Skip to main content

ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்! - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி? #1

ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவன். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவன். முதல் உலகப்போர் முடிந்ததும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
 

hitler

 

 

உழைக்காமலும், யுத்தத்தில் பங்கேற்காமலும் உட்கார்ந்து தின்று கொழுத்த கூட்டம் என்று யூதர்களை நினைத்தான் ஹிட்லர். அப்போதைய ஜெர்மனி அரசை கைப்பற்றினால் சிதறிய பழைய பிரஷ்யா தேசத்தை அமைத்து, அகண்ட ஜெர்மனியை உருவாக்க முடியும் என்று ஹிட்லர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தான்.

ஜெர்மன் தேசிய வெறியை ஊட்டுவதில் அவனுடைய பேச்சாற்றலும், அவனைப் பற்றிய போலி பிம்பமும் உதவியாக இருந்தது. அவனுக்கு உரை எழுதிக்கொடுக்கவும், பிரச்சாரங்கள் மூலம் அவனுடைய பிம்பத்தை காப்பாற்றவும் கோயபல்ஸ் என்ற பொய்த்தொழில் அமைச்சர் இருந்தார்.

ஜெர்மன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு சிறிய கட்சியைத் தொடங்கிய ஹிட்லர், மக்களை எப்படி திசைதிருப்பி, நாட்டின் சர்வாதிகாரியானான் என்பதை மட்டும் சுருக்கமாக சொல்ல நான் எழுதிய ஹிட்லர் என்ற புத்தகத்தின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களை தருகிறேன்… இந்தியாவின் இன்றைய நிலையில் ஹிட்லரின் தந்திரங்களை அறிந்துகொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன்…

                                                     1.ஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும்!
 

1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி. பவேரியா அரசாங்கத்தை கவிழ்க்க ஹிட்லர் திட்டமிட்டு அது தோல்வி அடைந்ததால் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், 263 நாட்களிலேயே அவருக்கு விடுதலை உத்தரவு கிடைத்தது.

“உங்களுக்கான விடுதலை உத்தரவு வரும். அடுத்த இரண்டு ஆண்டுகள் உங்கள் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மியூனிக் நகருக்கு பயணம் செய்ய அனுமதி உத்தரவு வழங்கப்படும். நாளை காலை எட்டுமணிக்கு சிறையிலிருந்து வெளியேறிவிட வேண்டும்”

1924 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஆறு நாட்களுக்கு முன் ராணுவ தலைவரின் அலுவலகத்திலிருந்து ஹிட்லருக்கு அழைப்பு வந்தது. அவர்தான் ஹிட்லரிடம் இப்படிக் கூறினார்.

ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஹிட்லர், 263 நாட்கள்தான் சிறையில் இருந்திருக்கிறார். எதற்காக முன்கூட்டியே அவரை விடுதலை செய்தனர் என்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

அடுத்தநாள் காலை எட்டுமணி 10 நிமிடம்.
 

hitler prison


ஹிட்லரும், ருடால்ப் ஹெஸும் சிறையிலிருந்து நீண்ட கோட்டும், தொப்பியும் அணிந்து பேப்பர் கட்டுகளுடன் சிறையிலிருந்து வெளியேறினர். அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர். அங்கே ஹிட்லரின் கட்சி ஆட்கள் மெர்சிடெஸ் கார் ஒன்றுடன் காத்திருந்தனர்.

அந்தக் காரில் இருவரும் மியூனிக் நகருக்கு புறப்பட்டனர். அவர்களுடன் வந்த மூவரில் ஒருவர் ஹிட்லரின் தோழி, இல்ஸே புரோல்.

பின்னர், இவரைத்தான் ருடால்ப் ஹெஸ் திருமணம் செய்துகொண்டார்.

மதியம் மியூனிக் நகருக்கு வந்து சேர்ந்தனர். அவருடைய நண்பர்களுக்கு இது பெரிய வெற்றி. வெற்றியைக் கொண்டாட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஹிட்லர் தனது வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அன்றுதான் மது அருந்தினார்.

ஹிட்லர் சிறையிலிருந்த போது நாஜி கட்சிக்கு அரசு தடை விதித்திருந்தது. கட்சிப் பத்திரிகையும் மூடப்பட்டது. தலைவர் இல்லாத நேரத்தில் கட்சிக்குள் கோஷ்டிகள் உருவாகி இருந்தன.

ஹிட்லர் சிறையிலிருந்த சமயத்தில் அவருடைய சகோதரி ஏஞ்சலா ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஹிட்லருடைய தந்தையின் முதல் மனைவியின் மகள் இவர். லின்ஸ் நகரில் இருந்த சமயத்தில்,வீட்டை விட்டு வெளியேறியவர்.

தனது சகோதரன் ஹிட்லர் மிகப்பெரிய தலைவனாக மாறியிருப்பதை ஆஸ்திரிய செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொண்டிருந்தாள்.

புரட்சியையும், அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டதையும் அறிந்து அவள் கடிதம் எழுதியிருந்தாள்.

அதற்கு அவர் பட்டும்படாமலும் பதில் எழுதியிருந்தார். அடுத்து அவள் எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.

சிறையிலிருந்து வெளியேறிய ஹிட்லர் மக்கள் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருப்பதைக் கவனித்தார். அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். எல்லோரும் வேலைக்கு போய் சம்பாதித்தனர்.

ஹிட்லர் சிறைக்கு போவதற்கு முன் ஒரு தபால் ஸ்டாம்ப் வாங்குவதற்கு ஐந்தாயிரம் கோடி மார்க் தரவேண்டியிருந்த தரித்திர நிலை இப்போது இல்லை.

மார்க் பழைய மதிப்பைப் பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. தன்னால் மட்டுமே ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஜெர்மானியர்களின் வேலையையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்தமுடியும் என்றும் ஹிட்லர் பேசிவந்தது கண்ணெதிரே பொய்யாகிப் போனது எவ்வாறு?

அவருக்கு புரியவில்லை.

“எப்படி... இது எப்படி சாத்தியம்? நான் சிறையில் இருந்த போது என்ன நடந்தது?”

நண்பர் ஹன்ப்ஸ்டாங்கிலிடம் கேட்டார் ஹிட்லர்.

“நீங்கள் அமெரிக்காவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜெர்மனியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்கள்தான் ஏராளமான முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது. வறுமை பெருமளவு நீங்கிவிட்டது.”

என்றார் ஹன்ப்ஸ்டாங்கில்.

“நமது விவகாரங்களில் அமெரிக்கர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? இதை நாம் எப்படி திருப்பித் தரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?”

ஆத்திரமாக கேட்டார் ஹிட்லர்.

ஜெர்மனியால் இதைத் திருப்பித்தர முடியாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோற்பதற்கு அமெரிக்க யூதர்கள்தான் காரணம் என்று ஜெர்மானியர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த ஜெர்மானிய சொத்துக்களை இப்படி முதலீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்.

தவிர, யூதர்களை விரட்டுவதே லட்சியமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு பெருகிவரும் மக்கள் செல்வாக்கை அனுமானிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கர்கள் முட்டாள்களா என்ன?

ஹிட்லரின் வளர்ச்சியையும், யூதர்கள் மீதான வெறுப்பையும் தணிக்க வேண்டுமெனில், ஜெர்மன் பொருளாதார நிலை மேம்பட்டால்தான் முடியும். தாங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும். ஹிட்லரால்தான் முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியிலிருந்து விலக வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.

வெளிப்படையாக தெரியும் இந்த உண்மையை ஹிட்லரால் இப்போது பேச முடியாது. அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் பழைய தலைவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்திருக்கிறது. இவற்றிலிருந்து கட்சியை மீட்க வேண்டும். தனது தலைமையை வலுப்படுத்த வேண்டும்.

நாஜிகள் இன்னும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறாரகள் என்பதை கட்சிக்காரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்சியை வழிநடத்த பத்திரிகை வெளிவர வேண்டும். கட்சியின் நிதிநிலை வேறு மோசமாக இருக்கிறது.

என்ன செய்யலாம்?

1925 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவேரியாவின் பிரதமரைச் சந்தித்தார். நாட்டின் ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டு கட்சியை நடத்த விரும்புவதாக அப்போது உத்தரவாதம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக கட்சிக்கும் பத்திரிகைக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. பீப்பிள்ஸ் அப்சர்வர் என்ற தனது கட்சிப்பத்திரிகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு தலையங்கம் எழுதினார்.

