Advertisment

'பெரிய பணக்கார இடன்னு அவங்கப்பாரு கட்டிக்கொடுத்தாரு போன பத்தாவது நாளே..' - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #1

மிக நீண்ட முன்னுரை ஏதும் இன்றி இத்தொடரை தொடங்கப்போகிறேன் அலங்கார வார்த்தைகளை அள்ளித் தெளிக்கப் போவதில்லை ஏன்? கட்டுரையின் வார்த்தைகள் ஜாலங்களைப் புரிந்திருக்க வேண்டாமா ? வேண்டாம் இது இலக்கியத்திற்கான களம் அல்ல. இதயங்களின் வாய்மொழிப் பதிவு. இலக்கிய டச்சப் இல்லை, கவிதைகளின் அணிவகுப்பு இல்லை அப்போது எதைப் பற்றியக் கட்டுரை இது?! நம்மைப்பற்றி நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்களைப் பற்றி அவர்களின் தேடல்களைப் பற்றி! எதற்காகவோ ஏங்கித்தவித்து அது கிடைத்துவிட்டதாக எண்ணி ஏமாற்றம் கொண்டு அதை தன் புன்னகையால் பூசி மெழுகும் பெண்களைப் பற்றி?!

Advertisment

gjhk

இவர்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் உங்கள் அக்கம்பக்கத்தில், சாலையின் எதிர்சாரியில், ஏதாவது ஒரு கோவிலில் விக்கிரகத்தின் முன் தீவிரமான வேண்டுதலில், நாளையப் பற்றிய பயத்தோடு ஜோசியக்காரரின் வீட்டு வாசலில், தன் மண வாழ்வை முறித்துக்கொள்ள நீதிமன்ற வளாகத்தில் உடைந்த நகங்களை மேலும் கடித்துக்கொண்டு என்று தினம் தினம் நாம் அவர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். உண்மையில் அவர்களின் தேடல் என்ன ? மற்றவர்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? அதிகப்பட்சம் ஒரு சிரிப்பு, தன் செயல்களுக்கான அங்கீகாரம், அவர்களின் மறுக்கப்படுபவைகளுக்கு ஒரு பட்டியலே இடலாம். உண்மையில் இந்த ஜெனரேஷன் பெண் பிள்ளைகளை தேவதையாக கொண்டாடவும் செய்கிறது. கைகால்களை பிய்த்துபோட்டு ஊனமானமான பொம்மையாகவும் ஆக்குகிறது. இன்றைய கதாநாயகி சித்ரா?! ஒரு நெடுந்தொடரின் நாயகிக்குண்டான அத்தனை அம்சங்களும் முக்கியமாய் அழத்தெரியும் அவளுக்கு ஊதாரியான தந்தைக்கும், உலகமறியாத் தாய்க்கும் பிறந்தவள், உடன்பிறந்தவர்களின் ஒட்டுதல் ஒட்டைப்பானைக்கள் நீரை ஊற்றியதைப் போலப் போக, விருதுநகர் அடுத்த சாத்தூர் நாடார் வீதியில் சித்ரா என்றால் நம்ம வடைக்கடைக்காரங்க பொண்ணுதானே ரொம்ப நல்ல பொண்ணு அழகு ஆனா பாருங்க....

Advertisment

ஏன் என்னாச்சு என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுகிறது இல்லையா ?!

பெரிய பணக்கார இடன்னு அவங்கப்பாரு கட்டிக்கொடுத்தாரு போன பத்தாவது நாளே பிள்ளை வீட்டுக்கு வந்திட்டா காரைப்போட்டு ஊர்மெச்ச கூட்டிட்டுப் போனங்க பிள்ளைக்கு சித்த பிரமையாம். பத்துநாளும் நரகவேதனை, இவங்களையும் சொல்லனும், இருக்கிறதுலேயே பெரிய இடன்னு வழிஞ்சிகிட்டு போனாங்கல்ல, அதான் இந்த பத்துவருஷத்திலே ஆவி பறக்கும் இட்லிக்கும், எண்ணெயில் சுருளும் கடலைப் பருப்பிற்கும் அவளோட வாழ்க்கைக்குப் பத்திரம் எழுதிட்டாங்க போலயிருக்கு. அக்கம் பக்கத்தது வீட்டினரின் பேச்சுகளோடு, சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசத்தான் இரண்டாவது கல்யாண பேச்சோடு ஒரு வரன்.... மலைத்தாள் மறுபடியும் கல்யாணமா, முதல் நாள் அனுபவமே முள்ளாய். காலக்கடைசியில் எனக்கப்பறம் உனக்கு யாரு இருக்கா? அம்மாவின் அனத்தலில் சரி என்று தலையசைத்தாள். அதெல்லாம் ஒரு முறைதான் தவறு நடக்கும் இனிமே உன் வாழ்வில் எல்லாம் நல்லதுதான் நீ பயப்படாதே என்று ஆதரவாய் பேசிய நாக்குகளுக்கு அடிபணிந்து மீண்டும் முள் பயணம். ஆம் தன் முப்பத்தைந்து வயதில் இரண்டாவது திருமணம்.

மாப்பிள்ளைக்கு நாற்பத்தைந்து. ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் திருமணமாகிவிட்டது. இரயில்வேயில் வேலை. முதல் மனைவி மறைந்தபிறகு இரண்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டதாம் வீட்டில் கவனித்துக்கொள்ள ஆளில்லை என்பதால் இந்த திருமணமாம். இரு வீட்டாருக்கும் திருப்தியானபோதும் முப்பதாயிரம டெளரியும் சித்ராவின் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்திருந்த பத்து சவரனையும் பெற்றுக்கொண்டே மீண்டும் தாலியைக் கட்டினான்.தன் தேடுதல் முற்றுபெற்றுவிட்டதென்று அந்த முதிர்பெண்ணின் முகத்தில் நாணம் சுமந்த புன்னகையில், மிளிர்ந்த அழகு எல்லாம் காணல் நீராய் போனது ஐந்தாம் மாதத் தொடக்கத்தில் உடல் நலமில்லை என்று இரத்தப் பரிசோதனை செய்யப்போனபோது அவனுக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.

சிலர் ஏமாறவென்றே பிறந்தவர்கள் போலும். பைத்தியத்தின் கையில் சிக்கிய மாலை இன்று எயிட்ஸ் என்னும் அரக்கனின் பிணத்திற்குப் போனது. ஏமாற்றப்பட்ட விரக்தியில் யாரும் தன் குற்றத்திற்குப் பொறுப்பேற்கவில்லை. நாங்கள் அறியவில்லை, எங்களை ஏமாற்றிவிட்டான் என்று பெற்றோர்களும், உற்றார்களும் கழண்டுகொள்ள, இரண்டு வருடங்களின் கடைசி வாழ்க்கையின் ஒரு தாதியாய் அவனின் அசுத்தங்களைச் சுத்தம் செய்து கொண்டு வாழ்ந்தற்கு சித்ராவிற்கு கிடைத்த வெகுமதி இறந்து போன அவனின் வேலையும், ஆரம்பக் கட்டத்தில் எயிட்ஸ் நோயும்தான். இரண்டாம் முறையும் மோசமான ஒரு ஏமாற்றம் இனியென்ன வாழ்க்கையில் எஞ்சிய அனைத்தும் அவளின் அக்கா பிள்ளைகளுக்காகவே, பேசாமா அக்கா வீட்டுக்காரரையே இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம், மெட்ராஸ்காரன்தான் வேணுன்னு போனா இப்போ அனுபவிக்கிறா?! கோவில்கள் திகழும் கும்பகோணத்தின் அவல் மெல்லும் சில வாய்களுக்கு அவலாய் அவளின் வாழ்க்கை!

சித்ராவின் வாழ்வின் போராட்டம் இம்முறை ஆவி பறக்கும் அடுப்படியில் இல்லை, விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வரும் பிஸியோதெரபியில் உதவியாளாக, ஏழரை மணிக்கு பேசின் பிரிட்ஜில் ஆரம்பிக்கும் அவளின் காலைத் துவக்கம் மாலை தன் வீட்டு மொட்டை மாடிச்சுவற்றில் முடியும். உடல் கறுத்து மெலிந்து சிரிப்பில் ஜீவனில்லாமல் ஏதோவொரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் சித்ராவை நீங்களும் பார்க்கலாம். இழந்தவர்களுக்குத்தான் வலி அதிகம் தெரியும், இவர்களின் இழப்பை ஈடு செய்ய வெறும் ஆறுதல் வார்த்தைகள் தான் நம் கைகளில்! திருமண சந்தையில் இழந்த இன்னொரு பெண்ணின் உண்மைச் சம்பவத்தோடு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

பெண்ணே.....பெண்ணே.....வருவாள்.......

Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe