Skip to main content

ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி? #1

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
 

hitler

 

 

உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவனுக்கு உரை எழுதிக்கொடுக்கவும், பிரச்சாரங்கள் மூலம் அவனுடைய பிம்பத்தை காப்பாற்றவும் கோயபல்ஸ் என்ற பொய்த்தொழில் அமைச்சர் இருந்தார்.

ஜெர்மன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு சிறிய கட்சியைத் தொடங்கிய ஹிட்லர், மக்களை எப்படி திசைதிருப்பி, நாட்டின் சர்வாதிகாரியானான் என்பதை மட்டும் சுருக்கமாக சொல்ல நான் எழுதிய ஹிட்லர் என்ற புத்தகத்தின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களை தருகிறேன்… இந்தியாவின் இன்றைய நிலையில் ஹிட்லரின் தந்திரங்களை அறிந்துகொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன்…

                                                     1.ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்!
 

1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி. பவேரியா அரசாங்கத்தை கவிழ்க்க ஹிட்லர் திட்டமிட்டு அது தோல்வி அடைந்ததால் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், 263 நாட்களிலேயே அவருக்கு விடுதலை உத்தரவு கிடைத்தது.

“உங்களுக்கான விடுதலை உத்தரவு வரும். அடுத்த இரண்டு ஆண்டுகள் உங்கள் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மியூனிக் நகருக்கு பயணம் செய்ய அனுமதி உத்தரவு வழங்கப்படும். நாளை காலை எட்டுமணிக்கு சிறையிலிருந்து வெளியேறிவிட வேண்டும்”

1924 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஆறு நாட்களுக்கு முன் ராணுவ தலைவரின் அலுவலகத்திலிருந்து ஹிட்லருக்கு அழைப்பு வந்தது. அவர்தான் ஹிட்லரிடம் இப்படிக் கூறினார்.

ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஹிட்லர், 263 நாட்கள்தான் சிறையில் இருந்திருக்கிறார். எதற்காக முன்கூட்டியே அவரை விடுதலை செய்தனர் என்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

அடுத்தநாள் காலை எட்டுமணி 10 நிமிடம்.
 

hitler prison


ஹிட்லரும், ருடால்ப் ஹெஸும் சிறையிலிருந்து நீண்ட கோட்டும், தொப்பியும் அணிந்து பேப்பர் கட்டுகளுடன் சிறையிலிருந்து வெளியேறினர். அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர். அங்கே ஹிட்லரின் கட்சி ஆட்கள் மெர்சிடெஸ் கார் ஒன்றுடன் காத்திருந்தனர்.

அந்தக் காரில் இருவரும் மியூனிக் நகருக்கு புறப்பட்டனர். அவர்களுடன் வந்த மூவரில் ஒருவர் ஹிட்லரின் தோழி, இல்ஸே புரோல்.

பின்னர், இவரைத்தான் ருடால்ப் ஹெஸ் திருமணம் செய்துகொண்டார்.

மதியம் மியூனிக் நகருக்கு வந்து சேர்ந்தனர். அவருடைய நண்பர்களுக்கு இது பெரிய வெற்றி. வெற்றியைக் கொண்டாட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஹிட்லர் தனது வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அன்றுதான் மது அருந்தினார்.

ஹிட்லர் சிறையிலிருந்த போது நாஜி கட்சிக்கு அரசு தடை விதித்திருந்தது. கட்சிப் பத்திரிகையும் மூடப்பட்டது. தலைவர் இல்லாத நேரத்தில் கட்சிக்குள் கோஷ்டிகள் உருவாகி இருந்தன.

ஹிட்லர் சிறையிலிருந்த சமயத்தில் அவருடைய சகோதரி ஏஞ்சலா ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஹிட்லருடைய தந்தையின் முதல் மனைவியின் மகள் இவர். லின்ஸ் நகரில் இருந்த சமயத்தில்,வீட்டை விட்டு வெளியேறியவர்.

