Advertisment

இளையராஜா பணத்தை வாங்கிட்டு நான் பட்டபாடு! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #10

ramesh kanna

Advertisment

'மேற்குத் தொடர்ச்சி மலை', அதன் இயக்குனர் லெனின் பாரதிக்கு முதல் படம். ஒரு புதிய இயக்குனர், தன் முதல் படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்கவேண்டுமென்று விரும்பியது இப்பொழுது வேண்டுமானால் அவரது தேர்வாக இருக்கலாம். ஆனால், நான் இயக்குனராக முயற்சி செய்துகொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில், ஒவ்வொரு புதிய இயக்குனருக்கும் தன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவேண்டுமென்பது கனவு. அதே நேரம் புதிய இயக்குனர்களை அவர் எப்படி நடத்துவார் என்பதைப் பற்றி பலரும் பல விதமாகப் பேசுகிறார்கள். பேசுறவங்க பலரும் அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கங்கன்னு சொல்றாங்க. இந்த நேரத்தில், நான் இளையராஜாவை முதலில் சந்தித்ததில் தொடங்கி என் முதல் படத்தில் இசையமைக்க வேண்டுமென அவரை சந்தித்தது வரை பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

'காதல் நிலம் வேண்டும்'னு ஒரு படம் ஆரம்பிச்சு நின்னுபோச்சுன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன். கார்த்திக்கை வச்சு 'ஜீனியஸ்' ஒரு படமும் ஆரம்பிச்ச வேகத்துலயே நின்னு போச்சு. இடையில் பல ப்ராஜக்டுகள் இப்படியே... ஒரு கட்டத்தில் எனக்கே என்னை நினைச்சு சிரிப்புதான் வந்தது. என் ராசி அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன், ஆனால் தொடர்ந்து சினிமாவில் இயங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ வந்ததுதான் அஜித்தை வைத்து 'தொடரும்' படத்தை இயக்கும் வாய்ப்பு. இசைக்கு இளையராஜாவைத்தான் அணுகினேன். அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பல காரணங்கள் உண்டு. அதுல ஒன்னு புகழ் பெற்ற பழம்பெரும் இசையமைப்பாளர் பி.எஸ்.திவாகரனின் மருமகன் நான் என்பது. என் மனைவியின் அப்பா திவாகரன் அந்தக் காலத்தில் பல புகழ் பெற்ற பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அதனால் இளையராஜாவுக்கு என் மேல் அன்பு உண்டு. ஆனால், இந்த விஷயம் அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் பின்னாடிதான். அதுக்கு முன்னாடியே 'ஆண்பாவம்' காலத்திலேயே நானே வான்ட்டடாக சென்று அவரது வண்டியில் ஏறியவன். அதை அடுத்து சொல்றேன்.

ramesh kanna ilayaraja

Advertisment

ilayaraja

'தொடரும்' பூஜை

இப்போ, என் முதல் படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டார். பாடல் ரெக்கார்டிங்குக்காக போகும்போது நான் கையில் நாலு, அஞ்சு பழைய ஹிந்தி பாடல் கேசட்டுகளை கொண்டுபோனேன். நர்கீஸ் காலத்து பாட்டு, ஜெய் கிஷன் போன்றோரின் பாட்டு எல்லாம் கொண்டு போனேன். அதைப் பார்த்துட்டு டென்சன் ஆயிட்டார். "டேய்... என்னடா இப்படி ஆகிட்டீங்க? நாங்கல்லாம் சொந்தமா போடவே மாட்டோம்னு முடிவு பண்ணிட்டீங்களா?" அப்படின்னாரு. நான் சிரிச்சுகிட்டே "அய்யயோ, அப்படிலாம் இல்ல. நான் எனக்கு புடிச்ச பாடல்கள் சொல்றேன். நீங்க அந்த ஸ்டைல்ல போட்டா போதும்"னு சொன்னேன். அவர்கிட்ட இப்படி பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு இருந்தது பெரிய விஷயம். ஏன்னா, ஒரு காலத்துல இளையராஜா பேரைப் போட்டு போஸ்டர் ஒட்டினாதான் படம் விக்கும்... கதவுக்கு வெளியில் ஆள் காத்திருப்பாங்க, கதவைத் திறந்து ட்யூன் கேஸட்டைப் போடுவாங்க, அதைக் கொண்டு போய் படமெடுப்பாங்க. அப்படி இருந்தவர் இளையராஜா, அவ்வளவு பயமும் மரியாதையும் இயக்குனர்களுக்கு அவர் மேல் இருக்கும். நான் என்னடான்னா இப்படி போனேன். அவர் கேசட்டையெல்லாம் பாத்துட்டு, "இந்த ஸ்டைலெல்லாம் நாங்க எப்பவோ போட்டுட்டோம், உன் படத்துக்கு நான் நல்லா பண்ணித் தர்றேன்"னு சொல்லி, அதை செஞ்சார்.