புதிய தொடக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில், அடுத்தநாள் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து தகவல் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, 27 ஆம் தேதி நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஹிட்லர் பேசும் மிகப்பெரிய கூட்டம் மியூனிக் நகரில் நடைபெற்றது. ஆனால், ஹிட்லர் மாறவில்லை.

யூதர்களையும், மார்க்சிஸ்ட்டுகளையும் விட்டு வைக்க மாட்டோம் என்று உணர்ச்சி வயப்பட்டு ஆவேசமாக  பேசினார்.

இதையடுத்து, அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

கட்சியை ஜெர்மன் முழுவதும் புதிதாக கட்டமைக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கினார். அரசாங்க அமைப்பைப் போலவே கட்சியையும் அமைத்தார். கட்சியை இரு பிரிவுகளாக பிரித்தார்.

பிஓ1 என்ற முதல் பிரிவு ஜெர்மனியின் குடியரசைத் தூக்கி எறியும் உத்வேகம் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கியது.

பிஓ2 என்ற இரண்டாவது பிரிவு, தற்போதுள்ள குடியரசுச் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய அரசு அமைக்கும் நோக்கம் கொண்டது. ஆனால், தேவைப்படும்போது, குடியரசை தூக்கி எறிந்துவிடும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.

இந்த இரண்டாவது பிரிவில், வேளாண்துறை, தொழில்துறை, பொருளாதாரத் துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, நீதித்துறை, இனம் மற்றும் கலாச்சாரத்துறை, பிரச்சாரத்துறை என பல பிரிவுகள் அமைக்கப்பட்டன. அனைத்தும் நாஜிகளின் கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது என்று கற்பிக்கப்ப்டடு வளர்க்கப்பட்டன.

ஜெர்மனியை 34 மாவட்டங்களாக பிரித்து அனைத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு வட்டங்கள், நகரங்கள், வார்டு கிளைகள், தெருக்கிளைகள் என்று அடிமட்டம் வரை பிரிக்கப்பட்டு அதிகாரம் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கும், 10 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கும், டீன் ஏஜ் பெண்களுக்கும், மகளிருக்கும் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டன.

கட்சியின் சுப்ரீம் லீடராக ஹிட்லர் மாறினார்.

பிரவுன் கலர் சீருடை அணிந்த தனது அதிரடிப்படைப் படையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினர்களைக் கொண்டு ஹிட்லர் தனக்கான பாதுகாப்புப் படையை அமைத்தார். அவர்களுக்கு கருப்புச் சீருடை வழங்கப்பட்டது. அதன் தலைவராக ஹென்ரிச் ஹிம்லர் நியமிக்கப்பட்டார்.

இவ்வளவு இருந்தும் கட்சி அமைதியாக இருக்க நேர்ந்தது. ஜெர்மனி மீது அமெரிக்காவும், நேசநாடுகளும் கூடுதல் அக்கறை காட்டின. அதன் பொருளாதார நிலையை சீரமைக்காவிட்டால் நாஜிகளின் கை ஓங்கிவிடும் என்று அவை பயந்தன.

நகராட்சி கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல்குளங்கள், விமான நிலையங்கள் என்று உள்கட்டமைப்புக்காகவும் அமெரிக்கா நிதியுதவி செய்தது. மக்கள் வாழ்க்கை எளிதாகிப் போனது. முதல் உலகப்போரில் முக்கிய தளகர்த்தராக இருந்த பால் வான் ஹின்டென்பர்க் ஜெரமனியின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவிடமும், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகளிடமும் அவர் ஏராளமான தொகையை கடனாகப் பெற்றார். நாட்டின் பொருளாதார நிலை சீராகியது. நாஜிகள் ஹிட்லர் இல்லாமல், பிரச்சாரத்திற்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக இருந்தனர்.
 

troops of hitler

 


ஆனால், கட்சியின் வருமானம் அதிகரித்தது. உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரமிக்கத் தக்க வகையில் உயர்ந்தது.

ஜெர்மனி இப்போது கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறது. இதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். யூதர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டுகள் மீதான வன்மம் இன்னமும் மக்கள் மனதில் இருக்கிறது. தற்காலிகமாக இது அடக்கப்பட்டுள்ளது.

விரைவில் நேரம் வரும். அப்போது அதை வெடிக்கச் செய்துவிட முடியும் என்று ஹிட்லர் நம்பினார்.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்