தனது சகோதரன் ஹிட்லர் மிகப்பெரிய தலைவனாக மாறியிருப்பதை ஆஸ்திரிய செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொண்டிருந்தாள்.

புரட்சியையும், அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டதையும் அறிந்து அவள் கடிதம் எழுதியிருந்தாள்.

அதற்கு அவர் பட்டும்படாமலும் பதில் எழுதியிருந்தார். அடுத்து அவள் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.

சிறையிலிருந்து வெளியேறிய ஹிட்லர் மக்கள் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருப்பதைக் கவனித்தார். அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். எல்லோரும் வேலைக்கு போய் சம்பாதித்தனர்.

ஹிட்லர் சிறைக்கு போவதற்கு முன் ஒரு தபால் ஸ்டாம்ப் வாங்குவதற்கு ஐந்தாயிரம் கோடி மார்க் தரவேண்டியிருந்த தரித்திர நிலை இப்போது இல்லை.

மார்க் பழைய மதிப்பைப் பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. தன்னால் மட்டுமே ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஜெர்மானியர்களின் வேலையையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்தமுடியும் என்றும் ஹிட்லர் பேசிவந்தது கண்ணெதிரே பொய்யாகிப் போனது எவ்வாறு?

அவருக்கு புரியவில்லை.

“எப்படி... இது எப்படி சாத்தியம்? நான் சிறையில் இருந்த போது என்ன நடந்தது?”

நண்பர் ஹன்ப்ஸ்டாங்கிலிடம் கேட்டார் ஹிட்லர்.

“நீங்கள் அமெரிக்காவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்கள்தான் ஏராளமான முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது. வறுமை பெருமளவு நீங்கிவிட்டது.”

என்றார் ஹன்ப்ஸ்டாங்கில்.

“நமது விவகாரங்களில் அமெரிக்கர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? இதை நாம் எப்படி திருப்பித் தரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?”

ஆத்திரமாக கேட்டார் ஹிட்லர்.

ஜெர்மனியால் இதைத் திருப்பித்தர முடியாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோற்பதற்கு அமெரிக்க யூதர்கள்தான் காரணம் என்று ஜெர்மானியர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த ஜெர்மானிய சொத்துக்களை இப்படி முதலீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

தவிர, யூதர்களை விரட்டுவதே லட்சியமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு பெருகிவரும் மக்கள் செல்வாக்கை அனுமானிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கர்கள் முட்டாள்களா என்ன?

ஹிட்லரின் வளர்ச்சியையும், யூதர்கள் மீதான வெறுப்பையும் தணிக்க வேண்டுமெனில், ஜெர்மன் பொருளாதார நிலை மேம்பட்டால்தான் முடியும். தாங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும். ஹிட்லரால்தான் முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலிருந்து விலக வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.

வெளிப்படையாக தெரியும் இந்த உண்மையை ஹிட்லரால் இப்போது பேச முடியாது. அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் பழைய தலைவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்திருக்கிறது. இவற்றிலிருந்து கட்சியை மீட்க வேண்டும். தனது தலைமையை வலுப்படுத்த வேண்டும்.

நாஜிகள் இன்னும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறாரகள் என்பதை கட்சிக்காரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்சியை வழிநடத்த பத்திரிகை வெளிவர வேண்டும். கட்சியின் நிதிநிலை வேறு மோசமாக இருக்கிறது.

என்ன செய்யலாம்?

1925 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவேரியாவின் பிரதமரைச் சந்தித்தார். நாட்டின் ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டு கட்சியை நடத்த விரும்புவதாக அப்போது உத்தரவாதம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக கட்சிக்கும் பத்திரிகைக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. பீப்பிள்ஸ் அப்சர்வர் என்ற தனது கட்சிப்பத்திரிகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு தலையங்கம் எழுதினார்.

புதிய தொடக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில், அடுத்தநாள் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து தகவல் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, 27 ஆம் தேதி நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஹிட்லர் பேசும் மிகப்பெரிய கூட்டம் மியூனிக் நகரில் நடைபெற்றது. ஆனால், ஹிட்லர் மாறவில்லை.

யூதர்களையும், மார்க்சிஸ்ட்டுகளையும் விட்டு வைக்க மாட்டோம் என்று உணர்ச்சி வயப்பட்டு ஆவேசமாக  பேசினார்.

இதையடுத்து, அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

கட்சியை ஜெர்மன் முழுவதும் புதிதாக கட்டமைக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கினார். அரசாங்க அமைப்பைப் போலவே கட்சியையும் அமைத்தார். கட்சியை இரு பிரிவுகளாக பிரித்தார்.

பிஓ1 என்ற முதல் பிரிவு ஜெர்மனியின் குடியரசைத் தூக்கி எறியும் உத்வேகம் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கியது.

பிஓ2 என்ற இரண்டாவது பிரிவு, தற்போதுள்ள குடியரசுச் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய அரசு அமைக்கும் நோக்கம் கொண்டது. ஆனால், தேவைப்படும்போது, குடியரசை தூக்கி எறிந்துவிடும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.

இந்த இரண்டாவது பிரிவில், வேளாண்துறை, தொழில்துறை, பொருளாதாரத் துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, நீதித்துறை, இனம் மற்றும் கலாச்சாரத்துறை, பிரச்சாரத்துறை என பல பிரிவுகள் அமைக்கப்பட்டன. அனைத்தும் நாஜிகளின் கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது என்று கற்பிக்கப்ப்டடு வளர்க்கப்பட்டன.

ஜெர்மனியை 34 மாவட்டங்களாக பிரித்து அனைத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு வட்டங்கள், நகரங்கள், வார்டு கிளைகள், தெருக்கிளைகள் என்று அடிமட்டம் வரை பிரிக்கப்பட்டு அதிகாரம் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கும், 10 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கும், டீன் ஏஜ் பெண்களுக்கும், மகளிருக்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டன.

கட்சியின் சுப்ரீம் லீடராக ஹிட்லர் மாறினார்.

பிரவுன் கலர் சீருடை அணிந்த தனது அதிரடிப்படைப் படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினர்களைக் கொண்டு ஹிட்லர் தனக்கான பாதுகாப்புப் படையை அமைத்தார். அவர்களுக்கு கருப்புச் சீருடை வழங்கப்பட்டது. அதன் தலைவராக ஹென்ரிச் ஹிம்லர் நியமிக்கப்பட்டார்.

இவ்வளவு இருந்தும் கட்சி அமைதியாக இருக்க நேர்ந்தது. ஜெர்மனி மீது அமெரிக்காவும், நேசநாடுகளும் கூடுதல் அக்கறை காட்டின. அதன் பொருளாதார நிலையை சீரமைக்காவிட்டால் நாஜிகளின் கை ஓங்கிவிடும் என்று அவை பயந்தன.

நகராட்சி கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல்குளங்கள், விமான நிலையங்கள் என்று உள்கட்டமைப்புக்காகவும் அமெரிக்கா நிதியுதவி செய்தது. மக்கள் வாழ்க்கை எளிதாகிப் போனது. முதல் உலகப்போரில் முக்கிய தளகர்த்தராக இருந்த பால் வான் ஹின்டென்பர்க் ஜெரமனியின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவிடமும், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகளிடமும் அவர் ஏராளமான தொகையை கடனாகப் பெற்றார். நாட்டின் பொருளாதார நிலை சீராகியது. நாஜிகள் ஹிட்லர் இல்லாமல், பிரச்சாரத்திற்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக இருந்தனர்.
 

troops of hitler

 


ஆனால், கட்சியின் வருமானம் அதிகரித்தது. உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரமிக்கத் தக்க வகையில் உயர்ந்தது.

ஜெர்மனி இப்போது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறது. இதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். யூதர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டுகள் மீதான வன்மம் இன்னமும் மக்கள் மனதில் இருக்கிறது. தற்காலிகமாக இது அடக்கப்பட்டுள்ளது.

விரைவில் நேரம் வரும். அப்போது அதை வெடிக்கச் செய்துவிட முடியும் என்று ஹிட்லர் நம்பினார்.

 

 

 

 

Next Story

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #7

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின் பேச்சுக்களை அலசி ஆராய்ந்து, அவர் போருக்கு தயாராகி வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஹிட்லருக்கு போர் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால், ஜெர்மனியின் தொழில்வளத்திற்கு கச்சாப் பொருள்களை வெளிநாட்டில் இருந்துதானே வாங்கியாக வேண்டும்? கொஞ்சம் அடக்கி வாசித்து, பிறகு எகிறலாமே. தொழில் அதிபர்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். வெளிநாடுகளுக்கு ஜெர்மன் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக கச்சாப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்தார். அதற்கு, வெளிநாடுகளின் மதிப்பைப் பெற வேண்டுமே.
 

fgh



பிரான்சிடம் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், ஹிட்லரை முட்டாள் என்று கூறிவிட்டார் பிரான்ஸ் பிரதமர். அமெரிக்காவிடம் கேட்கலாம் என்றால், அங்குள்ள யூதர்களின் தயவைப் பெற்றதாக ஆகிவிடும். அது தற்கொலைக்குச் சமம். என்ன பிரிட்டனைத் தாஜா செய்ய முடியுமா பார்க்கலாம். அது சாத்தியமானால் தப்பிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேசமயத்தில், பிரிட்டனும் ஜெர்மனியுடன் உறவுகளைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் தூய்மையான ஆரியர்கள் என்பது ஹிட்லரின் எண்ணம். இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மட்டமாக பேசியவர் ஹிட்லர். “இங்கிலீஷ் ஜாதி தூய்மையானது. அது களங்கமுற்று அரசு எந்திரம் நொறுங்கிப் போனால், அல்லது, பலமான எதிரி உருவானால் மட்டுமே பிரிட்டனை ஜெயிப்பது சாத்தியம். இந்தியத் தலைவர்களால் இங்கிலாந்தை எதிர்த்துப் போராட முடியாது. மற்ற வல்லரசுகளின் கீழ் இருப்பதை விட இங்கிலாந்தின் கீழ் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது”

இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரின் கருத்து. அதனால்தான், விடுதலைப் போராட்ட காலத்தில், ஹிட்லருடைய அடிப்பொடிகளாக இந்தியாவில் உருவான ஒரு கூட்டம், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முன் வந்ததோ என்னவோ? பிரிட்டன் மீது இவ்வளவு உயரிய மதிப்பு வைத்திருக்கும் ஹிட்லர, அந்த நாட்டின் உறவை விரும்பியதில் வியப்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரிட்டனின் பத்திரிகைகள் கடுமையாக  எதிர்த்தன. அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலோர், பிரதமர் சாம்பர்லின் உள்பட ஹிட்லருடன் உறவை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள ஹிட்லர் தயாராக இருந்தார். ஆனால், மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுமதி மறுத்துவிட்டார்.
 

 

gh



அடால்ப் என்ற வார்த்தை வொல்ப் என்ற ஆங்கில வார்த்தையின் மருவல் என்று கூறுவார்கள். அதாவது ஓநாய் என்று அர்த்தம். இதை ஹிட்லரே அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். பிரிட்டனுடன் உறவு என்ற தந்திரத்தைக் கையில் எடுத்தபோது, தன்னை ஓநாய் என்று அவர்கள் நினைப்பார்கள், ஆனால், நான் நரி என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று நண்பர்களிடம் கூறினார். பிரிட்டனின் மன்னர், இங்கிலாந்துக்குள் வர ஹிட்லருக்கு அனுமதி மறுத்தாலும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் சைமன் ஹிட்லரைத் தவறாக எடைபோட்டு விட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஹிட்லர் பேசியதை அவர் நம்பினார். அதைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஜெர்மனியும் ராணுவபலத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிப்பது தவறில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.

“நாங்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க மாட்டோம். அதேசமயம், வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ்  ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய ஸார்லாந்து உள்ளிட்ட பகுதிகளை மட்டுமே திரும்பக் கேட்கிறோம். எங்களுடைய விவசாய வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியம்” என்று நைச்சியமாக பேசிவந்தார் ஹிட்லர். சுமூகமான சூழல் உருவான நிலையில், ஜான் சைமனை பெர்லின் வரும்படி அழைத்தார் ஹிட்லர். இந்த முடிவு பிரிட்டனில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்தச் சந்திப்புத் தேதி நெருங்கும் நிலையில் ஹிட்லர் திடீரென்று பல்டியடித்தார். “ஜெர்மன் மீண்டும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கப் போகிறது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து வைத்துள்ளது. ஏற்கெனவே, கணிசமான அளவில் ராணுவபலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது”

 

jk



இப்படித் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்று பிரிட்டனில் வெளியிடப்பட்டு விட்டது. இது ஜெர்மனியை அவமானப்படுத்தும் செயல் என்று ஹிட்லர் ஆவேசப்பட்டார். கடைசியில், அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போயிற்று. மார்ச் 16 ஆம் தேதி, ஜெர்மன் ராணுவத்திற்கு புதிதாக ஐந்துலட்சம் வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்றினார் ஹிட்லர். “இன்றுடன் வெர்சைல்ஸ் உடன்படிக்கை செத்துவிட்டது. பிரான்சும் பிரிட்டனும் எதிர்க்கட்டும் பார்க்கலாம். அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாடாளுமன்றத்தில் ஹிட்லர் முழங்கியது உண்மைதான். பிரான்சும், பிரிட்டனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்த ஒரே ஆண்டில், ஜெர்மனியின் ராணுவபலம், பிரான்சுக்கு நிகரானது. 20 ஆண்டுகளுக்கு அப்புறம் இந்த பலத்தை மீண்டும் பெற்றது ஜெர்மனி.

1936 மார்ச் மாதம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரைன்லாந்தை ஜெர்மன் தன்வசப்படுத்தியது. யாரும் மூச்சுக்கூட விடவில்லை. இப்போதைக்கு போர் வராது என்று சாதாரணமாக நினைத்திருந்த பிரிட்டன், தனது படைபலத்தை குறைக்கத் தொடங்கியிருந்த காலம் அது. ரைன்லாந்தைக் கைப்பற்றி மூன்றே மாதங்கள்தான். ஜூலை மாதம், ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அந்த நாட்டின் தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ, இத்தாலி அதிபர் முசோலினியிடம் உதவி கேட்டார். ஆனால், அவர் அப்போது எத்தியோப்பியா மீது போர் தொடுத்திருந்தார். இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. பிரான்கோவுக்கு உதவ ஒப்புக் கொண்டது. பிறகென்ன அடுத்த சிலநாட்களில் ஜெர்மனியின் கையில் ஸ்பெயின். ஜெர்மனியின் லாகவாமான இந்தத் தந்திரம் முசோலினிக்கு பிடித்துவிட்டது. அவர், ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 