நான் இயக்கிய 'தொடரும்' படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கப்போவே 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துக்காக ஒரு ஸீன் பாக்கி இருக்குன்னு விக்ரமன் சார் கூப்பிட, அஜித் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு போய் நடிச்சுட்டு வந்த கதையெல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கேன். இப்படி, 'தொடரும்' படப்பிடிப்பு முடிஞ்சு வெளிவரும் முன்னரே நான் காமெடியனா ஃபேமஸ் ஆகி, இரவும் பகலும் ஷூட்டிங் போகத் தொடங்கிய நேரம். அதனால, என்னோட படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிக்கே (புரியலையா? அதான் ரீ-ரெக்கார்டிங்) நான் போக முடியல. 'இளையராஜா இருக்கார், பாத்துக்குவாரு'னு ஒரு நம்பிக்கை. 'தொடரும்'ல ஒரு ஸீன் வரும். அதில், சாகப்போறோம்னுதெரிஞ்ச ஒரு பொண்ணு, வேற ஒரு விஷயத்துக்காக பேசும்போது யதார்த்தமா சொல்ற 'எப்படினாலும் போய்த்தானே ஆகணும்' என்ற வசனம் ரெண்டையுமே குறிப்பதுபோல அமைச்சிருந்தேன். இதை நான் உட்கார்ந்து சொல்லணும் மியூசிக் டைரக்டர்கிட்ட. ஆனா, நான்தான் இல்லையே? ஆனா, படத்தின் ரீ-ரெக்கார்டிங் முடிஞ்சு படத்தைப் போட்டுப் பாத்தப்போ நானே ஷாக் ஆயிட்டேன். அந்த வசனம் தொடங்கும்போது சாதாரணமா வரும் இசை, கரெக்ட்டா 'போகத்தானே போறேன்'னு வரும்போது சோகமான வயலினா மாறி மனதைத் தொட்டது. அவரே இந்த வசனத்தை நான் வைத்ததன் அர்த்தத்தைப் புரிந்து அப்படி இசையமைத்திருந்தார், அதுதான் ராஜா. வேற யாரும் அப்படி செய்ததில்லை. அவர் ஜீனியஸ் மட்டுமில்லை கடும் உழைப்பாளி. ஒரு மாசத்துல நாற்பது பாட்டு ரெக்கார்டிங் பண்ணினார், நாற்பதும் ஹிட்டான காலமுண்டு. இப்படித்தான் என் முதல் படத்தை அவர் படமா நினைச்சு வேலை பார்த்த அனுபவம் எனக்கு அமைஞ்சது.

ramesh kanna revathy

aanpaavam shooting

ramesh kanna

'ஆண்பாவம்' படப்பிடிப்பு

அவரை முதலில் சந்தித்தது எப்படி தெரியுமா? பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக இணைந்து 'ஆண்பாவம்' வேலைகள் ஆரம்பிச்சுருந்த நேரம். அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதற்கு முன்பு பாண்டியராஜன் இயக்கிய 'கன்னிராசி' படத்துக்கும் இளையராஜாதான் இசை. இப்போ, பாடல் கம்போசிங்குக்காக ஸ்டுடியோவுக்குப் போனோம். அப்போல்லாம், கதவுக்கு வெளியில ரெண்டு மூணு டீமை சேர்ந்தவங்க காத்திருப்பாங்க. இளையராஜாதான் சொல்லுவார் யார் உள்ள வரணும்னு. பாண்டியராஜனைக் கூப்பிட்டார். கதவைத் திறந்து அவர் உள்ள நுழையும்போது, பின்னாடியே நானும் டக்குன்னு உள்ள போய்ட்டேன். இதை பாண்டியராஜன் எதிர்பார்க்கல. என்னை முறைக்கிறார். அதே நேரம், அவரால உள்ள எதுவும் சொல்லவும் முடியல. நான் கமுக்கமாக, பயபக்தியோட உட்கார்ந்திருந்தேன்.

ட்யூன் போட்டுக்கிட்டே இருந்த இளையராஜா சைட்ல பாண்டியராஜனைப் பார்க்கும்போது பக்கத்துல நான் இருப்பதைப் பார்த்தார். 'டைரக்டர் மட்டும்தான வரணும்... இவன் யாரு புதுசா'ன்னு யோசிக்கிறார். ஆனால் அவரும் ஒன்னும் சொல்லல. ட்யூன் போட்டுட்டு, அப்படியே பாட்டை பாடுறார்... "காதல் கசக்குதய்யா"ன்னு. அந்த டைம்ல இந்தப் பாடல் ரொம்ப புதுசா பண்ணனும்னு நெனைச்சு பண்ணுனது. இடையில் பழைய விஷயங்கள் வரும். "கிட்டப்பா வந்த காலத்திலே..." அப்படின்னு இளையராஜா பாட, நான் "காயாத கானகத்தே"னு எடுத்துக் கொடுத்தேன். இளையராஜா திரும்பி என்னைப் பார்த்தார். 'ம்..'னு சொல்லிட்டு, "MKT காலத்திலே..."னு வரும்போது திரும்ப நான் "மன்மத லீலையை வென்றார்"னு சொல்றேன். அப்படியே MGR, நடிகர் திலகம்னு வர வர, "ஹலோ ஹலோ சுகமா", "நடையா இது நடையா" எடுத்துக் கொடுத்தேன், அவரும் ஏத்துக்கிட்டார். பாண்டியராஜனுக்கு அந்தக் காலத்துப் பாடல்கள் சட்டுனு ஞாபகம் வரல. இளையராஜா கேட்டார், "யார் இது?". "அசிஸ்டன்ட் டைரக்டர் அண்ணே.. தெரியாம உள்ள வந்துட்டார்" சொல்லி என்னை முறைச்சார் பாண்டியராஜன். "பரவாயில்ல இருக்கட்டும்"னு சொல்லிட்டாரு இளையராஜா. எனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப பெருமை. ஆமா, அந்த சமயத்துல இந்த வார்த்தையே எனக்கு பெரிய விஷயமாகத்தான் இருந்தது. அதுல இருந்து, மியூசிக் சம்மந்தமா எதுனாலும் பாண்டியராஜன் என்கிட்டேதான் சொல்லிவிடுவார். இளையராஜாவும் என்னையே கூப்பிட்டு "உங்க டைரக்டர்கிட்ட சொல்லுய்யா.."னு எதுனாலும் என்கிட்டே சொல்லத் தொடங்கினார்.

'ஆண்பாவம்' படம் ரெடியாச்சு. ஒவ்வொரு ஸீனிலும் சிரிச்சார் இளையராஜா. சிரிச்சு, ரசிச்சு இசையமைச்சார். அவர் எந்த அளவுக்கு ரசிச்சாரென்றால், "யோவ்... அடுத்த படம் இதே டீம் பாவலர் ஃபிலிம்ஸுக்கு பண்றோம்யா"ன்னு சொல்லி பாண்டியராஜனை புக் பண்ணிட்டார். அந்தப் படமும் தொடங்குச்சு. 'கற்புக்கரசி'ன்னு டைட்டில். அந்தப் படத்துக்காக ஆஷா போன்ஸ்லேவை முதல் முறையா தமிழுக்கு கூப்பிட்டு வந்து அவங்க கூட இளையராஜா விருப்பப்பட்டு பாடிய பாட்டுதான், 'எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிற?' என்ற பாடல். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. அதுக்காகப் போடப்பட்ட பாடல்கள் 'புதுப்பாட்டு' படத்தில் வந்தன. 'கற்புக்கரசி' பாட்டு கம்போஸிஙப்போ நடந்த சம்பவத்தை நான் மறக்கவே மாட்டேன். அந்த காலகட்டத்துல என் ஒரு நாள் பேட்டா அஞ்சு ரூபாய்தான். பத்து ரூபாயெல்லாம் எனக்கு பெரிய விஷயம். அப்படியிருந்த காலகட்டம். ஒரு நாள் இளையராஜா கூட கம்போஸிங்ல இருக்கும்போது அவரைப் பார்க்கவந்த இன்னொரு ப்ரொட்யூசர் அவருக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்துட்டுப் போனார். அதை வாங்கிய இளையராஜா நேரா, பக்கத்துல இருந்து என்கிட்ட அந்தப் பையை கொடுத்து, 'வச்சுரு'ன்னு சொல்லிட்டு வேலையைப் பார்க்கப் போய்ட்டார்.

with bagyaraj

பாண்டியராஜனின் குரு பாக்யராஜுடன் ஆண்பாவம் டைரக்டர்டீம்

உள்ள எவ்வளவு இருந்தது தெரியுமா? ஒரு லட்சம். அப்போ ஒரு லட்சம்னா இப்போ கோடி மதிப்பு. அதை என் கையில் கொடுத்துட்டார். நான் மொத்தமா அவ்வளவு பணத்தை அப்போ பார்த்ததேயில்லை. எனக்கு பதற்றம், வயித்துல இருந்து சூடா மேல ஏறுது. ஒரு வேளை தொலைஞ்சா, நான் அவர்கிட்ட பதினஞ்சு வருஷம் வேலை பாத்துதான் கழிக்கணும். ஆனா, அவர் என்னை வேலைக்கு சேர்த்துக்குவாரான்னு வேற சந்தேகம். இப்படி என்னென்னமோ தோணுது. அவர் இங்குமங்கும் நடக்கும்போது என்னைப் பார்த்தார். நான் பதற்றமா இருப்பதைப் பார்த்து சிரிச்சார். எனக்கு வேர்த்து விறுவிறுத்துருச்சு. என்னை சோதிக்கிறாரா? நான் போய்ட்டா என்ன பண்ணுவார்?

ரொம்ப நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கிட்டார். "சார்... இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதீங்க, இவ்வளவு பணத்தையெல்லாம் என்கிட்டே கொடுக்காதீங்க சாமி"ன்னு சொன்னேன். அவர் சிரிச்சார். அவருக்கு அப்போ தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவர் பணத்தை விட திறமையைத்தான் மதித்தார். அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார். அவர் பாடல்கள் உரிமை குறித்து எடுத்த நடவடிக்கைகள் மற்றும் சில பேட்டிகள்எல்லாம் விமர்சிக்கப்பட்டன. ஆனால், அவர் நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படி இருப்பார். அவரை பணமாகப் பார்த்தவர்களை அவரும் அப்படி பார்த்தார். அவரை கலையாகப் பார்த்தவர்களை அவரும் அப்படியே பார்த்தார். அதன் சமீப அடையாளம்தான் 'மேற்குத் தொடர்ச்சி மலை'யெல்லாம். இது தொடரும், தொடரணும்.

அடுத்த பகுதி:

என் மகனை சேர்த்துக்கொள்ள மறுத்த மணிரத்னம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #11

முந்தைய பகுதி:

"என்னங்க... நான் லவ் பண்ண பொண்ணையே ராஜகுமாரனும் லவ் பண்ணிருக்காரு" புலம்பிய விக்ரம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #9

ilayaraja Pandiarajan rameshkanna thiraiyidadhaninaivugal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe