Skip to main content

"நீ போ அம்மா வந்திடுவா என்ற பிரபுவின் கடைசி வார்த்தைகள் ரவீந்திரன் காதுகளில்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #13

Published on 30/11/2019 | Edited on 02/03/2020


துரோகத்திற்கு மட்டுமே மூச்சு முட்டும் அளவிற்கு மனப்பந்தை மூழ்கடிப்பதைப் போன்ற வலி இருக்கும். அந்த வலி தரும் வேதனைக்கு எந்த மருந்தும் தீர்வைத் தருவதில்லை அப்படியொரு துரோகத்தின் வெளிப்பாடுதான் ஜானகியின் இந்தக் கதை. ஜானகிக்கு இத்தனை சீக்கிரம் கல்யாண ஆசை வந்திருக்க வேண்டாம் என்றுதான் அவருடைய தந்தை விஸ்வதிற்கு தோன்றியது. என்னதான் அத்தைப் பையனாக இருந்தாலும் அவன் தன்னுடைய நான்கு பெண்களில் யாராவது ஒருத்திக்கு கணவனாக வரவேண்டியவனாக இருந்தாலும் சட்டென்று ஜானகியைக் காட்டி இவளைத்தான் கல்யாணம் செய்துக்கொள்ளப்போகிறேன் என்று அவனும், அவன்தான் என் கணவன் என்று அவளும் முடிவெடுப்பார்கள் என்று அவர் யோசித்திருக்கவில்லை, தங்கையின் சுறுசுறுப்பு சுட்டுப்போட்டாலும் பெரியவளுக்கு வராது. அது ஒரு கட்டுப்பெட்டி என்பதால் அவரே ஒரு ஏப்பை சாப்பையான மாப்பிள்ளைக்கு கட்டிவைத்து அவசர அவசரமாக ஜானகிக்கு மணமுடித்தார் காரணம் காதும் காதும் வைத்தாற்போல ஜானகி மூன்று மாதங்கள் குளிக்கவில்லை என்பதுதான். 

எதிர்பாராத ஒன்று நடக்கும் போது ஏதாவது ஒன்று தாழும் மற்றொன்று உயரும் என்பது உலகநியதி. அப்படி தாழ்ந்துதான் போனார்கள் ஜானகியும் ரவீந்திரனும். காதல் கல்யாணம் என்று காட்டிய அவசரம் குருவிகள் கலைத்த அரிசி மாவுக் கோலமாய் ஆனது. ஆறுவருடங்கள் முதல் குழந்தையை குறைப் பிரசவத்தில் மண்ணுக்கு தாரை வார்த்தப் பின்னும் நான்கைந்து அபார்ஷன்களைத் தாங்க முடியாமல் ஜானகிக்கு ஜன்னி வந்தது. அதன் பிறகு அவளின் உடலைத் தேற்றி மீண்டும் கருவுற்று இருந்தபோதுதான் அறிந்தாள். தன் கணவனின் தன் ஆண்மையை ஊருக்கு நிரூபிக்க மற்றொரு குடும்பத்தையும் உருவாக்கியிருக்கிறான் என்று! ஜானகியின் வார்த்தைகள் ரவிந்திரனிடம் கேள்விகளாய் முளைத்தன. ஆண்மகனின் திமிர்த்தனம் பட்டவர்த்தமாக ஒவ்வொரு இரவும் ஜானகியின் மனதைப் போலவே அவளின் உடலும் நசுங்கிக்கொண்டு இருந்தது?! 

பாட்ஷாவில் ரஜினி ஒரு டயலாக் பேசுவாரே எனக்கு இன்னொரு பெயர் இருக்குன்னு அப்படித்தான் ரவீந்திரனும் ஊர் கூடி திருவிழாவின் மையத்தில் அட்டகாசமாக ஆடிவரும் ஏதோவொரு இறைவனின் அம்சமாய் உயிருடன் ஆட்டின் ரத்தத்தையும் கோழியின் ரத்தத்தையும் ருசிபார்த்துக் கொண்டு இருந்தான். தீவிரமான சாமிகொண்டாடியாம். யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போச்சு என்பதைப் போல கொஞ்சம் கொஞ்சம் ஆக ரவீந்திரனின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தொழில் இழந்து மதியிழந்து அவனின் செயல்கள் எல்லாம் நடுவாந்தரத்திற்கும் கீழ். மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவன் கற்றுக் கொடுத்த தையல் தொழிலில் நான்காவது பிள்ளையாய் அவனையும் கவனித்து வந்தாள் ஜானகி.  பச்சைரத்தம் குடித்தாரே அதனால இருக்குமோ சாமிக்குத்தமாக இருக்கணும் ஜானகி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதே ஊரிலே சாமியாடும் போது கூட உம் புருஷன் சுத்தபத்தமா இல்லை எனக்குத் தெரிந்து ....இப்படி அநேக இருக்குமோக்கள்....யூகங்களாய்....! 
 

vb



ஐந்து ரூபாய் ரேஷன் அரிசியின் தடிமனான பருக்கைக்கும், உலை கொதிக்கும் போது வீசும் மூடை நாற்றத்திற்கும் தொண்டையையும், மூக்கையும் பழக்கப்படுத்திக்கொண்டார்கள் மூன்று பிள்ளைகளும். காய்ந்து போன இட்லிகளுக்கு கால்கடுக்க நின்று கடன் வாங்கி வரும் பிள்ளைகளின் வறுமை நெஞ்சைப் பிளக்க, காட்டில் வழிதவறும் மானைப்போல வழிதடுமாறினாள் ஜானகி.  ஏற்கனவே நான்கு பெண் பிள்ளைகள் திரும்பிப்பார்ப்பதற்குள் இத்தனை வயிற்றைக் கழுவ தன்னால் முடியாது என்று கைவிரித்துவிட தாய்வீடும் கைவிரிக்க, தன் சுமையை தானே முதுகில் சுமக்க மாற்றான்களை உடலில் சுமக்கத் தொடங்கி விட்டாள் ஜானகி. தகவல் தெரிந்து தந்தையின் கைகள் கூட நள்ளிரவில் அந்தரங்கத்தை தொட ச்சீ ... ஆண்கள் என்றாலே மறத்து போய்விட்டது பிரமிளாவின் வசனத்திற்கு அன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு ! கால்போன போக்கில் தன் காதலும், காதல் கணவனும் தொலைந்த போது அத்தனை ஒன்றும் ஏமாற்றமும் வருத்தமும் மனதில் குடிகொள்வில்லை, மாறாக வயிற்றின் சுமையிறக்கிய பிள்ளைத்தார்ச்சியின் மனநிலையில் இருந்தாள் ஜானகி. 

வருடங்கள் கடந்தது பிள்ளைகளின் வருமானம் ஜானகியின் சுமத்தலை தோள் மாற்றியது ஆனால் சுயம் தொலைந்ததைப் போல தொலைந்து போன ரவீந்திரனும் காலம் போன கடைசியில் வந்து ஒட்டிக்கொண்டான். அம்மா எங்களுக்காக நீ எத்தனையோ கஷ்டப்பட்ட இனிமேலும் கஷ்டப்படாதே என்று சென்றவாரம் வரையில் பேசிக்கொண்டு இருந்த மூத்தமகள் நேற்று காலையில்தான் பக்கத்து தெரு மெக்கானிக்குடன் காதல்வாகனத்தில் காணாமல் போயிருந்தாள். இன்னொரு ஜானகியாய் மகள் உருவாகி விடுவாளோ என்று பயத்தில் நடந்துவிட்ட தவறுக்கு தன்னையே காரணமாய் காட்டி மகனும் ஒதுக்கிவிட இளைய மகனின் அருகில் ஒருவாய் சோற்றுக்கு இறைஞ்சியபடியே ஜானகி. இதில் ரவிந்திரனை எங்கே வைத்துக்கொள்வது ?! சிறிய மகனின் ஆறுதல் எத்தனை நாளைக்கு என்று நெஞ்சில் எழும்போதே தனது கைத்தொழிலான பாழடைந்திருந்த தையல் மிஷனுக்கு எண்ணெய் ஊற்றி ஓட்டிப்பார்த்தாள். கடகடவென்ற அதன் ஒலி பழைய வாழ்க்கையின் நினைவுகளைக் கீறிட, காதலாய் கண்ட கண்களை நினைக்க ஆரம்பித்தது மனது. ஒரு கட்டத்திற்குப் பின் நினைவுகள்தானே வரமாய் போகிறது. இரண்டு வேளை உணவு நம் இருவயிற்றுக்கும் போதும் என்று ரவீந்திரனிடம் மையமாய் பேசிவைத்தாள். புரிந்ததோ இல்லையோ தலையாட்டினான் அவன். 
 

kj



அதிகாலையில் கோவிலுக்குப் போய்விட்டு நைந்து போன பழைய லுங்கியில் இருக்கும் ரவீந்திரனுக்கு சிறிய கரைப் போட்ட 60 ரூபாய் வேட்டியும் 200 ரூபாய்க்கு சட்டையும் எடுத்து வந்தாள். இதற்கே, வாரம் முழுக்க பழைய துணிகள் தைக்கவேண்டியிருந்தது. தன் உற்ற தோழியான தையல் மிஷினின் மேல் அவற்றை வைத்துவிட்டு ரவீந்திரன் உட்கார்ந்திருக்கும் தட்டியைத் தாண்டி அவனைத் தேடினாள்.  பிரபு அப்பா எங்கேடா இங்கேதானே இருந்தார். காணோமே! வாயில் புடவையினை கூட அழகாய் உடுத்தியிருந்த அன்னையின் நேர்த்தி வியர்வையில் சன்னமாய் வழிந்தோடும் குங்குமக் கோடு கூட நீண்ட நாளைக்கு முன்பு இப்படி மலர்ச்சியாய் அம்மாவைப் பார்த்திருக்கிறான். மனதின் ஓரம் சட்டென உதறல் அவனுக்கு இருந்தாலும் அவள் முகம் பார்க்காமல், எனக்கென்னமா தெரியும். அவரு எப்போ எங்கே போவாருன்னு நானென்ன கண்டேன். 

வேலையைப் பாரு எங்கயாவது சுத்திட்டு வந்துடுவாரு, ஆருடம் சொல்வதைப் போல சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.  கேள்விகள் குடைந்த மனதை அடக்க வழிதெரியவில்லை ஜானகிக்கு எங்கே போயிருப்பாரு? காலம் முழுமைக்கும் நீதான்னு இப்படி கைவிட்டுப் போய்விட்டாரேன்னு முதல்முறை ரவீந்திரன் காணாமல் போனபோது மனதின் ஓரம் வலித்தது அதன்பிறகு அவன் இரண்டு முறை வந்தது பிறகு மீண்டும் காணாமல் போனது என இருக்கு, இருந்தால் ஒரு கைபிடி அதிகமாக உலைவைக்க வேண்டும் இல்லையென்றால் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அவள் வந்திருந்தாள்.  ஆனால், நேற்றைய முடிவின் நிலையில் இன்று ஏதோ பெரியதாக இழந்து விட்டது போல தோன்றியது ஜானகிக்கு. இனிமேல் ரவீந்திரன் என்ற உருவம் தன் கண்களுக்கு புலப்படாமலேயே போய்விடமோ என்று முதன் முறையாக பயந்து யோசித்த ஜானகிக்கு தெரியாது, தன் தந்தையை வடமாநிலத்திற்கு போகும் ஏதோவொரு இரயிலில் அதிகாலையிலேயே பிரபு ஏற்றிவிட்டு வந்தது.

முகம் தெரியாத குழந்தைபோல ஏதோ ஸ்டேஷனில் இறங்கி ஏன் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலேயே சட்டைப்பையில் வைக்கப்பட்ட சில சில்லரைக் காசுகளை தொட்டுப்பார்த்துக் கொண்டு மலங்க மலங்க விழித்திருக்கும் ரவீந்திரனுக்கும் தெரியாமலே போனது பிள்ளையின் துரோகம். நீ போ அம்மா வந்திடுவா என்ற பிரபுவின் கடைசி வார்த்தைகள் ரவீந்திரன் காதுகளில் காலியாகும் ஒவ்வொரு பெட்டியிலும் அவன் ஜானகியைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

 

அடுத்த பகுதி - "பிள்ளைகளின் குற்றச்சாட்டுகளை தவிர்கக நினைக்கும் பெற்றோர் அதற்கு லஞ்சம்.." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #14


 

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வீட்டிற்குள் உறங்கிய பச்சிளம் குழந்தை; தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த கொடூரம்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
 baby sleeping inside the house was found in a water tank

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகம் கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் - வீராயி தம்பதியின் மகன் மோகன் (வயது 34) பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வந்தவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கர்ப்பிணியாக இருந்த பெண் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகவள்ளி (எ) கிருத்திகாவை முறைப்படி தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

வெள்ளிக் கிழமை மதியம் குட்டியப்பன் - வீராயி இருவரும் அவர்களின் மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றுவிட்டனர். அப்போது மோகன், செண்பகவள்ளி இவர்களின் 35 நாள் பச்சிளங்குழந்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். மாலை 4 மணிக்கு செண்பகவள்ளி குழந்தையை கட்டிலில் படுக்கப் போட்டுவிட்டு வீட்டிற்குள் உள்ள குளியல் அறைக்குச் சென்று குளிக்கச் சென்றுவிட்டார். மோகன் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார்.

 baby sleeping inside the house was found in a water tank

செண்பகவள்ளி குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. பதறிக் கொண்டு மோகனை எழுப்பி குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார். இருவரும் குழந்தையை தேடும் போது குழந்தைக்கு உடுத்தி இருந்த துணிகள் வீடு ஓரம் கிடந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து தேடினார்கள். சிறிது நேரத்தில் மொட்டைமாடியில் மூடியிருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்த மோகன் குழந்தை இதுக்குள்ள கிடக்கு என்று தூக்கியுள்ளார். பேச்சுமூச்சின்றி கிடந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

35 நாள் பச்சிளம் ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் ஊரே கூடிவிட்டது. கே.புதுப்பட்டி போலீசாரும் வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிறந்து 35 நாட்களேயான பச்சிளங் குழந்தை எப்படி மாடிக்கு போனது? யார் தூக்கிச் சென்றது? வீட்டிற்குள் இருவர் இருக்கும் போது யார் உள்ளே நுழைந்து குழந்தையை தூக்கி இருப்பார்கள்? நாய் தூக்கிச் சென்றிருந்தால் கடித்து வெளியில் தான் வீசி இருக்கும்.. மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டுவிட்டு தொட்டியை மூடிய கொடூர கொலைகாரன் யார்? சிறிது நேரத்திலேயே தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் எண்ணம் எப்படி உருவானது என்பது போன்ற பல கேள்விகளுடன் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். யார் குற்றவாளி என்பதை விரைவில் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என போலீசார் கூறினர்.