்ற எதிர்பார்ப்புகளோடு பேசிக் கொண்டிருந்தான்.

சீக்கிரம் எடுத்திட்டா நைட்டு பஸ்ஸூக்கே ஊருக்கு கிளம்பணும். நல்லதுக்கு வரலைன்னாலும் கெட்டதுக்கு வரணுமே நாளைக்கு ஏன் வரலைன்னு யாரும் கேட்டடுடக் கூட இல்லை. சுற்றிலும் பலதரப்பட்ட குரல்கள் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று நான் என் இறுதி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். படிப்பு வரலைன்னா என்ன ஆம்பிளைப் பிள்ளை தானே ஒரு கைத்தொழிலைக் கத்துக் கொடுத்திடலாம் பள்ளிக்கு போகமாட்டேன்னு அடம் பிடித்த அன்று அப்பா அம்மாவிடம் நான் அறியாமல் சொன்னது. ரோட்டில் விளையாடும் பிள்ளைகளுடன் சண்டைப் போட்டு வந்தப்போ ஏண்டா அழுறே ஆம்பிளைதானே அடிச்சிட்டு வராமே அடி வாங்கிட்டு வந்திருக்கியே என்ற கொம்பு சீவிவிட்ட அம்மா. அவ பார்க்கலைன்னா என்னடா தாவணியைப் பிடிச்சி இழு நாம ஆம்பிளைங்கடா எதுக்கு பயப்படனும் பழகியவனின் தூண்டுதல், பொண்ணு கலரா இருந்தா என்ன ரம்பையாவே இருக்கட்டும் ஆம்பிள்ளைக்கு அழகா முக்கியம் கல்யாண சந்தையில் விலைபேச பட்ட போது, ஆம்பிளைன்னு மட்டு மரியாதை இல்லாம அதென்ன எதிர்த்து எதிர்த்து பேசுறே என்று மனைவியிடம் எகிறய போது இதோ நேற்று வரையில் அவளை பயமுறுத்துகிறேன் என்று மருந்து குடித்த அந்த நிமிடம் வரையிலும் ஆண் என்ற அகம்பாவம் கொழுந்து விட்டு எரிந்த தீயைப்போல எனக்குள் தகித்தது.

நேற்றுவரையில் எதிர்த்து பேசிக்கொண்டிருந்தவள் இன்று என் காலடியில் கவலை தோய்ந்த முகத்தினோடு! நெற்றி நிறைய குங்குமமும், பூவும் வளையலும் என அலங்கரித்து இன்றோடு உனக்கு இதெல்லாம் கடைசி என்று சொல்லாமல் சொல்லிய அந்த நிமிடங்கள் இருபத்தியந்தைந்து வருடங்கள் என்னுடன் உடலையும் மனதையும் பகிர்ந்து கொண்டவளை காணும் போது மட்டும் என் கண்கள் திறந்து கொண்டது. ஆனால் நடந்த எதையும் சீர் செய்ய முடியாமல் என் கைவிரல்கள் கட்டப்பட்டு விட்டது. நெற்றியில் சந்தனத்தோடு ஒற்றை ரூபாய் ஒட்டப்பட்டு கோடித்துணியைச் சுமந்து கொண்டு போகிறேன் வாய்கரிசியிட இடுகாட்டின் வாசல் வரையில் உறவுகள் என்னும் பெயரில் பிரிந்த மனிதர்களை கடந்து முழுமனிதனாய் வலம் வந்த உடல் இன்று பிணம் என்னும் அடைமொழியோடு ஒரு பிடி சாம்பலாகிறது. இந்த பிடிசாம்பலைப் போல அவசரம், ஆத்திரம், துரோகம், பழிவாங்கல், பயமுறுத்தல் என்று பல அடையாளங்களை இடுகாடு தன் வரலாற்றில் பொரித்திருக்கும் என்னைப் போன்ற ஆண் என்ற கர்வச்சுமையை முதுகில் சுமந்தவர்களை!

அடுத்த பகுதி - "துரோகங்களின் சவுக்கடியில் சிதைந்து ரணமாகியிருக்கிறது அவனின் இதயத் தசைகள்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #23
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...