ghj



இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், பெர்லின் நகரம், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ஜரூராகத் தயாராகி வந்தது. 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ அல்லல்களைத் தாண்டி மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, ஹிட்லரே கவனித்தார். விளையாட்டு அரங்கை அவரே வடிவமைத்தார். ஆனால், யூதர்களயும், ஜிப்ஸிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் நாஜி அரசாங்கம் நடத்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் யூதர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். யூத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடாது என்று யூத அமைப்புகள் தடை விதித்தன. ஏற்கெனவே, ஜெர்மனியில் அனைத்துத் தடகள விளையாட்டுகளிலும் யூதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதா வேண்டாமா என்று அமெரிக்கா பரிசீலனை செய்துவந்தது. பெர்லினுக்கு ஒரு குழுவை அனுப்ப, அது முடிவு செய்திருந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். சர்வதேச நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். கோயபல்ஸ் தனது திறமையை இந்தப்பக்கம் திருப்பினார். ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாக செய்திகள் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். “யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த போர்டுகள் எல்லா இடங்களிலும் அகற்றப்பட்டன. ஜெர்மன் அரசு நிர்வாம் சிறப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஹிட்லரின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் விளம்பரச் செய்திப்படங்களை பிரமாண்டமான முறையில் எடுத்துக் கொடுக்கும் பணியில் லெனி ரீபென்ஸ்டால் என்ற பெண்மணி ஈடுபட்டிருந்தார்.

அவருடைய படங்கள், ஹிட்லரின் தேர்தல் வெற்றிக்கும், வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கைப் பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தன. யூதர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டன. இது நாடகம் என்று ஈனஸ்வரமாக எழுந்த குரல்கள், ஆரவாரக் கூச்சலுக்கு மத்தியில் எடுபடாமல் போயிற்று. பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஒடுங்கிவிட்டன. 11 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஹிட்லர் தனது படை பரிவாரங்களுடன் பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து, வலது கையை உயர்த்தி “தலைவர் வாழ்க” என்றனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அசந்துவிட்டனர். இப்படி ஒரு தலைவனா?

 

hj



மொத்தம் 49 தடகளக் குழுக்கள் பங்கேற்றன. ஜெர்மனியின் சார்பில் 348 வீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா சார்பில் 312 பேர் பங்கேற்றன. பெரும்பகுதி பதக்கங்களை ஜெர்மனி வாரிக்குவித்தது. ஹிட்லர் நடுநிலையாளர் போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டி ஜெர்மனியின் உலகளாவிய அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைப் புறக்கணிக்கமால் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கலந்துகொண்டது தவறு என்று பின்னாளில் பேசப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்ததுதான் தாமதம். ஹிட்லரின் என்ஜினீயரிங் மூளை வேகமாக திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது. யூதர்கள் மீதான வெறித்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. கொத்துக் கொத்தாக அள்ளிச் சென்றனர். ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். சாப்பாடு இல்லாமல் உயிர் இருக்கும்வரை உழைத்துவிட்டு செத்துப்போகும்படி விடப்பட்டனர்.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இப்போது, ஹிட்லரின் கவனம் ரயில்பாதைகளில் திரும்பியது. பிரிட்டனின் தி கிரேட் ரயில்வேக்கு சொந்தமான பாதைகள்தான் உலகில் அகலமானவையாக கருதப்பட்டு வந்தன. அதைவிட அகலமான ரயில்பாதைகளை ஹிட்லர் வடிவமைத்தார். குறைந்த விலையில் ஜெர்மானியர்களுக்கு கார் வழங்குவதற்காக வோல்ஸ்வேகன் காரை ஹிட்லரே வடிவமைத்தார். கட்டிடங்கள், சிறிய ரக விமானங்கள், நவீன பீரங்கிகள் என ஹிட்லரின் மூளையில் உதித்த எல்லாவற்றையும் உருவாக்க திறமையாளர்கள் நிறைந்திருந்தனர். ஹிட்லர் சொல்வார். விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் செய்து முடிப்பார்கள்.

வெளி உலகினருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று. முதல் இரண்டு ஆக்கிரமிப்பு அளித்த போதை குறைவது போல தெரிந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். வெற்றியால் உண்டாகும் போதை குறைய அனுமதித்தால் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்? தனது ஓவிய ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல், கல்லூரியில் சேர்க்க மறுத்த வியன்னா ஓவியக் கல்லூரி நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வு ஹிட்லரின் நெஞ்சில் இன்னமும் வடுவாக இருந்தது.

“ஜெர்மனியுடன் இணைந்து விடுங்கள்”

1938 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி ஆஸ்திரிய அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார் ஹிட்லர். வேண்டுகோளை ஏற்பதாக தெரியவில்லை. “எனக்கு ஆஸ்திரியா வேண்டும்” ராணுவத்திடம் கேட்டார் ஹிட்லர். ஜெர்மன் ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்த்ததுமே, ஆஸ்திரியா ஹிட்லரின் சட்டைப்பையில் வந்து விழுந்து. இதைப் பார்த்ததும் செக்கோஸ்லாவாகியா மிரண்டுவிட்டது. அடுத்து ஹிட்லரின் குறி தன்மீதுதான் இருக்கும் என்று நடுங்கியது. ஜெர்மனிடம் இருந்து எடுத்துத் தரப்பட்ட சுடடன்லாந்தை மீண்டும் ஒப்படைத்து விடும்படி செக் அதிபர் பெனோஸுக்கு தகவல் அனுப்பினார் ஹிட்லர்.

அமைதியான முறையில் அந்தப் பகுதியை மட்டும் கொடுத்திருக்கலாம் அவர். பிடிவாதம் செய்தார். மூன்று மாதங்கள் வரை பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடித்தார். ஹிட்லர் பொறுமை இழந்தார். ஜெர்மன் ராணுவம் உத்தரவுக்காக காத்திருந்தது. ஹிட்லர் “ம்” என்றால் எந்த நாட்டையும் கவ்விக் கொண்டுவந்து அவர் காலடியில் போட தயாராக இருந்தது ராணுவம். செக் அதிபருடன் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தாலிக்குச் சென்றார் ஹிட்லர். ரோம் நகரில் இத்தாலி சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். செக்கோஸ்லாவாகியா மீது படையெடுக்கும் பட்சத்தில்  முசோலினி எதிர்ப்பு தெரிவித்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரே அந்தச் சமயத்தில் எத்தியோப்பியா மீது படையெடுத்த களைப்பில் இருந்தார்.

இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டனர். இதை அறிந்ததும், தனக்கு உதவி செய்யும்படி பிரிட்டனையும், பிரான்சையும் மன்றாடியது செக்கோஸ்லோவாகியா. ஏதேனும் செய்யுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரான்ஸ் பிரதமர். அவர் அனுப்பிய தந்தியின் நகலை இணைத்து, ஹிட்லருடன் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார் சாம்பர்லின். சாம்பரிலின் அனுப்பிய தந்தியைப் பார்த்ததும் ஹிட்லரின் உதட்டோரத்தில் எகத்தாள புன்னகை தோன்றின. “நான் வருவதை ஏற்க மறுத்த பிரிட்டிஷ் சிங்கம், இப்போது, என் சந்திப்புக்கு நேரம் கேட்கிறது”

தனக்குள் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். எல்லாம் ஹிட்லரின் நேரம். பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வயது 70. இதுபோன்ற பயணத்தையெல்லாம் தவிர்த்து வந்தார். பெர்லினில் சந்திக்கலாம் என்றுதான் சாம்பர்லின் நினைத்திருந்தார்.

ஆனால், ஓபர்ஸல்ஸ்பர்க் மலையை ஓட்டிய பெர்காப் நகரில் சந்திக்க ஹிட்லர் ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கே ஏழுமணி நேரம் அவர் பயணம் செய்ய வேண்டும். 1938 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ஹிட்லர் மட்டுமே பேசினார். சாம்பர்லின் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ஜெர்மனியின் உரிமைகளைப் பற்றியே அவர் விவரித்தார். “எங்களிடமிருந்த எடுக்கப்பட்ட பகுதிகளைத்தான் கேட்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” பேச்சுவார்த்தை முடிந்தது. மீண்டும் சந்திப்போம். நல்லதோர் முடிவெடுப்போம் என்று சாம்பர்லின் தெரிவித்தார். “இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே ஹிட்லர்” வியந்தபடியே லண்டன் போய்ச் சேர்ந்தார் சாம்பர்லின்.