ADVERTISEMENT

"எல்லாப் பெண்ணின் பிறப்பும் முழுமையடைவது தாய்மையில்தான்...ஆனால்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #10

01:36 PM Nov 09, 2019 | suthakar@nakkh…

தாய்மைப் போற்றுதலுக்குரியது தலைவணங்க வேண்டியது. எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு கவிஞர் எழுதியிருந்தார். 17 வருடங்களாக மகளின் மரணத்தை எதிர்த்துப் போராடும் தாய் ! அவரின் தன்னம்பிக்கை கண்டு எமனே எட்டித்தான் நிற்கிறான். மரணத்தை வென்றெடுக்க 17 வருடத்திற்கு முன்னால் ஒரு தேவதையைப் படைத்து அதற்கு ஆதரவாக இன்னொரு தேவதையை அனுப்பியிருக்கிறார் கடவுள். தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தவிர யாமொன்றும் அறியேன் பராபரமே என்ற வார்த்தையின் முழுமையான அர்த்தம் ஜீவாவும் அவரின் மகள் ஏஞ்சலின் ஷெர்லினும்தான்!

திருமணம் என்பதன் அடுத்த கட்டம் குழந்தை எல்லாப் பெண்ணின் பிறப்பும் முழுமையடைவது தாய்மையில் தான்! அந்த தாய்மையின் முழுமையாய்ப் பிறந்த பிள்ளை ஒன்றரை வருடங்களில் பெயர் தெரியாத நோய்க்கு பலியான போது, உடலளவில் நலிந்தாலும் மனதளவில் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக மாற்றிட படிப்பினையும் வேலையையும் அரணாய் சுற்றிக்கொண்ட ஜீவா உண்மையில் இருப்புப் பெண்மணிதான். தலைசிறந்த மருத்துவர் கூட தன் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய தயங்குவார். ஆனால் தன்னுடைய பிள்ளையின் நிலையில்லாத எதிர்காலத்தையே அவளின் சாதனையாக மாற்ற தோன்றிய ஜீவா ஒரு உருவாக்கும் சக்திதான்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

எட்டாவது வருடம் இனியொரு பூ தன் வயிற்றில் உதிக்கப் போவதில்லையோ என்று கலக்கம் கொண்டிருந்த வேளையில் ஜனித்த இரண்டாவது முத்து இந்தப் பிள்ளையாவது தங்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வமில்லை, நான்கு கிலோ என்பதால் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று தணியாத நம்பிக்கையில்விழுந்த மண்ணைப் போல குடித்த கொஞ்ச நஞ்ச பாலும் வாந்தியாய் அடுத்த நிமிடத்தில்! தன் பிஞ்சின் ஸ்கேன் ரிப்போர்ட்டை கைநடுங்க வாங்கும் போதுதான் தெரிந்தது அந்தக் குழந்தைக்கு அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு அறவே இல்லை எந்த நேரத்திலும் அதன் உயிர் பிரியலாம் என்று கைவிரித்த மருத்துவர்கள் மருந்துகளின் உதவியோடு அவளின் வாழ்நாளை நீட்டிக்கலாம் என்று ஆறுதல் தர, மீண்டும் தொடர்ந்தது ஜீவாவின் பயணம்.

உங்கப் பிள்ளை என்னவாகப் போகிறான் என் கேள்விக்கு கூட அவள் இன்னும் கொஞ்சநாள் என்னுடன் உயிர் வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் போது உடைந்திட்ட அந்த குரலில் தாய்மை வழிந்தது. தினம் தினம் கவலைகளைச் சுமந்த கனத்த மனத்தோடு விடியலை எதிர்நோக்கும் தாய். மகளிடம் சிறு அசைவின்றி போனாலும் அவளின் இதயமும் தன் ஒட்டத்தை நிறுத்திவிடும். நடக்கிறேன் என்று எழுந்த பிள்ளையை ஐந்து வயதுவரையில் வலுக்கட்டாயமாய் மடியிலேயே சுமந்த நேரம், அக்கப்பக்கத்து குழந்தைகளின் விளையாட்டை தாயின் மடியில் அமர்ந்து கொண்டு ஏக்கத்தோடு பார்க்கும் மகளைக் கண்ட ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறாள் அன்னை.

இன்னுமா நடக்கலை, ஏன் இப்படி மடியிலேயே வச்சிக்கிட்டு இருக்கே? ஊர்ல உலகத்திலே பிள்ளைங்க எல்லாம் இல்லை, எத்தனையோ கேள்விகள், வலிகள், ஏளனங்களைச் சுமந்த ஏமாற்றங்கள் அப்படியும் தன் மகளை புகழின் உச்சாணிக் கொம்பில் பட்டொளியாய் பறக்கச் செய்ய விரும்பும் தாய். பெண் ஒருத்தி தனியாய் தன் குடும்பத்தை தாங்க ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டியிருப்பார்கள். அப்படித்தான் தன் மகளின் ஆர்வம் எதில் என்பதை உணர்ந்து அதற்காக அவளை மட்டுமல்ல தன்னையும் தயார் படுத்திக் கொண்ட தன்னம்பிக்கை. வெறும் மதிப்பெண்களை நோக்கி பிள்ளைகளை வளர்ப்பதும், எவ்வளவு சம்பாதிப்பது என்பதை கற்றுதருவது மட்டும் இல்லை பிள்ளை வளர்ப்பு, தடுமாறி தயங்கிய குழந்தையின் கையைப் பற்றி வெற்றிக்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்வது.



