Skip to main content

"தந்தையென்னும் உறவு தனக்கில்லை என்று தவித்த அந்த மனதை.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #12

நகரத்தின் மிக முக்கிய பள்ளிகளில் அதுவும் ஒன்று. படிப்பின் அழுத்தம் குறைக்கவும், பிள்ளைகளுக்கு புத்துணர்வை அளிக்கவும் அவ்வப்போது கெளன்சிலிங் கொடுக்கச் சொல்லி அழைப்பின் பேரில் செல்வது வழக்கம். அதேபோல் சென்ற வாரப் பேச்சிற்குப் பிறகு தமிழ்பிரிவில் உள்ள ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்தித்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி காலாண்டுத் தேர்வு வரையில் நல்ல மதிப்பெண் எடுத்ததாகவும் தற்போது நடைபெற்ற தேர்வில் சரியான மதிப்பெண்களை எடுக்கவில்லை. மேலும், அவளின் கவனம் சிதறுவதாக தெரிவதாகவும் தந்தையில்லாத பெண், தாயும் ஒரு மூத்த சகோதரி மட்டுமே உள்ளதால் அவர்களை அழைத்துச் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை, தற்போது சில நாட்களாக சரியாக பள்ளிக்கும் வரவில்லை என்றும் இப்படியே போனால் அந்த பெண்ணின் எதிர்காலம் கேள்விக் குறியாக ஆகிப்போகும் என்பது ஆசிரியரின் கவலையாகிப் போக மறுநாள் அந்தப்பெண்ணை அழைத்து வந்தார். மிகவும் அமைதியாக இருந்த பெண்ணிடம் அவர்கள் குடும்பத்தினரிடம் பேசிப் பார்க்க அவர்கள் தெரிவித்த விஷயம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆண் துணையில்லாத குடும்பம் வாணியுடையது கூடப்பிறந்த அக்காவும், கணவனை இழந்த தாய் மட்டுமே,வாணி குழந்தையாக இருந்த போதே தந்தை குடிபோதையில் உயிரிழந்து விட்டார். தகப்பன் என்ற ஒரு ஆணின் அரவணைப்பும், அக்கறையான வழிகாட்டுதலும் இல்லாமல் வளர்ந்த வாணி அந்த அன்பிற்கு ஏங்க ஆரம்பித்தாள். தன் வயது பிள்ளைகளை கைகளைப் பற்றியோ, தோள்மீது சுமந்தோ செல்லும் தந்தையென்னும் உறவு தனக்கில்லை என்று தவித்த அந்த மனதை ஆற்றுவதற்குப் பதில் நடந்த அனைத்தும் காயத்தை தூண்டிவிடுவதாகவே இருந்திருக்கிறது. பள்ளியில் பயிலும் மற்ற தோழிகள் விடுமுறை காலங்களில் தந்தையுடன் செலவழித்த நிமிடங்களைப் பற்றி கதை கதையாக பேசுவதும் அதையெல்லாம் ஏக்கத்தோடு அவள் கேட்டுக் கொண்டு இருப்பதே வாடிக்கையாகிப் போனது.

கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தாய், காலையில் இட்லி மாவை தலையில் சுமந்து கொண்டு தெருத் தெருவாக போய் விற்றுவரும் அம்மாவாலும், மாதம் 7000 சம்பாதிக்கும் சகோதரியாலும் அவளின் தேவைகளைத் தீர்க்க முடியவில்லை, படிப்பு ஏறாத சகோதரி வேலைக்கு சென்றுவிட, தன் தேவைகளை தனியாகவே செய்துகொள்ளும் நிலை. பள்ளிக்கு நடந்தே செல்லும் போது, தன்னைக் கடந்து தந்தையின் பைக்கில் செல்லும் பிள்ளைகளின் சிரிப்பு வாணிக்கு வருத்தத்தைத்தான் தந்தது. தோழியின் வீட்டில் பிறந்தநாளின் போது நடந்த சிறு சிறு நிகழ்வுகள், தான் மட்டும் சபிக்கப்பட்டு விட்டோம் அதற்கு காரணம் அம்மாவும் சகோதரியும்தான் அவர்களால் தனக்கு ஏதும் செய்ய முடியாது, ஆனால் எங்கப்பா வாங்கிக் கொடுத்தார் என்று தம்பட்டம் அடிக்கும் சக தோழிகளிடம் தானும் கெத்து காட்ட வேண்டும் என்றால் , அவளுக்கும் வேண்டியதெல்லாம் உடனே கிடைக்கவேண்டும். ஒருநாள் இரவு உணவு வெளியில் இருந்து வாங்கித் தரவே யோசிக்கும் அம்மாவிடம் அவள் எப்படி கேட்க முடியும் எதைக் கேட்டாலும் பஞ்சப்பாட்டுதான் கிடைக்கும். நானென்ன என் பிரண்டுக்கு பண்ணா மாதிரி விழாவா பண்ணச்சொல்றேன் பசிக்குது சாப்பாடு பிடிக்கலை வெளியே வாங்கிக்கொடுங்கன்னு தானே சொல்றேன் எனக்கு மட்டும் பக்கத்துவீட்டு கார்த்தி மாதிரி அப்பா இருந்தா கேட்காமலே வாங்கித் தருவார் இல்லை என்று கண்ணைக் கசக்கினாள்.

 

kஉணவு, உடை, பேனா, புத்தகம், திண்பண்டங்கள் என்று அவளின் அனைத்து தேவைகளுக்கும் அப்பா மட்டும் இருந்திருந்தா என்ற தாரக மந்திரமும் நொடி அழுகையும் அனைத்தையும் பெற்றுத்தந்தது. ஆனால் அதை வாங்க தாயும் தமக்கையும் ஒரு வேளை உணவை இழக்கிறார்கள் என்ற நிலைமை தெரியவில்லை அவளுக்கு! அம்மா எங்க ஸ்கூல்ல டூர் போறாங்க நானும் போகணும் 1000 ரூபாய் வேணும், எனக்கு தீபாவளிக்கு இந்த மாடல் டிரஸ்தான் வேணும், இரவு பணிரெண்டு மணிக்கு பிரைட்ரைஸ் வேணும், மினரல் வாட்டர் கேன் வேணும் நிறைய வேணும்-கள் விரும்பியவண்ணம் கிடைத்தது. கிடைக்காத நேரம் அப்பா மட்டும் இருந்திருந்தா, இந்த வார்த்தை அவளுக்கே அலுத்து விட்டதோ என்னவோ முதன் முதலில் கையில் கிடைத்த டவல், சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து கழுத்தைச் சுற்றி சுருக்கு போல் போட்டு வாங்கிட்டு வரலைன்னா இப்பவே நான் இறுக்கிகிட்டு செத்துடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தாள். அவ சின்ன பொண்ணு நீதான் போய் வாங்கிட்டு வாயேன் பகல் முழுவதும் முதுகொடிய உழைத்து வரும் பெரிய பிள்ளை இந்த மிரட்டலுக்கு பயந்து அர்த்த ராத்திரியில் பாஸ்ட் புட் வாசலில் சிக்கனுக்கும் பிரைட் ரைஸீக்கும் நிக்கும். அம்மா அங்கே தண்ணியடிச்சிட்டு எல்லாரும் நிக்கறாங்கம்மா எனக்கு பயமாயிருக்கு என்று சொல்லும் போது ஒருநாள் தானே அவ சின்ன பொண்ணு உன்னை மாதிரி புரிஞ்சிகிட்டா எல்லாம் சரியாகிடும் என்று சப்பைகட்டு கட்டி சின்னமகளின் பேராசைக்கு எண்ணெய் ஊற்றி பெரியமகளின் அக்கறையில் சுடுநீரை ஊற்றினார் அம்மா.

வாசற்படியில் நின்றுகொண்டு அசிங்கமாக தன் பெண்ணை திட்டும் அந்த 36வயது பெண்மணியுடன் சண்டையிடும் போதுதான் தெரிந்தது வாணியின் இன்னொரு முகம். நீ தினமும் வேலைக்குப் போறே உம்பொண்ணு இங்கே இருந்து என் புருஷனோட ஊர் சுத்தறா, நேத்து கூட பீச்சுக்கு போயிட்டு வந்திருக்காங்க, காலணியில் ஒட்டியிருந்த மண்ணைப்பற்றி கேட்டதற்கு ஸ்கூல் கிரவுண்டில் விளையாடினேன் என்று மகள் சொன்ன நினைவு. அவ சின்ன பொண்ணு அப்படியின்னா என்னென்னே அவளுக்குத் தெரியாது ஆள் தெரியாம பேசாதே என்றதற்கு தன் சின்னமகளும் அந்த 40  வயது ஆளும் பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மொபைலில் காண்பிக்கப் படுகிறது. பதறிய நெஞ்சத்தோடு நான் விசாரிக்கிறேன் வாசப்படியிலே நின்னு அசிங்கப்படுத்தாதே என்று காலில் விழாத குறையாக அந்த பெண்ணை அனுப்பிவிட்டு பெரியவளும் தாயும் விசாரிக்க அவரு ரொம்ப நல்லவரு அந்தப் பொம்பிளை பொய் சொல்லுதும்மா சாயங்காலத்திலே டீ வாங்கவும் பஜ்ஜி வாங்கவும் டீக்கடைக்குப் போகிறப்போ பார்த்திருக்கேன் என்று சுரத்தில்லாமல் சொன்னவள் இப்படியே என்னை கேள்வி கேட்டுகிட்டே இருந்தே நான் கழுத்தை இறுக்கிப்பேன் என்று துப்பட்டாவும் கையுமா நிற்க இந்த முறை இருவருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. அன்றிலிருந்தே வீட்டில் சிக்கல், தன் தங்கையை கோயம்பேடுவில் உள்ள சித்தி வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்குப் போய் வர மட்டும் இங்கே வந்தால் போதும் ஸ்கூல் விட்டு வந்ததும் நானே பஸ் ஏத்திவிடறேன் நீ அங்கே போயிடு என்று ஏற்பாடானாது.

இனி பிரச்சனை வராது என்று சந்தோஷமா இருந்த நேரத்தில் மீண்டும் அந்த பெண் வந்தால் இம்முறை வீடியோவோடு அவனின் மடியில் அமர்ந்து கொண்டு சிரித்துப் பேசியபடி, சகஜமாக அவனின் விரல்களை தனது உடலில் மேயவிட்டபடி என்று சில ஆதாராங்கள். ஆனா நாங்கதான் கோயம்பேட்டில் விடறோம் பஸ் ஏத்தக் கூட இரண்டு வேளையும் வர்றோமே என்ற கேள்வி மறுநாள் பின்னாடி சென்று பார்த்தபோது தெரிந்தது கோயம்பேட்டில் அடுத்த ஸ்டாண்ட்டில் இறங்கி அவனுடன் வண்டியில் வந்து முதல் ஸ்டாப்பில் ஒரு பஸ்ஸில் ஏறி நிறுத்தத்தில் இருந்து வெளியே வருது.
 

ljஅப்பறம் என்னதான் ஆச்சு?! ஒரு வக்கீலு வைச்சி அந்தாளு எம் பிள்ளைய ஏமாத்திறாம்மான்னு கேஸூ கொடுத்தேன். ஆனா அவன் வெளியே வந்து மறுபடியும் தொந்தரவுதான் என்று முடிக்கவும் நான் அந்த பெண்ணை அழைத்தேன். பொதுப்படையாக சில விஷயங்கள் பேசிவிட்டு அந்த பெண்ணைப் பற்றி பேசினேன். அவரு ரொம்ப நல்லவரு மேடம் அவரு பொண்டாட்டிதான் ஒருமாதிரி பாவம் அவருக்கு அந்தப்பொம்பிளையால அத்தனை கஷ்டம்,அதையெல்லாம் மறக்கத்தான் அவரு என்கூட பழகுறாராம். என்னைவிட பெரிய பசங்க அவங்களுக்கு இருக்காம் ஆனா பாருங்க என்னையும் அவங்களைப் போலத்தான் பாக்குறேன்னு சொன்னாரு, அதுக்கு நான் அவர் வீட்டுலே தானே இருக்கணும் வேற எப்பிடி என்னைக் கூப்பிட முடியும் கூப்பிட்டாத்தான் விட்டுறுவாங்களா? நீயேன் அங்கே போகணும்.

நான் எதைக் கேட்டாலும் காசில்லைன்னு அம்மாவும் அக்காவும் முடிச்சிடறா ? ஆனா அவரு அவங்க பிள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்தேன் இந்தா உனக்கும், நைட் சாப்பாடு வாங்கினேன் உனக்கும் எடுத்துக்கோன்னு எத்தனை தடவை தர்றார். எனக்கு பீச்சுக்கு போகணுன்னு ஆசை, பெரிய பெரிய தியேட்டர்லே படம் பாக்கணுன்னு ஆசை, அதெல்லாம் அவர்தான் செய்யறார். பீச்சிலே சுண்டல், முறுக்குன்னு நான் என்ன கேட்டாலும் வாங்கித்தருவார். தியேட்டர்ல கூட வசதியான டிக்கெட்டிலேதான் படம் பார்ப்போம். அவரு சொன்னாரு நான் உன்வரையில் என் பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் செய்யனுமோ அதையெல்லாம் செய்யறேன். ஆனா உன்னைக் கல்யாணம் செய்துகிட்டாதான் நீ என் வீட்டுக்கு வர முடியும். பெரியபடிப்பு, நல்ல துணிமணி, நகை நட்டுன்னு எல்லாம் கிடைக்குன்னு சொன்னார். அதனால் நானும் சரின்னு சொல்லிட்டேன் எனக்கு ஒரு அப்பா இருந்தா இதேதானே செய்வார். அதேமாதிரி தினமும் எனக்கு அன்பாய் முத்தமெல்லாம் கூட கொடுப்பார். நான் மிகப்பெரிய திடுக்கிடலோடு எங்கே என்றேன். அந்த சிறுபெண் உதட்டிலே இங்கதான் அன்பு அதிகமாகும் அவருக்கு என் நியாபகம் வந்திட்டே இருக்கணுமில்ல அதனாலதான் அங்கே முத்தங்கொடுக்கிறார். அப்பத்தானே யாருக்கு எது வாங்கினாலும் எனக்கு வாங்கத் தோணும். அதனால நான் அவரை கல்யாணம் செய்துகிட்டு போயிடலான்னு இருக்கேன், எனக்குத்தான் அப்பாயில்லையே ?! நீங்க அந்தப் பொம்பிளையைப் போகச் சொல்லுங்க என்று மினிலச்சர் அடித்து முடிக்க வழக்கறிஞரும் கூடுமானவரையில் அறிவுரை சொல்லிக் கேட்க மறுத்திருக்கிறாள். நடுநடுவில் அந்த ஆளின் மனைவி வேறு.

அந்தபெண்ணின் நிலை தெரிந்ததும் அவளுக்கு ரெகுலராக கவுன்சிலிங் தரப்பட்டு இம்மாதிரி வாழ்விழந்த பெண்களின் ஹோம்களுக்கு அழைத்துசென்று எதிர்காலம் பற்றிய பயம் தெரிவிக்கப்பட்டது. அவளின் தோழிகள் மூலமாக அவர்களின் தந்தைகள் வயது வந்த பிள்ளைகளிடம் நடந்துகொள்ளும் முறைகளும் அப்பா என்பது வெறும் பணம் சார்ந்த உறவு மட்டும் இல்லை பலநூறு தந்தையின் பாசத்தை மிஞ்சியது ஒரு தாயின் அன்பு என்று புரியவைக்க எங்களுக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. இப்போதும் மதில் மேல் பூனையின் நிலைதான் அவளுக்கு. ஆனால் தானாக எங்கும் செல்வதில்லை, படிப்பிலும் ஓரளவு தேர்ச்சி என்று சொல்லியிருக்கிறார் அந்த ஆசிரியர். அவளின் மனம் முழுவதாக மாறியிருக்கிறதா, அல்லது அந்த கங்கு எங்கேனும் புகைந்து கொண்டு இருக்கிறதா என்பதை காலம்தான் பதில் சொல்லும். தந்தையென்னும் சொல்லின் புனிதத்தை கெடுத்த அந்த 40 வயது மிருகத்தின் மேல் இப்போது கேஸூம் போடப்பட்டு உள்ளது. இப்போதும் சில நேரம் அப்பா மட்டும் இருந்திருந்தா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறாள் என்று வாணியின் அம்மா சொன்னார்கள். வாணி வெளியுலக அனுபவம் பெற்று அவளின் வாழ்வு சிறக்க முயற்சி செய்வதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்