அட்ரீனல் சுரப்பிதான் உடலுக்குள்ளிருக்கும் உப்பு சக்தியை சீராக்கி கிட்னி செயல்பாட்டுக்கும் ரத்த அழுத்தச் சமநிலைக்கும் வழிவகுக்கும் ஆனால் அந்த சுரப்பி இல்லாததால் இவங்க உடம்பில் சுரக்கும் உப்பு சக்தியை கிட்னி உடனுக்குடன் வெளியேற்றிடும் ரத்த அழுத்தத்தின் அளவும் சீராக இருக்காது. மாத்திரைகள் கூட மரணத்தை தள்ளிப்போடும் ஒரு யுக்தின்னு மருத்துவர்கள் சொல்லியபிறகு, மேற்கொண்டு சராசரி மனநிலை கொண்ட தாயாக இருந்தால் அந்தப் பிள்ளை படுக்கையில் படுத்திருக்க சுற்றிலும் உறவுகளின் வசவுகளும் உச்சுக் கொட்டலுக்கும் மத்தியில் எதையுமோ என்னால் சாதிக்க முடியாது என்றுமோட்டு வளையத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும் நிலைமைதான் ஏற்பட்டு இருக்கும். ஆனால் ஏஞ்சலினை ஜீவா அப்படி வளர்க்கவில்லை.

ஐந்து நிமிடங்கள் தத்தி தத்தி நடந்தாலே வாந்தி மயக்கம் மூச்சு முட்டல் என சகல உபாதைகளும் வரிசைக் கட்டி பல நாட்கள் மருத்துவ செலவுகளை கையாளவேண்டும் என்று ஐந்து வயது வரையில் பிள்ளையைத் தரையில் விடாத தாய். ஆனால், யூ ட்யூப்பில் நடன அசைவுகளை தனக்குத் தானே ஆசிரியராய் மாறி கற்றுக் கொள்ளும் தீவிரம் மகளிடத்தில், இப்போ என்ன அதிகமா டான்ஸ் ஆடினா நானென்ன செத்தா போகப்போறேன் என்று கேட்ட ஏஞ்சலினிடம் அது உண்மைதான் என்பதை எந்த தாய் பிள்ளையிடம் சொல்ல முடியும்.என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்த ஜீவா. தன் மகளின் விருப்பத்திற்கெனவே நடனப் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார். அவை நிறைந்த சபையில் தன் மகள் நடனமாடுகிறாள் என்றால் அதுவும எல்லா தமிழ் நாட்டு கலைகளையும் நடனமாய் (கரகம், பரதம், மரக்கால், ஒயிலாட்டடம் ன்னு) கற்று கொண்ட ஏஞ்சலின்க்கு தன்னைப் பற்றிய உண்மை தெரியவந்ததென்னவோ 10வது வயதில்தான்! அன்றிலிருந்து தன்னையும் அறியாமல் ஒரு எச்சரிக்கை உணர்வு அத்துடன் நின்றுபோன உடல் வளர்ச்சியைப் பற்றியும், வலிமையைப் பற்றியும் தூக்கிவீசிவிட்டு, ஒரு மணி நேரம் தன்னுடைய நடனத்தை ஆடி அதில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி மேடைகளையும், மக்களையும் தன்வசமாக்கினார் ஏஞ்சலின் ஷெரிலின். தன் மகளை மிஞ்சிய கனவு பெற்றவளுக்கு இல்லை மகளே தாயைப் பற்றி சொல்கிறார். என்னுடைய மருத்துவ செலவுகளை கவனிக்கவே திணறும் பெற்றோருக்கு இன்னொரு பாரமா என் கனவுகளும் இருக்கணுமேன்னு தயங்கினேன். ஆனா எங்கம்மா அவங்க நகையை வித்து கூட என்னை மேடை ஏத்தி அழகு பார்த்திருக்காங்க. ஒரு மணி நேரம் நான் ஆடும் போது எனக்கு இருக்க டென்ஷன், ரசிகர்களின் ரசனை, கைதட்டல் இதையெல்லாம் தாண்டி என் கண் படும் தூரத்தில் அம்மா இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு கைநிறைய மருந்து பாட்டில்களோடு நிற்கும் என் அம்மா!


உண்மையில் எனக்காவே ப்யூட்டிசன்கோர்ஸ் படிச்சாங்க ஆடைகளுக்கான செலவை குறைக்க அவங்களே டெய்லரிங் கத்துக்கிட்டாங்க. வாய்ப்பு இருந்தா எனக்காக என் உயிரைக் காப்பாத்தணுங்கிறதுக்கா அவங்க டாக்டருக்கே படிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. என்னோட அட்ரினல் சுரப்பி என் தாய்தான்! அடுத்த நொடி நிரந்தரமில்லை என்னும் போது எனக்காக எத்தனையோ வாய்ப்புகளின் கதவைத் தட்டியிருக்கார். அவங்க முயற்சிதான் ! பாரத் வேர்ல்டு ரெக்காட்ஸ், கல்ச்சுரல் புக் ஆஃப் ரெக்காட்ஸ், ஜெட்லி புக் ஆஃப் ரெக்காட்ஸ், டைஃபா வேர்ல்டு ரெக்காட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இதிலெல்லாம் என் பெயரும் வந்தது. கஜினி முகம்மது மாதிரி 13முறை கின்னஸ்க்காக படையெடுத்து இருக்கிறேன். நிறைய சாதிக்கணுங்கிறது என் ஆசை நீண்ட நாள் வாழணுங்கிறத எங்கம்மாவோட ஆசை இதுக்காவாது இன்னும் கொஞ்ச நாள் வாழணும் என்று அன்னையினை நோக்க அவரும் மகளை அன்போடு அணைத்துக் கொள்கிறார் ஜீவா. உண்மையான சிங்கப்பெண்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT